KUDHIRAM BOSE

( FROM AN ARTICLE IN DINAMANI 30-SEPT-2014)

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதை வரலாறு பேச வேண்டும் என்பதை உணர்ந்த வங்கத்து இளம் சிங்கம் ஒன்று ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் துணிச்சலுடன் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பதற்றத்தில் பரிதவிக்கவிட்டது அதுதான் இளம் சிங்கம் குதிராம் போஸ்.

இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டு, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர் குதிராம் போஸ்.

அவரைப் போன்ற லட்சக்கணக்கான வீரர்களின் தியாகத்தால்தான் இன்று இந்தியாவில் சுதந்திரக் காற்று சுழன்று வீசுகிறது.

பிறப்பு: வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹபிப்பூர் என்ற சிறு கிராமத்தில் திரிலோகநாத் - லட்சுமிபிரியதேவி தம்பதியினருக்கு மகனாக 1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பிறந்தார்.

இளமையும் நாட்டுப்பற்றும்: சிறுவயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம் 1902ல் அப்போதைய வங்க சுதந்திரப் போராட்ட வீரர்ரகளின் குருவாக விளங்கிய அரவிந்தர், சகோதரி நிவேதிதா ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தின் பங்கு: சிறு வயதிலேயே கிதையைப் படித்து அதன்படி நடக்க முயன்ற குதிராம் போசு ஆங்கிலேயே ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார்.

வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்து. குதிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார். வங்கத்தில் இயங்கி வந்த யுகாந்தர் என்ற புரட்சிக்குழுவில் இணைந்து செயல்பட்டார். பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. ஆங்கிலேய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் ஆங்கிலேயே அதிகாரிகளைத் தாக்கி பாடம் கற்பிக்க குதிராம் குழு திட்டமிட்டது. அதன்படி வங்கத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்ஸ்போர்ட் என்பவர் மீது குண்டுவீச குதிராம் போசும் அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் முசாபர்பூர் ஐரோப்பிய கிளப்பிற்குச் சென்றனர். (1908, ஏப்ரல் 30) அங்கு வந்த மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடி குண்டுகளை வீசினர். ஆனால் அதில் கிங்ஸ்போர்ட் வரவில்லை. அந்த வாகனத்தில் வழக்கறிஞர் பிராங்கிள் கென்னடி என்பவரின் மனைவியும், மகளும் இருந்தனர். அவர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதை அறிந்து ஏகத்துக்கும் வருந்தினார் குதிராம் போஸ்.

அப்பாவிகளை எப்பொழுதும் கொல்வதில்லை எனும் கொள்கை கொண்டவர்கள் அவர்கள். அடுத்த சில நாட்களில் சமஸ்திப்பூரில் காவலர்களிடம் சிக்கிய பிரபுல்லசாஹி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மே மாதம் முதல் தேதி குதிராமும் சிக்கினார். விடுதலை வீரர்களுக்கு கடும் தண்டனை வழங்கி வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்ட்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும் அதில் அவர் தப்பியதும் கென்னடியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்தது வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். இதன் காரணமாக குதிராமுக்கு தூக்குத் தண்டனை விதித்தார் நீதிபதி. இதை அறிந்த குதிராம் போசு சிரிக்க ”ஏன் சிரிக்கிறாய்? நான் சொன்னது புரிந்ததா?”என கேட்க,”நன்றாக புரிந்தது “என சொல்ல, இங்கு இருப்பவர்களுக்கு எதாவது சொல்ல வேண்டுமா என நீதிபதி கேட்க,” வேண்டுமானால் உங்களுக்கு எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என சொல்லித்தருகிறேன்” என்றார் குதிராம் போஸ்.

தூக்குத் தண்டனை: 1908 ஆகஸ்ட் 11 ஆம் தேதி குதிராம் போசுக்கு முசாபர்பூர் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருக்கு 18 வயது. அவரது கையில் பகவத் கீதையுடன், வாய் "வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்தது. அவர் தூக்கில் போடப்பட்ட பின் அவரின் அஸ்தியை பெண்கள் கொண்டு சென்று தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து கொடுத்தார்கள். தேசபக்தி தங்கள் பிள்ளைகளின் ரத்தத்தில் பாயவேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்களாம்! குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்டப் போது அவரின் சித்தி கருவுற்று இருந்தார். அப்போது தேசத்திற்காகத் உயிரை தந்த உத்தமன் இப்படி ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டுப்போனார்.

“ஒருமுறை விடைகொடு அம்மா!

என் அருமை அம்மா!

நான்

மீண்டும் பிறப்பேன்

சித்தியின் வயிற்றில்…

பிறந்தது நான்தான் என்பதையறிய

குழந்தையின் கழுத்தைப் பார்

அதில் சுருக்குக் கயிற்றின்

தடம் இருக்கும்”

சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைக்கவில்லை என்பதை இன்றைய இளைஞர்கள் அறிவது எப்போது?