மருங்கு வண்டு சிறந்தார்ப்ப , மணிப்பூ ஆடை அது போர்த்து
கருங்கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!
பூவார் சோலை மயில் ஆட புரிந்து குயில்கள் இசை பாட
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!
காமர் மாலை அருகசைய நடந்த எல்லாம் நின்கணவன்
நாமவேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி
வாழி அவன்தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ( ! ! !)
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாது உய்க்கும் பேருதவி
ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல் வெய்யோன்
அருளே வாழி காவேரி !
EXCELLENT EDITORIAL IN DHINA THANTHI TODAY! FRIENDS! SPREAD THIS MESSAGE FAR AND WIDE! IT IS YOUR DUTY!
===================================================
எங்களுக்கு இனி நீங்கள்தான் கதி! 6.2.2013 (புதன்கிழமை)
தமிழக மக்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுவருவது காவிரி நதிநீர் பிரச்சினைதான். காவிரி டெல்டா மாவட்டங்களில் நடக்கும் நெல் சாகுபடிதான் இந்த மாநிலத்தில் உணவு பற்றாக்குறை இல்லாமல் காக்கும் அட்சய பாத்திரமாகும். காவிரியை வெறும் நதியாக மட்டும் மக்கள் கருதுவதில்லை. தங்களின் முதுகெலும்பாகவே இந்த ஜீவநதியை கருதுகிறார்கள். கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இந்தப்பிரச்சினை ஆண்டாண்டு காலமாக தீர்க்கப்படவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால், 1990-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. இடைக்கால தீர்ப்பு அடுத்த ஆண்டே வழங்கப்பட்டாலும், 17 ஆண்டுகளுக்கு பிறகுதான் இறுதித்தீர்ப்பை காவிரி நடுவர்மன்றம் வழங்கியது. இறுதித்தீர்ப்பின்படி, தமிழகத்தின் கோரிக்கை 562 டி.எம்.சி. என்றாலும், தமிழ்நாட்டிற்கு கிடைத்தது 419 டி.எம்.சி.தான். இதுபோல கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி., கேரளாவுக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. என்று காவிரி நடுவர்மன்றம் தீர்ப்பளித்தது.
பொதுவாக நடுவர்மன்ற தீர்ப்பு உடனடியாக மத்திய கெஜட்டில் வெளியிட்டால்தான், 90 நாட்களுக்குள் அந்தத் தீர்ப்பு அமலாகும். ஆனால், மத்திய அரசாங்கம் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிடாமல், என்ன காரணத்தினாலோ தாமதப்படுத்திக்கொண்டே சென்றது. ஒருசில கட்டங்களில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது, அதனால் கெஜட்டில் வெளியிடமுடியாது என்று சால்ஜாப்பு சொல்லிப்பார்த்தது. ஆனால் சட்டத்தில், வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், கெஜட்டில் வெளியிட தடையில்லை என்று தெளிவாகவே கூறப்பட்டிருப்பதை, பல சட்டநிபுணர்கள் சுட்டிக்காட்டியும், மத்திய அரசாங்கம் செவிமடுக்க முன்வரவில்லை.
இந்த நிலையில், ஒவ்வொரு நேரத்திலும் நீதிமன்றம்தான் தலையிட்டு படிப்படியாக நியாயத்தை வழங்கி வந்தது. எவ்வளவோ தடைகள் போடப்பட்டாலும், கோர்ட்டு அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் சற்று கடுமையாக இந்த விஷயத்தை உற்றுநோக்கி, பிப்ரவரி 20-ந் தேதிக்குள் காவிரி நடுவர்மன்ற இறுதித்தீர்ப்பை மத்திய கெஜட்டில் வெளியிடவேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டது. இவ்வாறு இறுதித்தீர்ப்பை கெஜட்டில் வெளியிடாததன் மூலம், தனது பொறுப்பை மத்திய அரசாங்கம் தட்டிக்கழிக்கிறது என்றும் கூறிவிட்டது. 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடுவர்மன்ற தீர்ப்பு வெளியிடப்பட்ட நிலையிலும், இன்றுவரை அதை ஏன் வெளியிட மத்திய அரசாங்கம் தயக்கம் காட்டியது என்று கூறிய உச்சநீதிமன்றம், 2 மாநிலங்களுமே இதற்கு ஒப்புக்கொண்டபோது உங்களுக்கு ஏன் தயக்கம்? என்றும் கேட்டிருக்கிறது. ஆக, காலாகாலமாக தள்ளிக்கொண்டே இருந்த இந்த பிரச்சினைக்கான தீர்வுக்கு, இப்போது ஒரு நல்ல விடிவுகாலம் பிறந்துவிட்டது. தற்போதுள்ள காவிரி நதிநீர் ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு இவையெல்லாம் கலைக்கப்பட்டு, இனி காவிரி நிர்வாக வாரியம் என்ற புதிய அமைப்பு, இருமாநில மற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகளைக் கொண்டு இயங்கும். இந்த வாரியம்தான் இனி நடுவர்மன்ற தீர்ப்பு அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கும்.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு விஷயத்தில், இவ்வளவுநாள் மத்திய அரசாங்கம் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்த காரணம் அரசியல்தான் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். ஏனெனில், தமிழ்நாட்டை பொருத்தளவில், 1967-ம் ஆண்டு தேர்தலில் தொடங்கி, 45 ஆண்டுகளாகியும் இன்னமும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அறிகுறி தெரியவில்லை. ஆனால், கர்நாடகத்தை பொறுத்தமட்டில், காங்கிரசும், பா.ஜ.க.வும் மாறிமாறி ஆட்சிக்கு வருகிறது. அதிலும், வருகிற ஜூன் மாதம் கர்நாடகத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. பா.ஜ.க.வில் இப்போது எடியூரப்பா பிரிந்துபோன பிறகு ஏற்பட்ட பிளவை தங்களுக்கு சாதகமாக்கி, மீண்டும் ஆட்சிக்குவர காங்கிரஸ் கட்சி துடிக்கிறது. இந்த நிலையில், நடுவர்மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டு, கர்நாடக மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. அதனால்தான் நடுவர்மன்ற தீர்ப்பை இதுவரை வெளியிடவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால், நீதியை நிலைநாட்டுவது ஒன்றே எங்கள் புனிதமான தொழில் என்று செயல்படும் நமது உச்சநீதிமன்ற நீதிபதிகள், குறிப்பாக நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஜெ.செலமேஸ்வர், மதன் பி.லோகுந் ஆகியோர் நீதி என்ற துலாக்கோலை கையில் எடுத்துக்கொண்டு, நீதியை வழங்கியுள்ளனர். கர்நாடகமும், தமிழ்நாடும் சகோதரர்களாக இந்த தீர்ப்பை ஏற்று, இனி அன்போடும், ஒற்றுமையோடும் வாழவேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையுமாகும். எங்களுக்கும் இதுவரை மட்டுமல்ல, இனியும் நீங்கள்தான் கதி என்று தமிழக மக்கள் கூறுகிறார்கள்.
==============================================================