http://koottanchoru.wordpress.com/
1925ஆம் வருடம். பர்தோலி தாலுகா. குஜராத் மாநிலம்.
பெருவெள்ளத்தினாலும் கடும் பஞ்சத்தினாலும் விவசாயிகள் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்கள். இரக்கமற்ற ஆங்கிலேய அரசு இந்த ஏழை விவசாயிகள் மீது முப்பது சதவிகித வருமான வரியை உயர்த்தியது. விவசாயிகள் தவிக்கிறார்கள். அவர்கள் ஒரு மாபெரும் விடுதலை போராட்ட வீரரை அணுகினார்கள்.
“ஐயா, எங்களுடைய ஒரே நம்பிக்கை நீங்கள்தான். எங்களை இந்தக் கொடிய வரியிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று மன்றாடினார்கள்
“இதற்கு தீர்வு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடவேண்டும். அதனால் வரும் பின்விளைவுகள் நீங்கள் இப்பொழுது அனுபவிப்பதை காட்டிலும் கொடுமையானதாக இருக்கலாம். உங்கள் சொத்துக்க்களை இழக்க நேரிடும். உங்கள் குடும்பத்தினர் பசியாலும், பஞ்சத்தினாலும் அவதிப்படுவார்கள். இதையெல்லாம் நீங்கள் சந்திக்கத் தயாரா?”என்றார் அந்தத் தலைவர்.
“நாங்கள் தயார், நாங்கள் அநீதிக்கு கட்டுப்படுவதைவிட உயிரை விடவும் தயார்”
விவசாயிகளின் இந்த உறுதியை உணர்ந்த தலைவர் அவர்களுக்காக போராட முன் வந்தார். முறையாக பம்பாய் மாநில ஆளுனருக்கு பிரச்சனையை எடுத்துரைத்து வரியை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்து ஒரு கடிதம் எழுதினார். அரசு தரப்பிலிருந்து அதற்கு எந்த பதிலும் வரவிலை. மாறாக வரி வசூலிப்பு நாளை அறிவித்தது அரசாங்கம்.
”என்ன இறுமாப்பு, நம் போராட்டத்தின் அடுத்த நடவடிக்கையை எடுக்க வேளை வந்துவிட்டது. அதன்படி ஒருவரும் வரி கொடுக்கக் கூடாது” என்று விவசாயிகளுக்கு அறிவித்தார் தலைவர். வரப்போகும் அபாயங்களுக்கு தங்களை தயார் செய்தார். பர்தோலியை பல பகுதிகளாக பிரித்து பகுதிக்கு ஒரு தலைவரையும் தொண்டர்களையும் நியமித்தார். ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு தகவல் சொல்ல ஏற்பாடுகள் செய்தார்.
அரசாங்கம் குண்டர்களை விவசாயிகளின் கிராமங்களுக்கு அனுப்பியது. அவர்கள் வீட்டில் புகுந்து விவசாயிகளை துன்புறுத்தினார்கள். பெண்களை இழிவு படுத்தினார்கள். வீட்டிலிருந்த பொருட்களையும், தானியங்களையும் சூறையாடினார்கள். ஆனால் விவசாயிகள் உறுதியுடன் இருந்தார்கள் இந்த வனமுறைகளை சமாளிக்க தலைவர் விவசாயிகளை கிராமங்களை விட்டு தலைமறைவாகச் சொன்னார். காலியாய் இருந்த கிராமங்களிலிருந்து வரி வசூலிக்க முடியாமல் அரசாங்கம் திணறியது.
முடிவில் ஆங்கிலேய அரசாங்கம் தோல்வி அடைந்தது. வரி ரத்து செய்யப்பட்டது. அரசாங்கம் அபகரித்திருந்த வீடுகளை மீட்டுக் கொடுத்தார் தலைவர். அவருடைய நாட்டுப் பணி தொடர்ந்தது. 600 பகுதிகளாக இருந்த நிலப்பரப்பை ஒருங்கிணைத்து இந்தியா என்ற ஒரு தேசத்தை உருவாக்கினார்.
அந்தத் தலைவர் சர்தார் வல்லபாய் படேல்.
நாடக வடிவம் – Bags