(source) http://koottanchoru.wordpress.com/
1896ஆம் ஆண்டு.
இந்தியா கடும் பஞ்சத்தில் மூழ்கியது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கடும் வரிகள் இந்தியர்கள் மீது சுமத்துப்பட்டு வந்த காலம் அது. பஞ்சத்தில் அவதியுற்றாலும் வரி கட்டாவிட்டால் இரக்கமற்ற அந்த அந்நிய அரசாங்கத்தால் மக்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர் அப்பொழுது மஹாராஷ்ட்ரத்தில் ஒரு தலைவர் மக்களின் அவதியை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தார்.
தலைவர் விவசாயிகளுக்கு உதவ முன் வந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பஞ்சம் ஏற்படுத்திய பாதிப்புகளை தான் நடத்தி வந்த “மராத்தா” மற்றும் “கேசரி” பத்திரிக்கைகளில் விரிவாக எழுதிவந்தார். இந்தக் கடினமான காலத்தில் “ப்ளேக்” நோய் பரவியது. ஏற்கனவே பஞ்சத்தில் துவண்டிருந்த மக்கள் மேலும் துயருற்றனர். தலைவர் அல்லலுறும் மககளுக்கு சேவை புரிவதற்க்காக தனிப்பட்ட முறையில் ஆதரவாளர்களுடன் சேர்ந்து மருத்தவமணைகளை திறந்தார். ஆனால் அரசாங்கமோ எந்த ஆதரவும் அளிக்கவில்லை. மேலும் வைசிராய் பஞ்ச நிவாரண நிதிக்கோ, வரி நிவாரணத்திற்கோ எந்த அவசியமும் ஏறபடவில்லை என்று இரக்கமேயில்லாமல் அறிவித்தார். உள்ளம் கொத்தித்த தலைவர் மேலும் ஆக்ரோஷமாக சர்க்காரின் பொறுப்பின்மையையும், இரக்கமின்மையையும் சாடினார். முடிவில் வேண்டா வெறுப்பாக ராண்ட் என்ற ஒரு விஷேச ப்ளேக் அதிகாரியை நியமித்தது.
ஆனால் ராண்டின் அலுவலகத்தைச் சார்ந்த அதிகாரிகள் பாதிக்கப்படாத மக்களின் வீடுகளில் புகுந்து அவர்களை மருத்துவமனையில் பொறுப்பில்லாமல் அடைத்தது. அவர்கள் வீட்டைச் சார்ந்த பிற உறுப்பினர்களையும் பிளேக் நோய் பாத்தித்திருப்பதாக கூறி அவர்களை வீட்டைவிட்டு அப்புறப் படுத்தியது. அவர்கள் வீட்டில் உள்ள பொருள்களை தீக்கு இறையாக்கியது. தலைவர் மேலும் மேலும் கேசரி பத்திரிக்கையில் “அரசாங்கத்திற்கு பித்து பிடித்துவிட்டதா?” என்ற தலைப்பில் ராண்டின் நடவடிக்கைகளை கண்டித்து வந்தார். ஒரு இளைஞன் ராண்டை கொலை செய்தான். அரசாங்கம் 1897ல் ராண்ட் கொலையைத் தூண்டியதாக தலைவரை கைது செய்தது. நாடே இதனால் கொந்தளித்தது. பிற தலைவர்களின் தளராத போராட்டத்திற்கு பின் அவரை ஒரு வருடத்தில் அரசாங்கம் விடுதலை செய்தது.
பின்னர் சுவதேசி இயக்கத்திற்க்காக போராடினார். “சுவராஜ்யம் எனது பிறப்புரிமை” என்ற கருத்து ஒவ்வொரு குடிமகன் மனதிலும் தோன்றச் செய்தார். மஹாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்க போரட்டத்தை அதற்கு பதினான்கு வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தினார். ஹோம் ரூல் இயக்கத்தையும் தொடங்கினார்.
உடல் நலம் குறைந்து பின்னர் அவர் இயற்கை எய்திய சமயத்தில் மஹாத்மா காந்தி இவ்வாறு கூறினார்:
“அவருடைய இரும்பு போன்ற மனோதிடத்தை நாட்டிற்க்காக கொடுத்தார். அவருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். லோகமான்யர் புதிய இந்தியாவின் சிற்பி. எதிர் கால சந்ததியினர் இவரை தங்களுக்காக வாழ்ந்ததாக நினைவு கூறுவர்”
அந்தத் தலைவர் பால கங்காதர திலகர்.