இவர் சந்தித்தப் பெரியோர்கள் அனேகர். அவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார், வ.வெ.சு.ஐயர், அரவிந்தர், திலகர், வ.உ.சி., கல்கி இப்படிப் பற்பல பெயர்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆன்மீகத் தூண்களான ஷீரடி பாபா, ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், அரவிந்த அன்னை, ஞானானந்தகிரி சுவாமிகள் ஆகியோரின் தொடர்பும் இவருக்கு இருந்தது.
இவர் புதுச்சேரி சென்று வ.வெ.சு.ஐயரையும் பாரதியாரையும் பார்த்தார். பாரதி இவருடைய "பாரதசக்தி" நூலைப் பாராட்டி "தமிழுக்கு ஒரு மகாகாவியம் விளங்கட்டும், செய் பாண்டியா, பராசக்தி உனக்கு நல்ல வாக்குத் தருவாள்" என்று ஆசிர்வாதித்தார். பாரதியைப் போற்றி இவர் எழுதிய வெண்பா:-
"வீரங் கனலும் விழிக்கனலும், பிள்ளைபோல்
ஈரந் திகழும் இளநெஞ்சும் - பாரதியின்
சொல்லும் பொருளும் சுதந்திரப் பேரிகையும்
வெல்லும் புவியை விரைந்து".
இவருக்கு சுதந்திர வேட்கை பிறந்தது. திருச்சியில் அப்போது இருந்த காங்கிரஸ் ஆபீசுக்குச் சென்றார். அங்கு கல்கியின் அறிமுகமும், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனின் அறிமுகமும் கிடைத்தது. அங்குதான் இவர் காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அவர் அழைப்பை ஏற்று காங்கிரஸ் பிரச்சாரப் பணியில் இறங்கினார். சுத்தானந்தர் கரூரில் அரசியல் கூட்டங்களில் பேசினார். அங்கு கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார். கரூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையோடு தொடர்பு ஏற்பட்டது.
பொது சேவையில் ஈடுபட்டிருந்த சமயம் வ.வெ.சு.ஐயரிடமிருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இவரை அவரது பரத்வாஜ ஆசிரமத்துக்கு வரசோல்லி. இவரும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. வ.வெ.சு.ஐயர் ஒரு புரட்சிக்காரர். அவரோடு போய் இவர் சேருவதை குடும்பத்தார் விரும்பவில்லை. அது குறித்து இவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்:-
"சில நண்பர்களைக் கொண்டு எனக்கு வீட்டில் புத்தி சொல்லச் சொன்னார்கள். ஒருவர் கண்டபடி திட்டினார். நான் மெளனமாக பொறுத்துக் கொண்டு என் வேலையைப் பார்த்தேன். உலகுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் கழுதை விற்ற கந்தப்பன் கதைதான். அனைவரும் என்னை பைத்தியம் என்றனர். அது சரிதான் என்று நிரூபிப்பது போல நான் எனது தலைப்பாகையைக் கழற்றி எறிந்தேன். என் உடைமைகள், உடைகள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன். நான் எழுதிய கையெழுத்துப் பிரதிகளில் "பாரத சக்தி"யை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற நாவல்கள், நாடகங்கள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன்."
அப்போது ராமேஸ்வரத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்கு இவர் சென்றார். அங்கு ந.சோமையாஜுலு, ஸ்ரீனிவாசவரதன் ஆகியோரை சந்தித்தார். அங்கு மாநாடு முடிந்ததும் தனுஷ்கோடி, மதுரை போய்விட்டு சேரன்மாதேவிக்குப் போனார். அங்கு வ.வெ.சு.ஐயர் இவரை வரவேற்றார்.
தியாகச்சுடர், மாவீரன் வ.வெ.சு.ஐயரிடம் இவருக்கு நல்ல பழக்கம் உண்டு. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் ஐயர் நிறுவிய பரத்வாஜ் ஆசிரமத்திலும், அவரது பத்திரிகையான 'பாலபாரதி'யிலும் சுத்தானந்தருக்கு தொடர்பு உண்டு. இவரது தமிழார்வத்தையும், கவிதைத் திறத்தையும் ஐயர் வெகுவாக புகழ்ந்திருக்கிறார். ஐயர் மீது இவருக்கு இருந்த அன்பை விளக்க இவர் ஐயருக்கு எழுதிய கடிதமொன்றில் இவரது வாசகத்தைப் பார்க்கலாம். அதில் இவர் ஐயரை, "வீரவிளக்கே! விக்ரமச் சிங்கமே! வ.வெ.சுப்பிரமணிய தீரனே! தீப்பொறி சிந்தும் சிங்கம் போல பாரத தேவியின் துயர் தீர்க்க வீறுகொண்டெழுந்த வித்தகனே! என்றெல்லாம் போற்றியிருக்கிறார்.
ஐயரை இவர் வர்ணிப்பதைப் பார்க்கலாம்:
"சிங்க முகம், நீலமணிக் குன்று போல் திண்ணுடல்; புதிய வைரம்போல் உறுதியான அங்கங்கள்; கர்லாவும் பஸ்கியும் செய்து இறுகிய தசைகள்; செவ்வரி படர்ந்த கூர்விழிகள்; அடர்ந்த தாடி; வகுடெடுத்துஒழுங்காகச் சீவி விட்ட கேசம். அகன்ற மார்பு, பஞ்சகச்ச வேஷ்டி, மேலே கதர் துப்பட்டா, பிறைச்சந்தனத்தின் நடுவே குங்குமப் பொட்டு. அவரது கிண்கிணிக் குரலுடன் நாணப் புன்னகையும் சேர்ந்து என் உள்ளத்தில் அன்பு மின்சாரம் பாய்ச்சின"
சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயரின் குருகுலம் அமைக்கப்பட்டது. அதற்கு தலைவர் வ.வெ.சு.ஐயர். அங்கு சுத்தானந்தர் இலக்கியம், கல்வி விளம்பரம், பத்திரிகை காரியாலயம் நிர்வாகம் ஆகியவற்றைக் கவனித்தார். "பாலபாரதி" இதழ் பொறுப்பு முழுவதும் இவருடையது. வ.வெ.சு.ஐயரின் குருகுல வாழ்க்கை பற்றி இவர் எழுதியதைப் படித்தால்தான் அந்த குருகுலம் எப்படிச் செயல்பட்டது என்பது புரியும். அங்கு ஒருநாள் வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?
காலை நாலறைக்கு அனைவரும் எழவேண்டும். காலைக்கடன்கள் அனைத்தும் முடியும். பல்துலக்க மாவிலை பறித்து அதில்தான் துலக்க வேண்டும். சிறிது உடற்பயிற்சி. பின்னர் ஆசிரமத்தைக் கூட்டி சுத்தம் செய்தல்; பின்னர் குளிக்க வரிசையில் தாமிரபரணி ஆற்றுக்குச் செல்வர். ஆசிரமம் திரும்பியதும் காலை உணவாக வாழைப்பழம், வேர்க்கடலை, மோர் அல்லது பழைய சோறு. வகுப்புகள் தொடங்கும். பதினோரு மணிக்கு மதிய உணவு. சாப்பிடும்போது யாரும் பேசக்கூடாது. உணவு, சோறு, கூட்டு, மோர், பழம், தேங்காய் இவைகளே. புளி, மிளகாய், வெங்காயம், காபி, டீ இவை அறவே கிடையாது. உணவுக்குப் பின் தட்டுக்களைக் கழுவுதல், இடத்தை சுத்தம் செய்தல் அனைத்தும் மாணவர்களே. பிற்பகல் சந்தைக்குச் சென்று சிலர் வேண்டிய சாமான்களை வாங்குவர். மற்றவர் ராட்டையில் நூல் நூற்பர். பிற்பகல் நான்கு மணிக்கு வகுப்புகள் தொடங்கும். மாலையில் விளையாட்டு. இரவு பஜனை தொடர்ந்து உணவு. ஒன்பது மணிக்கு ஆசிரமம் தூங்கிவிடும்.
இங்கு சுத்தானந்தர் எழுதிய பாரதசக்தி மகாகாவியம் ஐயரால் மேலும் மெருக்கூட்டப்பட்டது. இங்கு தலைவர்களின் விழாக்கள் நடக்கும். திலகர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நவராத்திரி உத்சவம், உடல்நலம் கெட்டால் இயற்கை வைத்தியம் இப்படி. பாலபாரதி பத்திரிகைக்கு சுத்தானந்தரே முழுப்பொறுப்பெடுத்து வெளியிட்டார். படிப்பு தவிர மாணவர்களை அடிக்கடி வெளியில் சுற்றுலா அழைத்துச் சென்று இயற்கை வளங்களைக் காண்பிப்பார்கள். அப்படி அவர்கள் சென்ற இடங்கள், கல்யாண அருவி, குற்றாலம், நாகர்கோயில், குமரி முனை, பத்மநாபபுரம், திருவனந்தபுரம், கொல்லம், திருச்செந்தூர் இப்படி பல இடங்களுக்கும் சென்று நல்ல அனுபவம் பெற்றனர் மாணவர்கள்.
இவர் அங்கிருந்த காலத்தில்தான் வ.வெ.சு.ஐயர் மீது ஜாதிப்பிரிவினைப் பார்த்து உணவு வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவுக்கும் ஐயர் மிகப் பரந்த மனப்பாங்கு உள்ளவர். குறுகிய ஜாதிப்பிரிவுகளில் உட்படாத புரட்சிக்காரர். அவருக்கே இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எழுந்ததை சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என்கிறார் சுத்தானந்தர். பிரயாணங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக கலந்தே சமைத்து உண்டோம் என்கிறார் இவர்.
இவரிடம் ஐயர் மனம்வருந்தி பேசிய மற்றொரு செய்தி எவருடைய மனதையும் நெகிழச்செய்து விடும். அது என்ன? சுத்தானந்தர் எழுதுகிறார்:- "மணி பதினொன்று. நான் கீதை காட்டும் பாதை எழுதிக் கொண்டிருந்தேன். "ஸஞ்சலம் ஹி மனக் கிருஷ்ண' என்ற பகுதியை உரக்கப் படித்தேன். அப்போது ஐயர் வந்தார். ஆம், மனம் ஸஞ்சலமாகத்தான் இருக்கிறது. தைர்யவானையும் காலம் சோதிக்கத்தான் செய்கிறது. மனம் உடைகிறது. சோதனைகளை வென்றுதான் நமது தார்மிக வாழ்வை நிலைநாட்ட வேண்டும் என்றார்.
வ.வெ.சு.ஐயர் அருவியில் விழுந்து இறப்பதற்கு முதல்நாள் ஐயர் தன் மகளுடன் கல்யாண அருவிக்குப் புறப்பட்டார். அப்படி புறப்பட்ட ஐயரை இவர் வர்ணிக்கும் பகுதி இது: "சிங்கம் போன்ற முகம்; நெற்றி நிறைய விபூதி; அழகாகச் சீவி கழுத்தில் படிந்த கேசம்; நீண்டு வளர்ந்த தாடி - இரவும் பகலும் போல் கருப்பும் வெள்ளையும் காட்டுகிறது. வீரக்கனல் விழிகள்; நீர்க்காவி ஏறிய கதர் பஞ்சகச்சம்; மேலே பூப்போட்ட கதர் அங்கவஸ்திரம்; இறுகிப் புடைத்த தோளில், பை; அந்தி அழகெல்லாம் ஐயர் மேல் பொலிகிறது. மஞ்சள் வெயிலில் அவரது வீர வடிவம் தெரிகிறது. அந்தி மல்லிகைக் கொடிபோல் சுபத்திரா தவழ்கிறாள். நமஸ்காரம்.... என்றேன். அந்தோ! அதுதான் அவரது கடைசி சமஸ்காரமானதோ!"
பிறகு, மறுநாள் நடந்தவைகளை அவர் வாக்கால் கேட்டால்தான் அதன் ஆழம் புரியும். அவர் சொல்லுகிறார்:-
"மறுநாள் அனந்தகிருஷ்ணய்யர் ஓடிவந்தார். வாருங்கள் என்று என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் விம்மி விம்மி அழுதார். 'சுபத்ரா கால் தவறி அருவியில் விழுந்தாள். அவளை எடுக்க ஐயரும் குதித்தார். இதுகாறும் உடல் கிடைக்கவில்லை' என்றார். என் தலை சுழன்றது. தமிழகம் சுழன்றது. உலகமே சுழன்றது."
"கல்யாண அருவியை நோக்கி ஓடினேன். அப்போதுதான் ஐயரின் உடலை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். பார்க்கச் சகிக்கவில்லை. தாடி மீசையெல்லாம் முகம் முழுவதும் மீன்கள் கொத்தி விகாரப்படுத்தியிருந்தன. அழகான பெண் சுபத்ரை பிணமாகக் கிடக்கிறாள். மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் வந்தாள். அந்த சோகமயமான சூழ்நிலையை எப்படிச் சொல்வது. இறுதி கிரியைகள் முடித்து அந்த அம்மாள் தன் மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் திருச்சிக்குச் சென்றாள்." இப்படி அந்த சோக நிகழ்ச்சியை வர்ணிக்கிறார் யோகி.
மறுநாள் அந்த கல்யாண அருவிக்குப் போனார் சுத்தானந்தர். முதல்நாள் நடந்தவை அவர் மனக்கண்ணில் ஓடுகின்றன. ஐயரின் நினைவு அவர் மனத்தை வாட்டுகிறது. ஒரு பாடல் தோன்றுகிறது.
"சிங்கம் போல் வீறுடையான், சேய்போல் வஞ்சமிலான்
தங்க மணிக்குரலான் சாவிற்கும் அஞ்சாதான்;
முனிபோல் முகமுடையான் முத்துநகையுடையான்
கனிபோல் மொழியுடையான் கண்ணிலினிக் காண்பேனோ?"
இவர் தஞ்சையில் இருந்த போது 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மகாநாடு நடந்திருக்கிறது. அதில் திரு வி.க. தலைமை வகிக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டி பெரியார் தீர்மானம் கொண்டு வந்து அது ஏற்றுக்கொள்ளப் படாமையால் அதிலிருந்தும் காங்கிரசிலிருந்தும் வெளிநடப்பு செய்தார். அந்த மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மகாநாட்டுக்கு முதல்நாள் நடந்த 'விஷயாலோசனைக் கூட்டம்' எப்படி நடந்தது என்பதை இவர் எழுதுகிறார். "விஷயாலோசனைக் கூட்டம் சந்தைக்கூட்டமாக இருந்தது. பேச்சுக்கு பேச்சு வாள்வீச்சாக இருந்தது. ஒருவர் பேசியபின் மற்றவர் பேசினால் நன்றாக இருக்கும், இவர்கள் சளசளவென்று ஒரே நேரத்தில் அனைவரும் கூக்குரல் இட்டனர்" என்கிறார்.
காஞ்சிபுரம் மகாநாட்டையடுத்து வேதாரண்யத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டிலும் கலந்துகொண்டு இவர் பேசியிருக்கிறார். அதன் பின் சீர்காழியை அடுத்த எருக்கூர் சென்றார். இவ்வூரில்தான் புரட்சிவீரன் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளலாம். இங்குள்ள பாரத சமாஜத்தில் இவர் பேசினார்.
இவருக்கு மத பாகுபாடு இல்லை. இந்து மதத்தாராயினும் மற்ற மதங்களையும் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல, அந்தந்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அந்த மதத்தாராகவே இருக்கப் பழகியவர். மற்ற மதங்களின் நூல்களைப் பழுதறக் கற்றவர். ஜைன மத்தின் தத்துவங்களை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர் இவர். அது போலவே பைபிள் முழுவதும் இவர் கற்று அறிந்து வைத்திருந்தார்.
இஸ்லாம் தத்துவங்களைக் கற்றுக் கொள்வதற்காக திருக்குர்ரானை முற்றிலுமாக ஓதியவர். அவர் இயற்றியுள்ள "பாரத சக்தி மகா காவியம்" எனும் நூலில் இந்த சர்வமதக் கருத்துக்களை ஆழ்ந்து படித்து நமக்குக் கொடுத்திருக்கிறார். இவர் கிறிஸ்தவ மதம் பற்றிய "கிறிஸ்து சாதனம்" எனும் கட்டுரையொன்றை எழுதி அந்த மதம் சார்ந்த கருத்துக்களைச் சிறப்பாக எடுத்து விவரிக்கிறார். கிருஸ்துவ மத நூலான பைபிளில் 25000 சொற்கள் உண்டு என்றும், இதை வைத்துக் கொண்டு பாதிரிமார்கள் அரிய தொண்டினை இயற்றுவதாகக் கூறுகிறார். பைபிள் உலகிலுள்ள 400 மொழிகலில் இருப்பதாகவும் இவர் ஒரு தகவலைக் கொடுக்கிறார். தான் சென்ற உலக நாடுகள் அனைத்திலும் பைபிள் படிக்கப்படுவது குறித்தும் இவர் குறிப்பிடுகிறார்.
இவர் "புத்தர் கருணை" எனும் சிறிய நூலொன்றை எழுதியிருக்கிறார். புத்தரைப் பற்றி இவர் கூறும் கருத்துக்கள். "புத்தர் அரச போகத்தைத் துறந்தார். அரச மரத்தினடியில் அமர்ந்து இவர் உலகத்தார் துயர் நீங்க ஓர் மார்க்கம் கண்டார். பெளத்தம் அறவழியை போதிக்கிறது. அன்பு, இரக்கம், எளிமை, தன்னலமில்லாதிருத்தல், தானம், சீலம், நல்லொழுக்கம் இவை அமைதிக்கான வழி என்கிறார் சுத்தானந்தர். புத்தமத பிரச்சாரத்திலும் இவர் ஈடுபட்டார். ஜைனர்களின் மகாவீரர் பற்றியும் இவர் விளக்குகிறார்.
பாரதிக்கும் தனக்கும் இருந்த பழக்கம் குறித்து அவரே எழுதியதைப் பார்க்கலாம்.
"பாரதியாரை சிறுவயதில் நான் மதுரையில் பார்த்தேன். அப்போது அவர் வாட்டசாட்டமாக களை பொருந்தியவராக இருந்தார். புதுச்சேரியில் அவரைப் பார்த்தபோது அவர் மெலிந்து போயிருந்தார். நெற்றியில் நாமமும், கூரிய பார்வையும், பாவறா வாயும், தைரிய மீசை தாடியும் பாரதியை விளக்கின. இப்போது எவ்வளவு வேற்றுமை. ஆள் இளைத்திருந்தார். ஆனால் விழிகளில் அதே கனல். வெற்றிலைக் காவியேறி உதட்டில் அதே முத்து நகையைக் கண்டேன். மீசை ஜயமுண்டு பயமில்லை என்று பேசியது. தாடியில்லை."
கடையத்துக்குச் சென்று பாரதியைக் கண்ட காட்சியை இப்படி விளக்குகிறார். "முதலில் அக்கிரகாரத்துக்குச் சென்று பாரதியார் வீடு எது என்று வினவினேன். அடடா! நீர் வைதிகமாயிருக்கிறீர். அவனை ஏன் பார்க்கிறீர், அவன் முழு அனாச்சாரம் என்றார் ஒருவர். 'அது கிறுக்குப் பிடித்து கஞ்சா போட்டு எங்காவது திரியும்' என்றார் இன்னொருவர். 'நாங்கள் யாரும் அவன் வீட்டுக்குப் போவதில்லை, அவன் கழுதையைக் கொஞ்சும் கவி' என்றார் இன்னொருவர்.
நான் அவர்கள் வாயை அடக்கினேன். 'ஐயா! தமிழ்நாடு முழுவதும் கொண்டாடும் கவிக்குயிலை காகமும், கூகையும் வெறுத்தால் பரவாயில்லை, அவர் பெருமையை நான் அறிவேன் என்றேன்.
ஒருவர் மட்டும் கடையம் சத்திரத் திண்ணையிலிருந்து வந்து "அதோ அந்த ஆற்றங்கரை தோப்பில் தாண்டுகால் போடுகிறார்" என்றார்.
ஓடினேன். "விட்டு விடுதலை ஆகிடுவாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே" என்ற பாட்டு என்னை வரவேற்றது. பாரதியார் அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு வெகு முறுக்காக ராணுவ நடைபோட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே மீசையை நகாசு செய்து கொண்டே, அஸ்தமனச் சூரியனைப் பார்த்தார். பசுஞ்சோலையில் தங்க முலாம் பூசியது போல மஞ்சல் வெயில் படர்ந்தது." இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறார் சுத்தானந்தர்.
மறுமுறை திருச்செந்தூரிலும் பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அங்கு பாரதியார் "முருகா, முருகா" எனும் பாடலைப் பாடியதைக் கேட்டிருக்கிறார். கடைசி முறையாக பாரதியைச் சென்னைக் கடற்கரையில் பார்த்திருக்கிறார். அப்போதுதான் பாரதியார் "பாரத சமுதாயம் வாழ்கவே" எனும் பாடலைப் பாடியதையும் அப்போது வ.வெ.சு.ஐயரும் கூட இருந்ததையும் விவரிக்கிறார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன்
தூத்துக்குடி சென்று இவர் வ.உ.சி.யைச் சந்தித்தார். அப்போது காங்கிரசில் இரு பிரிவுகள். ஒன்றுக்கு வரதராஜுலு நாயுடு தலைவர். இவர் அங்கு சென்றதும் மற்றொரு கோஷ்டி இவரை கூட்டங்களில் பேச அழைத்தது. வ.உ.சியுடன் நெருங்கிப் பழகிய காலமும் இதுதான். அவரைப் பற்றி சுத்தானந்தர் கூறுவது:"உரம் பெற்ற வீர உள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ்ப்பேச்சு, பேச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல் - எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. 'வீரச்சிதம்பரம் பிள்ளை' என்ற பாட்டைப் பாடினேன்." என்கிறார்.
பாட்டைக் கேட்ட வ.உ.சி. "பாட்டு கம்பீரமாக இருந்தது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வயராஜ்யாவில் தங்கள் தலையங்கம் படித்தேன், நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாக இருக்கிறது. திலகரும் உமது நண்பர்தானே?" என்றார் பிள்ளைவாள்.
அதற்கு சுத்தானந்தர், "திலகரிடமும் எனக்கு உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கிறதே. வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன் வெட்கும்படி கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன் எழுத்துக்களால் பொறிக்கும்" என்றேன்.
பிள்ளை சொன்னார், "நான் சிறையை விட்டு வெளிவந்தபோது எனக்கு மாலை சூட்டி வரவேற்க ஒரு தமிழன்கூட இல்லை. எண்ணைக்கடை வைத்துப் பிழைத்தேன். வறுமையில் வாடினேன். வாலஸ் துரை எனது சன்னத்தை மீட்டுத்தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:
"கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடும்".
இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தால் இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்" என்றார்.
"தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு, ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம் - இந்த நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்புவாதம்தான் நாட்டைப் பிளக்கிறது" என்றேன்.
அதற்கு வ.உ.சி. சொன்னார், "என் குருநாதர் காலத்தில் வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து, முஸ்லீம், பார்ப்பான், அல்லான், வைதிக ஒத்துழையாமை, ஸ்வயராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும், ஐயங்காரும், ஐயரும் என்னுடன் கைகோர்த்து நடக்கச் செய்வேன்" என்றார்.
அன்று நடந்த கூட்டத்துக்கு சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். வரதராஜுலு நாயுடு, எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர் ஆகியோர் பேசினர். கடைசியில் சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார் என்று அழைத்தார் தமிழ்ச்சிங்கம் வ.உ.சி. காலமும் கடமையும் என்று நான் பேசினேன், இல்லை கர்ஜித்தேன் என்கிறார் சுத்தானந்தர்.
( excerpts from a blog by innamburn)