19-9-2015 அன்று தினத்தந்தி பத்திரிகையில், திருநின்றவூர் சந்தானக்ருஷ்ணன் எழுதிப் பிரசுரமாகியுள்ள சிறந்த கட்டுரை.
========================================
( some photos added by RSR)..23-9-2015
********************************************************
இசையில் ஈடு இணையற்று விளங்கி ,'பாரத ரத்னா' பட்டமும் பெற்றவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ...நான்கே திரைப்படங்களில் நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்.
...வீணை வாசிக்கவும், பரத நாட்டியம் ஆடவும் கற்றவர்.
மதுரையில், இசைக்குடும்பத்தைச் சேர்ந்த 'வீணை ' ஷண்முக வடிவு -வக்கீல் சுப்பிரமணிய ஐயர் தம்பதிகளின் மகளாய் 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி , பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் எம்.,எஸ். சுப்புலட்சுமி
சின்ன வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்ட சுப்புலட்சுமி , தாயாரிடம் முறையான சங்கீதத்தைக் கற்றார். ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ற
சங்கீத வித்வான், இசையின் நுட்பங்களை கற்பித்தார்.
வீணை, வயலின் முதலான இசைக் கருவிகள் வாசிக்கவும், பரத நாட்டியம் ஆடவும் எம்.எஸ். கற்றுக் கொண்டார்.
ஒரு சமயம், ஷண்முக வடிவின் வீணை இசையை இசைத்தட்டில் பதிவு செய்து வெளியிட " டுவின்" இசைத்தட்டு நிறுவனம் முடிவு செய்து அவரைச் சென்னைக்கு வருமாறு அழைத்தது. சண்முகவடிவு தனது பத்து வயது மகள் சுப்புலக்ஷ்மியையும் அழைத்துச் சென்றிருந்தார்.
அப்போது, சுப்புலக்ஷ்மியின் இனிய குரலைக் கேட்டு வியந்து போன இசைத் தட்டு நிறுவனத்தார், அவருடைய '"மரகத வடிவும் செங்கதிர் வேலும்", "விதி போலும் இந்த" என்ற இரண்டு பாடல்களையும் பதிவு செய்து இசைத்தட்டாக வெளியிட்டனர்.
இசைத்தட்டு லேபிளில் "பாடியவர் மிஸ். சுப்புலட்சுமி , வயது 10 " என்று குறிப்பிட்டிருந்தனர். .. இந்த இசைத்தட்டு மக்களைக் கவர்ந்து மளமளவென்று விற்பனை ஆயிற்று. ..'எம்.எஸ்' ஸின் இசைத்திறனை உணர்ந்துகொண்ட 'ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' (ஹெச். எம். வி) நிறுவனமும் அவருடைய பாடல்களைப் பதிவு செய்து , இசைத்தட்டுகளாக வெளியிட்டது. எம்.எஸ். புகழ் நாடெங்கும் பரவியது. .
தமிழ்த் திரையுலகின் 'பிதாமகர்' என்று போற்றப்படும் கே. சுப்ரமண்யம் , வக்கீலுக்குப் படித்திருந்த போதிலும், சினிமா மீது மோஹம் கொண்டு டைரெக்டர் ஆனவர். 1934ம் ஆண்டில் , நாடக நடிகராக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதரை 'பவளக்கொடி' படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகம் செய்தவர். அவர் 1938ம் ஆண்டில், 'சேவா சதனம் " ப்டத்தின் மூலம் சுப்புலட்சுமியை சினிமா உலகில் அறிமுகப் படுத்தினார். எம்.எஸ்ஸின் அந்த முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது.
படத்தின் கதை, பிரபல ஹிந்தி எழுத்தாளர் பிரேம் சந்த் எழுதியதாகும். வயதானவர்கள் , சிறு பெண்களை மணந்து கொள்வது அந்தக் காலத்தில் சர்வசாதாரணம். அதிலும் பிராமண சமூகத்தில் இத்தகைய திருமணங்கள் நிறைய நடந்து வந்தன. அதைக் கண்டிக்கும் விதத்தில், 'சேவா சதனம்' கதை அமைந்திருந்தது. ....இப்படத்தில், சுப்புலக்ஷ்மியின் வயோதிகக் கணவனாக எப். ஜி. நடேச ஐயர் என்ற பெரிய ரெயில்வே அதிகாரி நடித்தார். திருச்சியைச் சேர்ந்த இவர், பொழுதுபோக்காக நாடகங்களில் நடிப்பவர். ( அமெச்சூர் நடிகர்). 7 வயது தியாகராஜ பாகவதரை முதன் முதலில் அரிச்சந்திரா நாடகத்தில், லோகிதாசனாக மேடை ஏற்றியது இவர்தான். 'சேவா சதனம் ' படத்தின் ஒரு காட்சியில், இவர் தன பூனூலை அறுத்து எறிவார். அக்காட்சி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. டைரெக்டர் கே. சுப்ரமண்யத்தின் மீது கோபம் கொண்ட பிராமண பழமைவாதிகள், அவரை பிராமண சமூகத்திலிருந்து விலக்கி வைத்தனர். ..
.சேவாசதனம் படத்தில் எம்.எஸ்.பாடிய ' ஷ்யாம சுந்தர கமல வதன '. , 'ஆதரவற்றவர்க்கெல்லாம் ', 'மா ரமணன் உமா ரமணன் ' முதலான பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளிவந்து பட்டி தொட்டியெங்கும் எதிரொலித்தன.
சேவா சதனத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுப்புலட்சுமிக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் ஏராளமாக வந்தன. ஆனால் வந்த வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்கவில்லை. தன்னுடைய இசைத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய படங்களில் மட்டுமே நடிக்கத் தீர்மானித்தார். அதன்படி, அவர் தேர்வு செய்த படம் 'சகுந்தலை.'. ..இந்தப் படத்தை மதுரை ராயல் டாகீசாரும் , சந்திர பிரபா சினிடோனும் சேர்ந்து தயாரித்தனர். ஆனந்த விகடனில் விளம்பர மானேஜராக பணியாற்றிவந்த டி. சதாசிவம், சந்த்ரப்ரபா சிநிடோனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். படத்திற்கான வசனங்களை இவரே எழுதினர். எல்லிஸ். ஆர். டங்கன் டைரெக்ட் செய்தார். ..படத்தின் கதாநாயகன் துஷ்யந்தனாக பிரபல பாடகர்
ஜி.என். பாலசுப்ரமணியம் நடித்தார். இவர் 'பி. ஏ. ஆனர்ஸ் ' பட்டதாரி. படத் தயாரிப்பின்போது சுப்புலக்ஷ்மியும் , சதாசிவமும் சந்திக்கும் வாய்ப்புகள் அடிக்கடி கிடைத்தன. சுப்புலக்ஷ்மியின் இசைத் திறமையைக்கண்டு சதாசிவம் வியந்தார். 'சுப்புலட்சுமி வெறும் நடிகையாகவோ, பாடகியாகவோ மட்டுமே இருக்க வேண்டியவர் அல்ல. இசையில் உலகப் புகழ் பெறத் தகுதி உடையவர். அவருக்கு வழிகாட்ட வேறு யாருமில்லை. நாம்தான் வழி காட்ட வேண்டும் ' என்று நினைத்தார். சதாசிவம் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை /..இழந்தவர். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். எனவே, சுப்புலட்சுமியை மணந்து கொண்டால் என்ன என்று நினைத்தார். சுப்புலக்ஷ்மியின் தாயாரிடம் தன விருப்பத்தைத் தெரிவித்தார். சதாசிவத்தை மணந்து கொண்டால், சுப்புலக்ஷ்மியின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று சண்முகவடிவு நினைத்தார். திருமணத்திற்கு மகளின் விருப்பத்தைக் கேட்டார். அவரும் சம்மதிக்கவே, சுப்புலட்சுமி-சதாசிவம் திருமணம் நிச்சயம் ஆயிற்று.
இவர்களது திருமணம், சென்னையை அடுத்த திருநீர்மலையில் உள்ள கோவிலில், 10-6-1940 அன்று எளிமையாக நடைபெற்றது. ஒரு சில நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப் பட்டிருந்தனர். சாப்பாடு செலவு உட்பட கல்யாணத்துக்கு ஆன மொத்த செலவே 250 ரூபாய்தான். !.
...."சகுந்தலை" 12-12-1940 அன்று ரிலீஸ் ஆகி வெற்றி வாகை சூடியது. படம் சிறந்த இசைச் சித்திரமாகத் திகழ்ந்தது. எம். எஸ், மற்றும் ஜி.என்.பி. கான மழை பொழிந்தனர். "பிரேமையில் யாவும் மறந்தோமே", மன மோகனாங்க அணங்கே' , ஆகியவை இவர்கள் இணைந்து பாடிய 'டூயட்' பாடல்கள்.
...இவை தவிர எம்.எஸ். தனித்துப் பாடிய "ஆனந்தம் என் சொல்வேனே ', 'மனம் குதூகலிப்பதும்', 'எந்தன் இடது தோளும் கண்ணும் " /'எங்கும் நிறை நாதபிரம்மம் ' முதலான பாடல்கள் அவரைப் புகழின் சிகரத்துக்கே கொண்டு சென்றன. .
..சதாசிவமும் ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியராக இருந்த "கல்கி' கிருஷ்ணமூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள். மகாத்மா காந்தி மீது மிகுந்த பற்று கொண்ட அவர்கள், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் குதித்தனர். ..விடுதலை அடைந்த பின், "கல்கி' என்ற பெயரில் சொந்தப் பத்திரிகை தொடங்கத் திட்டமிட்டனர். அதற்கு மூலதனம் வேண்டுமே? அதற்கு என்ன செய்வது? ..
.கணவரின் லட்சியத்தையும் அவர் நண்பரின் லட்சியத்தையும் நிறைவேற்ற முன்வந்தார் எம்.எஸ். ....ராயல் டாக்கீசார் சில நாட்களுக்கு முன்னர் வந்து எம். எஸ். சுப்புலட்சுமியை தாங்கள் எடுக்கவிருக்கும் 'சாவித்திரி' படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைத்தனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்த சுப்புலட்சுமி, ,அவர்களுடைய அழைப்பை ஏற்கவில்லை. இப்போது "கல்கி' பத்திரிகையைத் தொடங்க முதலீடு தேவைப்பட்டதால்,
படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ராயல் டாக்கீசார் ஓடி வந்து "அம்மா! முன்பு நீங்கள் நடிக்க மறுத்ததால் , கதாநாயகியாக நடிக்க பிரபல மராத்தி நடிகை சாந்தா ஆப்தேயை ஒப்பந்தம் செய்து விட்டோம். நாரதர் வேடம் இருக்கிறது. அதில் நீங்கள் நடியுங்கள் கதாநாயகியைவிட அதிகப் பாடல்கள் நாரதருக்குத்தான். நீங்கள் இதற்கு சம்மதிக்க வேண்டும்" ' என்று கேட்டுக்கொண்டார்கள்.
ஆண் வேடத்தில் நடிப்பதா' என்று எம்.எஸ். சற்று தயங்கினார். கணவரிடம் யோசனை கேட்டார். 'சாவித்திரி கதையில் நாரதர் வேடம் மிக முக்கியமானது. தாராளமாக நடிக்கலாம் ' என்று சம்மதம் தெரிவித்தார். சதாசிவம். .
.நாரதராக எம்.எஸ். நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதும் பட உலகில் ஒரே பரபரப்பு.! படத்தை வாங்க , விநியோகஸ்தர்களிடையே போட்டா போட்டி. படம் அதிக விலைக்கு போயிற்று.
படத்தின் கதாநாயகன் சத்தியவானாக நடித்த ஒய்.வி.ராவ் , ('சிந்தாமணி' யை டைரக்ட் செய்து சரித்ரம் படைத்தவர். நடிகை லக்ஷ்மியின் தந்தை) சாவித்திரி படத்தின் டைரக்டராகவும் பணியாற்றினார்.
5-9-1941 ஆண்டு வெளியான 'சாவித்திரி' வெற்றிப்படமாகியது. எம்.எஸ். சுப்புலட்சுமி தனது கானத்தால், மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்.
'ப்ரூஹி முகுந்தேதி', 'மனமே கணமும் மறவாதே', 'மங்களமும் பெறுவார் ', போன்ற எம்.எஸ்.பாடிய அமுத கானங்கள் ஜீவ நதியாக ரசிகர்கள் உள்ளத்தில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.
சாந்தா ஆப்தே மராத்தியப் பெண்மணி என்றாலும், படத்தின் பாடல்களை , தனது சொந்தக் குரலிலேயே தமிழில் இனிமையாகப் பாடியது வியப்புக்குரியது.
இப்படத்தில் நடித்ததற்காக எம்.எஸ். பெற்ற ஊதியம் 40 ஆயிரம் ரூபாய். அக்காலத்தில் அது பெரிய தொகை. 'கல்கி' பத்திரிகையைத் தொடங்க இத்தொகையை எம்.எஸ். கொடுத்து விட்டார். 'கல்கி' பத்திரிகையின் ஆணி வேர் எம்.எஸ்.என்றால் அது மிகையாகாது.
எம்.எஸ். இறுதியாக - ஆனால் இணையில்லாத பாத்திரமாக நடித்த படம் "மீரா".
கிருஷ்ண பக்தை மீராவாகவே எம்.எஸ். மாறிவிட்டார். .. கணவர் மேவார் அரசராக நாகையா நடித்தார். சகுந்தலைக்குப் பிறகு இந்தப் படத்தையும் இயக்கியவர் எல்லிஸ் ஆர். டங்கன். ...இது சதாசிவத்தின் 'சந்திரப் பிரபா ' நிறுவனத் தயாரிப்பு. படத்திற்கு இசை அமைத்த எஸ்.வி.வெங்கடராமன் பங்களிப்பு எம்.எஸ். பாடல்களுக்கு மெருகேற்றுவதாக அமைந்தது. "காற்றினிலே வரும் கீதம்', 'பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த', என்ற இனிய கானங்கள் படம் முழுவதும் பரவிக் கிடந்தன.
கண்ணனைத் தேடி பக்தர்கள் கூட்டத்தோடு ஒட்டகத்தில் துவாரகாபுரியை நோக்கி / பாலைவனத்தில் பயணம் செய்யும் மீரா உடல் சோர்ந்து ' எங்கும் நிறைந்தாயே! இன்று எங்கு மறைந்தாயோ? ' என்று பாட ,
பாலைவன
மணற்பரப்பின் மேடுபள்ளங்களில் செல்லும் ஒட்டகங்களின் நடைக்கு ஏற்ப இசை அமைக்கப் பட்டிருந்தது. இதனை நிழற்காட்சிகளாக வடிவமைத்திருந்த 'ஜிதன் பானெர்ஜி' யின் ஒளிப்பதிவு சிறந்திருந்தது.
இப்படத்திற்கு இன்னொரு சிறப்பம்சம் , எம்.எஸ். பாடும் ' காற்றினிலே வரும் கீதம்' என்ற காலத்தால் அழியாத பாடல், கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்டது.
இதைத் தவிர "சராசரம் உன்னையாவும்', ' மறவேனே என்னாளிலுமே'.'பிருந்தாவனத்தில்' ' லீலைகள் செய்வானே' ஆகிய பாடல்களும் கல்கி எழுதியவை.
மீரா வடநாட்டுக் கதை. தமிழ் நாட்டில் ஆண்டாள் எப்படிக் கண்ணனை நினைத்து வாழ்ந்தாளோ , அதுபோல மீராவும், கண்ணனையே கணவனாக வரித்துக் கொண்டு, கடைசியில் கண்ணனுடன் ஐக்யமானவள். எனவே இதை ஹிந்தியில் எடுத்தால் மிகப் பெரிய வெற்றியைப் பெரும் என்று எண்ணினார் சதாசிவம். படம் ஹிந்தியில் எடுக்கப் பட்டது. எம்.எஸ். ஹிந்தியில் பேசி, பாடி நடித்தார்.
இந்தப் படத்தின் தொடக்கத்தில், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மிட்யை அறிமுகப் படுத்த அப்போதைய மேற்கு வங்க கவர்னராக இருந்த சரோஜினி நாயுடு பேசினார்.
தமிழ் மீராவை விட ஹிந்தி மீரா மகத்தான வெற்றி பெற்றது. 1947ல் நடந்த 'மீரா'. ஹிந்திபடத்தின் சிறப்புக் காட்சியில், அன்றையப் பிரதமர் நேரு, கவர்னர் ஜெனெரல் மௌண்ட்பாட்டென் ஆகியோர் கலந்து கொண்டு எம்.எஸ். ஸுக்கு புகழாரம் சூட்டினர்.
'சுப்புலட்சுமி இசையில் மகாராணி' அவருக்கு முன் பிரதமர் எம்மாத்திரம்' என்று நேரு புகழ்ந்தார். மகாத்மா காந்தியும் சுப்புலக்ஷ்மியின் பாட்டைக் கேட்டு ரசித்துப் பாராட்டுக் கடிதம் எழுதினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டதின் பேரில் , வெங்கடேச சுப்ரபாதம் ( திருப்பள்ளி எழுச்சி) பாடலை சி.டி.யில் பதிவு செய்தார். திருப்பதி கோவிலில் மட்டுமின்றி , ஆன்மிக வாதிகளின் இல்லங்களில், அதிகாலையில், சுப்ரபாதம் இன்றும் ஒலிப்பதைக் கேட்கலாம்.
மற்றும் ஏராளமான பக்திப் பாடல்களை எம்.எஸ். இசைத்தட்டுகளில் பாடியுள்ளார். 'குறை ஒன்றும் இல்லை " என்று தொடங்கும் பாடல், எம்.எஸ்.ஸின் பிரபலமான பாடல்களில் ஒன்று. இதை எழுதியவர் ராஜாஜி.
சுப்புலட்சுமிக்கு ஏற்கெனவே ' பத்ம பூஷன்' , 'பத்ம விபூஷன்', பட்டங்களை அளித்த இந்திய அரசு 1998-ல் 'பாரத ரத்னா' பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 'ஆசியாவின்' நோபெல் பரிசு என்று கருதப்படும் 'மகசசே ' விருது ( பிலிப்பின்ஸ் நாட்டில் வழங்கப்படுவது') 1974ல் எம்.எஸ்.ஸுக்கு வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகம், டெல்லி பல்கலைக்கழகம், திருப்பதி வெங்கடேஸ்வர பல்கலைக்கழகம், உட்பட, பல பல்கலைக் கழகங்கள் அவருக்கு 'டாக்டர் ' ( முனைவர்') பட்டம் வழங்கி கௌரவித்தன.
KALKI GARDENS
லட்சம் லட்சமாய் சம்பாதித்து தர்ம காரியங்களுக்கு வாரி வழங்கிய சுப்புலக்ஷ்மியும், சதாசிவமும், இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் சில சிரமங்களை சந்தித்தனர். கீழ்பாக்கத்தில், குருசாமி பாலம் அருகே 'கல்கி கார்டன்' என்ற பெயரில் பெரிய தோட்டமும் , எம்.எஸ்.ஸின் வீடும் அமைந்திருந்தது. அதை சதாசிவம் விற்று கடன்களை அடைத்தார். 'கல்கி' பத்திரிகையையும் சில காலம் நிறுத்தி வைத்தார். தம்பதிகள் இருவரும், நுங்கம்பாக்கத்தில் வாடகை வீட்டில் குடியேறினர்.
ராஜீவ் காந்தியின் யோசனைப்படி, எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வீடு ஒன்றை வழங்க அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். விரும்பினார். தனது விருப்பத்தை சதாசிவத்திடம் தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த சதாசிவம் வீட்டை ஏற்க மறுத்துவிட்டார்.
சதாசிவத்தின் உதவியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் ஆத்மநாதன். . சதாசிப்வத்தின் உதவியுடன் தொழில் தொடங்கி, சென்னை கோட்டூர்புரத்தில் வீடு ஒன்ற வாங்கினார். .வீட்டை புதுப்பித்து , 'சிவம் சுபம்' என்று பெயர் சூட்டி சுப்புலக்ஷ்மியையும் , சதாசிவத்தையும் அங்கு குடியேறச் செய்தார். சதாசிவம் தம்பதிகள், தங்கள் இறுதிக்காலத்தை இங்குதான் கழித்தனர். ..
சுப்புலட்சுமிக்கு கணவராக மட்டுமின்றி குருவாகவும், வழிகாட்டியாகவும், திகழ்ந்த சதாசிவம் 1997 நவம்பர் மாதம் 21ந் தேதி காலமானார்.
அதனால் மனம் உடைந்து போன எம்.எஸ். துயரத்திலேயே கரைந்து, 2004 டிசம்பர் 11 ம் தேதி மறைந்தார்.
--------