08-புதுமைப்பித்தனின் அரசியல் நூலகள் , கருத்துகள் பற்றி M.A.நுஹ்மான்

புதுமைப்பித்தனின் அரசியல் நூலகள் , கருத்துகள் பற்றி

எம்.ஏ.நுஹ்மான்

"புதுமைப்பித்தன் பற்றி எழுதியவர்கள் எல்லாரும் அவரின் சிறுகதைகள் பற்றியே எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புகளைத் தவிர்த்துப் பார்த்தால் கிட்டத்தட்ட, தன் சிறுகதைகளின் பக்க எண்ணிக்கையின் அளவுக்குப் புனைகதை அல்லாத உரைநடையும் அவர் எழுதியிருக்கிறார் என்று தெரிகின்றது.

கட்டுரைகள், கடிதங்கள், மதிப்புரைகள், உலக அரசியல் விமர்சனங்கள் என இது பலரகப்பட்டது. புதுமைப்பித்தனின் இலக்கியக் கொள்கை, விமர்சன நோக்கு, வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகள், சமூக-அரசியல் நிலைப்பாடு என்பன பற்றி இவை வெளிப்படையாகப் பேசுகின்றன.

புதுமைப்பித்தனின் சிறு கதைகளோடு இவற்றையும் ஒருமித்து நோக்கும்போது புதுமைப்பித்தன் பற்றிய ஒரு முழுமையான பார்வை நமக்குக் கிடைக்கும். புதுமைப்பித்தனின் பன்முகத்தன்மை பரிமாணம் அவற்றின் பலம், பலவீனம்

என்பவற்றை நம் போக்கில் நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் மிக முக்கியமான, நெருக்கடி மிக்க காலகட்டத்தில் வாழ்ந்தவர் புதுமைப்பித்தன் (1906-1948).

இந்திய விடுதலைப் போராட்டமும், இந்திய சமூகங்களுக் கிடையே முரண்பாடுகளும் மோதல்களும் நிகழ்ந்துகொண்டிருந்த காலம் இது.

உலக நிலையில் முதலாளித்துவத்தின் முதிர்நிலையான ஏகாதிபத்திய எழுச்சியும், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச, கம்யூனிஸ இயக்கங்களும், சோவியத் புரட்சியும், சோசலிசக் கட்டுமானமும், இரண்டு உலக யுத்தங்களும் நிலவிய காலம்.

இக்காலகட்டத்தின் இலக்கிய, கருத்துநிலைத் தேவைகளுக்கும் சவால்களுக்கும் புதுமைப் பித்தன் எவ்வாறு முகம்கொடுத்தார், எதிர்வினையாற்றினார் என்பதை அவரது சிறுகதைகளும் கட்டுரைகளும் நமக்கு உணர்த்துகின்றன.

சிறுகதைகள் அவரது இலக்கிய - அழகியல் எதிர்வினைகள் என்றால் கட்டுரைகள் அவரது அரசியல் எதிர்வினைகளாக உள்ளன.

இவ்வகையில் புதுமைப்பித்தனின் நான்கு நூல்கள்

முக்கியமா னவை.

பாஸிஸ்ட் ஜடாமுனி, (mussolini)

https://docs.google.com/viewer?a=v&pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxyc3JzaGFyZXN8Z3g6NjNjMDZhN2QzZDhmYTYyOQ

கப்சிப் தர்பார், (hitler)

ஸ்டாலினுக்குத் தெரியும்,

அதிகாரம் யாருக்கு ? என்பன அவை.

இவை நான்கும் புதுமைப்பித்த னின் 35-40 வயதுக்குள் எழுதி முடிக்கப்பட்டவை.

இது இரண்டாவது உலக யுத்தம் தொடங்கி, தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம்.

முதல் இரண்டு நூல்களும் உலக யுத்தத்தின் பிதாமகர்களான முசோலினி, ஹிட்லர் இருவரையும் பற்றியவை.

மூன்றாவது நூல் சோவியத் சோசலிசக் கட்டுமானத்தில் ஸ்டாலினின் பாத்திரம் பற்றியது.

கடைசி நூல் அதிகாரம் பற்றிய அரசியல் விஞ்ஞானத்தை விபரிப் பது.

இந்த நூல்களைப் படிக்கும்போது புதுமைப்பித்தனின் வேறொரு பரிமாணம் நமக்குத் தெரிகின்றது.

உலக அரசியல் விவகாரங்களில் அதிக அக்கறையும் விஷயஞானமும் உடைய, முதலாளித்துவ, ஏகாதிபத்திய, பாசிஸ சக்திகளுக்கு எதிரான, சோசலிச பொதுவுடைமைக் கருத்துக்களுக்கு எட்டி நின்றேனும் ஓரளவு அனுசரணை காட்டுகின்ற, ஜனநாயகம், தனிமனித சுதந்திரம் என்பவற்றை வலியுறுத்துகின்ற புதுமைப்பித்தனின் அரசியல் பரிமாணம் இது. இந்த அம்சத்தைப் புதுமைப்பித்தன் காலத்து வேறு எந்த இலக்கியக்காரர்களிடத்தும் நாம் காண முடியாது.

மேல்குறிப்பிட்ட நான்கு நூல்களிலும் பாஸிஸ்ட் ஜடாமுனி மிகவும் பெரியது. சுமார் 170 பக்கங்கள் கொண்டது.

(It is available here)

https://docs.google.com/viewer?a=v&pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxyc3JzaGFyZXN8Z3g6NjNjMDZhN2QzZDhmYTYyOQ

முசோலினியின் வாழ்க்கை வரலாற்றினூடாக இத்தாலியின் அரசியல் வரலாற்றையும், ஐரோப்பிய அரசியலையும் இதில் விரிவாகவும் மிகவும் சுவையாகவும் அலசுகிறார் புதுமைப்பித்தன். தகவல்களுக்குப் புதுமைப்பித்தன் பயன் படுத்திய நூல்கள் எவை என்று தெரியவில்லை. ஆயினும், அவரது பரந்த, பலமான வாசிப்புப் பின்புலம் அவரது எழுத்தில் நன்கு வெளிப் படுகின்றது.

பாஸிசம் பல்வேறு அர்த்தத்தில் நாம் இன்று அன்றாடம் பயன்படுத்தும் சொல்லாகிவிட்டது. முசோலினியின் கட்சியின் பெயருடன் இணைந்து அது ஒரு அரசியல் சித்தாந்தமாகவே நிலைபெற்றுவிட்டது. முதலாளித்துவத்தின் குரூர முகந்தான் பாசிஸம் என்பதை முசோலினி யின் வரலாற்றின் மூலம் புதுமைப்பித்தன் இந்நூலில் விளக்க முயன்றிருக்கிறார். இதே கருத்தை ஹிட்லர் பற்றிய நூலிலும் (கப்சிப் தர்பார்) அவர் தன் கோணத்தில் விளக்கிச் செல்கிறார். பாஸிசம் தோன்றிய காலத்திலிருந்து அது சோசலிசத்துக்கு எதிரானதாகவே இருந்து வந்துள்ளது. முசோலினியும் ஹிட்லரும் பொதுவுடமைவாதிகளைக் கொன்றொழித்தனர் அல்லது சிறையிலடைத்தனர். புதுமைப்பித்தன் தன் நூலில் இதனை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

பாஸிஸமும் பொதுவுடைமையும் தொழில் யுகத்தின் உற்பத்திகளே என்ற புரிதல் புதுமைப்பித்தனுக்கு இருந்தது.

பொருத்தம் கருதி இது தொடர்பான புதுமைப்பித்தனின் நீண்ட மேற்கோள் ஒன்றை இங்கு தருகிறேன்.

"தேவைகளை - அன்றாடத் தேவைப் பொருள்களை - இலட்சிய மாக்கிய பெருமை இந்த மிஷின் யுகத்தின் கைங்கரியம். அந்த இலட்சியத்தின் தர்க்க முடிவு எல்லோருக்கும் சாப்பாடு கிடைக் கும்படி செய்வதே. அது இவ்வுலகத்தில் மோட்ச சாம்ராஜ் யத்தை ஸ்தாபிப்பது என்ற பொதுவுடைமை சித்தாந்தத்தில் வந்து முடிவடைந்தது. இந்த உபாக்கியானத்தின் கிளைக்கதைகள் நாஸ்திகம், பொருளாதார அடிப்படையுடன் சரித்திரத்தை வியாக்கியானம் செய்தல் முதலியவை. இவற்றை ஆதாரமாகக் கொண்ட ஒரு கட்டுக்கோப்பு ருஷியாவில் எழுந்தது. அங்கு அது எழுவதற்கு முன்னும் பின்னும் அதன் சீடர்கள் உலகின் பல நாடுகளுக்கும் சென்று சமுதாயத்தின் ஜீவப் பிண்டத்தைப் பாதித்து வந்தனர். இதற்குத்தான் முதலாளித்துவ சர்க்கார்கள், ‘பொதுவுடைமை அபாயம்’, ‘போல்ஷ்விக் ஆபத்து’, ‘சிவப்புப் பயங்கரம்’ என்ற பெயர்களைக் கொடுத்தார்கள்.

வெர்ஸேல்ஸ் உடன்படிக்கை ஐரோப்பிய மனநிலையைப் பெரிய கலக்குக் கலக்கியது போல, அது சமுதாய அமைப்பிலும் பெரிய மாறுதல்களை உண்டுபண்ணிற்று. சோனியாக மெலிந்துவந்த முதலாளித்துவம், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, மிகுந்த பயத்துடன் பெற்ற குழந்தைதான் இந்த பாஸிஸமும், நாஜிஸமும். ஐரோப்பாவிலோ மற்ற இடங்களிலோ சிறிய நாடுகள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமெனில் ராட்சசத் தன்மையைக் கடைப்பிடித்தால்தான் முடியும் என்பதை இந்த அரசியல் உற்பாதங்கள் நிரூபித்தன. இவை தம்மைப் பலப் படுத்திக் கொள்ள அயல்நாடுகளில் புல்லுருவி போல் பாய்ந்து, அவற்றை நாசமாக்கப் பொதுவுடைமைவாதிகளின் வழி களையே பின்பற்றின. இப்படியாகப் பொதுவுடமை அபாயத்து டன் பாஸிஸ்ட் - நாஜி அபாயங்களும் சம்பவிக்கலாயின. மிஷின் யுகத்தின் இரண்டு சாயைகள்தான் பொதுவுடைமை, பாஸிஸ்ட் தத்துவங்கள்.

பாஸிஸ்ட்டுகள் மனித சமூகத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்துகள் எல்லாவற்றிலும் முதன்மையான கோர ஆபத்து பொதுவுடைமையே என்று கூறி அதைச் சபிக்கிறார்கள். எல்லா ஜனங்களுக்கும் ஆளச் சக்தி கிடையாது என்றும், சிலரே ஆளப் பிறந்தவர்கள் என்றும், சாமர்த்தியமுள்ள ஒரு சிலர் கைக்குள் ளேயே சர்க்கார் இயந்திரம், சமூகம் எல்லாம் சிக்கியிருந்தால் தான் தேசத்திற்கு க்ஷேமம் என்றும் அவர்கள் விவாதிக்கிறார் கள். ஆனால் பொதுவுடைமைவாதிகளோ பாஸிஸம் ஒன்றும் புதிதில்லையென்றும், சாகக்கிடக்கும் முதலாளித்துவமே கடை சியாக அந்த ரூபத்தில் தோன்றியிருக்கிறதென்றும், பாஸிஸ்ட்-நாஜி உறுமல்களெல்லாம் முதலாளித்துவத்தின் கடைசி விக்கல் என்றும் சொல்லுகிறார்கள்."

......from (பாஸிஸ்ட் ஜடாமுனி)

பாஸிசத்தையும் பொதுவுடைமையையும் எதிரெதிரே நிறுத்தினாலும் புதுமைப்பித்தன் பாஸிசத்தையும் முதலாளித்துவத்தையும் முற்றாக நிராகரிப்பதையும், பொதுவுடைமையின் மீது அனுதாபம் கொண்டிருப் பதையும் அவரது எழுத்துகளில் பரவலாகக் காணலாம்.

பாஸிசத்தைப் பற்றிக் கூறுகையில் ‘பாபேஸிஸம் புதிதாகப் பிறந்த தத்துமல்ல; புராதன எதேச்சாதிகாரத்துடன், தற்போதைய மிஷின் யுகத்தின் அவசியத்துக் கேற்ப, மனித சிந்தனையையும் சுதந்திரத்தையும் நசுக்குவதற்காகக் கட்டிக் கோக்கப்பட்ட கடதாசிக் குப்பையே அது’ என்பார் புதுமைப் பித்தன் (பாஸிஸ்ட் ஜடாமுனி). பாஸிஸம் முதலாளித்துவ சமூகத்தின் வக்கரித்த ஆட்சி என்பது அவர் கருத்து.

‘"மக்கள் ஆட்சியில் நிர்வாக யந்திரமானது, உறுதி சற்றும் இல்லாத பதவிவேட்டை உடும்புகளிடம் அகப்பட்டு, சமாஜத் தொடர்பை இழந்து நிர்வாகத்தை நல பங்கீடு அங்காடியாக ஆக்கிவிடும்பொழுது, இந்த பாஸிஸம் என்ற முதலாளித்துவ சமாஜத்தின் வக்கரித்த ஆட்சி உதய மாகிறது. தொற்று நோய்கள் போல இந்த ஆட்சியும் ஒரு தற்காலிகமான சாகைதான். சித்த வைத்தியத்தின் பாஷண சிகிச்சை மாதிரி இற்றுப்போன சமாஜத்தை உயிர்ப்பிக்க, இந்த சர்வ-தாண்டவம் அவசியம் என வாதிக்கிறவர்கள் உண்டு. இந்த மாதிரியான சித்தாந்தம் எல்லாம் தர்க்க சோதனைகளாக வைத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, மனித வம்சத்தின் அந்தராத்மாவான சமாஜ ரூபத்தின்மீது பிரயோகித்துப் பார்க்க வேண்டிய விஷப் பரிட்சைகள் எனக் கருதக் கூடாது’ எனப் பிறிதோரிடத்தில் புதுமைப்பித்தன் எழுதுகிறார் (............அதிகாரம் யாருக்கு ? ).

முதலாளித்துவத்தைச் ‘சொத்துரிமை மகோதரம்’ என்று வருணிக்கும் புதுமைப்பித்தன் முதலாளித்துவ சமூகம் பற்றித் தரும் பின்வரும் சித்திரம் நம் கவனத்துக்குரியது.

தனிமனிதனுக்கு சொத்துரிமை தந்து யந்திர வசதியில் அகப் பட்டுக்கொண்டு அதில் ஒருமைப்பாடு காணும்படி அதை உப யோகிக்க வகை தெரியாமல் தவிக்கும் சமுதாயமே முதலாளித் துவ சமுதாயம் என்று சொல்ல வேண்டும். யந்திரத்தை உப யோகித்து, சர்க்காருக்கு சமமாக செல்வம் பெற்று அதைத் தன் வசப்படி ஆட்ட தனிமனிதனுக்கு வசதி அளிப்பது இதுதான். இது ஜனங்களின் சம்மதத்தின் பேரில் எழுந்த ஆட்சியாக இருக் குமாகில் அமெரிக்க ரக ஜனநாயகமாக இருக்கும், ஜனங்களின் சம்மதிப்பு உதாசீனம் செய்யும் ஒன்றாக இருந்தால் ெஐர்மன் இத்தாலிய ஏக தர்பாராக விடியும்.

ஒன்றில் அடிமை வரம்பில் நின்று மேலெழவொட்டாத சம்பள வாழ்வு சம்பவிக்கும்.

மற்றொன்றில் அடிமைத்தனம் சம்பவிக்கும்.

சர்க்காரை இவ் று கவந்த ராசியாகவே வைத்திருப்பதினால்தான் தனிமனித வாழ்வு திரணமாக மதிக்கப்படுகிறது’ ........(அதிகாரம் யாருக்கு ? ).

இதற்கு மாறாக ‘பொதுவுடைமை எல்லோருடைய தேவையையும் திருப்தி செய்வதற்கென்று தர்க்க ரீதியாக வகுக்கப்பட்ட ஓர் அரசியல் சித்தாந்தம்’ என்று கூறும் புதுமைப்பித்தன் (.......பாஸிஸ்ட் ஜடாமுனி), ‘சொத்துரிமையை தனிமனிதனுக்கு வழங்கும் சமுதாயத்தில் வாழும் மனிதர்களில் பெரும்பகுதியினர் அன்ன விசாரத்தில் ஈடுபடுவதையே பிரதான காரியமாக நடத்திவர வேண்டியிருக்கிறது. இந்தத் தொந்திரவு தனிமனிதனுடைய தோளிலிருந்து அகற்றப்பட்டுவிட்டால், அவனுடைய மனோசக்திகள் யாவும் பிரயோஜனப்படக்கூடிய வேறு எத்தனையோ காரியங்களில் ஈடுபடுத்தப்பட முடியும். இது ஓரளவு சாத்தியம் என் பதை நிரூபித்துவிட்டது ஸோவியத் ரஷ்யா’ என்றும், ‘ஏற்றத்தாழ்வு என்பது சாதாரண உண்மைகளில் இல்லாதபடி பார்த்துக்கொண்டால் தான் மனித வம்சம் விருத்தியடைய வகையுண்டு’ என்றும் அதிகாரம் யாருக்கு ? நூலில் கூறுகிறார்.

ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ் சோவியத் யூனியனில் சோசலிசக் கட்டுமானம் பற்றிய ஒரு சாதகமான சித்திரத்தை ஸ்டாலினுக்குத் தெரியும் நூலில் புதுமைப்பித்தன் மிகவும் விஸ்தாரமாகத் தீட்டியிருக்கிறார்.

ஏனைய எழுத்துகளில் ஆங்காங்கே பொதுவுடைமை பற்றிப் போகிறபோக்கில் விடுக்கும் குத்தல் விமர்சனங்கள் எதையும் இதில் காண முடியவில்லை.

அக்டோபர் புரட்சி சமூகங்களுக்கிடையே சமஉரிமையைக் கொண்டுவந்தது பற்றிப் புதுமைப்பித்தன் பின்வருமாறு எழுதுகிறார். ‘அக்டோபர் புரட்சி கழிந்த இரண்டாவது நாள் ரஷ்யத் தொழிலாளர்கள், குடியானவர்கள் சர்க்காரின் பிரகடனம் கையெழுத்திடப்பட்டது. பல ஜாதியினரின் கமிஸார் என்ற ரீதியில் ஸ்டாலின் அதில் கையெழுத்திட்டார்.

லெனின், ரஷ்யாவில் உள்ள சகல வர்க்க, ஜாதிய வேறுபாடுடைய மக்கள் யாவரும் சம உரிமை உள்ளவர்கள் என்பதை அங்கீகரித்தார். ஜார் ஆண்ட ரஷ்யாவைப் பல ஜாதீய மக்களின் சிறைக்கோட்டம் என்று வர்ணிப்பார்கள்; இந்தப் பிரகடனம் அந்த சிறைச்சாலையின் பூட்டை திறந்த சாவி’. இவ்வாறு கூறும் புதுமைப்பித்தன், ‘ஸோவியத் சமுதாயத்திலே மிகுந்த கவுரவம் அளிக்கப்படும் பிரஜை கலைஞன்’ என்றும் ‘ஸோவியத் மக்களுக்கு சுயமாகச் சிந்திப்பதற்குப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது’ என்றும் புகழ்ந்துரைக்கிறார். சோவியத் அரசு அது உருவான காலத்திலிருந்தே நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருப்பதையும், அதன் மத்தியில் புதிய சமூகத்தை உருவாக்குவதில் அதன் முயற்சிகளையும் பரி சோதனைகளையும் புதுமைப்பித்தன் அனுதாபத்துடன் நோக்குவதைக் காண முடிகின்றது.

------------------------------------------------------------------------------

அதிகாரம் யாருக்கு ? என்ற நூல் அரசியல் விஞ்ஞானத்தில் புதுமைப்பித்தனுக்கிருந்த அக்கறையையும் அறிவையும் காட்டுகின்றது.

ஏகாதிபத்தியக் கெடுபிடியும், யுத்தமும் உச்சத்தில் இருந்த காலகட்டத் தில் அதற்குப் பின்புலமாய் இருந்த அரசியல் அதிகாரம் பற்றிப் புதுமைப்பித்தன் ஆழமாகச் சிந்தித்திருக்கிறார் என்று தெரிகின்றது.

அரசியலை அதிகாரத்துக்கான ஆடுகளமாகவே புதுமைப்பித்தன் கருதி யிருக்கிறார். உண்மையான அதிகாரம் இறுதியில் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதுதான் புதுமைப்பித்தனின் கருத்து.

ஆனால் மக்களாட்சியோ, எதேச்சாதிகார ஆட்சியோ ‘இதுவரை மனித நலத்துக்கு பூர்ண பொருத்தத்துடன் வேலை செய்தே வந்திருக்கின்றன என்று சொல்ல முடியாது’ என்பது அவரது முடிவு. ‘அரசியல் கட்டுக்கோப்பு சோதனையில் லட்சியப் பேச்சுக்கு இடமில்லை’ என்று முன்னுரையில் கூறும் புதுமைப்பித்தன், தனக்குரிய வழக்கமான கிண்டலோடு ‘கருணை என்ற வார்த்தையின் பொருள் இப்போது கிழங்கு வர்க்கத்தில் அடங்கி விட்டது. அரசியல் மண்ணில் அது முளைக்காவிட்டால் அதிசயம் இல்லை. முளைக்குமாகில் அதற்குக் காரணம் அரசியலின் தன்மை அல்ல’ என அரசியல் அதிகாரத்தின் தன்மையை வலியுறுத்துகின்றார். இந்நூலின் கடைசிப் பகுதி ‘ஏகாதிபத்தியம் : சர்வதேசீயம்’ மிக முக்கியமானதாக எனக்குத் தோன்றுகின்றது. ஏகாதிபத்தியங்களின் ஆதிக்க வெறியையும் யுத்த அனர்த்தங்களையும் தன் வாழ்நாளிலேயே கண்ட புதுமைப்பித்தன் ஏகாதிபத்தியம், யுத்தம் பற்றிய தன் பார்வையை இங்கு முன்வைக்கின்றார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி அவர் இறுதியாகக் கூறுவது நம் கவனத்துக்குரியது.

‘யுத்தம் நிற்பது என்பதன் தெளிவான பொருள் என்னவென்றால், தனிமனிதன் தன்னிடம் எவ்வாறெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்று ஒரு சமாஜத்தின் நிர்வாகம் கருதுகிறதோ அவ்வாறெல்லாம் தானும் பிறநாட்டு ராஜங்க ஸ்தாபனங்களுடன் எல்லாம் நடந்துகொள்ளுவதில்லை என்று சம்மதித்து வடுப்படாத தனது ஆதிபத்திய உரிமையில் ஒரு பகுதியை இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதேயாகும். அவ்வாறு செய்வதால் நாட்டில் உள்ள செலவீனத்தில் பெரும்பகுதி குறைந்துவிடும். இவ்வாறு மனித சமூகத்தின் கழுத்தில் உள்ள பளு குறைவதால் மனித வம்சம் நசித்துப் போகாதிருக்க அது செய்ய வேண்டிய, இன்னும் கவனிக்கப்படாதிருந்துவரும் பல காரியங்களுக்கு அவகாசமும் வசதியும் கிடைக்கும். ஆனால் யுத்தத்தின் மூலம் உலக வம்ச ஒழுங்கை நிலைநாட்டிக் கொள்ளுவது என்பது பிராந்தி மயக்கம் தீர மீண்டும் பிராந்தி குடிப்பதுதான்’.

இன்றைய உலக அரசியல் சூழலில் இது இன்னும் பொருத்தமான கருத்தாகவே உள்ளது."