சி.சு. செல்லப்பா – பகுதி 3

சாரு நிவேதிதா First Published : 03 April 2016

DINAMANI

=================================

பல நண்பர்கள் என்னிடம் ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர். ஒரு எழுத்தாளர் என்பவர் ஒரு ஞானியைப்போல் சமூகத்துக்கு முன்னுதாரணமாகவும், மகாத்மாவாகவும் திகழ வேண்டாமா? நம்முடைய முன்னோடி எழுத்தாளர் திருவள்ளுவர் என்பதால் இப்படி ஒரு கேள்வி எழுகிறது என்று நினைக்கிறேன். உமா மகேஸ்வரன் என்ற என் நண்பர் ஃபின்லாந்து தேசத்தில் விஞ்ஞானியாக இருந்தார். அவர் வள்ளலாரின் வழி தன் வாழ்வை வகுத்துக் கொண்டவர். தீவிர சைவம். எந்த உயிரையும் உணவுக்காகக் கூட கொல்லலாகாது என்ற கொள்கை உடையவர். அவருடைய தொழிலிலோ எலிகளை சோதிக்கவேண்டியிருந்தது. எலிகளை உயிரோடு துன்புறுத்துவதையும் கொல்வதையும் அவரால் காணச் சகிக்கவில்லை. வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பி யாரையும் துன்புறுத்தாத ஒரு எளிய வேலையில் இருக்கிறார்.

விஞ்ஞானி எப்படி ஒரு எலியை வைத்து சோதனை செய்கிறாரோ அதேபோல் எழுத்தாளன் தன் வாழ்வையே முன்வைத்து, தன்னையே களப்பலியாக்கிக் கொண்டு எழுதுகிறார். அதிலிருந்து கிடைக்கும் தரவுகளையே அவர் இலக்கியமாக்குகிறார். எல்லா எழுத்தாளர்களையும் அப்படிச் சொல்ல முடியாது என்றாலும் தஸ்தயேவ்ஸ்கி போன்ற பலரும் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள். எனவே ஒரு எழுத்தாளர் சூதாடியாகவும், பெண் பித்தனாகவும், திருடனாகவும், வஞ்சகனாகவும், அரசியல்வாதியாகவும், சமூகத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்து அடிக்கடி சிறை சென்று வரும் கிரிமினலாகவும் இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஞானி என்பவர் ஒருவிதமாக சமூகத்துக்கு ஒளியாக இருக்கிறார் என்றால் எழுத்தாளர் என்பவர் வேறுவிதமாகத் தான் வாழும் சமூகத்துக்குப் பங்களிப்பைச் செய்கிறார். மிக முக்கியமாக ஓர் எழுத்தாளரின் பங்கு என்பது அவருடைய மொழி செத்துப் போய் விடாமல் உயிர்ப்புடன் இருப்பதற்கான பணியில் முதலில் நிற்பவர் எழுத்தாளர்தான். அந்த வகையில் அவர் வாழும் காலத்தின் மொழியையும் கலாச்சாரத்தையும் அவருக்கு அடுத்தச் சந்ததிக்குக் கடத்தும் மகத்தான பணி எழுத்தாளருடையதுதான். அதனாலேயே ஓர் எழுத்தாளரின் தனிப்பட்ட பலவீனங்களை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

சி.சு. செல்லப்பாவைப் பற்றித் தனிப்பட்ட முறையில் நினைத்தால் எனக்கு மனக்கசப்பே எஞ்சுகிறது. தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் என நான் நினைக்கும் யார் மீதும் செல்லப்பாவுக்குச் சிறு மரியாதை கூட இல்லை. அவர்களெல்லாம் போலிகள் என்றார் அவர். அவர்களுடைய பெயரைக் கூட என்னால் அவர் முன்னே உச்சரிக்க முடியவில்லை. உச்ச ஸ்தாயியில் கத்த ஆரம்பித்து விடுவார். க.நா.சு.விடம் கண்ட அன்பும் வாத்ஸல்யமும் ஜனநாயகத்தன்மையும் செல்லப்பாவிடம் மருந்துக்குக் கூட இல்லை. ஒரு ஃபாஸிஸ்டிடம், ஒரு சர்வாதிகாரியிடம் பேசுவது போல் இருந்தது. ஜெயமோகனுக்கும் செல்லப்பாவிடம் அப்படிப்பட்ட அனுபவமே கிடைத்திருக்கிறது.

‘நான் அந்தக்கடையை நோக்கிச் சென்றேன். அது ஒரு மூடிய கடை. அதன் திண்ணையில் செல்லப்பா சட்டை போடாமல் ஒரு துண்டு போர்த்திக்கொண்டு அமர்ந்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அருகே ஒரு சிறு டீக்கடை அவருக்குச் சம்பந்தமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தது. செல்லப்பாவின் வீட்டுக்கு திண்ணையே அந்த கடையின் திண்ணைதான் என்று இப்போது தோன்றுகிறது.

நான் கிளம்புபோதே கோமல் சுவாமிநாதன் எச்சரித்திருந்தார். ‘க.நாசு பத்தி வாயே தெறக்காதே. பிச்சு எறிஞ்சிருவார். இப்பல்லாம் காலையிலே எந்திரிக்கிறது முதல் ராத்திரி தூங்கறதுவரை க.நா.சு ஞாபகமாவே இருக்கார். க.நா.சு வை வஞ்சு ஆயிரம் பக்கத்துக்குமேலே எழுதி வச்சிருக்கார். கட்டை சாயறதுக்குள்ள எப்டியும் இன்னொரு ஆயிரம் பக்கம் எழுதிடுவார்’. ஆகவே நான் ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால் செல்லப்பா நேராக க.நா.சு வை நோக்கி வந்தார். ‘க.நா.சு பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’என்றார்

‘நான் வாசிச்சதே கெடையாது’ என்றேன்.

‘வாசிக்காதீங்கோ…குப்பை…அழுகல்…வெஷம் அம்புட்டும்.’ அந்த அம்புட்டும் ஒரு வத்தலக்குண்டு மொழித்துணுக்கு. அதன்பின் க.நா.சு.வை வைய ஆரம்பித்தார். க.நா.சு. ஒரு இலக்கியப்போலி. தமிழுக்கு அவர் செய்ததெல்லாம் தீங்கு மட்டும்தான். அவருக்கு இலக்கியமும் தெரியாது ஒன்றும் தெரியாது. பரம முட்டாள். குழு அரசியல் செய்தார். இலக்கியத்தைப் பயன்படுத்தி வாழ்ந்தார். அவரது தமிழ் தவறு. ஆங்கிலம் சொல்லவே வேண்டாம். அவருக்கு சென்னையில் நல்ல காபிகூடக் குடிக்கத் தெரியாது. தஞ்சாவூர்க்காரர்களே மோசம். அதிலும் கும்பகோணத்துக்காரர்கள் சுத்த அயோக்கியர்கள்.’

மேலே உள்ளது ஜெயமோகனின் அனுபவம். என்னுடைய அனுபவம் இன்னும் மோசமானது. மூன்று முறை அவரைப் பார்த்திருக்கிறேன். மூன்றுமே இலக்கியச் சந்திப்புகளில்தான். முதல் முறை 1980-ல் நடந்தது. அது பற்றி, ‘படிகள்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன் கூறுகிறார்:

‘எழுபதுகளில் கலை இலக்கியம் என்ற தலைப்பில் பத்தாண்டுத் தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியை மதிப்பீடுசெய்யும் முக்கியமான கருத்தரங்கைச் சென்னை வில்லிவாக்கத்தில் ஏற்பாடுசெய்தோம். அதில் ஏராளமான சிறுபத்திரிகைகளும் கலை இலக்கியவாதிகளும் படைப்பாளிகளும் கலந்துகொண்டனர். அதுவரை ஒரே மேடையில் சந்திக்காத தமிழ்ச் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் இலக்கு கருத்தரங்கில் கலந்து கொண்டது பெரிய திருப்பம் என்றே நான் நினைக்கிறேன். சி. சு. செல்லப்பாவிலிருந்து அன்றுதான் புதுக்கவிதை எழுதத் தொடங்கியவர்கள்வரை மூன்று தலைமுறை எழுத்தாளர்களை இணைத்தோம். சிற்பம், ஓவியம், நாடகம், சினிமா என்று பல துறை சார்ந்தவர்களையும் அழைத்துப் பேசவைத்தோம். இடதுசாரிகளும் 'சுத்தமான' இலக்கியவாதிகளும் மோதிக்கொள்ள இடம் அமைத்துக் கொடுத்தோம்.’

அதில் கலந்து கொண்ட பொடியன்களில் நானும் ஒருவன். அப்போதுதான் படிகள் பத்திரிகையில் எழுத ஆரம்பித்திருந்தேன். என் வயது 27. செல்லப்பா ஏதோ ஒரு விவாதத்தில் படிகள் முன்வைத்த சமூகவியல் போன்ற விஷயங்களை மட்டம் தட்டிப் பேசியதற்குப் பதில் சொன்ன நான் omission என்பதற்குப் பதிலாக printing mistake என்று தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன். அழைப்பிதழில் இருந்த ஒரு தலைப்பு விடுபட்டுப் போயிருந்தது. அதைத்தான் அப்படிச் சொல்லி விட்டேன். உடனே செல்லப்பா எனது ஆங்கில அறிவை நக்கல் செய்து சிரிப்பலையை உண்டுபண்ணி ஒரு பொடியனான என்னை சபையில் அவமதித்து விட்டார். சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று நீங்கள் எதிர்பாராத விதத்தில் முகத்தில் ஓர் அறை விழுந்தால் எப்படியிருக்குமோ அப்படி மிரண்டு போனேன் அப்போது. எதுவும் பதில் சொல்லாமல் வெளியேறி விட்டேன்.

அடுத்து, கோமல் சுவாமிநாதனின் சுப மங்களா பத்திரிகை விழாவில் நடந்தது. செல்லப்பாவுக்கு அப்போது ஏதோ ஒரு விருது கிடைத்திருந்தது. அந்தப் பணத்தை அவர் மறுத்து விட்டார். நான் உடனே செல்லப்பாவுக்கு வேண்டாம் என்றால் ஏதேனும் ஒரு நலிந்த இலக்கியப் பத்திரிகைக்குக் கொடுக்கலாமே என்று சாதாரணமாகச் சொல்லி வைத்தேன். அதை செல்லப்பா பணத்தை சாரு நிவேதிதா அபகரிக்கத் திட்டம் என்பது போல் திரித்து எல்லோரிடமும் சொல்லி விட்டார் செல்லப்பா. அப்படியே அது சுப மங்களாவிலும் வந்து என் மானம் போயிற்று. பிறகு கோமல் சுவாமிநாதனை நான் தொலைபேசியில் அழைத்து விளக்கினேன். வெளி ரங்கராஜனும் நடந்த உண்மையை சுப மங்களாவில் எழுதினார். போன மானம் திரும்பியது.

மூன்றாவது சந்திப்பு, அழகிய சிங்கரின் விருட்சம் கூட்டம் மாதாமாதம் அப்போது திருவல்லிக்கேணியில் பாரதி இல்லத்தில் (பாரதி வாழ்ந்த வீடு) நடைபெறும். அது ஒரு பெரிய மூன்று கட்டு வீடு. அவ்வளவு பெரிய வீட்டிலா பாரதி வாழ்ந்தார் என வியப்பது அப்போது வழக்கம். பிறகுதான் தெரிந்தது, அந்த வீட்டின் ஆகக் கடைசியில் உள்ள ஓர் இருட்டு அறையில் ஒண்டுக் குடித்தனமாக வாழ்ந்தார் என்று.

செல்லப்பா தன்னுடைய படைப்பிலிருந்து ஒரு பகுதியைப் படிக்க ஆரம்பித்தார். (சுதந்திர தாகம்தான் என்று இப்போது தோன்றுகிறது.) முதுமையின் காரணமாக அவரால் ஒரு வாக்கியத்தைக் கூட சரிவரப் படிக்க முடியவில்லை. அங்கே இருந்த 25 பேரில் ஒருவருக்கும் அவர் படிக்கும் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. எல்லோரும் ஙே என்று விழித்துக் கொண்டிருந்தபோது நான் குறுக்கிட்டு (எப்போதுமே களப்பலி அடியேன்தான்!) வேறு யாராவது படிக்கட்டுமே, எங்களுக்கும் புரியும் என்றேன். முடியாது என்று மறுத்துவிட்டு அவரே படித்தார். எல்லோரும் ‘ஙே’. ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு இப்போது சட்டசபையில் முதல்வர் பேசும்போது ஒவ்வொரு வாக்கியம் முடிவுறும் போதும் அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டுவது போல் நான் மேஜையைத் தொடர்ந்து தட்ட ஆரம்பித்தேன். அவரும் நீ பாட்டுக்குத் தட்டு, நான் பாட்டுக்குப் படிக்கிறேன் என்று படித்துக்கொண்டே இருந்தார். அவர் செய்தது சுத்த அராஜகமாக இருந்ததால் நானும் தட்டுவதை நிறுத்தவில்லை. ஐந்து நிமிடம் தட்டி விட்டு கை வலித்ததால் அறையை விட்டு வெளியேறிவிட்டேன். ஒரே ஒருவரின் பிடிவாதத்துக்காக 25 பேர் ஒரு சடங்கைப் போல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்ததன் அபத்த உணர்வு நீண்ட காலம் என்னிடம் தங்கியிருந்தது.

ஆனால் க.நா.சு.விடமோ தி. ஜானகிராமனிடமோ இத்தகைய குணநலன்களை ஒருபோதும் நான் கண்டதில்லை. வெங்கட் சாமிநாதன் ஒருமுறை தி.ஜா. வசித்து வந்த புதுதில்லி கர்ஸன் ரோடு வீட்டில் சந்திக்கச் சென்றபோது நானும் அவரோடு சென்றிருந்தேன். அப்போது தி.ஜா. அகில இந்திய வானொலியில் உயர் அதிகாரி. அப்போது அவரிடம் நான் உங்கள் எழுத்து என்னை ஈர்க்கவில்லை என்று சொன்னபோது வெ.சா. என்னைக் கிண்டலடித்தார். அதை உடனடியாகத் தடுத்த தி.ஜா. எல்லோருக்கும் உங்களைப் போலவே என் எழுத்து பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன தர்மம் என்று கேட்டார்.

க.நா.சு.வைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். எழுபது வயது இருக்கும். (வத்ராயிருப்பு) புதுப்பட்டியிலிருந்து நடராஜன் இலக்கிய வெளிவட்டம் என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். அவர் பெயர் நடராஜன் என்று அப்போது யாருக்கும் தெரியாது. ஜனகப்ரியா என்பது அவரது புனைப்பெயர். அவருடைய கட்டுரைகள் பிரமாதமாக இருப்பதாகவும் அவருடைய தமிழ் நடை மிக நவீனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு அந்த ஜனகப்ரியா யார் என்று சுற்றியிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார் க.நா.சு.

எழுத்தாளர்கள் ஞானிகளாகத் திகழ வேண்டிய அவசியமில்லை. ஒருவர் எழுதும் எழுத்து அதை உருவாக்கும் எழுத்தாளரை உய்விக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

ஏனென்றால்,

சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, உலக இலக்கியத்திலேயே மகத்தான சிருஷ்டிகளுள் ஒன்று. இந்த நாவலில் தி. ஜானகிராமனிடமோ லா.ச.ரா.விடமோ நாம் காணும் மொழியின் அழகு இல்லை; நகுலனிடமும் தர்மு சிவராமுவிடமும் காணும் உன்மத்தத்தின் அழகியல் இல்லை; சுந்தர ராமசாமியிடம் காணும் நவீன சிந்தனையின் ஒளிவீச்சு இல்லை; எம்.வி. வெங்கட்ராமிடமும் மற்றும் பல எழுத்தாளர்களிடமும் காணக் கூடிய இலக்கிய உத்திகள் இல்லை. வெறுமனே ஒரு தட்டையான மொழியில் எழுதப்பட்ட நாவல் ‘சுதந்திர தாகம்.’ ஆனாலும் இதை செல்லப்பா ரஷ்யாவின் மீது நெப்போலியனின் படையெடுப்பை வைத்து தோல்ஸ்தோய் எழுதிய ‘போரும் அமைதியும்’ நாவலோடு ஒப்பிடுகிறார். அதைப்போல காந்தியின் சுதந்திர இயக்க காலத்தை வைத்து ஒரு நாவல் எழுத விரும்பியதாகத் தெரிவிக்கிறார். 1970களின் கடைசியில் கிராமத்தில் இருந்து மூன்று மாத காலத்தில் 937 பக்கம் எழுதியிருக்கிறார். பிறகு அதைத் தொடவில்லை. பதினைந்து வருட இடைவெளிக்குப் பின் 1994-ம் ஆண்டு மீண்டும் அதை எடுத்து 2200 பக்கங்கள் எழுதினார்.

தந்தை மூலமாக 1920கள் மற்றும் அதற்கும் முந்தின கால கட்டத்தின் இயக்க வரலாறு அவருக்குத் தெரிந்திருந்தது. அதையெல்லாம் மனதில் பதித்துக் கொள்ளும் அளவுக்கு அபாரமான ஞாபக சக்தியும் இருந்தது. அப்போது படித்த ‘யங் இந்தியா’ பத்திரிகைகள், கல்லூரிக் கால நாட்குறிப்புகள், அவர் கேட்ட பல பிரபல தலைவர்களின் சொற்பொழிவுகள், படித்த நூல்கள் எல்லாம் ‘சுதந்திர தாகம்’ என்ற மாபெரும் நாவலை எழுத அவருக்குப் பயன்பட்டிருக்கின்றன.

எந்த இலக்கிய உத்தியும் இல்லாத, தட்டையான மொழியில் எழுதப்பட்டதாக இருந்தாலும் ‘சுதந்திர தாகம்’ உலகின் மகத்தான நாவல்களில் ஒன்றாக இருப்பதன் காரணம் என்ன?

(தொடரும்…

CHARU ON CHELLAPPA -PART-4