09-புதுமைப்பித்தனின் இலக்கிய நோக்கு -M A நுஹ்மான்

எம். ஏ. நுஃமான்

தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

August 2002

புதுமைப்பித்தன் இறந்தபோது எனக்கு நாலு வயது. நான் பிறக்கு முன்பே அவர் தமிழ்ச் சிறுகதையின் சிகரங்கள் சிலவற்றை எட்டி யிருந்தார் என்பதையும், பாரதிக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் பிறிதொரு திருப்புமுனையாக விளங்கினார் என்பதையும் 1960களின் தொடக்கத்தில் எனது பதினேழு அல்லது பதினெட்டு வயதில்தான் முதல்முதல் அறிய நேர்ந்தது.

என்னிடம் உள்ள புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன் கட்டுரைகள் ஆகிய நூல்கள் நான் 1962இல் வாங்கியவை. அப்போதிருந்து புதுமைப்பித்தனை அடிக்கடி படித்து வந்திருக்கிறேன். தொடர்ந்தும் சலிப்பில்லாமல் படிக்கக்கூடிய நவீன தமிழ் எழுத்தாளர் சிலருள் புதுமைப்பித்தன் முதன்மையானவர் என்பது என் அனுபவம். தீவிர தமிழ் வாசகர் பலரின் அனுபவமும் அவ்வாறே இருக்கலாம் என்பது என் நம்பிக்கை.

தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும்போது பாரதியையும் புதுமைப்பித்தனையும் அருகருகே வைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. இருவருமே பெரும் சாதனையாளர்களாக அற்பாயுளில் மறைந்தது மட்டும் அதற்குக் காரணம் அல்ல. பாரதி கவிதையில் சாதித்ததைப் புதுமைப்பித்தன் சிறுகதையில் சாதித்தார். இருவருமே தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுப்பாதை சமைத்தவர்கள்.

பாரதியின் காலத்தில் அவனுக்குச் சமமான அல்லது அவனுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய கவிஞர்கள் என்று யாருமே இருந்ததில்லை. ஆனால், புதுமைப்பித்தனின் சமகாலத்தில் அவரோடு ஒப்பிட்டுப் பேசக் கூடிய முக்கியமான சிறுகதை ஆசிரியர்களாக கு.ப.ரா., மெளனி, ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா என்று சிலராவது இருந்தார்கள்.

ஆனால், இவர்களில் யாருமே புதுமைப்பித்தனைத் தாண்டி பாரதியின் அருகில் நிற்க முடியவில்லை. காரணம், புதுமைப்பித்தன்தான் பாரதி போல் தன்காலத்தில் ஒரு கலகக்காரனாகச் செயற்பட்டிருக்கிறார். புதுமைப்பித்தனின் கலகக் குரல் அவரது சமூக நோக்குச் சார்ந்தது. அதாவது, அவருடைய உள்ளடக்கம் சார்ந்தது. கவிதையில் பாரதியிடம் ஒலித்த தீவிர இலக்கியக் குரலைப் புனைகதையில் அதன் பிறிதொரு வடிவத்தில் நாம் புதுமைப்பித்தனிடம்தான் கேட்கிறோம். புதுமைப்பித்தனின் சக எழுத்தாளர்களைச் சித்தாந்த சனாதனிகள் என்றால் புதுமைப்பித்தன் அவர்களில் இருந்து விலகி ஒரு கலகக் காரனாக, ஒரு எதிர்ச் சனாதனியாக பாரதியின் அருகில் இருக்கிறார்.

புதுமைப்பித்தன் எவ்வகையில் ஒரு கலகக்காரன் ? வழிவழியான நமது நம்பிக்கைகளை, கற்பனைகளை, கனவுகளை, பொய்மைகளை நம் கண்முன்னே போட்டு உடைப்பதில் ஒரு கலகக்காரன். ''உன் சித்தாந்தப் புனைவுகளுள், புராதன மதிப்பீடுகளுள் இருப்பதல்ல வாழ்க்கை; இதோ என் கதைகளுள் இருப்பதுதான் பச்சையான வாழ்க்கை; இதுதான் உன் யதார்த்தம்'' என்று நம் முகத்தில் அறைந் தாற்போல் யதார்த்தத்தைப் புனைவதில் புதுமைப்பித்தன் ஒரு கலகக் காரன். ''‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்ன கரம்’ '' என்பது வெறுமனே ஒரு கதையின் முடிவல்ல. நம் கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையே உள்ள நீண்ட இடைவெளியை, நம் மதிப்பீடுகளின் பொய்மையை நம் முகத்தில் ஓங்கி அடிக்கும் கலகக் குரல்தான் இது.

பொன்னகரம் மதுரை நகரத்திலுள்ள ஒரு பகுதியின் உண்மைப் பெயர் என்பார் ரகுநாதன். இருக்கலாம். ஆனால், கதையில் அது ஒரு உருவகமாகவே செயற்படுகின்றது. நம் புனிதங்களின் உருவகம். ஈவிரக்கம் இல்லாமல் தன் குத்தலாலும் கிண்டலாலும் நம் மனதில் சிருஷ்டித்துள்ள பொன்னகரங்களை உடைப்பதில் புதுமைப்பித்தன் ஒரு கலகக்காரன்தான். கடவுளரின் பிம்பங்களும் இதனுள் அடங்கும். கந்தசாமிப் பிள்ளையின் முன் கடவுள் சிறுத்துப் போகிறார். ராமனைத் திரஸ்கரித்து அகலிகை மீண்டும் கல்லாகிறாள். புதுமைப்பித்தனின் பெரும்பாலான கதைகள் வெவ்வேறுவகையில் இப்பொன்னகரங்களின் உடைவுதான்.

புதுமைப்பித்தன் எல்லாவற்றையும் போட்டு உடைத்தாரே தவிர அதற்கு மாற்றீடாக எதனை முன்வைத்தார் என்ற கேள்வி எழுவ துண்டு. புதுமைப்பித்தனுடைய இலக்கியக் கோட்பாட்டில் மாற்றீடு களுக்கு இடம் இல்லை. ‘முடிவில் தர்மத்துக்கு வெற்றி கொடுக்க வேண்டியது கலைத்தொழிலில் ஈடுபடுகிறவனுடைய கடமை’ என் பதைப் புதுமைப்பித்தன் ஒப்புக்கொள்ளவில்லை. ‘ தர்மம் இலக்கியத் தில் மட்டும் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதால் வாழ்வு அப்படியே ஆகிவிடுமா ’ என்று கேட்கிறார் அவர்.

‘மகா இலக்கியங்கள், பலவித கோணங்களிலிருந்தும் வாழ்வை நோக்குவதைத் தடைசெய்வதற்காகக் கட்டம் போட்டு மாட்டப்பட்ட படங்கள் அல்ல’ என்பது அவருடைய அழுத்தமான கருத்தாகத் தோன்றுகின்றது.

இலக்கியம் வாழ்வைப் பலவித கோணங்களிலிருந்து புரிந்துகொள்வதற்கான சாதனமே என்பதைப் புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்திருந்தார் என்பதை நாம் இதன்மூலம் அறிந்துகொள்கிறோம்.

புதுமைப்பித்தனின் எழுத்துகளின் மூலம் நாம் வாழ்வை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதே முக்கியம்.

வாழ்க்கையின் இருண்ட பகுதிகளின் மீதே புதுமைப்பித்தன் தன் பார்வையைச் செலுத்தியிருக்கிறார். நமது மதிப்பீடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள அவரது சித்திரிப்பு நமக்கு உதவுமானால் அதுவே அவரைப் பொறுத்தவரை அவரது கலையின் வெற்றி எனலாம்.

தமிழ்ப் புனைகதை வரலாற்றில் முதல்முதல் பண்பாடு பற்றிய முற்கற்பிதங்களை உடைத்துக் கொண்டு நடுத்தர அல்லது கீழ்மட்ட மக்களின் வாழ்வின் உண்மையான முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் புதுமைப்பித்தன்தான். அதனாலேயே புதுமைப்பித்தன் மிகுந்த கவனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார்.

‘என் கதைகளின் தராதரத்தைப் பற்றி எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் பலர் இலக்கியத்தில் இன்னது தான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டுக் கட்டுகிறோம்.’ என்று 1942இலேயே எழுதினார் புதுமைப்பித்தன். ஆயினும், இன்றுவரை புதுமைப்பித்தன் பற்றிய மதிப்பீட்டில் இப்போக்கு வெவ்வேறு அளவில் தொடர்வதைக் காணலாம்.

நவீன எழுத்தாளர்களுள் புதுமைப்பித்தன் அளவு விமர்சனத்துக்கு உள்ளான வேறு ஒரு எழுத்தாளன் இல்லை எனலாம். இந்த விமர்சனம் போற்றலும் தூற்றலும் நிறைந்தது.

இதன் ஒரு முனையில் ரகுநாதன் இருக்கிறார். புதுமைப்பித்தனின் திருமேனியில் ஒரு ஈயைக்கூட மொய்க்கவிடாது புனிதப் போர்வையால் அவரைப் போர்த்திப் பாதுகாக்கும் கரிசனை அவரது சமீபத்திய நூலில் (புதுமைப்பித்தன் கதை கள் : சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும்) துலக்கமாகத் தெரி கிறது.

மறுமுனையில் மார்க்சியத்தை வரலாற்றுக் குப்பைக் கூடைக் குள் வீசிவிட்டு, கட்டுடைக்கும் புனித இயந்திரத்தைக் கையேற்றுள்ள அ. மார்க்ஸ் இருக்கிறார். புதுமைப்பித்தனின் பிரதிகளைக் கட்டுடைத்து அதற்குள் இருந்து தலித்துகள், மறவர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மாமிச பட்சிணிகளை இழிவுபடுத்தும் ஆபத்தான கூறுகளை மிகுந்த கரிசனையுடன் தோண்டியெடுத்துக் கொண்டிருக்கிறார்.

மற்றவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையிலே இருக்கிறார்கள். ஆனால், தன் விமர்சகர்களைப் பார்த்துப் புதுமைப்பித்தன் இவ்வாறு சொல்கிறார்.

"வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக் குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். "