CHARUNIVEDHITHA ON CI.SU.CHELLAPPAA

சி.சு. செல்லப்பா

========================================================

சி.சு. செல்லப்பா (1912 – 1998)

By சாரு நிவேதிதா

First Published : 20 March 2016 12:00 AM IST

DINAMANI

*******************************************************

ந. பிச்சமூர்த்தி, மௌனி, புதுமைப்பித்தன், க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா., லா.ச.ரா., தி. ஜானகிராமன், எஸ். சம்பத், கு. அழகிரிசாமி, நகுலன், அசோகமித்திரன் போன்ற நம் இலக்கிய முன்னோடிகள் பற்றி உலக இலக்கியத்தில் பேசப்படாவிட்டாலும் இவர்கள் எந்த ஒரு மகத்தான உலக இலக்கிய ஆளுமைக்கும் குறைந்தவர்கள் அல்ல. உலகில் எந்த மொழி இலக்கியத்துக்கும் சமமான இலக்கிய சாதனைகள் தமிழில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதற்கு நாம் சி.சு. செல்லப்பா, க.நா.சு. ஆகிய இரண்டு பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். க.நா.சு.வின் உலகளாவிய பார்வையால் அவருக்கு அவர் காலத்தில் ஓரளவு அங்கீகாரமும் பாராட்டும் கிடைத்தது. ஆனால் செல்லப்பாவின் பழமைவாதப் போக்கினால் அவருக்குப் புனைகதைகளால் கிடைத்த நற்பெயரும் வீணாகியது. ஆனாலும் அவருடைய சாதனைகள் என நான் கருதுவது, இன்று தமிழில் எழுதும் அத்தனை பேருக்குமான களத்தை அமைத்துக் கொடுத்தவர்களில் அவர் முதன்மையானவர். அதற்கு முன்னால் அவரது கதையைப் பார்ப்போம்.

முழுப்பெயர் சின்னமனூர் சுப்ரமணியம் செல்லப்பா. 1912 செப்டம்பர் 29-ம் தேதி வத்தலக்குண்டில் தாயார் அலமேலுவின் வீட்டில் பிறந்தார். தந்தை பெயர் சுப்ரமணிய ஐயர். தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். 1920-ல் பாளையங்கோட்டை பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டாவது ஃபார்மும், திண்டுக்கல்லில் முன்னாள் ராணுவ டைரக்டரான தன் சித்தப்பா வீட்டில் தங்கி மூன்றாவது ஃபார்மும் படித்தார் செல்லப்பா. (அப்போதெல்லாம் முதல் ஃபார்ம் என்பது ஆறாம் வகுப்பு. உயர்நிலைப் பள்ளியில் ஆறு ஃபார்ம்கள் இருந்தன. ஆறாவது ஃபார்ம் பள்ளி இறுதி ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. என்று அழைக்கப்பட்டது.) காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் போய் வந்த பிறகு சித்தப்பா தீவிர காங்கிரஸ்காரராகிறார். வீட்டுக்கு வரும் காங்கிரஸ் தலைவர்களைப் பார்க்கிறார் செல்லப்பா. இதுதான் செல்லப்பாவின் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்த காங்கிரஸ் ஈடுபாட்டுக்கு அடித்தளமாக அமைகிறது. நானூறுக்கும் மேற்பட்ட தேசபக்திப் பாடல்களை ஞாபகத்திலிருந்து பாடும் திறன் கொண்டவராக இருந்ததால் காங்கிரஸ் ஊர்வலங்களில் அவரைப் பாட அழைக்கிறார்கள். தினமும் ஹிந்து பேப்பர் படிக்கிறார். அப்போது ஹிந்து விலை ஒரு அணா. 1926-ம் ஆண்டு பள்ளிப் படிப்பு முடிந்து எஸ்.எஸ்.எல்.சி.யில் தேறி மதுரைக் கல்லூரியில் இண்டர்மீடியட் சேருகிறார். இந்திய வரலாறு, தொன்மை வரலாறு, தர்க்க சாஸ்திரம் ஆகியவை அவர் எடுத்த பாடங்கள். அப்போதைய கல்லூரி முதல்வர் சுப்பாராவ் தேசியவாதி. கதரால் செய்த சூட் தான் அணிவாராம். செல்லப்பா சக மாணவர்களுடன் சைமன் கமிஷன் பகிஷ்காரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இண்டர்மீடியட்டில் ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு பெறவில்லை. அப்போதெல்லாம் கல்லூரிகளில் ‘செப்டம்பர்’ என்றாலே மார்ச் பரீட்சைகளில் தேறாத மாணவர்கள் எழுதும் பரீட்சை என்றே பொருள் கொள்ளப்பட்டது. செப்டம்பரிலும் ஆங்கிலத்தில் தோல்வி. பிறகு சென்னை சென்று உறவினர் ஒருவரின் உதவியுடன் ஆங்கிலப் பாடத்தில் தேர்வு அடைகிறார்.

1930-ம் ஆண்டு செல்லப்பா பி.ஏ. வகுப்பில் சேர்கிறார். முக்கியப் பாடங்கள் பொருளாதாரம், வரலாறு.

தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்ற பல எழுத்தாளர்களும் அவர்கள் காலத்தில் நடந்த தேச விடுதலைப் போராட்டம் பற்றித் தங்கள் புனைகதைகளில் எதுவுமே எழுதவில்லை. ஆனால் செல்லப்பா விஷயம் வேறு. அவருடைய இளம் பிராயத்திலிருந்தே அவர் அரசியலில் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் கல்லூரியில் படிக்கும் போதுதான் (1930) மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி அன்று பகத் சிங், சுக்தேவ், ராஜ் குரு மூவரும் தூக்கிலிடப்பட்டனர். மார்ச் கடைசியில்தான் செல்லப்பாவின் கல்லூரித் தேர்வுகள் இருந்தன. இது பற்றி செல்லப்பாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கும் வி. ராமமூர்த்தி சொல்கிறார்:

‘செல்லப்பாவும் நண்பர்களும் தங்கள் ஊருக்குச் செல்லும் முன் கூடிப் பேசினர். மதுரைக் கல்லூரி பிரின்ஸிபால் சொன்ன அறிவுரைகளை நினைவு கூர்ந்தனர். அடுத்து வரும் இறுதிப் பரீட்சை முக்கியமானது. எனவே தேசிய இயக்க நடவடிக்கைகளில் அதிக உணர்ச்சிவசப்படாது அவசியமான ஊர்வலங்களில் மட்டுமே பங்கேற்பது என்று முடிவு எடுத்தார்கள். படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மார்க் வாங்கி பெற்றோர்களை திருப்திப்படுத்துவது தங்கள் கடமை என்று உணர்ந்தனர்.’

அந்தப் பரீட்சை விடுமுறையில் சேரன்மாதேவியில் தகப்பனாருடன் தங்கியிருந்தபோது முந்தின ஆண்டு மதுரையில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் உக்கிரத்தைப் பற்றி தந்தையுடன் பகிர்ந்து கொள்கிறார். வ.வே.சு. ஐயரின் வாழ்க்கையைப் பற்றியும் அவர் சேரன்மாதேவியில் பண்டைக் கால குருகுல பாணியில் நடத்திக் கொண்டிருந்த பாரத்வாஜ் ஆசிரமத்தைப் பற்றியும் தந்தையிடம் கேட்டு அறிந்து கொள்கிறார். அப்போது செல்லப்பாவின் வயது 19. இது நடப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு – அதாவது 1920 செப்டம்பர் 11-ம் தேதி அன்று வ.வே.சு. ஐயர் கைது செய்யப்பட்டு அவருக்கு ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. செப்டம்பர் 11 தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத நாள். அன்றைய நள்ளிரவு 1.30 மணிக்குத்தான் பாரதியார் இறந்தார். அந்த விடுமுறையில் செல்லப்பாவுக்கு சுதந்திரச் சங்கு, சுதேசமித்திரன், இந்தியா ஆகிய பத்திரிகைகள் அறிமுகமாகின்றன. தேசம் முழுவதும் கள்ளுக்கடை மறியல் நடந்து கொண்டிருந்தது. அது பற்றிய செய்திகளைச் சேகரித்து சுதேசமித்திரனுக்குக் கொடுக்கிறார்.

1932 ஜனவரி முதல் தேதி திருப்பூரில் நடந்த ஊர்வலத்தில் முதல் வரிசையில் இருந்த குமரன் தன் கையிலிருந்த தேசியக் கொடியை கீழே போட மறுக்கிறான். போலீஸ் தடியடியில் உயிர் துறக்கிறான். செல்லப்பாவும் அவர் நண்பர்களும் கடைகளில் பணம் வசூலித்து மதுரை நகர் முழுவதும் தெருக்களில் குழி தோண்டி கம்பம் நட்டு தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கம்பத்தில் பாஷ்யம் என்ற மாணவன் யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றுகிறான். இச்செய்தி மிகவும் பரபரப்பை உண்டு பண்ணுகிறது. பாஷ்யம் செல்லப்பாவின் நண்பன்.

செல்லப்பா பி.ஏ. இறுதிப் பரீட்சையில் ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறுகிறார். ‘மணிக்கொடி’ அறிமுகமாகிறது. அப்போதைய ‘மணிக்கொடி’ ஆசிரியர் சங்கு சுப்ரமணியம். 1934-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி செல்லப்பாவின் முதல் சிறுகதை ‘மார்கழி மலர்’ ‘சங்கு’ வாரப் பதிப்பில் பிரசுரமாகிறது. தொடர்ந்து ‘மணிக்கொடி’யில் எழுதத் துவங்குகிறார். 1935-ல் 23 வயது செல்லப்பா 9 வயது மீனாட்சி என்ற பெண்ணை மணக்கிறார். பெரிய குளத்தில் எட்டு நாள் கல்யாணம் நடக்கிறது. அதற்குப் பிறகு கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, சிட்டி ஆகியோரின் நட்பு கிடைக்கிறது. பிறகு பத்திரிகை வேலை தேடி சென்னைக்கு வருவதும் வத்தலக்குண்டு திரும்புவதுமாக இருக்கிறார். கடைசியில் 1936-ல் ‘தமிழ்நாடு’ என்ற பத்திரிகையில் வேலை செய்வதற்காக சென்னை வருகிறார். அப்படி வரும்போது கும்பகோணத்தில் இறங்கி தன் குடுமியை க்ராப் தலையாக மாற்றிக்கொண்டு வந்தார். அதற்கு முன்பு வரை சிட்டி, செல்லப்பாவைக் குறிப்பிடுவதாக இருந்தால் குடுமிக்காரப் பையன் என்றே அடையாளம் சொல்வாராம். குடுமியை எடுத்தபோது அவர் வயது 26.

1937-ல் 35 ரூபாய் மாதச் சம்பளத்தில் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் சேர்கிறார் செல்லப்பா. ஆனால் ஒரு மாதம்தான் சம்பளம் வாங்கினார். அடுத்த மாதமே பத்திரிகை நின்று போனது. கையில் கால் காசு இல்லாமல் மீண்டும் வத்தலக்குண்டே வந்து சேர்கிறார்.

1938-ல் மீண்டும் சென்னை வந்து ஒரு சிறிய ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்துகொண்டு ‘ஜெயபாரதி’, ‘பாரத தேவி’ போன்ற பத்திரிகைகளில் எழுதி வாழ்கிறார். எழுத்தில் வரும் பணம் குடும்பத்துக்குப் போதவில்லை. 1939-ல் உலக யுத்தம் தொடங்கியதால் பத்திரிகைகள் பாதிக்கப்படுகின்றன. அந்த ஆண்டு டிசம்பர் கடைசியில் மீண்டும் வத்தலக்குண்டு புறப்படுகிறார்.

1941 ஜனவரியில் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறைவாசம். இரண்டரை மாதம் சென்று பெல்லாரி மாவட்டம் அலிப்பூர் சிறைக்கு மாற்றப்படுகிறார். ஜூனில் தண்டனை முடிந்து சிறையிலிருந்து வெளிவருகிறார். அடுத்த ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் நேரடியாக சேராமலேயே கைது செய்யப்பட்டார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் சிறை செல்ல விரும்பாத செல்லப்பா, இனி தேச விடுதலை இயக்கத்தில் ஈடுபட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.

அவரது வாழ்வின் மற்றொரு முக்கியமான திருப்பம், 1945-ல் க.நா.சு.வின் ‘சந்திரோதயம்’ பத்திரிகையில் எழுதியது. ‘வாடி வாசல்’ அதில்தான் வெளிவந்தது. மார்ச் 1947-ல் ‘வாடி வாசல்’ கதையோடு ‘சந்திரோதயம்’ நின்று போகிறது. அதே ஆண்டு ‘தினமணி’யில் சேர்ந்தார். அது அவருக்கு உவப்பான வேலையாகவும் இருந்தது. தான் பொறுப்பேற்றுக் கொண்ட நான்கு பக்கங்களுக்கு சுடர் என்று இருந்த பழைய பெயரை மாற்றி ‘தினமணி கதிர்’ என்று புதிய பெயரைச் சூட்டினார். ‘கதிர்’ வாரப் பத்திரிகையாக தினமணியோடு சேர்ந்து வந்தது. சி.சு. செல்லப்பா ‘மொழிக்காகத்தான் இலக்கணம்; இலக்கணத்துக்காக மொழி அல்ல’ என்ற கோட்பாடு உடையவர். எனவே ‘தினமணிக் கதிர்’ என்று இல்லாமல் ‘தினமணி கதிர்’ என்றே பெயரிட்டது அக்காலத்தில் ஒரு விவாதப் பொருளாக இருந்தது.

அப்போது ‘தினமணி’ ஆசிரியர் பதவிக்கு ந. ராமசாமி என்ற துமிலன் அமர்த்தப்பட்டார். தனக்கே அந்தப் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த செல்லப்பா ராஜினாமா செய்ய இருந்தார். ஆனால் பி.எஸ். ராமையா அதைத் தடுத்து விட்டதால் 1953 வரை ஆறு ஆண்டுகள் செல்லப்பா ‘தினமணி’யிலேயே பணியாற்றினார். பிறகு துமிலனுக்கும் செல்லப்பாவுக்கும் ஒத்து வராமல் போகவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு வத்தலக்குண்டு சென்று விட்டார். பிறகு சில மாதங்களில் மீண்டும் சென்னை திரும்பி கதை எழுதி ஜீவனம் நடத்தினார். திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் ஜாகை.

இப்படியாகப் போகும் செல்லப்பாவின் வாழ்க்கை இந்தியாவின் தேச விடுதலைப் போராட்டத்தோடு மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்ததை நாம் காணலாம். இதை அவர் பதினாறு ஆண்டுகளாகத் தன் நோட்டுப் புத்தகங்களில் ஒரு நாவலாக எழுதி வந்திருக்கிறார். 2000 பக்கங்கள் கொண்ட ‘சுதந்திர தாகம்’ என்ற பெயர் கொண்ட இந்த நாவலை மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதியதாகக் கூறுகிறார். பிறகு 1997-ம் ஆண்டு நான்கு நண்பர்களிடம் தலா 5000 ரூபாய் வாங்கி எழுத்து பிரசுரமாகவே மூன்று தொகுதிகளில் வெளியிட்டார். 1998-ல் செல்லப்பா மரணம் அடைந்தார் என்பதை நாம் இங்கே நினைவு கூர வேண்டும். இது பற்றி ‘வெளி’ ரங்கராஜன் எழுதுகிறார்:

‘செல்லப்பா தன்னுடைய கடைசி மூன்று ஆண்டுகளில் (1995-1998) காட்டிய வேகமும் வெளிப்படுத்திய சக்தியும் ஆச்சரியப்படக்கூடியவை. இந்த நாட்களில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு கையெழுத்து வடிவில் நைந்து போயிருந்த அவருடைய ‘என் சிறுகதைப் பாணி’ (250 பக்கம்), ‘சுதந்திர தாகம்’ (1800 பக்கம்), ‘ராமையாவின் கதைப்பாணி’ (368 பக்கம்) ஆகிய பழைய பிரதிகள் புத்தக வடிவம் பெற்றன. இவையெல்லாவற்றையும் அவரே புரூஃப் பார்த்து சரி செய்திருக்கிறார். ‘சுதந்திர தாக’த்தின் பல பக்கங்களை மீண்டும் திருத்தி எழுதியிருக்கிறார். தூக்கம் வராதபோது இரவு ஒரு மணிக்குக்கூட எழுந்து புரூஃப்களைத் திருத்தியிருக்கிறார். அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்காத அச்சகங்களை உறவு முறியும் அளவுக்குக் கடுமையாக சாடியிருக்கிறார். புத்தகங்கள் விஷயத்தில் அவர் யாரிடமும் தயவு காட்டியதில்லை. தான் படித்த புத்தகங்கள் குறித்தும், பழகிய மனிதர்கள் குறித்தும் அவருடைய நினைவுகள் மிகமிகத் துல்லியமானவை. ‘செய்யுளியல்’ என்கிற கவிதையில் உபயோகப்படுகிற பல குறியீட்டு வார்த்தைகளின் விளக்கமாக ஒரு புதிய அகராதியை கிட்டத்தட்ட பத்து நாட்களில் எழுதி முடித்தார்.

‘என் சிறுகதைப் பாணி’யிலிருந்து துவங்கி புத்தகங்கள் அச்சாக்கம் பெறுவதும் அடுத்த புத்தகத்தைப் பற்றி சிந்திப்பதுமாகவே அவர் இயக்கம் கொண்டிருந்தார். அதுவே அவருடைய வாழ்வை நீட்டித்தது. பலமுறை அவரை மரணம் நெருங்கி நெருங்கி விலகியபோது புத்தகம் பதிப்பாவதைப் பற்றிய செய்தி அவரை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கும். அவருடைய ‘சுதந்திர தாகம்’ நாவல் நூலகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்தப் பணத்தில் அவருடைய ‘செய்யுளியல்’, ‘எழுத்துக் களம்’, ‘விமர்சனத் தேட்டம்’, ‘தமிழ்ப் படைப்பாளிகளின் விமர்சனங்களுக்கு பதில்கள்’ ஆகிய பிரதிகளை பதிப்பிக்கத் திட்டமிட்டிருந்தோம். சாதாரண நாட்களில் நூலக ஆர்டர்களை அவர் நம்பியவர் அல்ல. தானே புத்தகங்களைச் சுமந்துகொண்டு கால்நடையாக அலைந்தவர்தான். ஆனால் இயலாத சூழலில், ‘சுதந்திர தாகம்’ நாவல் நூலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படாமல் சிறிய வீட்டில் வீடு முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருந்த காட்சி செல்லப்பாவுக்கு பெரிய மனத்தளர்ச்சியை உண்டாக்கியது.’

1997-க்குப் பிறகு இந்த நாவல் மறு பிரசுரம் ஆகாததால் இது எங்கே கிடைக்கும் என்று பல பதிப்பகங்களிலும் புத்தக நிலையங்களிலும் தேடினேன். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் ‘நவீன விருட்சம்’ ஆசிரியர் அழகிய சிங்கர் தான் தன்னுடைய சொந்தப் பிரதியை என்னிடம் கொடுத்தார். ஒரு எழுத்தாளர் சொன்னார், யாரையாவது தண்டிக்க வேண்டுமென்றால் அவரிடம் சுதந்திர தாகம் தொகுதிகளைக் கொடுத்து ஒரு அறையில் அடைத்து விடலாம் என்று. இப்போது என் கைகளில் ‘சுதந்திர தாகம்’. எப்படி இருந்தது என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

குறிப்பு: இத்தொடரில் பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் அனைத்தும் சொல்வனத்தில் வெங்கட் சாமிநாதனின் செல்லப்பா பற்றிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை செல்லப்பாவின் புதல்வர் செ.சுப்ரமணியன் தம் குடும்ப சேகரத்திலிருந்து கொடுத்து உதவியதாக சொல்வனத்தில் கண்டுள்ளது. சொல்வனம் தளத்துக்கும் சுப்ரமணியனுக்கும் நம் நன்றி.

வி. ராமமூர்த்தி எழுதிய ’சாதனைச் செம்மல் சி.சு. செல்லப்பா’ என்ற நூலை கொடுத்து உதவிய கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கும் ஹரன் பிரசன்னாவுக்கும் நன்றி.

செல்லப்பாவின் வாழ்க்கைக் குறிப்புகள் அனைத்துக்கும் உரியவர் கிரிக்கெட் வர்ணனையாளர் வி. ராமமூர்த்தி. அவருக்கும் உளம் கனிந்த நன்றி.