CHARU ON CHELLAPPA -PART-4

Oscar Lewis என்ற மானுடவியல் அறிஞர் புவெர்த்தோ ரிக்கோ என்ற மத்திய அமெரிக்க நாட்டின் கடற்கரையோர சேரிகளில் வாழ்ந்த மக்களைப் பேட்டி எடுத்தார். பேட்டி எடுக்கும்போது அவர்களுக்கு அது பேட்டி எனத் தெரியாதபடி கண்ணுக்குப் புலனாகாத ஒலிப்பதிவு எந்திரத்துடனோ அல்லது அதிக ஞாபக சக்தி கொண்ட உதவியாளருடனோதான் செல்வார். அவருடைய புவெர்த்தோ ரிக்கோ ஆய்வுகள் La Vida (வாழ்க்கை) என்ற பெயரில் மானுடவியல் நூலாக வந்தாலும் அது உலகின் சிறந்த நாவல் வரிசையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் எந்தவித இலக்கிய உத்தியோ மொழியின் நுணுக்கங்களோ இல்லை. விளிம்பு நிலை மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி அவர்கள் பேசுகின்ற கொச்சை மொழியில்தான் பேசியிருக்கிறார்கள். (அதில் ஒரு அத்தியாயத்தை ‘என் அம்மா ஒரு விபச்சாரி’ என்ற தலைப்பில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்திருக்கிறேன். ‘ஊரின் மிக அழகான பெண்’ என்ற என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதியில் அந்தக் கதை உண்டு.)

ஆஸ்கார் லூயிஸின் ‘லா விதா’வைப் போலவே ‘சுதந்திர தாகம்’ நாவலிலும் இலக்கிய உத்திகளோ நுணுக்கங்களோ இல்லாவிட்டாலும் அது உலகின் மகத்தான நாவல்களில் ஒன்று எனத் திண்ணமாகச் சொல்லலாம். ஏன் என்பதற்கான காரணங்களைத்தான் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.

***

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இன்றைய காலகட்டத்தில் வாழும் இந்தியர்களாகிய நாம் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். கொள்ளைக்காரர்களும் கொலைகாரர்களும் இன்னும் எல்லாவித கொடூரங்களைச் செய்பவர்களும் திருடர்களும்தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள். மாட்டுத் தீவன ஊழல், தனக்கே சிலை வைத்துக் கொண்ட ஊழல், சுடுகாட்டுக் கூரை ஊழல், அறுபதாயிரம் கோடி ரூபாய் ஊழல், ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்களைத் தன் சம்பளப் பட்டியலில் வைத்துக் கொண்டிருக்கும் தொழிலதிபர்கள், குற்றவாளியை விடுதலை செய்துவிட்டு குற்றவாளியைப் பிடித்த அதிகாரியைத் தூக்கி உள்ளே போடும் நீதிபதிகள் – இப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் செல்லப்பா அதிர்ஷ்டசாலி. மனிதர்களா அல்லது தெய்வப் பிறவிகளா என வியக்க வைக்கும் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்கிறார். சுதந்தரப் போராட்டம் என்றால் துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டு, போர்க்கப்பல், ஆள் கடத்தல், குண்டு வீச்சு, ஊரை எரித்தல், தற்கொலை வெடிகுண்டுப் படை என்றுதானே அறிந்திருக்கிறோம்? ஆனால் மகாத்மா தலைமை தாங்கிய சுதந்தரப் போராட்டத்தில் இவை எதுவுமே இல்லாமல் மக்கள் நிராயுதபாணியாக நின்றனர். தான் துன்பப்பட்டாலும் எதிராளி துன்பப்படக்கூடாது, உடல் பலத்தையோ ஆயுத பலத்தையோ உபயோகிக்கக் கூடாது, தன்னுடைய தியாகத்தின் மூலம் எதிரி தன் தவற்றை உணர்ந்து தன்னை மனமாற்றம் செய்து கொள்வான் என்பது போன்ற மகாத்மாவின் போதனைகளுக்கேற்ப தொண்டர் அனைவரும் அகிம்சா வழியில் போரிட்டனர். எதிராளியின் ரத்தம் சிந்தாமல் தன் ரத்தத்தைச் சிந்திய லட்சக்கணக்கான தொண்டர்களை உருவாக்கிய மகாத்மாவின் காலகட்டம் இன்றைய நிலையில் நம்பக்கூடியதுதானா? அந்தக் காலகட்டத்தைக் கண்ணால் பார்த்து, அனுபவித்து, அக்காரியங்களில் ஈடுபட்டு எழுதியிருக்கிறார் செல்லப்பா. அதனால்தான் ‘சுதந்திர தாகம்’ உலகின் மகத்தான நாவல் வரிசையில் வரக் கூடியது என்கிறேன்.

பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்

தேசிய இயக்கத்தில் நாடு பூராவும் ஈடுபட்டது பதினைந்து மாகாணங்கள், சென்னை உட்பட தமிழ்நாட்டில் பதினோரு ஜில்லாக்கள். இந்த மாகாணங்களிலும் ஜில்லாக்களிலும் லட்சக்கணக்கான பேர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார்கள். இதில் மதுரை ஜில்லாவில் மதுரை நகரை மட்டும் தன் களனாக எடுத்துக்கொண்டிருக்கிறார் செல்லப்பா. நாவலில் வருபவர்கள் அத்தனை பேரும் நிஜம். அப்போதைய மதுரையின் தேச பக்தர்கள். நாவலின் களனாக மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல; அவருடைய கல்லூரிப் பருவத்தின் ஐந்து ஆண்டுகளை அவர் மதுரையில்தான் கழித்தார். அந்தக் காலகட்டமும் சட்ட மறுப்பு நாட்களும் (1927-34) இணைக்கிணையாக நடந்தவை.

சுதந்திரப் போராட்டத்தைச் சித்தரிக்கும் நாவல் என்பதால் தகவல் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் செல்லப்பா. உதாரணமாக, சைமன் கமிஷன் மதுரைக்கு வந்தபோது ‘பகிஷ்கார சம்பவம் நடந்தது; மாணவர்கள் கல்லூரிக்குப் போகவில்லை’ என்று எழுதுகிறார். மாணவர்கள் கல்லூரிக்குப் போகவில்லை என்று எழுதிய நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து விடக் கூடாது அல்லவா? அதற்கு சைமன் கமிஷன் மதுரைக்கு வந்த நாள், கிழமையைச் சரி பார்க்க வேண்டும். இப்படியாகத்தான் அந்த 2000 பக்கங்களிலும் எழுதப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் செல்லப்பா.

‘சுதந்திர தாகம்’ என்ற இந்த நாவலை தமிழ் தெரிந்த அத்தனை பேரும் படிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அத்தனை பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள் இந்த நாவலைப் பயில வேண்டும். இதைப் படிக்காத ஒரு மாணவர் கூட இருக்கக் கூடாது. 2000 பக்கங்களையும் பாடத்திட்டத்தில் வைப்பது சாத்தியமில்லை என்றாலும் குறைந்தது 200 பக்கங்களையாவது நம் மாணவர்கள் படித்தே ஆக வேண்டும். ஏனென்றால், எப்படி நமக்கு சுதந்தரம் கிடைத்தது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது இந்த நாட்டில் வசிக்கின்ற நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

இந்த நாவலை எழுத செல்லப்பா எத்தனை பிரயாசைப்பட்டிருக்கிறார் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம். வேதாரண்யத்தில் நடந்த போராட்டம் (1930) பற்றி இந்த நாவலில் 100 பக்கங்கள் வருகின்றன. அப்போது செல்லப்பா பதினெட்டு வயது மாணவன். இதையெல்லாம் பின்னாளில்தான் ஒரு எழுத்தாளனாகி எழுதுவோம் என்ற பிரக்ஞை இல்லாத பருவம். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு எழுத அமரும்போது எப்படி அதையெல்லாம் துல்லியமாக நினைவு கூர்வது?

1930-ம் ஆண்டு திருச்சியிலிருந்து ராஜாஜி தலைமையில் நடந்த வேதாரண்ய யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் பத்மனாபன். அவர் ‘வேதாரண்யம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார் செல்லப்பா. இந்த நாவலுக்கு உதவிய பல ஆதாரங்களில் அந்தப் புத்தகமும் ஒன்று.

நாவலில் திருப்பூர் குமரன் உயிர்த் தியாகம் செய்த சம்பவமும் வருகிறது. அதுவும் செல்லப்பாவுக்குப் பத்திரிகைச் செய்தியாகவே தெரியும். அதை வைத்துக்கொண்டு எப்படி எழுதுவது? லத்தியடியில் குமரனின் மண்டை உடைந்தபோது அவனோடு கூட லத்தியால் மண்டையில் அடிபட்டு ஆனால் அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துக் கொண்ட திருப்பூர் சுந்தரம் என்ற சத்தியாக்ரஹி ‘திருப்பூர் குமரன்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதுவும் செல்லப்பாவின் நாவலுக்கு உதவியிருக்கிறது.

இதுபோல் நூற்றுக்கணக்கான புத்தகங்கள்; நூற்றுக்கணக்கான சம்பவங்கள். 1932 ஜனவரி 26-ம் தேதி அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் யூனியன் ஜாக் கொடிக்குப் பதிலாக தேசியக் கொடி பறந்தது. நம்ப முடியாத சம்பவம். அதைச் செய்தது பாஷ்யம் என்ற 25 வயது வாலிபன். சிக்கியிருந்தால் தீவாந்தர தண்டனை கிடைத்திருக்கும். அந்த பாஷ்யத்தை 1936-ல் மணிக்கொடி அலுவலகத்தில் சந்திக்கிறார் செல்லப்பா. ஆர்யா என்ற புனைப்பெயரில் சைத்ரீகராக இருக்கிறார் பாஷ்யம். அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து அவரைப் பேட்டி கண்டு தினமணி கதிர் வாரப் பத்திரிகையில் அதன் ஆசிரியர் துமிலன் ராமசாமி ஐந்தாறு வாரங்கள் கட்டுரையாக எழுதினார். அந்தக் கட்டுரையையும் பத்திரமாக வைத்திருந்து தன் நாவலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் செல்லப்பா.

கி.வா.ஜ.வுடன்

நாவலில் ஏராளமான கண்ணிகள் உள்ளன என்று குறிப்பிட்டேன். அதுபற்றியெல்லாம் எழுதப் புகுந்தால் முடிவேயில்லாமல் பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக்கொண்டே போகலாம். உதாரணமாக, Gustav Flaubert பற்றி The Family Idiot என்ற தலைப்பில் ஜான் பால் சார்த்ர் ஒரு புத்தகம் எழுதத் தலைப்பட்டார். முதல் தொகுதி பொடி எழுத்தில் ஆயிரம் பக்கங்கள். ஆனால் எடுத்துக்கொண்ட விஷயத்தை ஆரம்பிக்கவே இல்லை என்று தோன்றியது அவருக்கு. The Family Idiot-ன் இரண்டாம் தொகுதி வெளிவந்தது. மீண்டும் பொடி எழுத்தில் ஆயிரம் பக்கங்கள். அப்போதும் அவர் எடுத்துக்கொண்ட விஷயத்தை ஆரம்பிக்கவே இல்லை என்று தோன்றியது அவருக்கு. பிறகு மூன்றாம் தொகுதி, நான்காம் தொகுதி, ஐந்தாம் தொகுதி… எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. எல்லாமே பொடி எழுத்தில் ஆயிரம் பக்கங்கள். ஐந்து தொகுதி எழுதியும் இன்னும் எடுத்துக்கொண்ட விஷயத்தை ஆரம்பிக்கவே இல்லை என்று தோன்றியது அவருக்கு. எனவே ஐந்தாம் தொகுதியோடு ‘இந்த முயற்சியில் நான் தோல்வி அடைந்து விட்டேன்’ என்று அறிவித்துவிட்டு அதிலிருந்து வெளியே வந்து விட்டார். 1982-ம் ஆண்டு தில்லியில் இந்த மாபெரும் நூலின் முதல் தொகுதியைப் படித்திருக்கிறேன். சார்த்தரின் ஃப்ளெபர் பற்றிய இந்த நூல் ஏன் அப்படி ஒரு பிரம்மாண்டமான அளவில் நீண்டது என்றால் சார்த்ர் ஒரு நூற்றாண்டுக்கு (1821 – 1857) முந்தைய கால கட்டத்தைப் பற்றி எழுதுகிறார். மேலும், ஃப்ளெபரின் வாழ்க்கையைத் தன்னுடைய வாழ்க்கையோடு இணைத்து ஒரு சுயசரிதையைப் போலவும் வாழ்க்கை வரலாற்றைப் போலவும் நாவலைப் போலவும் எழுதுகிறார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னே இருந்த சமூக அரசியல் வரலாற்றை எழுதுகிறார். அதனால்தான் 5000 பக்கங்கள் எழுதியும் ‘இன்னும் ஆரம்பிக்கவே இல்லை’ என்று தோன்றியது அவருக்கு.

அதைப் போலவே ‘சுதந்திர தாகம்’ நாவலைப் பற்றி ஒருவர் எழுதப் புகுந்தாலும் அப்படிப்பட்ட ஒரு புதிர்வட்டப் பாதையில்தான் நுழைய வேண்டியிருக்கும்.

நாவலின் பிரதான பாத்திரம் சிவராமன் (செல்லப்பா). வயது பதினாறு. இண்டர் படிப்பின் இரண்டாம் ஆண்டு. இப்போதைய பன்னிரண்டாம் வகுப்பு. சரித்திர மாணவன். அதில் அவனுக்கு மிகவும் ஈடுபாடு. கல்லூரியில் நன்றாகப் படிப்பவன் என்ற பெயர் எடுத்திருந்தாலும் ஆங்கிலப் பரீட்சைகளில் தோல்வி அடைகிறான். காரணம், ஆங்கிலத்தின் மீது வெறுப்பு. ‘ஒரு மொழி என்ன பாவம் செய்திருக்கும் அப்படி ஒருவன் வெறுப்புக்கு உள்ளாக என்று கேட்கத் தோன்றும். ‘யங் இந்தியா’ இங்கிலீஷில்தானே வந்து கொண்டிருந்தது. அவன் தினசரி படிக்கும் ‘ஹிந்து’ பத்திரிகை, அதுவும் இங்கிலீஷில்தானே? அதெல்லாம் அவனுக்கு எதிராக சாட்சியம் கொடுத்தன. என்றாலும் ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் வேர்ட்ஸ்வொர்த்தையும் படிக்கும்போது அவனுக்கு எரிச்சலாக வரும். இதெல்லாம் எதுக்கு நாம் படிக்க வேண்டும்? அவனுக்கு வெளிநாட்டுச் சரித்திரம், கலாசாரம், இலக்கியம் என்பதுக்காகக் கசப்பு இல்லை. கிரேக்க, ரோம், எகிப்திய நாகரிகங்களை, வரலாறுகளைப் பற்றி அக்கறையுடன் படித்தான். ஏன், ஐரோப்பாவின் தற்கால முன்னேற்ற நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ் இவைகளைப் பற்றியும்தான். ஆனால் பிரிட்டிஷ் என்கிற பெயரை நினைக்கும்போதே அவன் அடிவயிற்றிலிருந்து கசப்பு ஏறி விடும். அவன் பிரிட்டிஷாரை வெறுத்தான். காரணம் எளிமையானதுதான். அவர்கள் தங்கள் நாட்டை அடிமையாக்கி வைத்திருந்தார்கள். வியாபாரம் செய்ய வந்தவர்கள் நூற்றியெழுபது வருஷங்களாக நாட்டையே ஆதிக்கப்படுத்திக் கொண்டார்கள். வின்சண்ட் ஸ்மித் எழுதிய இந்து தேச சரித்திரப் பாட புஸ்தகம், அவனுக்குத் தன் நாடு அடிமைப்படுத்தப்பட்டதை - சம்பவங்கள் திரித்து எழுதப்பட்டிருந்தாலும் – விளக்கியது. அந்தப் புஸ்தகத்தைக் கிழித்து எறிய கை பரபரக்கும் போதெல்லாம் அவன் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் அடக்கிக் கொள்வான். இருந்தாலும் தன் ஆத்திரத்தைக் காட்டி, அதில் உள்ள கிளைவ், ஹேஸ்டிங்ஸ் போன்றவர்கள் படங்களைக் கோரப்படுத்தியும், ஆத்திரம் ஊட்டும் வரிகளை பென்சிலால் குறித்து பக்க மார்ஜின்களில் தன் கருத்துக்களை எழுதியும் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்வான்.

அது அவனுக்கு வெறும் சரித்திரப் புஸ்தகம் அல்ல. ஒரு மானிட ஜாதியின் வாழ்வு பற்றியது. அதன் உரிமை பற்றியது. ரோம் தேசத்து அடிமைகளைப் பற்றிப் படித்திருந்தான். ‘பென்ஹர்’ சினிமா பேசாத படம் சென்ற வாரம்தான் சிட்டி சினிமாவில் அவன் பார்த்தான். அடிமைகள் பட்ட அவஸ்தை அவனைச் சிந்திக்க வைத்தது. அமெரிக்க அடிமை வியாபாரத்தை ஒழிக்க ஆப்ரஹாம் லிங்கன் என்ன பாடுபட்டு, அதுக்காகத் தன் உயிரையும் கொடுத்ததை அவன் படித்திருந்தான்.’

நாவலில் இந்த இடம் 1928-ம் ஆண்டின் நடப்புகளை விவரிக்கிறது. மேலே உள்ள பத்தியில் உள்ள ஒரு கண்ணியை கவனியுங்கள். பேசாத ’பென்ஹர்’ படத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். நமக்குத் தெரிந்த பேசும் படமான ’பென்ஹர்’ வந்ததே 1959-ல். அதற்கு முன்பு இரண்டு பேசாத ‘பென்ஹர்’ வந்தன. முதல் படம் 1907-ல் Sidney Olcott-இன் இயக்கத்தில் வந்தது. அடுத்து 1925-ல் Fred Nibli ‘பென்ஹரை’ பேசாத படமாக எடுத்தார். செல்லப்பா குறிப்பிடும் படம் ஃப்ரெட் நிப்லி இயக்கிய ‘பென்ஹர்’. அது பற்றி மௌன சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதில்லை என்று சொல்வார்கள். 1,50,000 நடிகர்கள் நடித்த பிரம்மாண்டமான படம் அது.

ஜார்ஜ் ஜோஸஃப்

நாவலில் ஜார்ஜ் ஜோஸஃப் என்ற ஒருவர் வருகிறார். சுதந்தரப் போராட்டத்தின் காந்தி சகாப்தம் 1919 ஏப்ரல் 6-ம் தேதி ரௌலட் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எதிர்ப்பாகத் துவங்குகிறது. கடையடைப்பு, வேலை நிறுத்தம், பொதுக்கூட்டம், உபவாசம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலமாக அகில இந்திய கண்டன தினம் கொண்டாடும்பபடி ஆணையிடுகிறார் மகாத்மா. அந்த ஆணையை ஏற்று ஜார்ஜ் ஜோஸஃப் தலைமையில் சுந்தரம் பிள்ளை, கிருஷ்ண குந்து, சீனிவாச வரதன், மௌலானா சாஹேப் முதலியோர் மதுரையில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தைத் திகைக்க வைத்தனர். செல்லப்பா குறிப்பிடும் இந்தப் பிரமுகர்கள் அனைவரும் நிஜத்தில் வாழ்ந்தவர்கள். நான் ஓர் ஆய்வாளனாக இருந்தால் இவர்களின் வரலாற்றையும் தேடிப் போகவேண்டும்.

யுத்த காலத்தில் (முதலாம் யுத்தம்), தான் பிரிட்டிஷாருக்கு செய்த உதவிக்காக பாராட்டப்பட்டு அளிக்கப்பட்ட விருதுகளை வைஸ்ராய்க்கு, தான் மதிக்கவும் அபிமானம் காட்டவும் இயலாத ஒரு சர்க்கார் அளித்த இந்தச் சின்னங்களை அணிய என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று சொல்லித் திருப்பித் தந்து விட்டார் ஜார்ஜ் ஜோஸஃப். அதோடு தான் பார்த்து வந்த வக்கீல் தொழிலையும் உதறினார்.

1928-ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரம், பங்குனி பிறந்து சில நாட்கள்தான் ஆகியிருக்கின்றன. அன்றைய தினம் கல்லூரி முடிந்து சிவராமனும் (செல்லப்பா) அவனுடைய வகுப்புத் தோழன் சதாசிவனும் பேராசிரியரோடு வெளியே வருகிறார்கள். அப்போது கல்லூரியின் சுற்றுச் சுவரின் மேலே ஏறி நின்றபடி ஒருவர் பேச மாணவர்கள் பெரும் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்தான் ஜார்ஜ் ஜோஸஃப். பார் அட் லா. சைமன் கமிஷன் பகிஷ்காரம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அப்போது ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை அப்படியே நாவலில் கொடுத்திருக்கிறார் செல்லப்பா. அந்த உரையின் ஒரு பகுதி இது:

‘…நாம் இப்போது சீர்திருத்தங்கள் கேட்டுப் போராடவில்லை. அந்தக் காலம் மிதவாதிகளோடு போய் விட்டது. நாம் இப்போது கேட்பது பூரண சுயேச்சை. இப்போது அதைக் கொடுக்காவிட்டால் நாளை நாம் ஏகாதிபத்தியத்தின் தலையையே கேட்க வேண்டி வரும். எனவேதான் பிரிட்டனுக்கு ஒரு கடைசி எச்சரிக்கையாக இந்த பகிஷ்காரம். நம் தகுதியை நிர்ணயிப்பதற்கு இவர்கள் யார்? யார் இந்த ஏழு பேர்? அவர்கள் திரும்பிப் போய் சொல்லட்டும் தங்களை அனுப்பியவர்களிடம், இந்தியாவின் முப்பத்தைந்து கோடி ஜனங்களும் ஒரே முகமாக பிரிட்டாஷாரை வெறுக்கிறார்கள் என்று! அந்த வெறுப்பைக் காட்டத்தான் இந்த பகிஷ்காரம். நாளை மறுநாள் நம் நகருக்கு அவர்கள் வருகிறார்கள். மாணவர்களே, நீங்கள்தான் இந்த நாட்டு எதிர்காலப் பிரஜைகள். நாட்டை உருவாக்க வேண்டியவர்கள். இப்போது உங்களை வேறொன்றும் கேட்கவில்லை. 1920-ல் மகாத்மா காந்தி ‘கலாசாலைகளை விட்டு வெளியேறுங்கள்’ என்று சொன்னது போல் படிப்பை உதறி விட்டு வெளியே வரச் சொல்லவில்லை. நாளை மறுநாள் கமிஷன் அங்கத்தினர்கள் – அவர்களில் ஓர் இந்தியர் கூடக் கிடையாது என்பதையும் நீங்கள் கவனிக்கவேண்டும் – நம் வீதிகள் வழியே போகையில் நகரின் தெருக்களில் நின்று கருப்புக் கொடி காட்டி, ‘ஸைமனே திரும்பிப் போ’ (Simon go back!) என்ற கோஷத்தை எழுப்பவேண்டும். அன்று கலாசாலைகளுக்குப் போகாமல் ஹர்த்தாலில் கலந்து கொள்ள வேண்டும். இது மகாத்மாவின் வேண்டுகோள். மாணவர்களே, நான் பேசிவிட்டேன். செயல் புரிய வேண்டியது நீங்கள். நாட்டின் விடுதலைக்கு உங்கள் பங்கைச் செலுத்த வேண்டிய வாய்ப்பைத் தவற விட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஞாபகம் இருக்கட்டும். நீங்கள் எழுப்ப வேண்டிய ஒரே கோஷம், Simon Go Back! அதுக்கு மேல் ஒரு வார்த்தை கூடாது. அதுக்குக் குறைவாகவும் கூடாது. இதுதான் மகாத்மாவின் செய்தி. அவர் இயக்கத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும் உங்கள் செய்கை. நான் முடித்துவிட்டேன். இது இன்று என் முப்பதாவது கூட்டம். இன்னும் பேச வேண்டிய இடங்கள் பல… வருகிறேன்’ என்று தொப்பென கைப்பிடிச் சுவரிலிருந்து குதித்து கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டார்.

-> CHARU ON CHELLAPPAA-PART-5