CHARU ON CHELLAPPAA-PART-5

திரும்பவும் சொல்கிறேன், செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ நாவல் இந்திய சுதந்தரப் போராட்டம் பற்றி எழுதப்பட்ட ஒரு மகத்தான ஆவணம். இது இந்தியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடையவேண்டும். இதற்கு சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகளும் பல்கலைக்கழகங்களும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நாவலில் சிதம்பர பாரதி என்ற ஒரு போராட்ட வீரர் வருகிறார். அவர் யார் என்று பார்த்தால் அது ஒரு தனி நூல் அளவு போகிறது. 1905-ம் ஆண்டு ரங்கசாமி சேர்வை, பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பதினாறாவது குழந்தையாக மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ என்னும் இல்லத்தில் பிறந்தார் சிதம்பர பாரதி. ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து போக படிப்பு பாதியிலேயே நின்றது. ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் தலைமையில் போராடிய தீவிரவாதிகளான வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணியம் சிவா ஆகியோரின் வன்முறைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அவர்களின் வழியில் இயங்கினார். வீர் சாவர்க்கர் எழுதிய ‘1857 – முதல் சுதந்தரப் போர்’ என்ற நூல் வெள்ளையரால் தடை செய்யப்பட்டிருந்தது. அதைப் படிப்பவர்களும் விநியோகிப்பவர்களும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் அதை மொழிபெயர்க்கச் செய்து காங்கிரஸ் மாநாடுகளில் விநியோகித்தார் சிதம்பர பாரதி. அந்த ஆண்டு 1927. (மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சௌந்தரம்.) 1928-ல் சென்னையில் ‘தேசோபகாரி’ என்ற பத்திரிகையை நடத்தினார். 1922-லிருந்து 1942 வரையிலான காலகட்டத்தில் ஏழு முறை - மொத்தம் 14 ஆண்டுகள் - வடநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார். அதில் ஒரு சிறைத் தண்டனை பற்றி மட்டும் பார்ப்போம்.

மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆண் போராளிகள் பெரும்பாலானோர் சிறையில் இருந்த நிலையில் பெண் தொண்டர்கள் ஓர் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்து பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டுத் திரும்பி விட்டனர் போலீசார். அருகிலிருந்த கிராமத்து மக்கள்தான் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்தக் காரியத்தைச் செய்த போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவர் மீது திராவகம் வீசினார்கள். அது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிதம்பர பாரதி. சிறையிலிருந்து வெளிவந்த பின் தன் உறவுக்காரப் பெண்ணான பிச்சை அம்மாளை மணந்தார். பதினைந்து சகோதர சகோதரிகளோடு பிறந்த சிதம்பர பாரதிக்கு ஒரே மகள். பெயர் சண்முகவல்லி.

சுதந்தரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957-ல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் அவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

சுதந்திர தாகத்தின் மற்றொரு கதாபாத்திரம் ந. சோமையாஜுலு. இவர் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூரில் 1902 டிசம்பர் 28-ம் தேதி சோமசுந்தர ஐயர் -சீதையம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். மாணவப் பருவத்தில் வ.உ.சியையும், பாரதியையும், சாது கணபதி என்ற வழக்கறிஞரையும் சந்தித்தது இவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 1920-ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தோடு இவரது அரசியல் போராட்ட வாழ்க்கை துவங்குகிறது.

1924-ல் திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பல தொண்டர்களைத் திரட்டிக்கொண்டு மதுரையிலிருந்து பாதயாத்திரையாகவே திருவண்ணாமலை சென்றடைந்தார். வழிநடையின்போது தொண்டர்களுக்குச் சிரமம் தெரியாமல் இருப்பதற்கு அவர் பாரதியிடமிருந்தே கேட்ட பாடல்களைப் பாடினார்.

சோமையாஜுலு

அதே ஆண்டு பம்பாய் மாகாணம் பெல்காம் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கும் மதுரையிலிருந்து 1100 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாகவே தொண்டர்களை அழைத்துச் சென்றார். மாநாடு முடிந்து திரும்பும்போதும் பாதயாத்திரையாகவே தொண்டர்களை அழைத்து வந்தார். இதெல்லாம் நடந்து இன்னும் நூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் ஏதோ ராமாயண காலத்தில் நடந்தது போல் தோன்றுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மகாபலிபுரத்தில் ஓர் அரசியல் கட்சியின் மாநாடு நடந்தபோது மாநாடு நடத்திய தொண்டர் ஒருவரும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்த தலித் ஒருவரும் கலவரத்தில் இறந்து போனது சோமையாஜுலுவின் பாதயாத்திரைகளைப் படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது. அப்போதைய போராட்டங்களை அஹிம்சை என்ற அறத்தையும் சத்தியம் என்ற தர்மத்தையும் இரண்டு கண்களாகக் கொண்ட காந்தி என்ற மகா மனிதர் வழி நடத்தினார். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு காலகட்டத்தை தத்ரூபமாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் செல்லப்பா.

நமக்கெல்லாம் இந்திய சுதந்தரப் போராட்டத்தின்போது நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி நன்கு தெரியும். அது 1930-ல் நடந்தது. அதற்கு முன்னால் Sword Satyagraha என்று ஒரு போராட்டம் 1927-ல் நடந்தது. அந்தப் போராட்டம் ஜூன் 16, 1927 அன்று சென்னையில்தான் தொடங்கப்பட்டது. தமிழில் அதை ‘வாளேந்தும் போராட்டம்’ என அழைத்தனர். இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் பரவியது. காரணம், இந்தியர் யாரும் வாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘வாளேந்தும் போராட்டம்’.

அந்தச் சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கியர்கள். ஏனென்றால், சீக்கியர்களின் மதக் கடமைகளில் ஐந்து ‘k’ முக்கியமானமானது. கேசம் – வெட்டப்படாத சிகை; kanga – மரத்தினாலான சீப்பு; கடா – மணிக்கட்டில் மாட்டிக் கொள்ளும் உலோக வளையம்; கச்சா – இடுப்பில் அணியும் உள்ளாடை; கிர்ப்பான் – வாள். இவை ஐந்தையும் அணிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு சீக்கியரின் கடமை. இதில் கிர்ப்பானைக் குறி வைத்தது பிரிட்டிஷ் சட்டம்.

சென்னையில் துவங்கிய ‘வாளேந்தும் போராட்டம்’ இந்திய அளவில் நாக்பூரில் நடந்தது. அதையொட்டி மதுரையில் சோமையாஜுலு பல காங்கிரஸ் தொண்டர்களுடன் வாள் ஏந்தி ஊர்வலம் சென்றார். அதை அந்நாளைய தினசரிகள் ‘பிச்சுவா ஊர்வலம்’ என்று எழுதின. விருதுநகரில் காமராஜரும் மதுரையில் சோமையாஜுலுவும் இந்த ஊர்வலத்தை மிக வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஊர்வலத்துக்காகவே பல நூறு பிச்சுவாக்கள் உருக்குப் பட்டறையில் தயாரிக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தின் பயனாக பிரிட்டிஷ் அரசு சில இடங்களைத் தவிர மற்ற ஊர்களில் மக்கள் கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று தான் போட்ட சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

கர்னல் ஜேம்ஸ் நீல் (1810 – 1857) என்பவர் தன்னுடைய 17-வது வயதிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ அதிகாரியாகச் சேர்ந்து 1857-ல் நடந்த முதல் சுதந்தரப் போர் வரை மிகக் கொடுமையான அடக்குமுறைகளைச் செய்து பிரபலமடைந்த பிரிட்டிஷ் அதிகாரி. வாரணாசியிலும் அலஹாபாதிலும் அவர் பிரிட்டிஷ் ராணுவத்தினர் எந்த இந்தியரை வேண்டுமானாலும் எந்த விசாரணையும் இல்லாமல் கொல்லலாம், உயிரோடு கொளுத்தலாம் என்று உத்தரவிட்டார். கண்ணில் தென்படும் ஒவ்வொரு இந்தியரும் உயிரோடு கொளுத்தப்பட்டனர். ஒரு கீழவெண்மணி அல்ல; பல நூறு கீழவெண்மணிகளைக் கண்டது வட இந்தியா. அப்படிச் சொல்வது கூட நடந்த கொடுமைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகிவிடும். கிட்டத்தட்ட ஹிட்லரின் வதை முகாம்களில் நடந்த கொடுமைகளையே பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் நிகழ்த்தினர்.

இதற்கெல்லாம் காரணமாக இருந்தது ஒரு சம்பவம். 1857 மே 10-ம் தேதி மீரட்டில் துவங்கியது சிப்பாய்க் கலகம். பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பணியாற்றிய இந்தியச் சிப்பாய்கள் துவக்கிய கலகம் அது. இந்தியா முழுவதும் பரவிய அந்தக் கலகத்தில் கான்பூரில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. கான்பூரின் ராணுவத் தளபதியான ஜெனரல் வீலரின் ராணுவப் பிரிவை இந்தியச் சிப்பாய்கள் முற்றுகையிட்டனர். மூன்று வாரங்கள் நீடித்தது இந்த முற்றுகை. இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால், ஜெனரல் வீலருக்கு நன்கு இந்தி தெரியும்; அவர் ஒரு இந்தியப் பெண்ணையே மணந்திருந்தார்.

ஜெனரல் வீலரின் ராணுவப் பிரிவு மூன்று வார காலமாக இந்தியச் சிப்பாய்களால் முற்றுகையிடப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். (Photo by Felice Beato)

இந்திய சுதந்தரப் போராட்டத்தில் இந்தியர்கள் மீது விழுந்த கரும்புள்ளியாகவே இன்றளவும் கருதப்படும் அந்தச் சம்பவம் கான்பூரில்தான் நடந்தது. இந்தியச் சிப்பாய்களின் முற்றுகை காரணமாக பாதுகாப்பு கருதி பிரிட்டிஷ் ராணுவத்தினரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் சுமார் 300 பேர் கான்பூரில் உள்ள பீபிகர் என்ற ஒரு சிறிய வீட்டில் ஒளிந்திருந்தனர். (பீபிகர் என்றால் பெண்களின் வீடு என்று பொருள்.) அந்த வீடு இந்தியச் சிப்பாய்களால் கொளுத்தப்பட்டது. மொத்தம் 200 பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் எரிந்த உடல் பாகங்கள் பக்கத்திலிருந்த கிணற்றில் வீசியெறியப்பட்டன. இந்தச் சம்பவம் இந்திய சுதந்தர வரலாற்றில் ‘பீபிகர் படுகொலை’ என்று அழைக்கப்படுகிறது. ஏற்கனவே பைத்தியக்காரனைப் போல் இந்தியர்களின் மீது அடக்குமுறையை ஏவி விட்டுக் கொண்டிருந்த கர்னல் நீலை இந்த பீபிகர் படுகொலை வெறியனாகவே ஆக்கிவிட்டது. எந்த இந்தியனைப் பார்த்தாலும் எந்தக் கேள்வியும் இன்றி எரித்துக் கொல்லுங்கள்; அவர்களின் வசிப்பிடங்களைக் கொளுத்துங்கள் என்ற உத்தரவிட்டார் கர்னல் நீல்.

இவ்வாறாக பிரபலமடைந்த ஜார்ஜ் நீலுக்கு சென்னை மவுண்ட் ரோடு ஸ்பென்ஸர் வாசலில் பத்து அடி உயர நிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

மேற்படி சிலையை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்காக ஓர் போராட்டம் நடந்தது. 1927 ஆகஸ்ட் 11-ம் தேதி அந்தப் போராட்டத்தைத் துவக்கியவர் சோமையாஜுலு. ‘இவன் வீரன் அல்ல; வெறியன்’ என்று பொறி பறக்கப் பேசினார் சோமையாஜுலு. (அவரது பிரசங்கங்கள் ‘சுதந்திர தாக’த்தில் இடம் பெற்றுள்ளன.) உடனே அவரைக் கைது செய்து 15 மாதங்கள் கடுங்காவல் தண்டனையில் சிறையில் அடைத்தது பிரிட்டிஷ் அரசு.

சோமையாஜுலு 1927-ல் துவக்கிய நீல் சிலை அகற்றும் போராட்டம் பத்து ஆண்டுகள் நீடித்தது. 1937-ல் ராஜாஜி அமைச்சரவை அமைத்தபோது முதல் வேலையாக அந்தச் சிலையை அங்கிருந்து அகற்றி அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைத்தார். (இப்போதும் நீலின் சிலை அங்கேதான் உள்ளது.)

இப்படியாக, ஒரு தேசத்தின் வரலாற்றைச் சொல்கிறது சி.சு. செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’. அந்நாளைய எழுத்தாளர்களான க.நா.சு.விலிருந்து தி.ஜானகிராமன் வரை யாருமே சுதந்தரப் போராட்டத்தைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை என்பது பற்றிப் பலரும் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். ஆனால் செல்லப்பா அவர்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து எழுதி விட்டார். இப்படிப்பட்ட ஒரு மகத்தான நாவலை ஏன் தமிழ் எழுத்தாளர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. விதிவிலக்காக வெளி ரங்கராஜன் மட்டுமே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த நாவலின் வெளியீட்டிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவ்வாறாக ‘சுதந்திர தாகம்’ பற்றி எழுதப் புகுந்தால் பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக்கொண்டே போகலாம். சுப்ரமணியம் சிவாவும் நாவலில் வருகிறார். அவருக்குத் தொழுநோய் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் அந்தத் தொழுநோய் அவருடைய சிறைவாசத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட மிக மோசமான வேலைகளின் காரணமாகவே அவருக்கு வந்திருக்கிறது என்பதை ‘சுதந்திர தாக’த்தின் மூலம் தெரிந்துகொண்டேன். அது ஒரு பெரிய தனிக்கதை. இப்படி முடிவின்றி சொல்லிக் கொண்டே போகலாம் என்பதால் அடுத்த வாரம் செல்லப்பாவின் சிறுகதைகள் பற்றிப் பார்ப்போம். ‘சரஸாவின் பொம்மை’ என்று ஒரு கதை. அதை நான் சிறுவர் கதை என்றே நினைத்திருந்தேன். பார்த்தால் அது ஒரு காதல் கதை. இப்போது அப்படி ஒரு கதையை எழுதினால் எழுதியவரை உள்ளே பிடித்துப் போட்டு விடுவார்கள். ஏனென்றால், கதை நாயகியின் வயது ஆறு!

*

சென்ற வாரம் குறிப்பிடப்பட்ட ஜார்ஜ் ஜோஸஃப் பற்றி ‘அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்’ என்ற தலைப்பில் பழ. அதியமான் எழுதிய புத்தகம், காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது.

(தொடரும்)