(RSR)
இன்று தினமணியில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் , உசிலம்பட்டி பகுதியில் , மறவர் மற்றும் கள்ளர் சமூகத்தினரை , குற்றப்பரமபரையினர் என்று முத்திரைகுத்தி , இன்றைய நாட்களில் நம்பவேமுடியாத அளவிற்கு , ஆங்கிலேய அரசாங்கம் அவர்களை இழிவுபடுத்தியும் , துன்பப்படுத்தியும் செயத கொடூரங்களை எடுத்துரைத்து 1919ம வருட வாக்கில் , நாடு முழுவதும் கொந்தளித்த ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்க பின்னணியில் , உசிலமபட்டி மக்களின் தீர மிக்க போராட்டத்தை எடுத்துரைக்கிறது.
நடுவில் சிறிதாக , அந்த மக்களுக்காக வாதாடிய பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் , பற்றி ஒரு வரி அமைந்திருந்தது. ...ஜார்ஜ் ஜோசப் பற்றி நான் பல வருடங்களுக்கு முன்பு , வைக்கம் சத்யாக்ரஹம் தொடர்பாக, கேள்விப்பட்டிருக்கிறேன் ..அவர் அப்போது பிரபல காங்கிரஸ் தலைவர்.
வைக்கம் சத்யாக்ரகம் அவரால் முன்னெடுத்து காங்கிரஸ் சார்பாக நடத்தப்பட்டது என்றும் ,எடுத்த உடனேயே , அவர் திருவிதாங்கூர் அரசால்கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனை அடைந்தார் என்று படித்திருந்தேன். .. ஆயினும் அவரைப்பற்றி அவ்வளவாக விபரம் கிடைப்பதில்லை. ...எனவே வழக்கம் போல , விக்கிபீடியாவை நாடினேன்.
எனக்கு அவருடைய புகைப்படம் காண ஆவல் . அது அங்கு இல்லை. ஆனால் அவரைப்பற்றி அருமையான தகவல்கள் கிடைத்தன ..
அந்த விக்கி படிக்கும்போது , அவருடைய சகோதரர் போத்தன் ஜோசப் என்று அறிந்தேன். ..போதன் ஜோசப் , மிகவும் நன்கு அறியப்பட்ட பத்திரிகை ஆசிரியர். எனவே அவரைப்பற்றி தேடினால் , ஜார்ஜ் ஜோசப் பற்றியும் தகவல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் , தேடினேன். புதையல் கிடைத்தது. .
இளம் நண்பர்களே!... எவ்வளவு பெரிய மனிதருள் மாணிக்கங்களை , நமது சுதந்திரப்போராட்டம் , வார்த்தெடுத்தது , அவர்களைப்பற்றியெல்லாம் , நாம் எதுவுமே அறியவில்லையே என்ற ஏக்கம் சூழ்ந்தது. ..WIKI, WEB இவையெல்லாம் இல்லாவிடின் , இந்த மாமனிதர்களின் தியாக வரலாறு , மறைந்தே போய்விடும்!...
வேறு ஒரு விகி பக்கத்தில் அருமையான அவரது வாழ்க்கை வரலாறும் புகைப்படமும் கிடைத்தது. ...பார்த்தாலே தெரியவில்லையா? லண்டனில்
வ.வே.சு.ஐயர் மற்றும் விநாயக தாமோதர சாவர்க்கார் போன்றோரின் சம காலத்தில் , பாரிஸ்டர் படிப்பு முடித்தவர். மதுரை நகரில் தொழில் திறமை மூலம் பெரும் செல்வம் ஈட்டியவர். ..தேசிய இயக்கத்தில் சேர்ந்தவுடன், கதர் ஆடையும் காந்திகுல்லாயும் அணிந்து எவ்வளவு எளிமையாகவும் அழகாகவும் தோன்றுகிறார்.!
இந்த விக்கி ஆங்கிலத்தில் உள்ளது. இதை என்னால் கூடிய மட்டும்,தமிழ்ப்படுத்தி , உங்களுடன் பகிர்ந்து கொண்டேயாகவேண்டும் என்று ஒரு ஆர்வம் தோன்றியது... இது ஒரு சுருக்கமான வரலாறு மட்டுமே.
-------
ஜார்ஜ் ஜோசப் கேரளாவில் , செங்கன்னூர் என்ற நகரத்தில், ஸிரியன் கத்தோலிக்க குடுமபத்தில் , 1887ல் பிறந்தார். ( நேருவும் அதே வருடம்தான் பிறந்தார்). சென்னை கிருஸ்துவ கல்லூரியில் படித்த பிறகு , இங்கிலாந்தில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் , MA ( PHILOSOPHY) படித்தார். பின்பு பார் அட் லா படிப்பை 1908 ல் முடித்தார். அங்கு பல இந்திய விடுதலை இயக்க புரட்சியாளர்களுடன் அறிமுகம் பெற்றார்.(Madam Cama, S K Verma, S R Rana and Vir Savarkar.) 1909ல் , அவர் இந்தியாவிற்கு திரும்பினார்...1910ல் , அவர் மதுரையில்
புகழ்பெற்ற வழக்கறிஞராக பெயர்பெற்றார். ..1917ல் ரஷ்யாவின் போல்ஷெவிக் புரட்சி வெடித்து வெற்றி பெற்றது. 1918ல் , ஜார்ஜ் ஜோசப் ,ஜே .என் . ராமநாதனுடன் சேர்ந்து மதுரை தொழிலாளர் யூனியன் அமைத்தார்.
அந்த நாட்களிலேயே , அவர் குற்றபரம்பரை சட்டத்தினால் அவதியுற்ற மறவர், கள்ளர் மக்களுக்காக வாதாடினார்.
1916ம் ஆண்டில் , ஜார்ஜ் ஜோசப் அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தில் இணைந்தார் . அதே காலத்தில் வரதராஜுலு நாயுடு அவர்களோடும் தொடர்பு கொண்டார்.
1919ம் ஆண்டில் , ஆங்கிலேய அரசால் ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, காந்திஜி , அகில இந்திய ஹர்த்தாலுக்கு கட்டளை இட்டார். அதன்படி ஜார்ஜ் ஜோசப் மற்றும் பல பிரமுகர்கள் , சத்யாக்ரஹ சபதம் ஏற்றனர்.
காந்திஜி 23 மார்ச் 1919ல் சென்னைக்கு வருகை தந்தார். அப்போது , ஜார்ஜ் காந்திஜிக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். ..அந்த நிமிடமே , ஜார்ஜ் ஜோசப் காந்தி பக்தராகிவிட்டார். காந்திஜி 1919 ஏப்ரல் 6ந்தேதியை ( அந்த தேதியில்தான் ரௌலட் சட்டம் அமுலுக்கு வர இருந்தது), தேசிய எதிர்ப்பு நாளாக அனுசரிக்க மக்களை கேட்டுக்கொண்டார். மார்ச் 23ல் , காந்திஜி, தமிழ்நாடு முழுவதும் பிரசார பயணத்தை மேற்கொண்டார். மார்ச் 26ல் ( 1919) அவர் மதுரையில் ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில்தான் மார்ச் 30வரை தங்கியிருந்தார்.
1920 ஏப்ரல் மாதம் நடந்த கல்கத்தா சிறப்பு மாநாட்டில் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் பிரஸ்தாபிக்கப்பட்டது. 1920 டிசம்பர் நாகபுரி காங்கிரசில் அது ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேச சேவைக்காக , கல்லூரிப் படிப்பை கைவிட்டனர். பல மிகவும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் , அன்றைய நாட்களிலேயே லட்சக்கணக்கில் வருமானம் தந்த தங்கள் தொழிலை கைவிட்டனர்.
இவர்களுள் ஜார்ஜ் ஜோசப் ஒருவர்.
ஜார்ஜ் அவர்களின் குடும்பம் , தங்களிடம் இருந்த விலை உயர்ந்த அந்நிய ஆடைகளை தீயில் போட்டுவிட்டு, எளிய கதர் ஆடையை அணிந்து , புதிய வாழ்க்கை தொடங்கினர். நேராக காந்திஜியின் சபர்மதி ஆஸ்ரமத்திற்கு சென்றனர்.
அந்த தருணத்தில் , மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு இருவருடனும் , ஜார்ஜ் ஜோசப் பரிச்சயமானார். . இவரது தியாக உணர்வையும் ,பன்முகத் திறமையையும் உணர்ந்த மோதிலால் , அலஹாபாத் நகரில் தான் நடத்திவந்த THE INDEPENDENT என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஜார்ஜிடம் வழங்கினார்.. தயக்கமின்றி தீவிர தேசிய கருத்துக்களை பரப்ப சொன்னார். 1921 ம் ஆண்டு , நேரு குடும்பத்தாருடன், ஜோசப் கைது செய்யப்பட்டார். லக்னோ சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஜவஹர்லால், புருஷோத்தம்தாஸ் தாண்டன், கோவிந்த வல்லப பந்த், மகாதேவா தேசாய் போன்ற தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றார். ..1923ம் ஆண்டில் சிறையில் இருந்து விடுவிக்கப்பெற்றார். ( 2 வருடங்கள்) .
1922 மார்ச் மாதத்தில், ஆமதாபாதில் நடந்த வழக்கில், அண்ணல் காந்தி ஆறு வருட சிறை தண்டனை பெற்றார்!....அப்போது ஜார்ஜ் 'இந்த நாட்டின் மக்கள் , காந்திஜி போன்ற தலைவரை பெற கொடுத்து வைத்திருந்தால், நாளையே அவரை விடுதலை செய்யமுடியும். அரசாங்கம் எதுவும் செய்யமுடியாது. இது அவரே ஏற்கும் சிறை வாசம் '. என்று குறிப்பிட்டார்.
1923 செப்டம்பர் மாதத்தில், காந்திஜி நடத்தி வந்த 'YOUNG INDIA' என்ற பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை , ஜார்ஜ் ஏற்று 6 மாதம் நடத்திவந்தார். அந்த நாட்களில், ஆட்சிமன்றங்களில் , காங்கிரசார் பங்கெடுப்பது பற்றி தீவிரமான கருத்துப்போர் நடந்து வந்தது. மோதிலால் , சித்தரஞ்சன் தாஸ் போன்ற மூத்த தலைவர்கள், ஆட்சிமன்ற தேர்தலில் பங்கேற்று மன்றங்களில் , சுதந்திரப்போரை முன்னெடுப்பதையும் செய்யவேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர்... காந்திஜிக்கு அதில் உடன்பாடில்லை. ஜார்ஜ் காந்தியின் கருத்தை ஏற்று செயல்பட்டார்.
1924ம் ஆண்டில், ஜார்ஜ் மீண்டும் சென்னை திரும்பி, வைக்கம் அறப்போரில் தலைமை தாங்கி சிறைவாசம் பெற்றார்.
..இந்த போராட்டத்தில் ஜார்ஜ் முன்னிலையில், இருந்தால் ,' ஒரு கிருஸ்துவர் , ஹிந்துக்களின் மத விஷயங்களில் தலையிடுகிறார்' என்ற விஷமப் பிரசாரத்திற்கு இடமளிக்கும் என்றும் அதனால், ஹிந்து தலைவர்களே , இதில் தீவிரமாக இடம் பெறவேண்டும்' என்று காந்திஜி கருதினார். ..இது விஷயத்தில் ஜார்ஜ் சற்று மனத்தாங்கல் அடைந்தார். 'இது ஒரு மத பிரச்னை அல்ல. ரோட்டில் நடக்க உரிமை கோரும் பிரச்னை' என்று ஜார்ஜ் வாதிட்டார். ..சில காலம் நீதிக்கட்சியில் பணியாற்றினார்.
1925ல் இருந்து 1938ல் மறையும் வரை, ஜார்ஜ் அவர்கள் மதுரையில் தங்கியிருந்து , தேசபக்தர்களுக்கும் , சமூக நீதிப் போராளிகளுக்கும் உற்ற துணையாக இருந்து பணியாற்றினார். சைமன் கமிஷன் போராட்டத்திலும் பங்கேற்றார்.
இவரது இல்லத்தில் தான் மஹாகவி பாரதி , ஒருநாள் திடீர் ஆவேசமடைந்து , 'கொட்டடா! கொட்டடா!' என்ற பாடலை பாடினார் என்று ஜார்ஜ் அவர்களின் துணைவியார் ஸூஸன் நினைவு கூறுகிறார் .
அவர் மறையும் போ து 50 வயதுதான் ஆகியிருந்தது. இன்னும் பல ஆண்டுகள் இருந்திருந்தால் , மேலும் பல அறிய செயல்கள் செய்து நமக்கு வழிகாட்டியிருப்பார்.. தமிழ்மக்களுக்கு கொடுப்பினை இல்லை ..
கேரளத்தின் செங்கன்னூரில் பிறந்து,
தமிழ்நாட்டில் சென்னையில் கல்லூரிப் படிப்பும்,
இங்கிலாந்தில் உயர்கல்வியான பார் அட் லா படிப்பும் பெற்று, மதுரையில் வழக்கறிஞராக புகழ்பெற்று,
அனைத்து செல்வத்தையும் உதறித்தள்ளி
சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து,
சபர்மதி சென்று,
அங்கிருந்து உத்தர பிரதேசத்தில் அலஹாபாத் நகரில்
பத்திரிகை ஆசிரியாகப் பணியாற்றிச் சிறை சென்று, மீண்டு, குஜராத்தில் காந்தியடிகளின் பத்திரிகை ஆசிரியராகப் பங்காற்றி,
மீண்டும் கேரளம் வந்து
வைக்கம் சத்யாக்ரஹத்தைத் தொடங்கிவைத்து சிறை சென்று, சைமன் கமிஷன் போராட்டத்தில் தலை அடி பட்டு, ரத்தம் சிந்தி, 30 ஆண்டுகள் இடைவிடாத தேசப் பணி ஆற்றிய பெருந்தகை ஜார்ஜ் ஜோசப் .!
...மொழி, மாநிலம் எதுவுமே இந்திய தேச பக்தர்களுக்கு என்றுமே தடை இல்லை.