KAKKAN

( from koottaanjoru..blog) கக்கன் 1910-இல் பிறந்தவர். அவரது குரு வைத்யநாத ஐயரை விட இருபது வயது இளையவர். தலித் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கோவில் பூசாரி. மதுரைக்கு பக்கத்து கிராமமான தும்பைப்பட்டியில் பிறந்தவர். வைத்யநாத ஐயர் வீட்டில் ஊழியராக இருந்து அடுப்படி வரையில் சகல வேலைகளையும் செய்து வந்தார். 38-இல் சொர்ணம் பார்வதி என்பவரோடு கல்யாணம் நடந்திருக்கிறது.

முதன் முதலாக அவர் பேர் அடிபட்டது மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசத்தின்போது என்று நினைக்கிறேன். வைத்யநாத ஐயரும் கோபாலசாமி என்பவரும் முன்னால் நின்று இந்த ஆலயப் பிரவேசத்தை நடத்தி இருக்கிறார்கள்.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு அலிப்பூர் ஜெயில். அப்போது பயங்கர அடியாம். 1946 மத்திய சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1952 தேர்தலில் எம்.பி. 1957 தேர்தலில் எம்.எல்.ஏ., அமைச்சர். பொதுப்பணித்துறை, விவசாயம், ஆதி திராவிடர் நலத்துறை, உள்துறை என்று பல பொறுப்புகளை வகித்திருக்கிறார். மெரினாவில் இந்துக் கடவுள்களின் சிலைகளை, தனது எச்சரிக்கையையும் மீறி, தந்தை பெரியார் எரித்த போது, சற்றும் தயங்காமல் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தவர் கக்கன் என்று ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுகிறார். தனிப்பட்ட தலைவர்களை விட சட்டம் – ஒழுங்கு முக்கியம் என செயல்பட்ட அவரை பின்னர் அதே பெரியார் பாராட்டினாராம். ஜாதிக் கலவரத்தை திறமையாக அடக்கினார் என்று இங்கே படித்தேன். – “சாதிக் கலவரம் நடந்த போது தேவரை நேரில் போய் சந்திக்கச் சென்ற போது போக வேண்டாம் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மீறி மன தைரியத்துடன் சென்று தேவரை சந்திக்கிறார். அவர் மிகச் சிறப்பாக வரவேற்று, இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை விட்டு சாதிக் கலவரத்தை நிறுத்துகின்றனர்.” அவர் டம்மி அல்ல, டோக்கன் தலித் தலைவர் இல்லை என்று விஜயன் சொல்கிறார். வைகை, மேட்டூர் அணைகளை உருவாக்கியதில் பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்த பெருமை கக்கனுக்கு உண்டாம்.

தொடர்ந்து 9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவுமிருந்த கக்கன் எந்த விதத்திலும் கறைபடாதவர். கக்கனுக்குப் பிறகு எந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகனுக்கும் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய பொறுப்புகள் இன்று வரை வழங்கப்படவில்லை.

கக்கன் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் கோஷ்டி சண்டை மட்டுப்பட்டிருந்தது என்று இங்கே படித்தேன். முதலில் கக்கன் காங்கிரஸ் தலைவராக இருந்தாரா இல்லை காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவராக இருந்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. கோஷ்டி சண்டை மட்டுப்பட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. ராஜாஜியை வெளியே அனுப்பியாயிற்று. மிஞ்சி இருந்த ராஜாஜி ஆதரவாளர்கள் கூட – சி.எஸ். உட்பட – காமராஜை தலைவராக ஏற்றுக் கொண்டாயிற்று. அப்புறம் ஏது கோஷ்டி?

கக்கன் சென்ற ஒரே வெளிநாடு சீனா மட்டுமே. சீனாவிற்குச் சென்றிருந்த சமயம் சூயன்லாய் அவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

அமைச்சராய் இருந்தபோது தன்னுடைய சம்பளம் போதாமல், மாதக் கடைசியில் தன்னிடம் வேலைப் பார்க்கும் செயலாளரிடம் கடன் வாங்குவாராம். ராஜன் சொல்கிறார் – அவரது தம்பி விஸ்வநாதன் கக்கனுக்கு சென்னையில் வேலை கிடைத்து வேலைக்குச் சேருவதற்காக அண்ணன் வீட்டிற்குத் தங்கச் சென்றிருக்கிறார். இது அரசு வீடு என் உறவினர்கள் தங்கக் கூடாது இரவு மட்டும் போலீஸ்காரர் தங்கும் அவுட்போஸ்டில் இருந்து விட்டு காலையில் வேறு இடம் பார்த்துக் கொள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் மந்திரி கக்கன். ஆனால் உப்பிலி ஸ்ரீனிவாஸ் இது சம்பந்தி என்று குறிப்பிடுகிறார். (ஒரு வேளை இரண்டு பேரையும் வீட்டில் தங்கக் கூடாது என்று சொன்னாரோ என்னவோ. என்னைப் பொறுத்த வரை இது கிறுக்குத்தனம்.)

1975-இல் காமராஜர் இறந்த பிறகு அரசியலை விட்டு கக்கன் விலகிவிட்டார். ராயப்பேட்டையில் உள்ள கிருஷ்ணபுரத்தில் ரூபாய் 110 மாத வாடகையில் ஒரு சிறு வீட்டில் குடியிருந்தார். எங்கு சென்றாலும் பேருந்துக்காக கால் கடுக்க நின்றிருப்பார். நான்கு முழம் கதர் வேட்டியும் கதர் சட்டையுமே அணிவார். சாதாரண ஏழை சாப்பிடும் உணவையே அவர் சாப்பிடுவார்.எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது, தமிழக அரசு கக்கனுக்கு இலவச வீடும் பேருந்தில் செல்ல இலவசப் பயணச் சீட்டும், இலவச மருத்துவச் சலுகையும் மாதம் 500 ரூபாய் ஓய்வு ஊதியமும் கொடுத்தது. 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த கக்கனைப் பார்த்து உடல் நலன் விசாரித்தார். உடனே கக்கனுக்கு தனியறை வசதியும், தகுந்த உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடைய எளிமைக்கும் நேர்மைக்கும் பல உதாரணங்கள் இங்கே சொல்லப்படுகின்றன.

பதவியினால் கிடைத்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி எந்தத் தவறும் செய்ததில்லை. தன்னுடைய இனத்தைக் கூட தனக்காக எந்த விதத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை, சுரண்டியதுமில்லை. இப்படி ஒருவர் நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தாரா என்று ஆச்சர்யப்பட வைத்த மாமனிதர் அவர். இந்த நேர்மையும் கறைபடாத தன்மையும்தான் அவரை உயர்ந்தோர்க்கெல்லாம் உயர்ந்தவராக்கியது.

========================================================

காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது எளிமைப் பண்புகளையும் நிகழ்வுகளையும் தியாகசீலர் கக்கன் எனும் நூல் மூலம் நூறு அத்தியாயங்களில் எழுதி தொகுத்திருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.

கக்கன் வரலாற்றை அலசி ஆராய்ந்து கூறுவதற்காக அவரது குடும்பத்தாரைச் சந்தித்து பேசி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கக்கன் அவர்களது மகள் திருமதி கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள் இந்நூல் எங்கும் விரிவாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதுவரை அறியாத அரிய பல செய்திகள் இதில் உண்டு.

கக்கன் அவர்களோடு தங்களது அனுபவங்களை அரசுச் செயலாளராக பணியாற்றிய அ.பத்மநாபன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பலரும் சுவைபட கூறியுள்ளனர். பத்திரிகைச் செய்திகளும் இணைத்து ஓரளவுக்கு முழுமையான வரலாறாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் ஊழலுக்காக சிறைசென்றவர்களின் வரலாறு விக்கிபிடியாவில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் காண்பது அரிதாயிருக்கிறது.

ஆனால் நம் நாட்டில் நல்ல பல தலைவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. காலத்தின் தேவை கருதி நூலை கொண்டுவருவதோடு அதை சிறப்பாக வெளியிட்டுள்ள மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலனை மனமாரப் பாராட்டலாம்.

இந்நூலிலிருந்து சிலபகுதிகள் இங்கே பகிரப்படுகின்றன:

ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் கக்கன் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். சுற்றுப்பயண நாள்களைக் கணக்கிட்டு உடைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சர் என்ன ஆனார்?

ஒரு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அன்று உடுத்த வேண்டிய வேட்டியை எடுதது உடுத்திக்கொள்ள முற்பட்டார். கட்டிக் கொள்ள முடியாத அளவுக்குக் கிழிந்திருந்ததைக் கண்டு மனம் சலனம் அடையவில்லை. உடனே அழுக்காயிருந்த ஒரு வேட்டியை எடுத்துச் சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சரை வெளியில் நீண்ட நேரமாகக் காணோமே என்று காவலர்கள் கதவைத் தட்டினர். அமைச்சர் துணி துவைப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். அமைச்சரின் இந்த நிலை தெரிந்திருந்தால் பணியாளரே துவைத்துக் கொடுத்திருப்பார்.

அல்லது அதிகாரிகளே ஒரு புதுவேட்டியை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் தாமே துவைத்து வெயிலில் உலர்த்திக் கொண்டு நின்ற அமைச்சரைப்பார்த்த அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் புன்னகைத்தனர். கக்கனோ அமைச்சராக இல்லாமல் கக்கன்

என்ற தனிமனிதனாக நின்று புன்னகைத்தார். அந்த வேட்டி உலர்ந்த பின் உடுத்திக்கொண்டு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். அந்நாளைய செய்தித்தாள்கள் இச்செய்தியை வெளியிட்டன.

ஆலயப் பிரவேசத்தில் கக்கன்

1920ஆம் ஆண்டு வாக்கில் வைத்தியநாதய்யர் அவர்களுக்குக் கக்கன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கக்கன் கல்வியில் கொண்டிருந்த ஆர்வமும், அவர் பொதுத்தொண்டில் காட்டும் நேர்மையும் ஐயரை மிகவும் கவர்ந்தது. அதனால், தமது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார். கக்கனின் பழக்க வழக்கங்களைக் கண்டு வியந்து போன ஐயர் தமது வீட்டிலேயே உணவு கொடுத்தார்.

தொடர்ந்து தம் மக்களோடும் தம் மனைவியோடும் கக்கன் காட்டும் பாச உணர்வு ஐயரைப் பெரிதும் கவர்ந்தது. கக்கனைத் தம் மக்களில் ஒருவனாகவே கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்ட ஐயர் கக்கனுடன் நெருங்கிப் பழகும்போதுதான் பல உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்ததாம். 1939ஆம் ஆண்டு திருக்கோவில் நுழைவு (ஆலயப் பிரவேசம்) செய்தபோது அவ்வுணர்வுகளை மனதில் தாங்கியே ஆலயப் பிரவேசக் குழுவில் கக்கனையும் இணைத்துக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக

அதற்குப் பின்னால் கக்கன் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் நின்றபோது தாமே தேர்தலில் போட்டியிட்டது போல் செயல்பட்டதை அவர் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவ்வாறு படிப்படியாக உயர்த்தி இந்த நாட்டின் சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்த்தி அழகு பார்த்தவர் ஐயர்.

1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் இருந்தார் கக்கன். உடல்நலக் குறைவாக இருந்த ஐயர் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் காலமானார். இச்செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்தார் கக்கன். அவரது இறுதிச் சடங்கில் கக்கனும் மொட்டையடித்துக்கொண்டார். ஐயரின் பிள்ளைகளுடன் பிள்ளையாக நின்றார். இதைப் பலரும் எதிர்த்தனர்.

வளர்ப்பால் மகனானவர்

அதற்கு அவது பிள்ளைகள் நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால், கக்கன் வளர்ப்பால் மகனானவர். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது என்று வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது மக்களும் சொன்னதைக் கேட்டு ஐயர் இன சமுதாயத் தலைவர்கள் வாயடைத்துப் போயினர்.

அரசு மருத்துவமனையில் அனுமதி

1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கக்கன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர். அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். கக்கன் மருத்துவமனயில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரம்பினார். முன்னறிவிப்பின்றிக் கக்கனை பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.