thindu editorial
இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை இலங்கை அரசு சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. நீண்டகாலமாகப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவந்த அம்மக்களுக்கு இது சற்றே ஆறுதல் அளிக்கும் என்றே கருதலாம். சுமார் 25 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அளிக்கும் இந்திய நிவாரண உதவியின் ஒரு பகுதிதான் இந்த வீடுகள். 4,000 வீடுகளைக் கட்டித்தரும் இந்தத் திட்டத்துக்கு இந்திய அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே ஒப்புதல் அளித்திருந்தது.
மலையகத் தமிழர்கள், தோட்டத் தொழிலாளர்கள், இந்தியத் தமிழர்கள் என்று பலவிதங்களில் அழைக்கப்படும் இவர்கள், 19, 20-வது நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து தோட்ட வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டியல் இனத்தவர். தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களை இவர்களுடைய உழைப்புதான் வளப்படுத்துகிறது. 2012 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இவர்களின் எண்ணிக்கை 8,40,000. மொத்த மக்கள்தொகையில் 4%. 1948-ல் இலங்கை சுதந்திரமடைந்த பிறகு, ‘சிலோன் குடியுரிமைச் சட்ட’ப்படி இவர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டது. ‘நாடற்றவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
1980-க்குப் பிறகே இவர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால், குடியிருப்பதற்கு மிகவும் சிரமமான 200 சதுர அடி பரப்பளவுள்ள வீடுகள் இவர்களுக்குக் கட்டித்தரப்பட்டன. ஆனால் குடிநீர், கழிப்பிட வசதிகள் சரிவர தரப்படவில்லை. ஈழத் தமிழர்களின் நிலை பற்றிப் பேசிய உலகத் தமிழர் தலைவர்களும் இந்தியத் தமிழர் தலைவர்களும் மலையகத் தமிழர்களின் நிலைபற்றி அதிகம் பேசுவது கிடையாது.
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் 46,000 வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்ற இலக்கின்படி 45,000 வீடுகள் கடந்த 5 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வருகின்றன. அப்படியும் மலையகத் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மத்திய, உவா மாகாணங்களில் இந்தப் பணி தொடங்கப்படவே இல்லை. சிறிசேன - விக்ரமசிங்க அரசு பதவிக்கு வந்த பிறகு, இவர்கள் வசிக்கும் வீடுகளின் அளவு பெரிதாக்கப்பட்டிருக்கிறது.
இந்த வீடமைப்புத் திட்டத்துக்கு 420 கோடி இலங்கை ரூபாயை அளிக்க இந்திய அரசு முன்வந்திருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்திய அரசு 9.5 லட்சம் இலங்கை ரூபாய்களை வழங்க உத்தேசித்திருக்கிறது. மின்சாரம், குடிநீர் இணைப்புகளை வழங்கி, நிலத்தைச் சமப்படுத்தி, அணுகு சாலைகளை அமைக்கும் வேலைகளை இலங்கை அரசு செய்யப்போகிறது. சுமார் 16 லட்சம் வீடுகள் தேவை. முதல் கட்டமாக 4,000 வீடுகளைக் கட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. 2020-க்குள் 56,500 வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சமீபகாலமாக மலையகத் தமிழர்களின் குழந்தைகள் தோட்ட வேலைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டாமல் வெளியேறுகின்றனர். இதனால் மலையகத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து மூத்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. தோட்டத் தொழில்துறையும் உலகெங்கும் சவால்களைச் சந்தித்துவருகிறது.
ராணுவத்துக்கு அதிகம் செலவிட்டதால் இலங்கையின் பொருளாதாரம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. சுற்றுலாத் துறை பழைய நிலைக்குச் செல்ல முடியவில்லை. முதலீட்டுக்குத் தேவைப்படும் நிதியை உள்நாட்டிலிருந்து பெற முடிய வில்லை. இன மோதல்கள் காரணமாக மக்களிடையே ஏற்பட்ட மனப்புண்ணை ஆற்றும் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. இப்படியான சூழலில், மலையகத் தமிழரின் அடிப்படை வாழ்க்கைக்கு அவசியமான வீடுகள் கட்டித்தரப்படும் நடவடிக்கை நம்பிக்கை அளிக்கிறது. நல்லது நடக்கட்டும்!
Keywords: இலங்கை, தமிழர்கள், மலையகத் தமிழர்
மலையகத் தமிழரின் வாழ்வு மலரட்டும்’ எனும் தலையங்கம் படித்து மகிழ்ந்தேன். 1820 முதல் 1937 வரை சுமார் 10 லட்சம் தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கைக்குக் கூலிவேலைக்கு அனுப்பப்பட்டனர். காட்டை அழித்துச் சோலைகளாக்கிய அந்த மக்களுக்குக் கிடைத்த பெயர் ‘நாடற்றவன்’. அப்போதே இந்தியா தலையிட்டிருந்தால் அந்த அவப்பெயர் எங்களுக்குக் கிடைத்திருக்காது என்ற ஆதங்கம் எங்களிடம் உண்டு. ஆனால், 1964 மற்றும் 1974-ம் ஆண்டுகளில் இந்தியா உருவாக்கிய ஒப்பந்தங்களால் அந்த அவப்பெயர் நீங்கியது.
மலையகத் தமிழர்களின் அடிப்படைத் தேவைகள் பற்றிய அக்கறையோடு வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்தச் செய்தி நிச்சயம் மலையகத்தமிழர் வாழ்வு மறுமலர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் 1968 முதல் 1984 வரை இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்டு தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வு பற்றியும் அரசு கவலைப்படவேண்டும். அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தோல்வி என்றுதான் சொல்லவேண்டும். இதையும் கணக்கில் கொண்டு எங்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். மலையகத் தமிழரின் நல்வாழ்வு மீது அக்கறையுடன் எழுதப்பட்ட தலையங்கத்துக்காக, தாயகம் திரும்பிய 30 லட்சம் மக்கள் சார்பில் ’தி இந்து’வுக்கு மனமார்ந்த நன்றி!
- எம்.சந்திரசேகரன், மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், நீலகிரி.