dinamalar ...1-5-2016
நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
தமிழக காங்கிரசில், எத்தனையோ மூத்த தலைவர்கள் இருக்க, நடிகை குஷ்புவுக்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம்?
தேர்தல் காலத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்கு, காங்கிரஸ் கட்சியிலிருந்து யார் பிரசாரம் செய்ய முன்வந்தாலும், அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நீங்கள் தான் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாக கட்சிக்குள் பரவலான கருத்து உள்ளதே?
அப்படியெல்லாம் இல்லை. கட்சி தொண்டர்களும், வேட்பாளர்களில் ஒரு சிலரும் குஷ்புவின் பிரசாரத்தை விரும்பு கின்றனர். எனவே, குஷ்பு அதிகமான தொகுதிகளுக்குப் போக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தமிழக காங்கிரசில் உங்களை கடுமையாக எதிர்த்த வசந்த குமாரை, மீண்டும் தமிழக வர்த்தகர் காங்கிரஸ் தலைவராகவும்; விஜயதாரணியை, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலராகவும் நியமித்து, காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டதே? அப்படியென்றால், மாநிலத் தலைவராக இருக்கும் உங்களுக்கு அதிகாரம் இல்லையா?
கட்சிக்குள் அவ்வப்போது, சின்ன சின்ன பிரச்னைகள் வரும்; அப்போதே, அது தீர்த்து வைக்கப்பட்டு விடும். கட்சியில் உண்மையாக, உழைப்பவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுகிறது.
அரவக்குறிச்சி தொகுதி கிடைக்காத ஆத்திரத்தில், உங்களை ஜோதிமணி கடுமையாக விமர்சித்தாரே?
ஜோதிமணி மட்டுமல்ல; தொகுதிகள் கிடைத்தும், வேட்பாளர்களாக தேர்வாக முடியாமல் போனவர்களும், என்னை விமர்சித்து உள்ளனர்; என்னை தாக்கியும் பேசிஉள்ளனர். என் மீது பொய் பரப்புரை செய்துள்ளனர். அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.
தொடர்ந்து, பெண் அரசியல் தலைவர்களை நீங்கள் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதாக, பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகிறாரே?
இது வேண்டுமென்றே தெரிவிக்கும் அபாண்டமான குற்றச்சாட்டு. அப்படி நான் என்ன பேசினேன் என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். அப்படி சொல்வதற்கு யாரும் முன் வரவில்லை. நான் கூறிய கருத்தை தவறாக புரிந்து கொண்டு, வேறு ஒரு அர்த்தத்தை திரித்து வசைபாடுகின்றனர். அரசியலில் இதெல்லாம் சகஜம். எனவே, இதை நான் பொருட்டாகவும், பெரியதாகவும் எடுத்துக் கொள்ள மாட்டேன்.
ஜாதியை சொல்லி கருணாநிதியை, வைகோ விமர்சித்தார் என்றதும் கொந்தளித்த நீங்கள்,ஒரு மாநிலத்தின் முதல்வரை யானையோடு விமர்சித்து பேசுவது சரியா?
அப்படி யாரையும் நான் விமர்சித்து பேசவில்லை. 'யானைகளுக்கு புத்துணர்வு அளிக்க வேண்டும்; யானைகள் மகிழ்ச்சியாக இருக்க வேணடும் என்பதற்காக, ஊட்டி போன்ற, 'குளுகுளு' இடங்களுக்கு, யானைகளை அழைத்து செல்லும் விஷயத்தில், அக்கறை காட்டுபவர்கள், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் சொல்ல போகவில்லையே ஏன்?' என்று தான் கேட்டேன்.
அந்த பேச்சுக்காக, உங்கள் மீது அ.தி.மு.க., தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு அதன் மீது எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளதே?
நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
அதிரடியாக எதையாவது பேசினால், மீடியா வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக இப்படி பேசுகிறீர்கள் என, அ.தி.மு.க.,வினர் சொல்கின்றனரே?
மீடியா வெளிச்சம் எனக்கு தேவையில்லை. என்னை பற்றியும், பாரம்பரியமான என் குடும்பத்தை பற்றியும், 100 ஆண்டுகளாக, தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே விளம்பரத்திற்காக, நான் பேசுகிறேன் என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
மயிலாப்பூர் தொகுதியில், கராத்தே தியாகராஜனை போட்டியிட வைக்காமல் தடுக்க, நடிகை குஷ்புவுக்கு, 'சீட்' கேட்க முயற்சித்தீர்களாமே?
முற்றிலும் தவறான கருத்து. குஷ்புவை ஒரு தொகுதிக்குள் முடக்கி விடாமல், கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும், அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர் போட்டியிட வேண்டாம் என முடிவெடுத்து விட்டோம். ஒரு வேளை, குஷ்பு போட்டியிட வேண்டும் என விரும்பியிருந்தால், அவரை வேறுவிதமாக போட்டியிட வைத்திருப்போம்.
அது, ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி என்கிறீர்களா?
ஆர்.கே.நகர் தொகுதியாகவும் இருந்திருக்கலாம்.
காங்கிரஸ் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள், உங்கள் ஆதரவாளர்கள் தான் என கூறப்படுகிறதே?
பலருக்கு தொகுதிகள் கிடைத்தன. ஆனால், போட்டியிட விரும்பியவர்களால் வேட்பாளராக முடியவில்லை. கிடைக்காதவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், வருத்தம், வலி எல்லாம் எனக்கும் உண்டு. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் இவர் வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடெல்லாம் நான் பார்க்கவில்லை. அவர் எந்த கோஷ்டி, இவர் எந்த கோஷ்டி என்றும் கவனிக்கவில்லை. கட்சிக்காக உழைத்தவர்களுக்கும், வெற்றியை தேடி தருபவர்களுக்குமே பரிந்துரை செய்தேன்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,விடம், 63 இடங்களை பெற்றது. தற்போது, 41 இடங்களை தான் பெற்றுள்ளது. ஐந்தாண்டுகளில் கட்சி தேய்ந்துள்ளதா?
தமிழக காங்கிரஸ் வளர் பிறையாக வளர்ந்துள்ளது. தொகுதிகள் எண்ணிக்கை என்பது, அந்தந்த தேர்தல் சூழ்நிலையை பொறுத்து தான் அமையும். தி.மு.க.,வுடன், சரிசமமாக தொகுதிகளை வாங்கிய வரலாறும் உண்டு. அதாவது தி.மு.க., 110 தொகுதி களிலும், காங்கிரஸ், 110 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
1971ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 10 சீட் ஒதுக்கப்பட்டது. ஆனால், சட்டசபையில் ஒரு சீட்டில் கூட போட்டியிடவில்லை.
விஜயகாந்தை, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு வருமாறு, நீங்கள் வருந்தி வருந்தி அழைத்தும் அவர் வரவில்லையே?
முடிந்து போன கதை, முடிந்ததாகவே இருக்கட்டும். அதை தொடர் கதையாக்க விரும்பவில்லை. விஜயகாந்த் வராதது, எங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. மேடையில் பயமில்லாமல், அடி வாங்காமல், குத்து படாமல் பாதுகாப்பாக பேசுகிறோம்.
த.மா.கா., வாசனுக்கும் கூட, கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தீர்கள். ஆனால், அதுஏற்கப்படவில்லையே?
வாசனை தவிர, மற்றவர்கள் அனைவரையும் காங்கிரசில் சேரும்படி அழைத்தேன். வாசனை ஏன் அழைக்கவில்லை என்றால், அவர் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சித்ததை, எந்த காங்கிரஸ் தொண்டனும் ஏற்க மாட்டான். காந்தியை கொன்ற, காமராஜரை கொலை செய்ய முயற்சித்தவர்களை ஆதரிப்பவர்களுடன், அரசியல் நட்பு வைக்க வாசன் விரும்பியதை கேட்டு, தேச பக்தர்களான காங்கிரசாரின் ரத்தம் கொதித்தது. அதனால், அவரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பா.ஜ.,வுடன் கூட்டணி பற்றி பேசவில்லை என வாசன் மறுத்தாரே?
தமிழசை சவுந்தரராஜன், எல்லாவற்றையும் சொல்லி விட்டாரே!
இத்தனை நாட்கள் த.மா.கா.,வில் இருந்து, காங்கிரசுக்கு எதிராக, அரசியல் செய்த முனிரத்னத்தை, முதல் நாள் கட்சியில் இணைத்து, அடுத்த நாள், அவருக்கு சோளிங்கர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்ததால், இத்தனை நாட்களுக்கு காங்கிரசுக்காகவே உழைத்தவர்கள் ஏமாளிகளா?
அவர் தேசியவாதி. காங்கிரசை பற்றி, அவர் தவறாக பேசியது கிடையாது. காங்கிரசில் சேர்ந்ததும், அவர் 'சீட்' கேட்கவில்லை. பா.ஜ.,வுடன், வாசன் கூட்டணி வைக்க பேசினார் என, தெரிந்ததும் முனிரத்தினம் த.மா.கா.,வை விட்டு வெளியேறினார். அவர் வெற்றி வேட்பாளர் என்பதால், சோளிங்கர் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்காக அழைப்பது; கூட்டணி அமையாமல் போனால், அக்கட்சியில் இருந்து ஆட்களை இழுப்பது. இது ஆரோக்கியமான அரசியலா?
காங்கிரசில் சேருவதற்கு யார், யார் விரும்புகிறார்களோ, அவர்களை தான், நாங்கள் சேர்த்து கொண்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதால் யாரையும் இழுக்க வேண்டிய அவசியமில்லை.
ஆங்காங்கே, கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்து இருக்கும் பலரையும் வருமான வரித் துறையினர் பிடிக்கின்றனர். பதுக்கி வைத்திருப்பவர்கள் பலரும் அ.தி.மு.க.,காரர்கள் என்பது செய்தி. அப்படிஎன்றால், மற்ற கட்சி அரசியல்வாதிகள் பணம் வைத்துக் கொள்ளவே இல்லையா?
கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், கொள்ளை அடித்த பணத்தை கோடிக்கணக்கில், பதுக்கிவைத்துள்ளனர் என்பதை, நான் சுட்டிக் காட்டினேன். இப்போது பிடிப்பட்டவர்கள் அ.தி.மு.க.,வினர் தானே!
கரூர் அன்புநாதன், மணிமாறன், சென்னை எழும்பூர் விஜய் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,பிரமுகர்கள் இல்லங்களில் நடந்த ரெய்டு குறித்து சி.பி.ஐ., விசாரணை கேட்பது ஏன்?
உள்ளூர் போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதுபற்றி சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன், ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநில டி.ஜி.பி., - ஐ.ஜி., - டி.ஐ.ஜி., போன்ற அதிகாரிகளை வரவழைக்க வேண்டும்.
தமிழக தேர்தல் கமிஷன் நடுநிலையோடு செயல்படவில்லை என சந்தேகிக்கிறீர்களா?
லோக்சபா தேர்தலில், அவர்கள் நடந்து கொண்ட விதம், சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதேசமயம், தலைமை தேர்தல் அதிகாரி நாணயமாகவும், நடுநிலையாளராகவும் செயல்படுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.
மத்திய பா.ஜ., அரசு மூலம் ராஜ்யசபா நியமன உறுப்பினராக இருக்கும் சுப்பிரமணியன் சாமி,ராஜ்யசபா கூட்டத்தில், காங்கிரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே?
அவர் எப்போதும், அப்படி தான் உளறிக் கொண்டிருப்பார். அவர் பேசுவதை எல்லாம்சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும், மதுவிலக்குக்கு புதிய சட்டம் இயற்றுவது உள்ளிட்ட பல விஷயங்களும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என, தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டி வருகிறாரே?
ஐந்து ஆண்டுகளாக, மக்களை சந்திக்காத முதல்வராக ஜெயலலிதா திகழ்கிறார். மற்றவர்களால் செய்ய முடியும் என, சொல்வது சாத்தியமில்லை என, ஜெயலலிதா கூறுவதை எல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த முறையும் தேர்தல் நேரத்தில், வாக்காளர்களுக்கு பணம் -பரிசு பொருள் கொடுக்கப்படும் என்கின்றனரே?
கண்டிப்பாக அ.தி.மு.க., முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதை தேர்தல் கமிஷன் தான் தடுத்து நிறுத்த வேண்டும்.
நீங்கள் ஜெயலலிதாவையும்; அ.தி.மு.க., அரசையும் கடுமையாக விமர்சித்தும், உங்களுக்கு ஜெ., தரப்பில் இருந்து பதிலே இல்லையே... இருந்தும், தொடர்ச்சியாக அவரையே சீண்டுகிறீர்களே... அது ஏன்?
தனிப்பட்ட முறையில் சீண்டவில்லை. மக்கள் பிரச்னையை மையப்படுத்தியும், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டியும் தான் விமர்சிக்கிறேன்.
'நான் கோவில்பட்டியில் போட்டியிட்டால், ஜாதி மோதல் ஏற்பட வழிவகுக்கலாம்' என்பதால், போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ சொல்லியிருக்கிறாரே?
ரொம்ப விரக்தியுடன் இருக்கிறார். அவர் என்ன செய்கிறார் என்பது, அவருக்கே தெரியவில்லை. அவரை பார்த்து பரிதாபம் தான் பட வேண்டியதிருக்கிறது.
கருணாநிதியின் மஞ்சள் துண்டு - வைகோவின் பச்சைத் துண்டு ஒப்பிடுங்கள்.
மஞ்சள் துண்டை, கருணாநிதி விருப்பப்பட்டு அணிகிறார். ஏன் அணிகிறார் என்பதை ஏற்கனவே அவர் விளக்கி விட்டார். விஜயகாந்திடம் இருந்து, தலையில் குட்டு வாங்காமல் பாதுகாக்கத்தான் வைகோ பச்சை துண்டு அணிந்துள்ளார்.
ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்தது; பிடிக்காதது.
பிடித்தது தன்னம்பிக்கை; பிடிக்காதது அகங்காரம்.
உங்களுக்கு காங்கிரசில் மீண்டும் மாநிலத் தலைவர் பதவி கொடுத்தது பிடிக்காமல் தான், த.மா.கா., பக்கம் போனார் பீட்டர் அல்போன்ஸ். இப்போது, அங்கிருந்து மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிகழ்வை எப்படி பார்க்கிறீர்கள்?
என்னை பிடிக்காமல் அவர் செல்லவில்லை. அவர் த.மா.கா.,வுக்கு செல்லும் போது, ரொம்ப நாட்களாக அங்கு இருக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். அவர் அரசியல் சிந்தனையாளர். மூப்பனார் மகன் வாசனுக்காக, சில நாட்கள் அங்கு சென்றிருந்தவர், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடர்ந்து, அரசு தரப்பிலும், அ.தி.மு.க., தரப்பிலும் வழக்கு மேல் வழக்கு போடுகின்றனரே?
என் மீது மட்டுமல்ல; கருணாநிதி, ஸ்டாலின் என, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. என் மீது உள்ள வழக்குகள், அனைத்தையும் நீதிமன்றத்தில் சந்திப்பேன்.
ஒரு வேளை, சட்டசபை தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படுமானால், காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கெடுக்குமா?
இந்த கேள்வி, இப்போது எழுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், தி.மு.க., பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைக்கும்.
தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து...?
அவர் மட்டுமல்ல, பல அமைச்சர்கள் பிடிபடுகிற வேளை வரும்.
அ.தி.மு.க., அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் அளித்த நீங்கள், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு போடுவோம் என்றீர்கள். ஒன்றுமே இல்லையே...
கவர்னர் மீது எங்களுக்கு சந்தேகம் வருகிறது. கோர்ட்டில் வழக்கு தொடுப்போம்.
பயோ - டேட்டா
பெயர் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
வயது : 66
கல்வி தகுதி : பி.ஏ.,
கட்சி : காங்கிரஸ்
பதவி : மாநிலத் தலைவர்
சொந்த ஊர் : ஈரோடு
- நமது நிருபர் -