www kalachuvadu.com
presented by RSR
நேர்காணல்: ஜி.எஸ். லட்சுமண அய்யர்
நான் சாதாரண ஊழியன்!
சந்திப்பு: இந்திரா, இரா. முருகானந்தம், ச. ராம்குமார்
செய்யும் பணிகள் விளம்பரங்களால் மலிவது பற்றிக் கூச்சமில்லாத உலகில் தனது வாழ்நாள் சேவைக்கான எவ்வித உரிமையும் கோராதவர். அப்படியான எண்ணங்கூட இல்லாதவர். 'சுதந்திரப் போராட்டத் தியாகி' என்று சொல்வது அவரைக் குறைத்து மதிப்பிடுவதே ஆகும். சமூக மேம்பாட்டுக்குச் சாத்தியமான அனைத்துத் தளங்களிலும் ஆத்மார்த்தமாக இயங்கிவரும் அபூர்வ மனிதர். சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்பும் போராட்டக் களங்களில் தீவிரமாக முன்னின்றவர். ஆனால், மிகமிக மென்மையானவர். தலித் மக்களின் நலனுக்காகத் தன் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்ட இவர் இருமுறை கோபி செட்டிப்பாளையம் நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றியவர் (1951, 1981). முதன்முறை நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, மனித மலத்தை மனிதர் அள்ளும் அவலத்திற்கு முற்றிலுமாக முடிவுகட்டியவர்.
காந்தியம், தலித்தியம், பெரியாரியம், பெண்ணியம் என்கிற கோட்பாடுகளைக் கடந்து அவற்றின் செயல்பாட்டு வடிவத்தை முன்னெடுத்தவர். அனைத்திற்கும் நியாய உணர்ச்சி ஒன்றை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு செயல்பட்டவர்.
நேரு, இந்திராகாந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், ராஜீவ் காந்தி ஆகிய இந்தியப் பிரதமர்களால் நன்கறியப்பட்ட இம்மனிதர் தன்னை ஒரு சாதாரண ஊழியன் என்றே அடையாளப்படுத்திக்கொள்கிறார்.
அவருடன் உரையாடுவதென்பது மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அது ஒரு அற்புதமான அனுபவம் என்று சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால், அது அப்படி இல்லை. மாறாக மிகுந்த மனநெருக்கடியையும் குற்றவுணர்வையும் அளிக்கக் கூடியது. அவருடைய தொண்ணூறு வருட வாழ்வு ஒரு நதியைப் போலச் சுழித்தோடும்பொழுது அதன் கரையில் கண்ணீர்த் துளிகளோடு நிற்கும் அனுபவமாகவே அது இருந்தது.
உரையாடலின் இடையே அவ்வப்போது வெளிப்படும் அவரது ஆத்மார்த்தமான சிரிப்பு மட்டுமே மனத்தை லேசாக்குகிறது.
இந்தியாவின் பல முக்கிய ஆளுமைகள் வெகு சாதாரணமாகப் புழங்கிய, நெடிய பாரம்பரியத்தின் நிழலடர்ந்த அவருடைய கோபிசெட்டிப்பாளையம் வீட்டின் முற்றத்தில் அவருடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து . . .
உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்.
எங்கள் தந்தையார் டி. சீனிவாச அய்யர் நன்கறியப்பட்ட காங்கிரஸ்காரர். சுதந்திரப் போராட்டத்திலும் சமூகச் சீர்திருத்தத்திலும் தீவிரமாகச் செயல்பட்டவர். 1937இல் மெட்ராஸ் பிரஸிடென்ஸியில் கோபி, பவானி, கொள்ளேகால் இணைந்த இரட்டை உறுப்பினர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர். சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பிறகும் காங்கிரஸ் தலைவர்கள், தேசியவாதிகள் என்று பலரும் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். என் தந்தையார் தொடர்ந்து சமூக அக்கறையுள்ள செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கிவந்தார். காமராஜர், பெரியார், வைத்தியநாதய்யர், ராஜாஜி, சத்தியமூர்த்தி, வினோபாபாவே, அவினாசிலிங்கம் செட்டியார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இவர்களுடனெல்லாம் எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சுதந்திரப் போராட்டக் காலங்களில் பலரும் இங்கு வந்து தங்குவார்கள். இரவில் தங்கிவிட்டு அதி காலையில் எழுந்து கதர் விற்கவும் சுதந்திரப் போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமம் கிராமமாகச் செல்வோம். யாரும் எந்த வசதியையும் எதிர்பார்த்ததில்லை. இதோ! இந்தத் திண்ணையில்தான் காமராஜர் படுத்திருப்பார். அவர் சத்தமாகக் குறட்டை விடுவார். நாங்கள் தமாஷாக அவரை வெளியில் போய்ப் படுங்கள் என்போம். அவர் சிரித்துக்கொண்டே தலையணையை வாங்கிச்சென்று வெளித்திண்ணையில் படுத்துக்கொள்வார்.
முதலமைச்சரான பின்புதான் டி.பி.யில் தங்கினார். இப்போதெல்லாம் யார் அப்படி இருக்கிறார்கள்?
இந்த மாதிரியான குடும்பப் பின்னணி உங்கள் செயல்பாடுகளுக்கு உந்துதலாக இருந்தது என்று சொல்லலாமா?
ஆமாம். அந்தக் காலகட்டத்தில் பிராமணச் சமூகத்தில் பலரும் யோசிக்கத் தயங்குகிற பல செயல்களை அப்பா மிக இயல்பாகச் செய்துவந்தார். அப்போது இருந்த பலரையும்போல மகாத்மா காந்தியால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார். காந்தி வலியுறுத்திய பல விஷயங்களை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இயங்கிவந்தார். மதுரை வைத்தியநாதய்யர் தலைவராக இருந்த அரிஜன சேவா சங்கத்தை அப்பா கோபியில் தொடங்கினார். கதர் நூற்பது, கதர்த் துணிகளை விற்பது, ஆலயப் பிரவேசம் செய்வது. சேரிகளைச் சுத்தம் செய்வது போன்ற செயல்பாடுகளில் ஒரு உண்மையான காங்கிரஸ் ஊழியராகத் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொண்டார். அப்பாவின் செயல்பாடுகள் மீது எனக்குப் பெரிய மரியாதையும் தீவிர ஆர்வமும் ஏற்பட்டது. தான் நியாயமென்று நம்பிய விஷயங்களை எந்தவிதச் சமரசத்திற்கும் ஆட்படாமல் உறுதியோடு செயல்படுத்தக்கூடியவராக அவர் இருந்தார். அக்கால கட்டத்தில் கோபியில் பல முக்கியமான பொதுநலச் செயல்பாடுகள் அவரால் தொடங்கப்பட்டவையே. அந்தப் பணிகளில் சிறுவயதிலிருந்தே நானும் ஈடுபட்டேன். நாங்கள் செய்தோம் என்பதைவிட ஜனங்கள் செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தப் பகுதியில் உங்கள் தந்தையார் ஒரு முக்கிய ஆளுமையாக இருந்துள்ளார். அவரது செயல்பாடுகள் பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள் . . .
அப்பா அரிஜன முன்னேற்றத்திலும் கல்விப் பணிகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அரிஜனக் குழந்தைகள், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆரம்பத்தில் மூன்று குழந்தைகள் இருந்தார்கள். எங்கள் வீட்டின் எதிர்ப்புறமுள்ள மாடியில் தங்கிக்கொள்வார்கள். வீட்டில் சாப்பாடு. பிறகு நிறையக் குழந்தைகள் வந்த பிறகு தனியாக ஓர் இடத்தை ஏற்பாடு செய்தோம்.
அனைவர்க்கும் தங்கள் கையெழுத்தைப் போடப் பழக்க வேண்டும் என்பதற்காகத் தற்குறி ஒழிப்பு இயக்கம் நடத்தப்பட்டது. அனைவருக்கும் சிலேட்டில் கையெழுத்துப் போடப் பழக்கினோம். இதற்காக ஷி.ஷி.லி.சி. வரை படித்த இளைஞர்கள் தன்னார்வலர்களாக வந்தார்கள் 'கையெழுத்து வாரம்' முடிந்ததும் அடுத்த கட்டமாக எழுதப்படிக்கச் சொல்லித்தருவது. அதற்காக தம்பிவா!, இதையும்படி போன்ற புத்தகங்களை அச்சிட்டுத் தந்தோம். ராஜாஜி தலைமையில் 'தற்குறி ஒழிப்பு மாநாடு' நடத்தினோம். பிறகு அரசாங்கமே இதுபோல எல்லா இடங்களிலும் நடத்தத் தீர்மானித்தது. அவினாசிலிங்கம் செட்டியார் இதனை நன்றாக அமல்படுத்தினார்.
யாரும், எந்த நேரத்திலும் அப்பாவிடம் உதவி கேட்டு வருவார்கள். அப்பாவும் தாராளமாக உதவுவார். அத்தகைய வாய்ப்பும் எங்களுக்கு இருந்ததையும் சொல்ல வேண்டும். எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக 650 ஏக்கர் பூமி இருந்தது. (கொடிவேரி அணையிலிருந்து அனந்தசாகர் ஏரிவரையிலும்) மேலும் மஞ்சள் மண்டி, புகையிலை வியாபாரம் ஆகியவற்றையும் அப்பா திறம்பட நடத்திவந்தார். அந்தக் காலத்திலேயே நாற்பது லட்சம் ரூபாய் வைப்புநிதி கொண்ட வங்கியொன்றையும் அவர் நிர்வகித்துவந்தார்.
அரிஜன மக்களுக்கான உங்கள் செயல்பாடுகளை நீங்கள் சார்ந்திருந்த வைதீக பிராமண சமூகம் எப்படி எதிர்கொண்டது?
அரிஜனக் குழந்தைகளுக்காக விடுதி நடத்த இடம் கிடைக்கவில்லை. வீட்டில் தங்கவைத்தோம், எங்கள் குடும்பத்தைச் 'சமூகப் பகிஷ்காரம்' செய்தார்கள். சொந்தக்காரர்கள் யாரும் எங்கள் வீட்டில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கமாட்டார்கள். எங்கள் புரோகிதர்கள் வரமாட்டார்கள். எங்கள் தங்கைக்கு அருகிலுள்ள ஒண்டிப்பாளையம் கோவிலில்தான் திருமணம் நடந்தது. இன்னொரு சகோதரியைச் சமூகப் பகிஷ்காரம் காரணமாகப் புகுந்த வீட்டிலிருந்து திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவர் 18 வருடங்கள் எங்கள் வீட்டிலேயே இருந்தார். 18 வருடங்கள் கழித்து அவர்களின் உறவினர்கள் எல்லாரும் எடுத்துச் சொல்லியதால் எங்கள் சகோதரியைத் திரும்ப அழைத்துக்கொள்வதாகவும் ஆனால், ராமேஸ்வரம் சென்று தீட்டுக் கழித்துவிட்டு வரவேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார்கள். அதன்படி ராமேஸ்வரம் சென்று வந்தபிறகு எங்கள் வீட்டிற்கு வந்து காபி சாப்பிட்டுவிட்டுச் சென்றார். அதனால் 'மறுபடியும் தீட்டாகிவிட்டது' என்று சொன்னதால் மீண்டும் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று நேராகத் தன் புகுந்த வீட்டுக்குச் சென்றார்.
அவரை ராமேஸ்வரம் அழைத்துப்போக அப்பா மறுத்துவிட்டார். நானும் போகவில்லை. குமாஸ்தாதான் அழைத்துப்போனார்.
சுதந்திரப் போராட்டம், சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகள், அரசியல் நடவடிக்கைகள் என்று தீவிரமான தளங்களில் உங்கள் தந்தையார் இயங்கிய அக்காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளுடன் அவர் நெருங்கிய தொடர்புகொண்டு பணியாற்றியது என அசாதாரணமான சூழலில் உங்கள் பள்ளிப் பருவம் எப்படியிருந்தது?
நான் கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியில் ஷி.ஷி.லி.சி. வரை படித்தேன். அங்கு எனக்குப் பெரியசாமி தூரன் ஆசிரியராக இருந்தார். என்னை மிகுந்த பிரியத்துடன் நடத்துவார். 'லட்சுமணா' என அணைத்துக்கொள்வார். அப்பொழுதே நான் பாரதியார் பாடல்களை நன்றாகப் பாடுவேன். பாட ஆரம்பித்துவிட்டால் நிற்காமல் பாடுவேன். அதனால் என்னை 'ஓயாமார்' என்று சொல்வார்கள்.
சற்றுப் பாடிக்காட்ட முடியுமா?
'தண்ணீர் விட்டா வளர்த்தோம் . . . பாடலை முதுமையின் உடைந்த குரலில் உணர்ச்சிப் பிசகாமல் சற்றுத் தயக்கத்துடன் அவர் பாடினார். இதுதவிர 'எந்தையும் தாயும் . . .', 'வீரசுதந்திரம் வேண்டிநிற்பார் . . .', 'செந்தமிழ் நாடெனும் போதினிலே . . .' போன்ற பாடல்களையும் பாடுவேன். பொது இடங்களில், சந்தைகளில் போய்ப் பாடுவோம். புத்தகங்கள் விற்போம். பாரதியாரின் 'ஸ்வதேச கீதங்கள்' புத்தகத்தைக் கிராமம் கிராமமாகப் போய் விற்போம்.
இப்போதெல்லாம் யாரும் அப்படிச் செய்வதில்லை. எதற்கும் உடனே வசதி வேண்டும் என்கிறார்கள் . . .
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே எனக்குக் கல்யாணமாகிவிட்டது. எனக்கு அப்போது 11 வயது. பெண்ணுக்கு 9 வயது. கல்யாணமானாலும் ஷி.ஷி.லி.சி. முடித்த பிறகுதான் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம். என் மனைவியும் சுதந்திரப் போராட்டப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். பழனி சுந்தரராஜ அய்யரின் மகள். என் மாமனார் தீவிரமான காங்கிரஸ்காரர். என் மாமியார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றவர். காந்திஜி பழனி வந்தபோது, அவர்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார். பிற்காலத்தில் என் மனைவியும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குப் போனார். அவருக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நானும் பள்ளியில் படிக்கும்போதே சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த தருணத்தில் ஷி.ஷி.லி.சி.யுடன் படிப்பை விட்டுவிட்டு அப்பாவுடன் இணைந்து முழுநேரமும் செயல்பட ஆரம்பித்துவிட்டேன். நான் மட்டுமல்ல அந்தக் காலத்தில் ஏராளமான மாணவர்கள் இதே முடிவைத்தான் எடுத்தார்கள். இப்போதெல்லாம் பொது நலனைக்காட்டிலும் விளம்பர வேட்கை அதிகமாகி விட்டது.
சுதந்திரப் போராட்டத்தில் உங்கள் தனிப்பட்ட பங்களிப்பு என்ன?
தனிப்பட்ட பங்களிப்பு என எதைச் சொல்வது . . .? அது ஒரு பெரிய இயக்கம். எல்லோரையும்போல நானும் அதில் பங்கெடுத்துக்கொண்டேன். 'தனி நபர் சத்தியாக்கிரகம்', 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் ஆகியவற்றில் பங்கேற்றேன். இது தவிரப் பாதுகாப்புக் கைதியாகவும் இருந்தேன். பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையிலிருந்தபோது, காமராஜரும் எங்களோடு இருந்தார். அங்கிருந்து பரோலில் வெளியே வந்து வார்தா போய் மகாத்மா காந்தியைப் பார்த்தேன். 'எப்படி வந்தாய்?' என்று கேட்டார். பரோலில் வந்திருப்பதாகச் சொன்னேன். உடனே வேலூர் சென்று சரணடையச் சொன்னார். 'சரி' என்றேன். 'அப்புறம் என்ன செய்யப்போகிறாய் . . . எனக் கேட்டார்' 'தெரியவில்லை' என்றேன். 'போய் அரிஜனங்களுக்கு வேலை செய்!' என்றார். அன்றிலிருந்து இன்றுவரை அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.
இப்படி எத்தனை நாள்கள் சிறையிலிருந்துள்ளீர்கள்?
மொத்தம் 4 வருடம் 9 மாதம் இருந்துள்ளேன்.
அரிஜன மக்களுக்காக என்ன மாதிரியான பணிகளைச் செய்தீர்கள்?
அந்தக் காலகட்டத்தில் இந்தப் பகுதியில் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பார்கள். கிணற்றில் அரிசனங்களைத் தண்ணீர் எடுக்கவிடமாட்டார்கள்; வாய்க்காலில் ஓடும் தண்ணீரைக்கூட எடுக்கவிடமாட்டார்கள். இத்தனைக்கும் அந்தத் தண்ணீர் இரைக்கப் பயன்படும் சால்பரியைத் தைப்பவர்கள் சக்கிலியர்கள்தான். ஆங்காங்குப் பள்ளங்களில் குழிதோண்டித்தான் அரிஜனங்கள் தண்ணீர் எடுப்பார்கள்.
கவுண்டமார்களிடம் போய் கெஞ்சிக்கேட்டுத் தண்ணீர்விடச் சொல்வோம். சிலர் விடுவார்கள்; சிலர் விடமாட்டார்கள். பிறகு பொதுக் கிணற்றில் அரிஜனங்கள் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். அரிஜனங்களை அழைத்துக்கொண்டு ஊர்வலமாகப் போவோம். ஜாதி இந்துக்கள் உருளைகளை ஆக்கிரமித்துக்கொண்டு தண்ணீர் எடுக்கவிடாமல் நிற்பார்கள். நாங்கள் சொம்பில் 'கங்கா ஜலத்தை'க் கொண்டுபோய், நீங்கள் தொட்டுத் தீட்டான தண்ணீரை நாங்கள் புனிதப்படுத்துகிறோம் என்று சொல்லிக் கிணற்றில் ஊற்றுவோம். அந்த வேலையை அரிஜனங்கள்தான் செய்வார்கள். இப்படிச் செய்ததும் நொந்துபோய் உருளையை விட்டுவிடுவார்கள். இப்போராட்டம் அரசாங்கம் 144 தடை உத்தரவு விதிக்கும் அளவுக்குத் தீவிரமாக நடைபெற்றது. பிறகு நான் கோபி நகராட்சித் தலைவராக இருந்தபோது, 'பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமையுண்டு' என்று நகராட்சியில் தீர்மானம் போட்டோ ம். ஜாதி இந்துக்கள் அவை 'பொதுக் கிணறுகள் அல்ல' என்று நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றத்தில் அக்கிணறுகளை வெட்ட நகராட்சிப் பணம் கொடுத்துள்ளதை நிரூபித்தோம். தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வந்தது. இது ஒரு நெடிய போராட்டமாக நடந்தது. பூனாவைச் சேர்ந்த ஜாதவ் என்பவர் 'அனைத்துப் பொதுக் கிணறுகளிலும் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமையுண்டு' என்று சொன்னார். மேலும், கிணறுகள் இல்லாத சேரிகள் அனைத்திற்கும் கிணறு வெட்டித்தரும் திட்டத்தை அவர் அறிவித்தார். அதற்கு 'ஜாதவ் திட்டம்' என்று பெயர். இதன்படிக் கிணறுவெட்ட 'ஜாதவ் திட்டம்' பாதிப்பணம் கொடுக்கும். கிராம மக்கள் பாதிப்பணம்போட்டுக் கிணறுவெட்டிக் கொள்வது. இதன்படிப் பல சேரிகளில் புதிதாகக் கிணறுகள் வெட்டப்பட்டன.
பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருப்பார்கள். அரிஜனக் குழந்தைகளைத் தனியாக உட்காரவைப்பார்கள். அப்படிச் செய்யவிடாமல் தடுத்தோம். போராட்டம் என்று வந்த பிறகுதான் தைரியம் வந்தது.
நீங்கள் கோபி நகராட்சித் தலைவராக இருந்தபோது, மனித மலத்தை மனிதர் அள்ளும் அவலத்தை முற்றிலும் ஒழித்துள்ளீர்கள். அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதிலுங்கூட இத்தகைய முயற்சிகள் அதிகம் நடக்கவில்லை. இதற்கான உந்துதல் உங்களுக்கு எப்படி வந்தது? இதனை எப்படிச் செயல்படுத்தினீர்கள்?
'அது எப்படிச் சரியாகும் . . .? அக்கிரமமல்லவா . . .? அதனால்தான் செய்தோம். நகராட்சியில் அனைவரும் ஒத்துழைத்தார்கள். 6 மாதங்களுக்குள் அனைத்து வீடுகளிலும் 'பிளஷ்அவுட்' வைக்க வேண்டும். இல்லையென்றால் எடுக்க யாரும் வரமாட்டார்கள் எனக் கெடு விதித்தோம். அனைவரும் கழிவறை கட்டினார்கள். இதற்காக அரசாங்கத்திடம் 80 லட்சம் ரூபாய் கேட்டோ ம். அவர்களும் கொடுத்தார்கள். அந்த வேலையில் ஈடுபட்டிருந்த தோட்டிகளுக்குக் கூட்டுவது போன்ற வேறு துப்புரவுப் பணிகளைத் தந்தோம் அவர்களுக்காகக் குடியிருப்பு வீடுகளும் கட்டிக்கொடுத்தோம்.
உங்கள் தந்தையார் காலத்தில் பொருளாதாரரீதியாக வலுவாக இருந்துள்ளீர்கள். பிறகு அது திடீரென்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்குப் பிறகும் நீங்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து செயல்பட்டுள்ளீர்கள். அந்த வீழ்ச்சியை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்? அதற்கான காரணம் என்ன?
என் தந்தையார் சுதந்திராக் கட்சிச் சார்பில் கே.கே.எஸ். சுப்பணக் கவுண்டரை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அதனால் இந்தப் பகுதியில் பெரும்பான்மையினராக இருந்த கவுண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அப்பா நடத்திவந்த வங்கியில் அவர்கள்தான் அதிகமாக முதலீடு செய்திருந்தார்கள். நிறையப் பேர் வந்து ஒரே சமயத்தில் முதலீடுகளைத் திரும்பக் கேட்டார்கள். ஒட்டுமொத்தமாக இப்படித் திடீரென்று கேட்டதால் உடனடியாகக் கொடுக்க முடியாத சூழல். ஒரே நாளில் நீதிமன்றம் சென்று எண்பது (80) டிகிரி பண்ணிவிட்டார்கள். அப்பாவிற்கு உடல்நிலை முடியாமல் போய்விட்டது. படுக்கையில் இருந்தபோதும் அனைத்துக் கடன்களையும் திருப்பிக்கொடுத்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். என்னிடம் "ஈஸ்வரசந்திர வித்யாசாகர் தகப்பனார் பட்ட கடனையெல்லாம் அடைத்தார். நீயும் அந்த மாதிரி செய்! கோவணத்தைக் கட்டிக்கொண்டு எங்காவது போங்கள்! ஆனால், கடங்காரங்களை மோசம் செய்துடாதீங்க!" என்று சொன்னார். இருந்த எல்லாவற்றையும் விற்றோம். ஒரே நாளில் நூறு கிரையம் செய்தோம். எல்லாக் கடனையும் கட்டினோம். இதோ இப்ப இருக்கும் வீடுகூட ஏலத்திற்கு வந்துவிட்டது. வெங்கட்ரமண அய்யர் 4500 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். 'நீங்கள் இருக்கும் வரை நான் உள்ளே வரமாட்டேன்' என்று சொல்லிவிட்டார். பின்னாளில் கடனை அடைத்துவிட்டு என் மனைவி பெயருக்கு மாற்றிக்கொண்டோ ம்.
'இப்ப நமக்கு ஒரு வீடு இருக்கே . . .!'
வீட்டை வாடகைக்குவிட்டிருக்கிறேன். பென்சன் வருகிறது. ஒன்றும் சிரமமில்லை.
இதில் என்ன இருக்கு . . .? நம்மிடம் இல்லாவிட்டால் என்ன . . .? நல்லது செய்ய நினைக்கிறவங்க எத்தனை பேர் இருக்காங்க . . .!
சமீபக் காலங்களில் நகர்ப் புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் குழந்தைகள் காப்பகங்கள் நிறைய உருவாகியுள்ளன. நீங்கள் நீண்டகாலத்திற்கு முன்பே கிராமப் பகுதியில் குழந்தைகள் காப்பகத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள் . . .
இங்கெல்லாம் பெண்கள் எப்போதும் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் அரிஜனங்கள், விவசாயக் கூலிகள். அவர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேலைக்குச் செல்வது சிரமம். விட்டுவிட்டுச் சென்றால் வீதியில் திரிவார்கள். அதனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள ஒரு இடம் வேண்டும் எனத் தோன்றியது.
நாங்கள் ஒன்றும் பெரிதாகச் செய்வதில்லை. காலையில் கஞ்சி, மதியம் சாப்பாடு, மாலையில் பொரிகடலை தருவோம். வேலை முடிந்து வந்து பெண்கள் அழைத்துச் செல்வார்கள்.
அரிஜன ஹாஸ்டலுக்குக்கூட அரசாங்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு ஐந்தே கால் ரூபாய்தான் தருகிறார்கள். எனவே, வெளியிலிருந்து உதவி பெற்றுத்தான் தொடர்ந்து நடத்திவருகிறோம்.
பள்ளி, ஹாஸ்டல் தவிர ஐ.டி.ஐகூட நடத்திவருகிறீர்கள்...
ஆமாம். ஆரம்பகாலத்தில் அவினாசிலிங்கம் செட்டியார் கிராமங்களில் வேலைவாய்ப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். வாரத்தில் இரண்டு நாள்கள் ஏதோ ஒரு கிராமத்திற்குச் சென்று ரீவைன்டிங், வெல்டிங் இந்த மாதிரியான பயற்சிகளைச் சொல்லித் தர ஏற்பாடு செய்தோம். பிறகு அதையே முழுநேரம் பயிற்சியளிக்கும் ஐ.டி.ஐ. ஆக மாற்றினோம். இது தமிழ்நாட்டின் மூன்றாவது ஐ.டி.ஐ. முதலிரண்டும் கோவையில் ஆரம்பிக்கப்பட்டன. இதற்குக் குறைந்தளவு பயிற்சிக் கட்டணம் உண்டு.
தொடர்ச்சியாக உழைத்துக்கொண்டும் அலைந்துகொண்டும் இருக்கிறீர்கள் விலகிக்கொண்டு ஓய்வெடுக்கலாம் அல்லவா?
நான் போனால்தான் பணம் தருகிறார்கள். நேற்றுக்கூட ஈரோடு போய் வந்தேன். நாளை மறுபடியும் போக வேண்டும். இதைத் தவிரவும் என்ன பெரிய வேலை இருக்கிறது? இதைச் செய்துதானே ஆக வேண்டும்?
பதிப்புத் துறையில் உங்கள் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுயராஜ்யப் புத்தகம் போடுவோம். காந்தி, நேரு போன்ற தலைவர்களைப் பற்றியும் சுதந்திரப் போராட்டம் பற்றியுமான அறிமுகங்களாக அவை இருக்கும். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் 'பிரார்த்தனை' புத்தகத்தைக் கி.வா.ஜ.வுடன் சேர்ந்து வெளியிட்டோ ம். இதன் விலை 6 அணா. 'கத்தியின்றி ரத்தமின்றி . . .' பாடல்கூட இதில் இருந்தது. தொடர்ந்து கி.வா.ஜ.வுடன் இணைந்து அமுத நிலையம் மூலம் 130 புத்தகங்கள் வெளியிட்டோ ம். நான் அமுத நிலையத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தேன். நாமக்கல் கவிஞர் பணம் தேவைப்படும் போதெல்லாம் இங்கு வருவார். பணம் திரட்டிக் கொடுப்போம். அவருக்குக்காது சற்று மந்தம். அதனால் சத்தமாகத்தான் பேச வேண்டும். அவர் பாடல்களை நான் வாய்விட்டு அடிக்கடிப் பாடிக்கொண்டிருப்பேன். அப்போது சுதந்திர சங்கு என்னும் பத்திரிகை வந்துகொண்டிருந்தது. அதன் ஆசிரியரை 'சங்கு' சுப்பிரமணியம் என்பார்கள். அதற்குச் சந்தா திரட்டுவோம். சுப்பிரமணியம் இங்குக் கோபியில்தான் கல்யாணம் செய்திருந்தார்.
அவருடைய . . .
தேசமழைத்திடின் பாசங்களைந்திடும்
பேரின்ப வாழ்வை வேண்டுவனே . . .!
என்கிற பாடல் மிகவும் பிரபலம் அதையும் நான் அடிக்கடிப் பாடுவேன்.
நீங்கள் தீவிரமாக இயங்கிய அதே காலகட்டத்தில் இப்பகுதியில் பெரியார் தீவிரமாகச் சுயமரியாதை இயக்கத்தை முன்னெடுத்தார். அவருடனான உங்கள் உறவு எப்படியிருந்தது?
ராமசாமி நாயக்கர் அப்பாவின் தோழர், வந்தால் இங்குதான் தங்குவார். பொது வேலைகளில் ஒன்றாக இருப்பார்கள். அவர் தனிநபர்மீது சாதிரீதியான எந்தவொரு விமர்சனமும் வைத்ததில்லை. சுதந்திரப் போராட்ட இயக்கம் தீவிரமாக இருந்த காலத்தில் பிராமண எதிர்ப்பு அவ்வளவாக வெளியே தெரியவில்லை. அதற்குப் பிறகு சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தேவை இருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் சமூக மறுமலர்ச்சிக்கான இயக்கங்களில் பூதான இயக்கம் முக்கியமானதாக இருந்தது. அதில் நீங்கள் பங்கெடுத்துக்கொண்டீர்களா?
விநோபாஜி கோபி வந்தபோது இங்குதான் தங்கியிருந்தார். பக்கத்தில் 60 ஏக்கர் நிலம் பூதானமாகக் கிடைத்தது. அங்குச் கூட்டுப் பண்ணைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டது. நாளடைவில் அதில் தொய்வு ஏற்பட்டது. பிறகு சரியாக நடக்கவில்லை.
நீங்கள் சமூகப் பணியாளராகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தபோதும் இன்னொருபுறம் அரசியல்களத்திலும் தொடர்ந்து இயங்கி வந்துள்ளீர்கள். இப்பகுதியில் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளீர்கள். இதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நீங்கள் ஏன் நகரவில்லை? அதாவது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ . . .
அதற்கெல்லாம் நிறையச் செலவழிக்க வேண்டும். சம்பாதிக்கத் தெரிய வேண்டும். இதெல்லாம் நம்மால் முடியாது. வந்தால் வருபவர்களுக்குச் சாப்பாடு போடுவது, முடிந்தால் உதவிசெய்வது என்று இப்படியே இருந்துவிட்டோ ம்.
இப்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இப்போதெல்லாம் எல்லோரும் தலைவர்களாகிவிடுகிறார்கள். மக்களுக்காக யாரும் வருவதில்லை. ஆள வேண்டும் என்பதற்காக வருகிறார்கள். யார் வந்தால் என்ன?
நீங்கள் சமூக மேம்பாட்டுக்குச் சாத்தியமுள்ள எல்லாத் தளங்களிலும் இயங்கியுள்ளீர்கள். அனைத்து வாய்ப்புகளிலும் அர்ப்பணிப்புணர்வோடும் திறமையோடும் செயல்பட்டுள்ளீர்கள். குறிப்பாக அரிஜன மக்களின் நலனை மையப்படுத்தியே செயல்பட்டுள்ளீர்கள். உங்களைப் பற்றி உங்களின் மதிப்பீடு என்ன?
என்ன சொல்வது . . .? நான் பெரிய எழுத்தாளனோ சிந்தனையாளனோ அல்ல; சாதாரண ஊழியன். என்னால் இயன்றதைச் செய்துவருகிறேன். எனக்குப் பிறகு இந்தப் பள்ளி, ஆஸ்டல், ஐ.டி.ஐ. இதையெல்லாம் யாராவது தொடர்ந்து நல்லமுறையில் நடத்தினால் போதும் வேறென்ன வேண்டும் . . .?
புகைப்படங்கள்: புதுவை இளவேனில்