சட்டவிரோதமாக தலித் மக்களிடமிருந்து பெறப்பட்ட பஞ்சமி நிலங்களைப் பற்றிய முழு விவரத்தையும் வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1892 ஆம் ஆண்டு தலித் மக்களுக்கு நிலம் கொடுக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு பஞ்சமி நிலம், டி.சி. நிலம் என்ற பெயரில் இலவசமாக நிலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டது.
1844 முதல் அடிமைத்தனம் நீக்கப்பட்டிருந்தாலும், தலித் மக்களை 'படியாள்' என்கிற பெயரில் கொத்தடிமைகளாக ஆதிக்க வகுப்பினர் தங்களது நிலங்களில் வேலை செய்வதற்கு நிரந்தரமாக அமர்த்தி கொடூரமான முறையில் விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்பட்டதில்லை. இதனடிப்படையில் தலித் மக்களின் பொருளாதார விடுதலைக்காகவும், சுய தன்மையுடன் வாழவும் பஞ்சமி நிலங்கள் அரசால் வழங்கப்பட்டன.
தலித் மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்ட போது சில கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்ட முதல் பத்தாண்டுகளில் யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்ககோ, குத்தகைக்கோ விடக் கூடாது; அப்படி பெறப்பட்ட நிலங்களை பத்தாண்டுகளுக்கு பின்பு தலித் இன மக்களுக்கு மட்டும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது. இந்த நிபந்தனைகளை மீறி வேறு இன மக்களுக்கு உரிமை மாற்றங்கள் மூலம் விற்பனை செய்வது சட்டப்படி செல்லுபடி ஆகாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தாழ்த்தப்பட்ட, தலித் இன மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச பஞ்சமி நிலங்கள் காலப்போக்கில் நிபந்தனைகளுக்கு விரோதமாக தலித் இனத்தை சாராதவர்களுக்கு 2.5 லட்சம் ஏக்கர் நிலம் கைமாறியுள்ளதாக தமிழகத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக திருவண்ணாமலை, வடஆற்காடு மாவட்டங்களில் உள்ள பஞ்சமி நிலங்கள் தமிழ்நாட்டில் உள்ள மொத்த பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் உள்ளன. அதேபோல, இந்த மாவட்டங்களில் தான் தலித் அல்லாதவர்களிடம் ஏறத்தாழ 77 சதவீத பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளன. இது மிகுந்த அதிர்ச்சிக்குரிய தகவலாகும்.
இந்த உரிமை மாற்றங்கள் குறித்து இதுவரை ஆய்வு செய்ய எந்த ஆட்சியும் முன்வரவில்லை. கடுமையான நிபந்தனைகளுடன் தலித் இன மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மற்ற இனத்தவருக்கு சட்டவிரோதமாக கைமாறியதைத் தடுக்க தமிழக அரசின் வருவாய் துறையோ, பதிவாளர் அலுவலகமோ முற்றிலும் தவறிவிட்டது.
இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள் வேறு இனத்தவருக்கு பதிவாளர் அலுவலகத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்க்கு பகிரங்கமாக விற்கப்பட்டுள்ளது. இந்த கொடுமையை கடந்த 48 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாறி, மாறி ஆட்சி செய்து வரும் திராவிட இயக்க கட்சிகள் தடுத்து நிறுத்த முற்றிலும் தவறிவிட்டனர். தலித் இன மக்களின் வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் பெற்று ஆட்சியில் அமர்ந்தவர்கள் தலித் இன மக்களுக்கு செய்த கைமாறு இதுதானா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.
தலித் இன மக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியவர்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் உயர்நீதிமன்ற அமர்வால் ஏப்ரல் 2010 ஆண்டிலேயே நீதிபதி பிரபா ஸ்ரீதேவனால் தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு கடந்த நான்காண்டுகளாக பஞ்சமி நிலங்களை மீட்க அதிமுக ஆட்சி செய்த முயற்சிகள் என்ன ? முதலமைச்சர் ஜெயலலிதாவே பஞ்சமி நிலங்களை சிறுதாவூரில் அபகரித்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ள போது, பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுப்பாரா என்கிற சந்தேகம் நமக்கு தோன்றுகிறது.
எனவே, சட்டவிரோதமாக தலித் மக்களிடமிருந்து பெறப்பட்ட பஞ்சமி நிலங்களைப் பற்றிய முழு விவரத்தையும் வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும்.
மொத்த பஞ்சமி நிலங்கள் எவ்வளவு? தலித் மக்களிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள மொத்த நிலம் எவ்வளவு? சட்டவிரோதமாக தலித் இனத்தை சாராதவர்களுக்கு விற்கப்பட்ட மொத்த நிலம் எவ்வளவு? இதன் முழு விவரங்கள் கிடைத்தாலொழிய தலித் மக்களுக்கு நீதி கிடைக்காது. தலித் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்டு சட்டவிரோதமாக உரிமை மாற்றம் செய்யப்பட்ட 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.