இன்று காமராஜர் பிறந்த நாள்.! தனது 12 வயதிலேயே , நமது இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும், ஏழை, எளிய ,ஒடுக்கப் பட்ட மக்களின் அரசியல், பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காகவும்,தனது வாழ்க்கையை முற்றிலும் ஒப்படைத்து , கிட்டத்தட்ட 60 ஆண்டுகள், ஒய்வு, ஒழிவு இல்லாமல், நாட்டிற்காக உழைத்து மறைந்த பெருந்தகை, காமராஜர்
.தொடக்க ஆண்டுகளில், வரதராஜுலு நாயுடு, திரு. வி. கல்யாணசுந்தர முதலியார், மதுரை ஜார்ஜ் ஜோசப் போன்ற அப்பழுக்கற்ற முற்போக்கு சிந்தனையும், உழைப்பாளி வர்க்க மேம்பாட்டு இலட்சியங்களும் கொண்ட இந்திய தேசியத் தலைவர்களின் வழிகாட்டுதலில், ஹோம் ரூல் இயக்கத் தொண்டராக பணியாற்றிப் பின் இந்திய தேசிய காங்கிரசின் முழு நேர ஊழியரானார். ஒவ்வொரு கிராமத்திற்கும் சைக்கிளிலேயே சென்று இயக்கத்தைப் பரப்பினார்.
ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு சிற்றூரிலும், தேசபக்தர்கள் அனைவரும் அவரது நண்பர்கள் . நேரடியாகப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அடிமட்டத் தொண்டர்களிடம் அவருக்கு நெருக்கம் இருந்தது.
1917ம் ஆண்டு முதல் 1947ல் நமது இந்தியத் திருநாடு அரசியல் விடுதலை பெற்ற நாள் வரை, அவர் நேரடியாக வளர்த்துப் பங்கேற்காத எந்த ஒரு காங்கிரஸ் போராட்டமும் தமிழ் நாட்டில் கிடையாது. அந்த 30 ஆண்டுகளில், பத்து ஆண்டுகள் சிறை வாசம்!
ஜார்ஜ் ஜோசெப் தலைமையில், காமராஜர் வைக்கம் அறப்போரிலும் பங்கேற்றார். .. வைக்கம் அறப்போர் , ஜார்ஜ் ஜோசப் காந்திஜியுடன் ஆலோசித்த பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட இயக்கம்.
..அன்றைய சென்னை ராஜதானியில், பொதுவுடமைக் கட்சி, வெளிப்படையாக இயங்க முடியாத தடை செய்யப்பட கட்சியாக இருந்தது. காந்திஜியின், ஒப்புதலுடன், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி அமைப்பின் மூலம், தோழர்கள், ஜீவானந்தம், கல்யாணசுந்தரம், ராமமூர்த்தி, சீனிவாச ராவ் போன்ற ஒப்பற்ற பொதுவுடைமை இயக்கத் தொண்டர்கள், காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டனர்.
காந்திஜியின் சில அரசியல் முடிவுகளை ஏற்க முடியாவிடினும், கட்டுப்பாட்டுடனும், ஒற்றுமையுடனும், அவர்கள் இந்திய தேசிய இயக்கத்தில் செயல்பட்டனர்.
அன்றைய காங்கிரஸ் இயக்கத்திலும், சொக்கத் தங்கம் போன்ற ஏராளமான தொண்டர்களும், தலைவர்களும் இருந்தனர். இயக்கத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில் மட்டுமே சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால், காமராஜருக்கு, தோழர் ஜீவா, போன்றோர் உயிர் நண்பர்களாகத் திகழ்ந்தனர். ...
அந்த ஆண்டுகளில், (1920-1970) காங்கிரஸ் பேரியக்கத்தின், நிர்வாகிகள், பல கட்டங்களில் நடத்தப்பட்ட மாநாடுகளில், தொண்டர்கள். ஊழியர்களின் வாக்கெடுப்பு முடிவுகளின்படியே தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
அகில இந்தியத் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் மட்டுமே , எவரும் இங்கு மாநிலக் கட்சிப் பொறுப்பாளராக இயலாது.
அவ்வகையில், காமராஜர் 1930ம் ஆண்டு முதலே , தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அசைக்க முடியாத தலைவராக விளங்கினார்.
காந்திஜியுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ராஜகோபாலாச்சாரி , பல தடவை காங்கிரஸ் தலைமையைக் கைப்பற்ற முயன்றாலும், காமராஜர் முன் அது எடுபடவில்லை. மக்களிடையும், காங்கிரஸ் தொண்டர்களிடமும், காமராஜர்தான், உண்மையான தலைவராக விளங்கினார்.
ஒரு சமயம், (1946) ராஜகோபாலாச்சாரியின் தவறான கோள்மூட்டு வேலையினால், காந்திஜி, தனது பத்திரிகையில்," சென்னை மாகாணத்தில் ஒரு 'குறுங்குழு' மத்தியத் தலைமையின் வழிகாட்டுதலை மீறுகிறது," என்று எழுதியதில், காமராஜர் மனம் வெதும்பி, காந்திஜிக்கு வெளிப்படையான தன்னிலை விளக்கம் கொடுத்து, காந்திஜி மனம் மாறும்படி செய்தார்
இவ்வளவு செல்வாக்கு இருந்தும், அவர் என்றும் பதவியை நாடியதில்லை. நாடு விடுதலை அடைந்த பிறகு நடந்த முதல் தேர்தலில், அன்றைய சென்னை ராஜதானியில், பொதுவுடமைக் கட்சி , ஒரு பெரும் சக்தியாக அமைந்தது. அதைத் தடுக்கும் வகையில், குறுக்கு வழியில், பதவி ஆசைகாட்டி , கட்சி மாற்ற அரசியலுக்கு , முதற்சுழி போட்டு முதல்வரானவர் ராஜகோபாலாச்சாரி. ..வந்ததும், முட்டாள்தனம் மிக்க ' குலக்கல்வி ' முறையை கொண்டுவந்தபோது, காமராஜர் , அதைக் கடுமையாகக் கண்டித்து, ராஜகோப்பாலாசாரியைப் பதவி விலக வைத்தார். அந்த ஆண்டிலிருந்து ராஜகோப்பாலாச்சரி தமிழ்நாட்டு அரசியலில் இருந்து விரட்டப்பட்டார். காமராஜர் முதலவாரானர்.
காமராஜர் முதல்வரானதும் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, ஏழை எளிய ஒடுக்கப் பட்ட மக்களுக்க்கு இலவசக் கல்வியும், மதிய உணவுத் திட்டமும் கொண்டுவந்தார். அதன் மூலம் , ஒரு கல்விப் புரட்சியை உருவாக்கி , இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்ந்தார். ஏராளமான நீர்ப்பாசனத் திட்டங்கள் வகுத்து, சிறிதளவும்,ஊழல் இல்லாமல் நிறைவேற்றினார். .
மாபெரும் நவீன ஆலைகளும், உயர்கல்வி நிலையங்களும் அமைய ஏற்பாடுகள் செய்தார்.
எள்ளளவும், பணம், பெண், புகழ் என்ற முப்பெரும் போதைகளுக்கு இடம் கொடாமல், வாழ்ந்து மறைந்தார்.
புகழ் பெற்ற ஆவடி காங்கிரஸ் தீர்மானம் மூலம், 'சோஷலிச பாணி சமுதாய இலக்கை , காங்கிரஸ் செயல் திட்டமாக்கினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், அக்ராசனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு செவ்வனே பணியாற்றினார்.
ஜாதிய , மத வெறியாளர்களை ஒடுக்கி வைத்தார். குறிப்பாக, ஒடுக்கப் பட்ட மக்களின் நேர்மையான போராளிகளை இனம் கண்டு, அவர்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தில் முதன்மை கொடுத்து ஊக்குவித்தார். ஜாதி வெறியர்களை இரும்புக் கரம் கொண்டு அச்சமின்றி அடக்கி , ஒடுக்கப் பட்ட மக்களின் காவலராகத் திகழ்ந்தார். .. .
இத்தகைய மாண்பு மிக்க பெரியவரின் பிறந்த நாளில், இந்திய விடுதலைப்போராட்டத்தின் ஒப்பற்ற தியாகிகளுக்கு, அஞ்சலி செய்து, அவர்கள் அனைவரும், பொது வாழ்வில் காட்டிய நேர்மை, பணிவு, துணிவு, தியாகம் , பண்பு அனைத்தையும் நினைவிருத்தி, நமது இன்றைய இளைய சமுதாயம், போலிகளை இனம் கண்டு வெறுத்து ஒதுக்கி, நமது இந்தியத் திருநாட்டின் மக்கள் ஒற்றுமையை கண்ணின் மணி போலக் காத்து, வளமும், சமத்துவமும் , சமதர்மமும் வென்றெடுக்க , சபதமேற்போம்.
http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/30267/7/chapter1.pdf
pages from the past....KAMARAJ-RAJAGOPALACHARI-EVR AND COMMUNISTS1 http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/21872/10/10_chapter%203.pdf