வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்-2 🎼
நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக அவர் புகழ் பாடிடுவோம்
நாளும் அவர் வழி வாழ்ந்திடுவோம்
1. சிறுதுளி பெருவெள்ளமாகிடுமே
எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் (2)
வறியவர் வாழ்வுகள் உயர்ந்திடுமே
வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம் (2)
தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்
வாருங்கள் இறைமக்களே கடல் அலையென வாருங்கள் -2
2. அருள் ஒளி மனதினில் கலந்திடவே
கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் (2)
மனிதரில் மனிதம் மலர்ந்திடவே
எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் (2)
உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே
இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்
வாருங்கள் இறைமக்களே கடல் அலையென வாருங்கள்-2
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்லோரும்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
எல்லோரும்: உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்துவின் மீது தூய ஆவி இறங்கி வர, அவரை உம் அன்பார்ந்த மைந்தர் எனச் சிறந்த முறையில் அறிக்கையிட்டீரே; தண்ணீராலும் தூய ஆவியாலும் புதுப் பிறப்பு அடைந்துள்ள மக்களை உமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட நீர் அவர்கள் உமக்கு ஏற்புடையவர்களாக என்றும் நிலைத்திருக்க அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்!
வாசகம்
முதல் வாசகம்:
இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 42 : 1-4, 6-7
ஆண்டவர் கூறுவது:
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 29: 1a,2, 3ac-4, 9b-10 (பல்லவி: 11b)
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!
இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். பல்லவி
ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. பல்லவி
ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசகம்:
கடவுள் இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10 : 34 - 38
கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.
இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (மாற்கு 1:1-2)
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 3 : 13 - 17
அக்காலத்தில், இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார். இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.
இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
அருட்பணி: அன்புமிக்க சகோதர சகோதரிகளே, இன்று (இவ்விரவில், இக்காலத்தில்) நம் மீட்பராகிய கடவுளின் பரிவும் மனிதநேயமும் தோன்றியுள்ளன. நம்முடைய நீதிச் செயல்களில் அல்லாமல், அவரின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு நம் கடவுளிடம் நம்மன்றாட்டுகளை எழுப்புவோம்.
1. கடவுளின் திருஅவைக்காக:
மாசற்ற கன்னி, வார்த்தையால் கருவுற்று வியத்தகு முறையில் பெற்றெடுத்த இயேசுவைத் திரு அவை முழு நம்பிக்கையில் நிலைத்து நின்று மனமகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக. பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும். உலகம் எங்கும் வளர்ச்சியும் அமைதியும் நிலவ: இம்மண்ணகக் கொடைகள் முடிவில்லாப் பரிசாக மாறிட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. பசி, பிணி, தனிமை இவற்றால் துன்புறுவோருக்காக:
கிறிஸ்துவின் திருப்பிறப்பு மறைநிகழ்வினால் அவர்கள் உடல், உள்ள நலம் பெற வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. இத்திருக் கூட்டத்தில் உள்ள நம் குடும்பங்களுக்காக:
இத்திருக் கூட்டத்தில் உள்ள நம் குடும்பங்களுக்காக: நாம் கிறிஸ்துவைப் பெற்றுக் கொள்வது போல ஏழை எளியவர்களிலும் அவரை ஏற்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அருட்பணி: ஆண்டவரே எங்கள் இறைவா, கடவுளும் மனிதருமானவரைத் தம் புனிதமான திருவயிற்றில் தாங்கிடப் பேறுபெற்ற அவர் நீர் உம் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகளைக் கேட்டருள் உம்மிடம் பரிந்துரைக்க வேண்டுகின்றோம். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
இறைவன் படைத்த உலகம் நானும் அவரின் செல்வம்
இயற்கை தந்த கனிகளோடு என்னைத்தருகின்றேன் (2)
மலரோடு மலராக நானும் இணைந்தேன்
கனியோடு கனியாக நானும் கனிந்தேன்
ச நி ச க | ம க ம ப | ச ச ப ப | ம க ரி ச – 2
என்னையே காணிக்கையாய் நானும் தருகிறேன்
உம்மையே என்வழியாய் நானும் பகிர்கிறேன்
ஏற்று உமது பலியாய் மாற்றும் எந்தன் இயேசுவே
ஏழைப்பெண்ணின் காணிக்கையாய் என்னைத் தருகிறேன்
மெல்கிசதேக் காணிக்கையாய் என்னை மாற்றுமே
ச நி ச க | ம க ம ப | ச ச ப ப | ம க ரி ச – 2
குருதிசிந்தி கல்வாரி பலியாய் அர்ச்சித்தீர்
குறைகள் நிறைந்த எந்தன் வாழ்வை நிறைவாக்கவே
என்னில் எழுந்து என்னை மாற்றும் எந்தன் இயேசுவே
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, உம் அன்புத் திருமகனுடைய வெளிப்பாட்டைக் கொண்டாடும் நாங்கள் கொண்டுவந்துள்ள இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அவர் மனமிரங்கி உலகின் பாவங்களைக் கழுவத் திருவுளம் கொண்டதால் உம் நம்பிக்கையாளரின் காணிக்கை அவரது பலியாக மாறுவதாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்!
தொடக்கவுரை: ஆண்டவருடைய திருமுழுக்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
வியத்தகு மறைநிகழ்வுகளால் யோர்தான் ஆற்றில் புதிய முழுக்கினை நீர் குறித்துக் காட்டினீர்; அதனால் விண்ணிலிருந்து வந்த குரல் வழியாக உம்முடைய வார்த்தை மனிதரிடையே குடி கொண்டு இருப்பதை நாங்கள் நம்பச் செய்தீர்; மேலும் தூய ஆவியார் புறா வடிவில் இறங்கியதன் வழியாக உம் ஊழியர் கிறிஸ்துவை மகிழ்ச்சியின் எண்ணெயால் பூசி அவரை ஏழைகளுக்கு நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பியதை அறியச் செய்தீர்.
ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி, முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே 🎼
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னைத் தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினைப் பொழிவாய்
என் சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே – 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்
எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப் போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒளிர்ந்திட நாளும் துணை வேண்டுமே – 2
நிழலாய் நிறைவாய் வாழ்வினில் வருவாய்
(யோவான் 1:32, 34 )
இதோ! நான் கண்டேன்; சான்று பகர்ந்தேன்; ஏனெனில் இவரே இறைமகன் என்று யோவான் இவரைப் பற்றிக் கூறினார்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் ஒரே திருமகனுக்கு நம்பிக்கையோடு செவிமடுக்கும் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக உண்மையில் அழைக்கப்பட்டு அதற்கு ஏற்ப வாழ்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.