இதய தீபம் ஏற்றுவோம் இந்த நன்னாளிலே
இன்னிசை பாடிப் போற்றுவோம் இனிய தேவனே
இந்த அன்பென்னும் பாதையிலே வரும் அர்த்தங்கள் ஆயிரமே
இந்த சுந்தரச் சோலையிலே வந்த சொந்தங்கள் ஆயிரமே
இவை அத்தனை அழகும் இறைவன் கரங்கள்
இனிது வரைந்த கவிதையே
வந்தவையோ சென்றவையோ சொந்தமென்று ஏதுமில்லை
கண்டவரோ கொண்டவரோ காலம் சொல்லத் தேவையில்லை
கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையை
அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே
புகழ்ச் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே
கற்றவையோ பெற்றவையோ கர்த்தரின்றி ஏதுமில்லை
சத்தியமும் சந்ததியும் சாட்சியமும் தேவையில்லை
கண்ணெதிரில் காணுங்கள் கர்த்தரின் கருணையை
அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே
புகழ்ச் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்த்திடு நல்மனமே
வருகைப் பல்லவி
புனிதர் அனைவரின் புகழ்ச்சிக்காக இன்று பெருவிழாக் கொண்டாடும் நாம் எல்லாரும்
ஆண்டவரில் அகமகிழ்வோமாக; அவர்களுடைய பெருவிழாவில்
வான தூதரும் மகிழ்ந்து, இறைவனின் திருமகனைப் புகழ்கின்றனர்.
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
---------------------------------------------------
பாவத்துயர்ச் செயல்
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்: சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்; ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்: ஆமென்.
---------------------------------------------------
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
எல்: உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
மன்றாடுவோமாக!
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, பேறு பயன்கள் நிறைந்த உம் புனிதர் அனைவரையும் நாங்கள் ஒரே விழாவில் வணக்கமுடன் கொண்டாடச் செய்தீரே; எண்ணற்ற புனிதர்களின் பரிந்துரையால் நாங்கள் விரும்பித் தேடும் உமது இரக்கத்தை எங்களுக்கு மிகுதியாகப் பொழிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்!
அனைத்து புனிதர்கள் பெருவிழா - வாசகம்
முதல் வாசகம்
பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 7: 2-4, 9-14
கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வான தூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, “எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார். முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப் பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.
இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக் குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.
அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். “ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்” என்று பாடினார்கள்.
மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார். நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன்.
அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6)
பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்களின்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-3
சகோதரர் சகோதரிகளே,
நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம். அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
அன்புத் தந்தையே இறைவா! அனைத்து புனிதர்களோடு இணைந்து உம்மைப் போற்றுகின்றோம். நம் புனிதர்களின் வாழ்க்கையைப் வாழ்வாக்கி நடக்க,எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவியர் இறைமக்கள் அனைவருக்கும் புனிதர்களுடைய வேண்டுதல் என்றும் துணைநிற்கச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எம் தந்தையே இறைவா, சிறுவர்களாகிய எங்களை எப்போழுதும் பாதுகாத்து, வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்பின் இறைவா, தீராத நோய்கள், கடன் தொல்லைகள், மன வேதனைகள், பிரச்சனைகள் போன்றவற்றில் சிக்கித் தவிப்போர் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உம் இரக்கத்தால் அவற்றில் இருந்து விடுதலை பெற்று, வாழ்கின்ற உண்மை கடவுள் நீரே என்பதை அறிக்கையிடவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இரக்கத்தின் வடிவே இறைவா! எங்கள் குடும்பங்களில் மரித்தவர்களுக்கும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்களுக்கும், யாரும் நினையாத, மறந்துபோன ஆத்துமாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக
இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக
நினைத்தேன் நினைத்தேன் நான் தர
அனைத்தும் உந்தன் காணிக்கை (2) என்
பூத்துக் குலுங்கும் மலர்களும் இங்கு
காய்த்து கனிந்த கனிகளும்
ஓங்கி உயர்ந்த மரங்களும் அதைச்
சூழ்ந்து வளர்ந்த செடிகளும்
இயற்கை கூறும் கவிதைகள் யாவும்
இறைவன் தந்த கொடைகளே (2) - நினைத்தேன்…
பறந்து திரியும் பறவைகள் அவை
பாடும் கடல்வாழ் விலங்குகள்
காற்றும் கடலும் கார்முகில் வான
வில்லும் நிலவும் விண்மீன்களும்
இயற்கை கூறும் கவிதைகள் யாவும்
இறைவன் தந்த கொடைகளே (2) - நினைத்தேன்...
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அப: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையது மான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
ஆண்டவரே, புனிதர் அனைவரின் பெருமைக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் இருப்பனவாக; இவ்வாறு அப்புனிதர்கள் ஏற்கெனவே சாகாத்தன்மையைப் பெற்றுவிட்டனர் என்பதை நம்புகின்ற நாங்கள் எங்களது மீட்பில் அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர் என்பதையும் உணரச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்!
அனைத்து புனிதர்கள் தொடக்கவுரை
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் இன்று உமது அருளால்
எங்கள் அன்னையாகிய விண்ணக எருசலேம் நகரின்
பெருவிழாவைக் கொண்டாட எங்களுக்கு அருளினீரே;
அங்கேதான் எங்கள் சகோதரர் சகோதரிகளாகிய புனிதர்கள்
உம்மைச் சூழ்ந்து நின்று, முடிவின்றிப் போற்றிப் புகழ்கின்றார்கள்.
அந்நகரை நோக்கியே நாங்கள் நம்பிக்கையோடு பயணம் செய்து,
ஆர்வமுடன் விரைகின்றோம்;
அங்கேதான் திரு அவையின் உறுப்பினர் உன்னத நிலையடைந்து,
மாட்சி பெறுகின்றனர் என மகிழ்கின்றோம்;
ஏனெனில் வலுவற்ற எங்களுக்குப்
பேருதவிகளையும் முன் மாதிரியையும்
அவர்கள் வழியாக அருளுகின்றீர்.
ஆகவே அப்புனிதர்களோடும் வானதூதரின் பெருந்திரளோடும்
நாங்கள் ஒன்றுசேர்ந்து உம்மைப் போற்றிப் புகழ்ந்துச் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர், எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
எனில் வாரும் என் இயேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீரின்றி ஒன்றில்லையே - இங்கு
நீர்தானே என் எல்லையே
என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே
என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
மத் 5:8-10
அருட்பணி:
மன்றாடுவோமாக!
இறைவா, உம் புனிதர் அனைவரிலும் நீரே வியப்புக்கு உரியவர் எனவும் தூயவர் எனவும் உம்மை வழிபட்டு, நாங்கள் உமது அருளை வேண்டுகின்றோம்: உமது அன்பின் நிறைவாகிய புனிதத்தில் பங்குபெறும் நாங்கள் திருப்பயணிகளுக்கான இத்திருவிருந்திலிருந்து விண்ணக வீட்டின் விருந்துக்குக் கடந்து செல்வோமாக.
எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவி உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்: இறைவனுக்கு நன்றி.
உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்
துலங்கிடும் உமக்கே இறைவா
நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி கூறுகின்றோம் (2)
இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு
இணையில்லா பலியில் இறைவனை உண்டு (2)
சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் ஆ.. 2
நின்றிட அழைத்தோம் நிற்பாய் தினமும்
உண்மை வழியை உலகுக்குக் காட்ட
உலகத்தை அன்பால் ஒன்றாய்த் திரட்ட (2)
அக இருள் அகற்றி இறையருள் புகுத்த ஆ.. 2
அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு