இறைவன் உறையும் புனித இல்லம்
இனிமை யாவும் நிறைந்து பொங்கும்
இணைந்து மகிழும் காலம் மலர்ந்தே
இதயம் மலரும் உறவு செழிக்கும்
இகத்தில் மனிதம் முழுமை காணும்
இறைமையாளும் உலகம் விடிந்ததே
மனங்கள் விரிப்போம் கரங்கள் குவிப்போம்
இறைபலியினில் அருள் மழையினிலே
நீங்கள் எனது மக்களென்று சொந்தமாக்கி அணைக்கின்றார்
நான் உங்கள் கடவுளென்று உரிமை வாழ்வு வழங்கினார்
தோளில் சுமக்கும் ஆயனாக தேடி நாளும் வருகின்றார்
தாயை போல மார்பில் சேர்த்து
அன்பை நாளும் பொழிகின்றார்
அவரை தொடர்வோம் அவரில் வாழ்வோம்
அவர் வழியினில் அருள் மழையினிலே
ஆ.....ஆ....ஆ
ஸஸஸ ரீரிரி ககக மபம பமகரிச
(இன்னிசையாக யாழினை மீட்டி இறைவனை போற்றுங்கள்
மெல்லிசையாக குழலினை ஊதி கடவுளை புகழுங்கள்
தேனிசையாக மத்தளம் கொட்டி தேவனை வாழ்த்துக்கள்
ஏழிசையாக கீதங்கள் இசைத்து தெய்வத்தை வழிபடுங்கள் )
இறைவன் உறையும்.....
நீங்கள் எனது நண்பரென்று நட்பின் உறவில் மகிழ்கின்றார்
நாம் அவரின் சீடராக வாழ்ந்து சிறக்க பணிக்கின்றார்
திராட்சை கொடியின் கிளைகளாக ஒன்றி இருக்க விழைகின்றார்
வழியும் ஒளியும் வாழ்வுமாக
திகழ்ந்து நம்மை காக்கின்றார்
(அவரில் இணைவோம் அவர் போல் வாழ்வோம்
அவர் மொழியினில் அருள் மழையினிலே)
ஆ...ஆ...ஆ...ஸஸஸ ரீரிரி ககக மபம பமகரிச
வானும் மண்ணும் காண்பவை யாவும் இறைவனை போற்றிடுமே
ஆறுகள் மலைகள் ஆழ்கடல் பகுதிகள்
கடவுளை புகழ்ந்திடுமே
காற்றும் மழையும் நெருப்பும பனியும் தேவனை வாழ்த்திடுமே
மானிடம் முதலாய் வாழ்வன யாவும் தெய்வத்தை வழிபடுமே
இறைவன் உறையும்.....(2)
➕ ➕ ➕
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
---------------------------------------------------
பாவத்துயர்ச் செயல்
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்: ஆமென்.
---------------------------------------------------
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
எல்: உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
மன்றாடுவோமாக! ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
வாசகங்கள்
முதல் வாசகம்
உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 4: 1-2a
“இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
“ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 98: 5-6. 7-8. 9 (பல்லவி: 9d)
பல்லவி: மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி
இரண்டாம் வாசகம்
உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-12
சகோதரர் சகோதரிகளே,
எங்களைப் போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.
‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது’ என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.
இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு..
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 21: 28
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19
அக்காலத்தில்
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.
அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.
மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.
இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.
ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
1. அன்பு தந்தையே எம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இறையரசை அறிவிக்க தங்கள் வார்த்தையாலும், வாழ்க்கையாலும் சாட்சியம் பகர வேண்டுமென்று புனித செசிலியம்மாவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. கருணையின் தேவனே இறைவா, புனித செசிலியம்மாவின் திருவிழாவை கொண்டாடும் இந்நாளில் எங்கள் பங்கின் பாடகர் குழு மற்றும் இசைக் கருவிகள் மீட்டுபவர்களை நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டி, புனித செசிலியம்மாவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. எம் தந்தையே இறைவா, எங்களின் ஒவ்வொரு செயலும், வார்த்தையும் இறைவனின் புகழைப் பறைசாற்றுவதாக அமைய வேண்டி, புனித செசிலியம்மாவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. எம் தந்தையே இறைவா, புனித செசிலியம்மாவின் வாழ்வைப் பின்பற்றி நாங்களும் இறை விசுவாசத்திலும், செப வாழ்விலும் வளர, புனித செசிலியம்மாவின் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
5. நற்கருணை தேவனே இறைவா, நாங்கள் இதுவரை பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகிறோம் மேலும் எங்களை எந்நாளும் காத்து வழிநடத்த வேண்டுமென்று, புனித செசிலியம்மாள் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
6. இரக்கத்தின் வடிவே இறைவா! எங்கள் குடும்பங்களில் மரித்தவர்களுக்கும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்களுக்கும், யாரும் நினையாத, மறந்துபோன ஆத்துமாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள வேண்டுமென்று, புனித செசிலியம்மாள் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அப: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையது மான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
பலியென எனை தருவேன்
உம் பலியினில் எனை இணைப்பேன்
பகிர்தலில் நாளும் வளர
பணிந்தே எனை தருவேன்
1.
வாழ்வது நானல்ல எந்தன் இயேசுவே வாழ்கின்றீர்
எந்தன் உடல் பொருள் ஆவியெல்லாம் உமக்கே தருகின்றேன்
என்னையே ஏற்று வாழ உமதருள் கேட்கின்றேன்
2.
திராட்சை கொடியென்றேன் அதன் கிளைகள் நீர் என்றீர்
எனக்குள் இருப்போரெல்லாம் என்றுமே வாழ்வாரென்றீர்
பிறரையே ஏற்று வாழ உம்வரம் கேட்கின்றேன்
ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மாண்புக்கு உரிய உமது திருமுன் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை இறைப்பற்றின் அருளையும் நிலையான பேரின்பத்தையும் எங்களுக்குப் பெற்றுத் தருவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
3. ஒரு மனிதரால் மனிதர் அனைவருக்கும் மீட்பு
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அப: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
அழிவுக்கு உரிய மனிதருக்கு உமது இறை இயல்பின் ஆதரவை அளிக்கின்றீர்; மேலும் மனிதனின் சாகும் தன்மையைப் பிணி போக்கும் மருந்தாகப் பயன்படுத்தி, நாங்கள் எவ்வாறு அழிவுற்றோமோ அவ்வாறே எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எங்களுக்கு மீட்பு அருளுகின்றீர்; இவை அனைத்தாலும் அளவற்ற மாட்சி உமக்கே உரியது என்பதை உணர்கின்றோம்.
அவர் வழியாக உமது மாண்பை வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன; உமது திருமுன் எக்காலத்தும் மகிழ்கின்றன; அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து அக்களிப்புடன் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர், எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(திபா 72:28)
கடவுளின் அண்மையே எனக்கு நலம். ஆண்டவராகிய கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.
அல்லது
(மாற் 11:23, 24)
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். கேட்டபடியே உங்களுக்கு நடக்கும், என்கிறார் ஆண்டவர்.
நதியின் தாகம் கடல்மீது கடல் அலையின் தாகம் கரைமீது
நிலத்தின் தாகம் நீர் மீது இயேசுவே என் தாகம் உன் மீது
தணியாத தாகம் கொண்டேன் இயேசுவ உன்மீது தணியாத தாகம் கொண்டேன் அழியாத உன் உறவை காண
தணியாத தாகம் கொண்டேன்
நான் அமரும் போதும்
நடக்கும் போதும் உந்தன் நினைவில் தாகம் கொண்டேன்
விழுகின்ற போதும் எழுகின்ற போதும்
உந்தன் கரம் மேல் தாகம் கொண்டேன்
உன் வழி நல் வழி அவ்வழி செல்ல தணியாத தாகம் கொண்டேன்
உன் நிறைமொழி அருள்மொழி பொன்மொழி வாழ தணியாத தாகம் கொண்டேன் தாகம்
தணியா தாகம் தாகம் தணியா தாகம் நண்பன் இயேசுவே உந்தன் மீது தணியாத
தாகம் கொண்டேன்
1.
குல முதுவர் நம்பிக்கையில் தணியாத தாகம் கொண்டேன்
குறைவில்லா ஆபேலில் தணியாத தாகம் கொண்டேன்
மோசேயின் இறை பயத்தில் தணியாத தாகம் கொண்டேன்
நோவாவின் நேர்மையிலே தணியாத தாகம் கொண்டேன்
தாவீதின் புகழ் பாடலில் தணியாத தாகம் கொண்டேன்
இறை ஞானி சாலமோனில் தணியாத தாகம் கொண்டேன்
நம்பிக்கையோடு இவர்களின் வாழ்வில் தணியாத தாகம் கொண்டேன்
என் நம்பிக்கை உம்மில் நாளும் உயர தணியாத தாகம் கொண்டேன்
தாகம் தணியா தாகம் தாகம் தணியா தாகம் நண்பன் இயேசுவே உந்தன் மீது தணியாத தாகம் கொண்டேன்
2.
அன்னை மரி பணிவுதனில் தணியாத தாகம் கொண்டேன்
அன்புநிறை வெரோனிக்காவில் தணியாத தாகம் கொண்டேன்
வான் வீட்டின் திறவுகோலில் தணியாத தாகம் கொண்டேன்
வளனாரின் நீதியிலே தனியாத தாகம் கொண்டேன்
சகேயுவின் தேடலிலே தனியாத தாகம் கொண்டேன்
சான்று பகர்ந்த பவுலின் மீது தணியாத தாகம் கொண்டேன்
நம்பிக்கையோடு இவர்களின் வாழ்வில் தணியாத தாகம் கொண்டேன்
என் நம்பிக்கை உம்மில் நாளும் உயர தணியாத தாகம் கொண்டேன்
தாகம் தணியா தாகம் தாகம் தணியா தாகம் நண்பன் இயேசுவே உந்தன் மீது தணியாத தாகம் கொண்டேன்
அருட்பணி:
மன்றாடுவோமாக!
ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவி உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்: இறைவனுக்கு நன்றி.
இசை என்னும் அமுதை இறைவனுக்கே
என்றும் சுவை தந்த செசிலியே காவலியே
இசை என்னும் அமுதை இறைவனுக்கே
பண்பல இசைத்தே பார்தனில் நாங்கள்
பணித்திட்டோம் அருள் பெறவே
தேனினும் இனிய தமிழிசையாலே
தினமும்மை புகழ்வோமே
தேவனை நாளும் புகழ்ந்து நாம் பாட
தேடும் உம் அருள் தாராய்
பாடகர் அனைவரின் காவலும் நீயே
பாடிடுவோம் தினமே
பாடலினாலே மறை பணி புரிய
பரனிடம் வேண்டிடுவாய்