அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்லோரும்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
எல்லோரும்: உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
இறைவா, மனிதத்தன்மையின் மாண்பினை வியத்தகு முறையில் படைத்து, அதனினும் வியத்தகு முறையில் சீர்படுத்தினீர்; எங்களது மனித இயல்பில் பங்குகொள்ள அருள்கூர்ந்த அவரது இறை இயல்பில், நாங்கள் பங்கு பெற அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்!
வாசகம்
கிறிஸ்து பிறப்பு பெருவிழா
முதல் வாசகம்:
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 52 : 7 - 10
நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 98: 1, 2-3a, 3cd-4, 5-6 (பல்லவி: 3b)
பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி
இரண்டாம் வாசகம்:
கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 1 : 1 - 6
பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களை விட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்றும், “நான் அவருக்குத் தந்தையாய் இருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்” என்றும் எப்போதாவது கூறியதுண்டா? மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, “கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (மாற்கு 11:10)
அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின் மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 1 : 1 - 18
தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.
அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.
வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.
யோவான் அவரைக் குறித்து, “எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்” என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.
இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
அருட்பணி: அன்புமிக்க சகோதர சகோதரிகளே, இன்று (இவ்விரவில், இக்காலத்தில்) நம் மீட்பராகிய கடவுளின் பரிவும் மனிதநேயமும் தோன்றியுள்ளன. நம்முடைய நீதிச் செயல்களில் அல்லாமல், அவரின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு நம் கடவுளிடம் நம்மன்றாட்டுகளை எழுப்புவோம்.
1. கடவுளின் திருஅவைக்காக:
மாசற்ற கன்னி, வார்த்தையால் கருவுற்று வியத்தகு முறையில் பெற்றெடுத்த இயேசுவைத் திரு அவை முழு நம்பிக்கையில் நிலைத்து நின்று மனமகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக. பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும். உலகம் எங்கும் வளர்ச்சியும் அமைதியும் நிலவ: இம்மண்ணகக் கொடைகள் முடிவில்லாப் பரிசாக மாறிட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. பசி, பிணி, தனிமை இவற்றால் துன்புறுவோருக்காக:
கிறிஸ்துவின் திருப்பிறப்பு மறைநிகழ்வினால் அவர்கள் உடல், உள்ள நலம் பெற வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. இத்திருக் கூட்டத்தில் உள்ள நம் குடும்பங்களுக்காக:
இத்திருக் கூட்டத்தில் உள்ள நம் குடும்பங்களுக்காக: நாம் கிறிஸ்துவைப் பெற்றுக் கொள்வது போல ஏழை எளியவர்களிலும் அவரை ஏற்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அருட்பணி: ஆண்டவரே எங்கள் இறைவா, கடவுளும் மனிதருமானவரைத் தம் புனிதமான திருவயிற்றில் தாங்கிடப் பேறுபெற்ற அவர் நீர் உம் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகளைக் கேட்டருள் உம்மிடம் பரிந்துரைக்க வேண்டுகின்றோம். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, இன்றைய பெருவிழாவின் காணிக்கையிலிருந்து வெளிப்படும் உமது மன்னிப்பு, எம்மை உம்மோடு ஒப்புரவாக்கி, முழுமையான இறைவழிபாட்டுக்கு எங்களை இட்டுச் செல்வதாக; எனவே இக்காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் விளங்கச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
ஆண்டவருடைய பிறப்பின் தொடக்கவுரை I
ஒளியாம் கிறிஸ்து
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும், நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது, மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும், எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில், வாக்கு மனிதர் ஆனார் என்னும் மறைநிகழ்வின் வாயிலாக உமது மாட்சியின் பேரொளி எங்கள் மனக்கண்களுக்குப் புதிதாய் ஒளி வீசியது. எனவே, அவரில் நாங்கள் கடவுளைக் கண்கூடாய்க் காண்கின்றோம்; அவர் வழியாகவே கண்காணாதவை மீதுள்ள அன்பினால் நாங்கள் ஆட்கொள்ளப்படுகின்றோம்.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும், அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும், வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(திருபாடல் 97:3)
உலகின் எல்லைகள் அனைத்தும் நம் கடவுளின் மீட்பைக் காணும்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
இரக்கமுள்ள இறைவா, இன்று உலகின் மீட்பர் பிறந்துள்ளார்; அதனால் எங்கள் இறைப் பிறப்புக்கு ஊற்றாக அவர் இருப்பது போல எங்களுக்கு அழியா வாழ்வை அளிப்பவராகவும் இருப்பாராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
சிறப்பு ஆசிர் (பக்கம் 622)
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.