சுமை சுமந்து சோர்ந்திருப்போரே 🎼
என்னிடம் எல்லோரும் வாருங்கள் – 2
உங்களை நான் இளைப்பாற்றுவேன்
உங்களை நான் காப்பாற்றுவேன் – 2
உங்களை நான் தேற்றிடுவேன்
உங்களை நான் ஏற்றிடுவேன்
உங்களை நான் நடத்திச் செல்வேன்
உங்களை நான் அன்பு செய்வேன் – 2
உங்களை நான் அரவணைப்பேன்
உங்களை நான் வாழச் செய்வேன்
உங்களை நான் வளரச் செய்வேன்
உங்களை நான் ஒளிரச் செய்வேன் – 2
உங்களை நான் மலரச் செய்வேன்
உங்களை நான் மிளிரச் செய்வேன்
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
ஆண்டவரே எங்கள் இறைவா, உம் திருமகன் உலகை அன்பு செய்து சாவுக்குத் தம்மையே கையளித்தார்; உமது உதவியால் அதே அன்பில் நாங்களும் விரைந்து முன்னேறிச் செல்ல அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
தவக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு
முதல் வாசகம்
என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம். 37: 12-14
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ‘ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்’ என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்
திபா 130: 1-2. 3-4. 5-6. 7b-8 (பல்லவி: 7b)
பல்லவி: ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது.
ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - பல்லவி
ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும். நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். - பல்லவி
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. - பல்லவி
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - பல்லவி
இரண்டாம் வாசகம்
இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 8: 8-11
சகோதரர் சகோதரிகளே,
ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வசனம்: யோவா 11: 25a, 26
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்,” என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 11: 1-45
அக்காலத்தில் பெத்தானியாவில் வாழ்ந்துவந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்து வந்தனர். இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆள் அனுப்பி, “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்” என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, “இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்” என்றார்.
மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், “மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று கூறினார். அவருடைய சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போதுதானே யூதர்கள் உம் மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை” என்றார்.
இவ்வாறு கூறியபின், “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்” என்றார். அவருடைய சீடர் அவரிடம், “ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்” என்றனர். இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். அப்போது இயேசு அவர்களிடம், “இலாசர் இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு, “நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்” என்றார். திதிம் என்னும் தோமா தம் உடன்சீடரிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்றார்.
இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.
இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், “போதகர் வந்துவிட்டார்; உன்னை அழைக்கிறார்” என்று காதோடு காதாய்ச் சொன்னார். இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.
இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.
இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. “கல்லை அகற்றிவிடுங்கள்” என்றார் இயேசு. இறந்துபோனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார். இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார். இவ்வாறு சொன்னபின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
அல்லது குறுகிய வாசகம்
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 3-7, 17, 20-27, 33b-45
அக்காலத்தில், இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆள் அனுப்பி, “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்” என்று தெரிவித்தார்கள். அவர் இதைக் கேட்டு, “இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்” என்றார். மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்டபிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். பின்னர் தம் சீடரிடம், “மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று கூறினார். இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.
இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள். இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர். இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. “கல்லை அகற்றிவிடுங்கள்” என்றார் இயேசு. இறந்துபோனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார். இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார். அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும்பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.
இவ்வாறு சொன்னபின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார். இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்கு புகழ்
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.
ஆமென்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அடியோர் யாம் தரும் காணிக்கையை 🎼
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே – 2
பாவியென்றெம்மைப் பாராமல் – எம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் – 2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் – 2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய் தருகின்றோம்
காணிக்கை
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்தவ நம்பிக்கையின் படிப்பினையால் நீர் நிரப்பியுள்ள உம் அடியார்களுக்கும் எங்களுக்கும் செவிசாய்த்தருளும்; இப்பலியின் பயனாக இவர்களைப் புனிதப்படுத்துவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் மெய்யான மனிதராகிய அவர் தம் நண்பர் இலாசருக்காகக் கண்ணீர்விட்டு அழுதார்; என்றுமுள்ள கடவுளாகிய அவர் இலாசரைக் கல்லறையினின்று உயிர்பெற்றெழச் செய்தார்; அவரே மனித இனத்தின்மேல் இரக்கம் கொண்டு தூய மறைநிகழ்வுகளால் எங்களைப் புதிய வாழ்வுக்கு இட்டுச் சென்றார்.
அவர் வழியாக மாண்புக்கு உரிய உம்மை வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன; உம் திருமுன் எக்காலத்தும் அக்களிக்கின்றன; அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு நாங்கள் தாழ்மையுடன் உம்மை இறைஞ்சிப் புகழ்ந்து சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(யோவா 11:26)
உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார், என்கிறார் ஆண்டவர்.
குயவனே குயவனே படைப்பின் காரணனே 🎼
களிமண்ணான என்னையுமே, கண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான், வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய், விளங்க செய்திடுமே – 2
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே
மண்ணாசையில் நான் மயங்கியே, மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன், கண்டேனில்லை இன்பமே – 2
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே
விலை போகாத பாத்திரம் நான், விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம கிருபையால், உகந்த தாக்கிடுமே – 2
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே
அருட்பணி: மன்றாடுவோமாக!
எல்லாம் வல்ல இறைவர், எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: இயேசு கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்கின்ற நாங்கள் அவருடைய உறுப்பினர்களாக என்றும் விளங்குவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு:
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் 🎼
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை – 2
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன் – 2
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா – 2
தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
தாங்கியே நடத்தினீர் – 2
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன் – 2
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன் – 2
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா