திருக்குலமே வாருங்கள் திருப்பலியில் கூடுங்கள் 🎼
இறைவன் செய்த நன்மைகளை நினைத்துப் பாருங்கள்
மகிழ்வுடனே நன்றி பலி செலுத்த வாருங்கள்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத தேவன்
தன்னையே பலியாக தருகிறார்
அவரின் தியாகத்தால் வாழ்வு பெறுகிறோம் -2
அவரன்பு பிள்ளைகளாவோம்
அவரன்பின் சாட்சிகளாவோம்
உண்மையாக தேடும் அனைவருக்கும் அருகில்
ஆண்டவர் இருக்கின்றார் வாருங்கள்
மகிழ்ச்சியோடு நாம் அவரை நாடுவோம் -2
நினைப்பதெல்லாம் நிறைவேற்றுவார்
நன்மைகளால் நம்மை நிரப்புவார்
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்லோரும்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
எல்லோரும்: உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
இறைவா, உண்மையும் நேர்மையும் உள்ள நெஞ்சங்களில் நீர் குடி கொள்வதாக உறுதி அளித்துள்ளீரே; எங்கள் உள்ளங்களில் நீர் தங்குவதற்கு ஏற்றவாறு நாங்கள் வாழ எங்களுக்கு அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்!
முதல் வாசகம்
இறைப் பற்றின்றி இருக்க, ஆண்டவர் யாருக்கும் கற்பிக்கவில்லை.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15: 15-20
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல்மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார். ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். இறைப் பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை; பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததுமில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 119: 1-2. 4-5. 17-18. 33-34 (பல்லவி: 1b)
பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்;
ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்;
முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். – பல்லவி
ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்;
அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.
உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க,
என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! – பல்லவி
உம் அடியானுக்கு நன்மை செய்யும்;
அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.
உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு
என் கண்களைத் திறந்தருளும். – பல்லவி
ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்;
நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.
உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும்.
அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். – பல்லவி
இரண்டாம் வாசகம்
உலகம் தோன்றும் முன்பே ஞானம் கடவுளின் திட்டத்தில் இருந்தது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-10
சகோதரர் சகோதரிகளே,
முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல; உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள்.
வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெறவேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்துகொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “தம்மிடம் அன்புகொள்ளுகிறவர்களுக்கு என்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை.”
இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இறைவாக்குகளை நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-37
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவை அனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.”
“கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்” என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
“ ‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.”
“மேலும், ‘ பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப் பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.
ஆகவே நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.”
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி
கிறிஸ்துவே உமக்கு புகழ்
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
மன்றாட்டு 1:
சீயோனிலிருந்து நல் ஆசீர் வழங்கும் எம் இறைவா!
உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் தூயஆவியில் புத்துணர்வுப் பெற்று எம்மீட்பராம் இயேசுவின் மாட்சிமையை உணர்ந்துத் தங்கள் வாழ்க்கையின் மூலம் அனைவரையும் இயேசுவின் சீடர்களாய், அன்பைப் பகிர்ந்துடும் மக்களாய் வாழ்ந்திட அருளாசீர் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மன்றாட்டு 2:
உம் திருமலையிலிருந்து எமக்குப் பதிலளிக்கும் எம் இறைவா!
எங்கள் குடும்பங்களின் தேவைகளை அறிந்து எம்மன்றாட்டுகளுக்குச் செவிசாய்தருளும். நாங்கள் உம்மிடம் வேண்டிக்கேட்பதைவிட மேலானவற்றைப் பொழிந்து எம்குடும்பங்களில் அன்பும் நட்பும் மலர அனைவரும் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டிய ஞானத்தையும் விவேகத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மன்றாட்டு 3:
எங்களைச் சூழ்ந்திருக்கும் எம் அன்பு இறைவா!
இந்த நல்ல நாட்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழும் எம் உழைக்கும் மக்களின் வாழ்வில் விவசாயம் பெருகவும், அதன் மூலம் ஏழை எளியோர்கள் பொருளாதரம் பல்கிப்பெறுகிடவும், அவர்தம் பிள்ளைகள் கல்விச்செல்வங்கள் நிறைவாய் பெற்றிடவும், இயேசுவின் வருகையால் மாற்றங்கள் பெற்றிடவும் அருள் வரம் தர வேண்டுமென்று இறைவாஉம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மன்றாட்டு 4:
உம் இறக்கைகளின் பாதுகாப்பில் எம்மை அரவணைக்கும் எம் இறைவா!
உலகெங்கும் உள்ள இளையோர்களை மாற்றங்களால் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகச் சுகபோகவாழ்க்கையிலிருந்து மீட்டுத் தன்னலமற்ற சேவை வாழ்க்கையில் ஈடுபடவும், சமுதாயத்தில் தங்களின் தூயவாழ்வால் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மன்றாட்டு 5:
எம் வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா!
எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
காணிக்கை தர நான் வருகின்றேன் 🎼
உன் கரங்களில் என்னை தருகின்றேன்
காணிக்கை தர நான் வருகின்றேன் (x2)
1) என்னக் கொடுத்தாலும் பயனில்லை - நான்
என்னைக் கொடுக்காமல்
பொருள் கொடுத்தால் (x2)
என்னையே தான் நீ கேட்கின்றாய்
நான் என்னையே முழுவதும் தருகின்றேன் (x2)
2) சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும்
மனம் உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (x2)
ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன்
அதை பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (x2)
காணிக்கை
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, இந்தக் காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்திப் புதுப்பிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது திருவுளத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அது நிலையான பயன் விளைவிப்பதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
2. மீட்பின் மறைபொருள்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அப: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
தவறிழைத்த எங்கள் மீது கிறிஸ்து இரக்கம் கொண்டு கன்னி மரியாவிடமிருந்து பிறக்கத் திருவுளமானார்; சிலுவையில் பாடுபட்டு, முடிவில்லாச் சாவிலிருந்து எங்களை விடுவித்தார்; இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து நிலைவாழ்வை எங்களுக்கு அருளினார்.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும் அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும் வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
குறையாத அன்பு கடல்போல வந்து 🎼
நிறைவாக என்னில் அலைமோதுதே - அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே (x2)
1) கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றார் (x2)
உன்னை எண்ணாத என்னை எந்நாலும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றார் ஆ (x4) - நான்
மண்மீது வாழ வழி செய்சின்றார்
2) அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே (x2)
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே (x2) ஆ (x4) - கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே
3) இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தருள்வாய் (x2)
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ (x4) - நான்
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய்
(திபா 77:29, 30) அவர்கள் உண்டு முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; ஆண்டவர் அவர்கள் விரும்பியவற்றையே அவர்களுக்கு அளித்தார்; அவர்களது விருப்பம் வீணாகவில்லை.
அல்லது
(யோவா 3:16) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
இறைவா, உண்மையும் நேர்மையும் உள்ள நெஞ்சங்களில் நீர் குடி கொள்வதாக உறுதி அளித்துள்ளீரே; எங்கள் உள்ளங்களில் நீர் தங்குவதற்கு ஏற்றவாறு நாங்கள் வாழ எங்களுக்கு அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
எல்லோரும்: ஆமென்.
நிறைவுச் சடங்கு:
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.
பாடித் துதி மனமே பரனைக் 🎼
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை //
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்
சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புறமாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்
எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனை