பாஸ்கா காலம் 2ஆம் ஞாயிறு
முதல் வாசகம்
நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 2: 42-47
அக்காலத்தில்
திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ் செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலங்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தனர்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப் பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றிவந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக்கொண்டேயிருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்
திபா 118: 2-4. 13-15. 22-24 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
(அல்லது) அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! - பல்லவி
அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. - பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி
இரண்டாம் வாசகம்
இறந்த இயேசு கிறிஸ்துவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து, நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார்.
இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 1: 3-9
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும் அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: யோவா 20: 29
அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 20: 19-31
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.
எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.
தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.
ஆமென்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, புதுப் பிறப்பு அடைந்த உம் மக்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பெயரை அறிக்கையிடுவதாலும் திருமுழுக்கினாலும் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் என்றென்றுமுள்ள பேற்றினைப் பெற்றுக் கொள்வார்களாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
பாஸ்கா மறைநிகழ்வு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, எக்காலத்திலும் உம்மைப் புகழ்ந்துரைப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாஸ்கா வாகிய கிறிஸ்து பலியான இச்சிறப்பான நாளில், உம்மை இன்னும் மிகுதியாக வாழ்த்திப் போற்றுவதும் மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் உலகின் பாவங்களைப் போக்கும் மெய்யான செம்மறி அவரே. எங்களது சாவைத் தமது சாவால் அழித்தவரும் தமது உயிர்ப்பினால் எங்கள் வாழ்வைப் புதுப்பித்தவரும் அவரே.
ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க அனைத்துலக மாந்தர் அனைவரும் அக்களிக்கின்றனர்; அவ்வாறே ஆற்றல் மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும், உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(யோவான் 20:27)
உன் கையை இடு, ஆணிகள் இருந்த இடத்தைக் கண்டறிவாய்: ஐயம் தவிர்த்து, நம்பிக்கை கொள். அல்லேலூயா.
அருட்பணி: மன்றாடுவோமாக!
எல்லாம் வல்ல இறைவா, பாஸ்கா அருளடையாளத்தை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்; அதனால் அதன் ஆற்றல் எங்களுடைய உள்ளங்களில் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்!
நிறைவுச் சடங்கு:
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
சிறப்பு ஆசி:
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், இன்றைய பாஸ்கா பெருவிழாவின் கொண்டாட்டத்தால் உங்களுக்கு ஆசி வழங்கி பாவத்தின் தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் இரக்கத்துடன் காப்பாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: அவருடைய ஒரே திருமகனின் உயிர்ப்பினால் நிலைவாழ்வுக்கு உங்களைத் தகுதி பெறச் செய்த இறைவன், அழியா வாழ்வின் கொடைகளால் உங்களை நிரப்புவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய பாடுகளின் நாள்களுக்குப்பின் பாஸ்கா விழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் நீங்கள் முடி வற்ற விண்ணகப் பாஸ்கா விழாவுக்கு அக்களிப்புடன் அவரது அருளால் வந்து சேர்வீர்களாக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.