அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்லோரும்: ஆமென்.
எல்லோரும்: ஆமென்.
எல்லோரும்: ஆமென்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
நற்செய்திக்குப்பின் சுருக்கமான மறையுரை ஆற்றலாம். பவனியைத் தொடங்க அருள்பணியாளர் அல்லது திருத்தொண்டர் அல்லது பொதுநிலைப் பணியாளர் இவை போன்ற வார்த்தைகளால் அழைப்பு விடுக்கின்றார்:
அருட்பணி: அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்து மக்கள் திரளைப் போன்று நாமும் அமைதியுடன் புறப்படுவோம்.
(அல்லது)
அருட்பணி: அமைதியுடன் புறப்படுவோமாக.
எல்லோரும்: ஆமென்.
திருப்பலி கொண்டாடப்படும் கோவிலை நோக்கிப் பவனி வழக்கம் போலத் தொடங்குகின்றது. தூபம் பயன்படுத்தினால் புகையும் கலத்துடன் தூபப் பணியாளர் முன்செல்ல, அவருக்குப் பின் எரியும் திரிகளைத் தாங்கும் இரு பணியாளர்களிடையே அந்தந்த இடத்தின் வழக்கத்துக்கு ஏற்பக் குருத்தோலைகளால் அணிசெய்யப்பட்ட சிலுவையைத் தாங்கியப் பீடத் துணைவரோ பிற பணியாளரோ முன் செல்கின்றனர். அவர்களை அடுத்து நற்செய்தி வாசக நூலைத் தாங்கிய திருத்தொண்டர், பிற பணியாளர்கள், அருள்பணியாளர் ஆகியோருக்குப்பின் குருத்தோலை ஏந்திய நம்பிக்கையாளர் அனைவரும் பின்தொடர்கின்றனர்.
பவனியின்போது, பாடகர் குழுவும் மக்களும் கீழ்க்கண்ட அல்லது கிறிஸ்து அரசரைப் புகழ்ந்தேத்தும் வேறு பொருத்தமான பாடல்களைப் பாடுகின்றனர்.
பல்லவி 1
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக்கிளைகளைப் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஒசன்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர் கொண்டனரே.
தேவைக்கு ஏற்ப, இப்பல்லவியைத் திருப்பாடலின் அடிகளுக்கு இடையே பாடலாம்.
திருப்பாடல் 23
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;
ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே. பல்லவி
ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்;
பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்;
வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். பல்லவி
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவரே! இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்; மாட்சிமிகு மன்னர் இவரே. பல்லவி
பல்லவி 2
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
வழியில் மேலுடைகள் விரித்தவராய்
உன்னதங்களிலே ஒசன்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்
என்று முழங்கி ஆர்ப்பரித்தார்.
தேவைக்கு ஏற்ப, இப்பல்லவியைத் திருப்பாடலின் அடிகளுக்கு இடையே பாடலாம்.
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்:
அக்களிப்புடன் கடவுளுக்குக் குரலெழுப்பி ஆர்ப்பரியுங்கள்.
ஏனெனில் உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தின் மாவேந்தர் அவரே. பல்லவி
மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்;
அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.
நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்தளித்தார்;
அது அவர் அன்புகூரும் யாக்கோபின் மாட்சி ஆகும்.
ஆரவார ஒலியிடையே ஏறிச் செல்கின்றார் கடவுள்;
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பல்லவி
பாடுங்கள், கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.
ஏனெனில் கடவுளே அனைத்துலகின் வேந்தர்; ஞானத்தோடு பாடுங்கள். பல்லவி
கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்;
அவர் தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.
மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்;
ஏனெனில் மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளுக்கு உரியவர்;
கடவுளே அனைத்துக்கும் மேலானவர். பல்லவி
கிறிஸ்து அரசருக்குப் பாடல்
கிறிஸ்து அரசே! மீட்பரே!
மாட்சி, வணக்கம், புகழ் உமக்கே;
எழிலார் சிறுவர் திரள் உமக்கு
அன்புடன் பாடினர்: ஒசன்னா!
எல்லோரும்: கிறிஸ்து அரசே! மீட்பரே!...
இஸ்ரயேலின் அரசர் நீர்,
தாவீதின் புகழ் சேர் புதல்வர் நீர்
ஆசி பெற்ற அரசே நீர்
ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.
எல்லோரும்: கிறிஸ்து அரசே! மீட்பரே!...
வானோர் அணிகள் அத்தனையும்
உன்னதங்களிலே உமைப் புகழ்க;
அழிவுறும் மனிதரும் படைப்பனைத்தும்
யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.
எல்லோரும்: கிறிஸ்து அரசே! மீட்பரே!...
எபிரேயர்களின் மக்கள் திரள்
குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்
வேண்டலும் காணிக்கையும் பாடலும்
கொண்டு உம்மிடம் இதோ வருகின்றோம்.
எல்லோரும்: கிறிஸ்து அரசே! மீட்பரே!...
பாடுகள் படுமுன் உமக்கவர் தம்
வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே;
ஆட்சி செய்திடும் உமக்கின்றே
யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.
எல்லோரும்: கிறிஸ்து அரசே! மீட்பரே!...
அவர்தம் பக்தியை ஏற்றீரே,
நலமார் அரசே, கனிவுடை அரசே,
நல்லன எல்லாம் ஏற்கும் நீர்
எங்கள் பக்தியும் ஏற்பீரே.
எல்லோரும்: கிறிஸ்து அரசே! மீட்பரே!...
பவனி கோவிலுக்குள் நுழைகையில் கீழுள்ள பதிலுரைப் பாடலையோ ஆண்டவரின் நுழைவைப் பற்றிய வேறு பாடலையோ பாடலாம்.
ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில் எபிரேயச் சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்
குருத்து மடல்களை ஏந்தி நின்று
"உன்னதங்களிலே ஓசன்னா!" என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.
எருசலேம் நகருக்கு இயேசு வருவதைக் கேட்ட மக்களெல்லாம்
அவரை எதிர் கொண்டழைத்தனரே.
குருத்து மடல்களை ஏந்தி நின்று
"உன்னதங்களிலே ஓசன்னா!" என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, தாழ்மையின் எடுத்துக்காட்டை மனித இனம் பின்பற்ற, எங்கள் மீட்பரை மனித உடல் எடுக்கவும் சிலுவையை ஏற்றுக் கொள்ளவும் செய்தீரே; அதனால் நாங்கள் அவரது பொறுமையைக் கற்றுக் கொண்டு அவரது உயிர்ப்பில் பங்கேற்கத் தகுதி பெறுமாறு எங்களுக்குக் கனிவாய் அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்!
வாசகம்
முதல் வாசகம்:
நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 50: 4-7
நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்.
நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்:
திபா 22: 7-8. 16-17a. 18-19. 22-23 (பல்லவி: 1a)
பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, ‘ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர். - பல்லவி
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். - பல்லவி
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். - பல்லவி
உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். - பல்லவி
இரண்டாம் வாசகம்:
கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 2: 6-11
கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வசனம்: பிலி 2: 8-9 (அல்லேலூயா சொல்லப்படுவதில்லை)
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும்.
நற்செய்தி வாசகம்:
மத்தேயு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள். 26:14 - 27:66
பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, “இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்.
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்” என்றார். இயேசு தங்களுக்குப் பணித்தபடியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், “ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், “என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மானிடமகன், தம்மைப்பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் “ரபி, நானோ?” என அவரிடம் கேட்க, இயேசு, “நீயே சொல்லிவிட்டாய்” என்றார்.
அவர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, “இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவமன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.
அதன்பின்பு இயேசு அவர்களிடம், “இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் ‘ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையில் உள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது. நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார். அதற்குப் பேதுரு அவரிடம், “எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்” என்றார். இயேசு அவரிடம், “இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். பேதுரு அவரிடம், “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.
பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், “நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்” என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார். அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார். மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்” என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். பிறகு சீடர்களிடம் வந்து, “இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்” என்று கூறினார்.
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், “நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, “ரபி வாழ்க” எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், “தோழா, எதற்காக வந்தாய்?” என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப்போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்துபோவர். நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?” என்றார். அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன” என்றார். அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.
இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச் சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், “இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்” என்று கூறினார்கள். அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?” என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார்.
மேலும் தலைமைக் குரு அவரிடம், “நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்” என்றார். அதற்கு இயேசு, “நீரே சொல்லுகிறீர்; மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்களின்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். உடனே தலைமைக் குரு தம் மேலுடையைக் கிழித்துக்கொண்டு, “இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாகவேண்டியவன்” எனப் பதிலளித்தார்கள்.
பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, “இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்” என்று கேட்டனர்.
பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, “நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன்தானே” என்றார். அவரோ, “நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, “இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்” என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, “இம்மனிதனை எனக்குத் தெரியாது” என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார்.
சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது” என்று கூறினார்கள். அப்பொழுது அவர், “இந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, “சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.
பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டுவந்து, “பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்” என்றான். அதற்கு அவர்கள், “அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்” என்றார்கள். அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்துவிட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக்கொண்டான்.
தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, “இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல” என்று சொல்லி, கலந்தாலோசித்து அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் ‘இரத்த நிலம்’ என இன்றுவரை அழைக்கப்படுகிறது. ‘ ‘இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.
இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று கூறினார். மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?” என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.
மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின்போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், “நான் யாரை விடுதலை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?” என்று கேட்டான். ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும். பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்ந்திருந்த பொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆள் அனுப்பி, “அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிடவேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார்.
ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். ஆளுநன் அவர்களைப் பார்த்து, “இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள் “பரபாவை” என்றார்கள். பிலாத்து அவர்களிடம், “அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அனைவரும், “சிலுவையில் அறையும்” என்று பதிலளித்தனர். அதற்கு அவன், “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.
அதற்கு மக்கள் அனைவரும், “இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்” என்று பதில் கூறினர். அப்போது அவன் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்றுகூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு, அவருடைய ஆடைகளை அணிவித்து, அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.
அவர்கள் வெளியே சென்றபோது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். ‘மண்டையோட்டு இடம்’ என்று பொருள்படும் ‘கொல்கொதா'வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தை குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை. அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்; பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரண தண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் “இவன் யூதரின் அரசனாகிய இயேசு” என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா” என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், “பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘நான் இறைமகன்’ என்றானே!” என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார். அங்கே நின்றுகொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, “பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்” என்றார்கள். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.
( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )
அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன்” என்றார்கள்.
கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தார்கள்.அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.
மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். அப்பொழுது மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.
மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், “ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ‘மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச்சென்றுவிட்டு, ‘இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்’ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்” என்றனர்.
அதற்குப் பிலாத்து அவர்களிடம், “உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்” என்றார். அவர்கள் போய் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் பாடுகளால் நீர் எம்மீது கொண்டுள்ள இரக்கம் நெருங்கி வருவதாக; எங்கள் செயல்களால் தகுதியற்றவர்கள் ஆயினும் இந்த ஒரே பலியின் ஆற்றலால் உமது இரக்கத்தை முன்கூட்டியே நாங்கள் கண்டுணர்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
தொடக்கவுரை
ஆண்டவருடைய பாடுகள்
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
மாசற்ற கிறிஸ்து பாவிகளுக்காகப் பாடுபடவும் தீயோரின் மீட்புக்காக அநீதியாகத் தீர்ப்பிடப்படவும் திருவுளமானார். அவரது இறப்பு எங்கள் பாவங்களைப் போக்கியது; அவரது உயிர்த்தெழுதல் எங்களை உமக்கு ஏற்புடையவர்கள் ஆக்கியது.
ஆகவே நாங்கள் வானதூதர் அனைவரோடும் சேர்ந்து உம்மைப் புகழ்ந்து போற்றி, அக்களித்துக் கொண்டாடி, ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
அருட்பணி:
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(மத்தேயு 26:42)
தந்தையே, நான் குடித்தால் அன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படி ஆகட்டும்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நம்புவதை உம் திருமகனின் இறப்பினால் எதிர்நோக்கியிருக்கச் செய்த நீர் நாங்கள் நாடுவதை அவரது உயிர்ப்பினால் வந்தடையச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: உம்முடைய இந்தக் குடும்பத்துக்காக எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து துன்புறுத்துவோருக்குத் தம்மைக் கையளிக்கவும் சிலுவையின் கொடுமையைத் தாங்கிக்கொள்ளவும் தயங்கவில்லை; நீர் இக்குடும்பத்தைக் கண்ணோக்கி அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.