இயேசு இறந்து உயிர்த்தெழுந்தது போல, இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்கு உள்ளானது போல, கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.
1 தெச 4:14; 1 கொரி 15:22 :8-10
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
---------------------------------------------------
பாவத்துயர்ச் செயல்
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்: ஆமென்.
---------------------------------------------------
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மன்றாடுவோமாக!
ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகன் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் எனும் எங்கள் நம்பிக்கை எழுச்சியுறுவது போல உம் அடியார்களும் உயிர்த்தெழுவார்கள் எனக் காத்திருக்கும் எங்களது எதிர்நோக்கும் உறுதி பெறுவதாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்!
அனைத்து ஆத்துமாக்கள் பெருவிழா - வாசகம்
முதல் வாசகம்
என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 37: 1, 4-6, 12-14
ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.
அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. “உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்” என்று சொல். தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.
எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். “ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்” என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a / 13)
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
அல்லது:
பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி
இரண்டாம் வாசகம்
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும், நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு, உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 25: 34
அல்லேலூயா, அல்லேலூயா! என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17
அக்காலத்தில்
இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர்.
அவரைக் கண்ட ஆண்டவர், அவர் மீது பரிவு கொண்டு, “அழாதீர்” என்றார். அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள்.
அப்பொழுது அவர், “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்.
அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
அல்லது
நான் ஆண்டவரைக் கண்டேன்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18
அக்காலத்தில்
மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.
இயேசு அவரிடம், “ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள்.
இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்’ எனச் சொல்” என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
கைம்மாறு அளிப்பவரே இறைவா, உமது பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள எம் திருத்தந்தை சிங்கராயர், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது முன் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்து, மக்களுக்கு பெருந்தன்மையுடன் தொண்டாற்றும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
தாமாகவே முன் வந்து சக்கேயுவை அழைத்து, அவரோடு விருந்துண்டு, அவரது வாழ்வை மாற்றிய அன்பு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் தன்முனைப்பு உள்ளவர்களாகச் செயல்பட உமது தூய ஆவியை எங்களுக்கு நிறைவாகத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் உலகின் மேல் அன்பு கூர்ந்த தந்தையே! நாங்கள் ஒவ்வொருவரும் மனமாற்றம் பெற்று, நீர் எமக்குக்காட்டும் அன்பையும், பரிவையும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்புத் தந்தையே இறைவா! எமது இளைஞர்களை ஆசீர்வதித்து, அவர்கள் உமது சாட்சிகளாய் வாழ அருள் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இரக்கத்தின் ஊற்றே எம் இறைவா! எங்களை வரவேற்கக் காத்திருக்கும் உம்மை எந்நாளும் நாடிவரவும், இறந்து போன அனைத்து ஆத்மங்களையும் உமது இரக்கத்துடன் கண்ணோக்கியருளும். அவர்கள் குற்றங்களை பொறுத்து அல்ல, மாறாக உமது பேரன்பிற்கேற்ப இரக்கம் வைத்தருளும். இதனால் அவர்கள் அனைவரும் உமது வான்வீட்டை அடைந்து, உமது அன்பு பிரசன்னத்தில் இளைபாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! உம்முடைய இரக்கத்தையும் அன்பையும் நாம் ஒவ்வொருவரும் ஆழமாக உணர்ந்து கொண்டு எல்லாச் சூழ்நிலையிலும் உமக்கு நன்றி கூறி வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! திருஅவை பொறுப்பாளர்கள் இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை தெளிவுற அறிவுறுத்தி ஆன்மாக்களை மீட்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! நாட்டுத் தலைவர்கள் நிரந்தரம் இல்லாத உலக வாழ்க்கையையும், மறுவுலக வாழ்வின் மீது நம்பிக்கையும் கொண்டு அதனை அடைய முனைப்போடு உண்மையாய் உழைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! பலியிலே பங்கேற்கும் நாங்கள், மறுவுலக வாழ்வு கூறித்து, நம்பிக்கை கொண்டவர்களாக இவ்வுலக வாழ்வை சிறப்புடனே கடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! எம்மோடு வாழ்ந்து மரித்த அன்பர்கள் உம் இரக்கம் பெற்று, உம்மை முகமுகமாய் சந்திக்கும் வரம் பெற, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! இறப்பை ஈடுகட்ட முடியாது பரிதவிக்கும் அன்பர்கள் உம் ஆறுதலையும், அன்பையும் பெற்று சந்திப்போம் என்ற நம்பிக்கையுடனே பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அப: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையது மான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்; அதனால் உம் திருமகனுடைய பரிவிரக்கத்தின் மாபெரும் அருளடையாளத்தில் ஒன்றுபடும் இறந்த உம் அடியார்கள் உம் திருமகனோடு மாட்சிக்கு உயர்த்தப்பெறுவார்களாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்!
இறந்தோர் தொடக்கவுரை - 1
1. கிறிஸ்துவில் உயிர்த்தெழுவோம் எனும் எதிர்நோக்கு
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அப: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
கிறிஸ்துவில்தான் மேன்மையான உயிர்ப்பின் எதிர்நோக்கு எங்களுக்கு ஒளிர்கின்றது; சாவது திண்ணம் எனும் நியதி எங்களை வருத்தத்தில் ஆழ்த்தினாலும் வரவிருக்கும் அழிவில்லா வாழ்வு இனி உண்டு எனும் வாக்குறுதி எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றது. ஏனெனில் ஆண்டவரே, உம் நம்பிக்கையாளருக்கு வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிக்கப்படுவதில்லை; இந்த மண்ணக வாழ்வின் உறைவிடம் அழிந்ததும் விண்ணகத்தில் நிலையான வீடு ஆயத்தமாய் இருக்கின்றது.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும் அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும் வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
இறந்தோர் தொடக்கவுரை - 2
2. நாம் வாழ்வு பெறக் கிறிஸ்து இறந்தார்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அப: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் நாங்கள் அனைவரும் சாகாமலிருக்கக் கிறிஸ்து ஒருவரே சாவை ஏற்றுக்கொண்டார்; நாங்கள் அனைவரும் என்றும் உமக்காக வாழ்ந்திட அவர் ஒருவரே சாகத் திருவுள மானார்.
ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து, நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி, மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
இறந்தோர் தொடக்கவுரை - 3
3. மீட்பும் வாழ்வுமான கிறிஸ்து
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அப: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் கிறிஸ்துவே உலகின் மீட்பு; அவரே மனிதருக்கு வாழ்வு; இறந்தோரின் உயிர்ப்பும் அவரே. அவர் வழியாக உமது மாண்பை வானதூதர்களின் அணிகள் வழிபடுகின்றன; உமது திருமுன் எக்காலத்தும் மகிழ்கின்றன. அவர்களோடு எங்கள் குரலையும் சேர்த்துக்கொள்ளுமாறு நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சிப் புகழ்ந்து அக்களிப்புடன் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
இறந்தோர் தொடக்கவுரை - 4
4. மண்ணக வாழ்வினின்று விண்ணக மாட்சி நோக்கி
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அப: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
உமது ஆணைப்படி நாங்கள் பிறக்கின்றோம்; உமது திருவுளம் எங்களை ஆண்டு நடத்துகின்றது; உமது கட்டளைக்கு ஏற்ப மண்ணினின்று உருவான நாங்கள் பாவத்தின் விளைவாக மண்ணுக்கே திரும்புகின்றோம்; எனினும், உம் திருமகனின் சாவால் மீட்கப்பெற்றுள்ள நாங்கள் உமது திருவுளப்படி அவருடைய உயிர்ப்பின் மாட்சிக்கு எழுப்பப்படுகின்றோம்.
ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும் நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து, முடிவின்றிச் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
இறந்தோர் தொடக்கவுரை - 5
5. கிறிஸ்துவின் வெற்றியால் நமக்கு உயிர்ப்பு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் பாவத்தின் விளைவாக நாங்கள் அழிவுறுகின்றோம்; பாவத்தால் சாவுக்கு ஆளாயினும் கிறிஸ்துவின் வெற்றியினால் மீட்கப்பட்டு அவரோடு மீண்டும் வாழ்வுக்கு அழைக்கப்படுவது உமது பரிவிரக்கம் உள்ள அருளினால்தான்.
ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி, முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர், எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்கிறார் ஆண்டவர்; சனிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.
யோவா 11:25, 26
அருட்பணி:
மன்றாடுவோமாக!
ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இறந்த உம் அடியார்கள் நாங்கள் கொண்டாடும் பாஸ்கா மறைநிகழ்வால், ஒளியும் அமைதியும் நிறைந்த விண்ணக வீட்டுக்கு வந்து சேர்வார்களாக!
எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவி உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்: இறைவனுக்கு நன்றி.