பாடு மனமே
பாடல் இலக்கம் 6
பக்கம் 21
ஆவியிலும் என்றும் உண்மையிலும்
வழிபட வாருங்கள் - இந்த
அவனியில் இறைவன் அரசினைக் காணும்
ஆனந்தம் பாருங்கள்
உலகின் மாந்தர்களே உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள்
இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்
இகம் வாழ்ந்திடும் முறை கேளுங்கள்
உலகின் மாந்தர்களே உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள்
வறியோருக்கு வழிகாட்டுங்கள்
வளம் பொங்கிட வகை கூறுங்கள்
வருகைப் பல்லவி
(எபேசியர் 6:2-3)
"உன் தந்தையையும் தாயையும் மதித்து நட" என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. "இதனால் நீ நலம் பெறுவாய்; மண்ணுலகில் நீடூழி வாழ்வாய்" என்பதே அவ்வாக்குறுதி.
➕ ➕ ➕
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
➕ ➕ ➕
பாவத்துயர்ச் செயல்
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்லோரும்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்லோரும்: ஆமென்.
➕ ➕ ➕
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
➕ ➕ ➕
வாசகங்கள்
முதல் வாசகம்
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்.
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
தியானப்பாடல்
பாடு மனமே
பாடல் இலக்கம் 97
பக்கம் 80
அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்
1. மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா -2
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா
2. இறைவாக்குச் சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா -2
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: திப 16: 14
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்.
அக்காலத்தில் இயேசு கூறியதாவது: 'என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்து இருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை."
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
அருட்பணி: இயேசுவில் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, உலகெங்கும், சிறப்பாக இந்த வீட்டில் உண்மையான அன்பு என்றும் தொடர்ந்து வளர மன்றாடுவோமாக.
உலகிலும் திரு அவையிலும் அமைதி நிலவவும், திரு அவையின் ஒற்றுமை மேன்மேலும் வளரவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இக்குடும்பத்திலுள்ள அனைவரும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் அன்போடும் வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட இவர்கள் அனைவரும் உமது திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாக விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எங்கள் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசீர்வதித்து, அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து, சமுதாயத்தில் செழித்தோங்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எங்கள் குடும்பத்தில் இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் நிலைவாழ்வைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அருட்பணி: நமது சொந்தக் கருத்துகளுக்காக சற்று மௌனமாக மன்றாடுவோம்.
அருட்பணி: அனைத்துக் குடும்பங்களையும் காத்துப் பராமரித்து ஆட்சி செய்யும் இறைவா, இக்குடும்பத்தினர் உம் திருமுன் சமர்ப்பித்த இம்மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்து, உம் திருவுளப்படி இவர்களது இதயத்தின் ஆவல்களை நிறைவேற்றுவீராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆமென்.
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையது மான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
உன்னிடத்தில் என்ன இல்லை
என்னிடத்தில் ஒன்றும் இல்லை (2)
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க
ஏதொன்றும் சொந்தம் இல்லை
பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை (2)
கண்களை நான் தந்திருப்பேன்
கண்களுக்கோ பார்வையில்லை (2)
இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைக்க
உள்ளத்தில் ஞானம் இல்லை
காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணில் இல்லை (2)
நெஞ்சக்குள்ளே வந்துவிடு
நிம்மதியை தந்துவிடு (2)
நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்
நெற்றிக்கு முத்தம் கொடு
நீயே என்னை காணிக்கை பெற்றுக் கொடு
காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணில் இல்லை (2)
அருட்பணி:
ஆண்டவரே, மகிழ்ச்சி அளிக்கும் பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் எம் குடும்பங்களை உம் அருளிலும் அமைதியிலும் உறுதியாய் நிலைநிறுத்துவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
கடவுளைப் புகழ்வதும் அவரது கொடையே
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
ஏனெனில் எங்கள் புகழுரை உமக்குத் தேவை அன்று; ஆயினும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது உமது அருள்கொடையாலேயே. நாங்கள் உம்மைப் புகழ்ந்துரைப்பது உமது மாட்சியை மிகுதிப்படுத்தாது எனினும், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நாங்கள் மீட்பு அடையப் பயன்படுகின்றது.
ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து, நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி, மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
அருட்பணி:
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.
அருட்பணி:
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர், எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(எசாயா 49:15)
தன் மகவைத் தாய் மறக்க முடியுமா? அவள் மறந்திடினும், நாம் உன்னை மறக்கவே மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.
பாடு மனமே
பாடல் இலக்கம் 326
பக்கம் 328
ஒளியாம் இறையே வாராய்
எளியோர் நெஞ்சம் தனிலே
ஒளியாம் இறையே வாராய்
விண்ணில் வாழும் விமலா மண்ணில் வாழும் மாந்தர்
உம்மில் என்றும் வாழ எம்மில் எழுமே இறைவா
ஒளியே எழிலே வருக
நீரும் மழையும் முகிலால் பூவும் கனியும் ஒளியால்
உயிரும் உருவும் உம்மால் வளமும் வாழ்வும் உம்மால்
ஒளியே எழிலே வருக
அருளே பொங்கும் அமலா இருளே போக்க வா வா
குறையே நீக்கும் விமலா நிறையே வளர்க்க வா வா
ஒளியே எழிலே வருக
அருட்பணி:
மன்றாடுவோமாக!
கனிவுமிக்க தந்தையே, விண்ணக அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் உம் ஒரே திருமகனுடைய திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை இடையறாது பின்பற்றச் செய்தருளும்; அதனால் இவர்கள் இவ்வுலக இன்னல்களுக்குப் பிறகு அவரது நிலையான தோழமையைப் பெறுவார்களாக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவி உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.
பாடு மனமே
பாடல் இலக்கம் 326
பக்கம் 328
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
பாமாலையாக நான் சூட்டுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே – 2
மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் – 2
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே – 2
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே – 2
இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
விரிகின்ற மலர் உந்தன் அருள்பாடுதே – 2
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் – 2
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே – 2