இறைவா இறைவா இறைவா இறைவா
இறைவா அனைத்திற்கும் மன்னன் நீரே
இறைவா இணையில்லா சக்தி நீரே
இறைவா உன் புகழ் நிலைப் பெற்றதே
இறைவா அனைத்துமே உமக்கு சரண் (2)
1. உலகனைத்தும் உம் திருப்புகழ்பாட
உமது சந்நதி வேண்டி நிற்கின்றது (2)
உமது போதனை நல்கிடும் நலனைப்
பெறக் காத்திருக்கின்றது
2. விண்ணக விருந்தில் அமர்ந்திட இங்கு
விரைவாய் இறைகுலம் காத்திருக்கின்றது (2)
விண்ணக வீட்டில் நுழைந்திட எமக்கு
கதவினை திறந்திடுவாய்
வருகைப் பல்லவி
திரு வெளிப்பாடு 21:2
புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கி வரக் கண்டேன். தன் மண மகனுக்காகத் தன்னையே அணிசெய்து கொண்ட மண மகளைப் போல அது ஆயத்தமாய் இருந்தது.
அல்லது
திரு வெளிப்பாடு 21:3
இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
---------------------------------------------------
பாவத்துயர்ச் செயல்
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்: சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்; ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்: ஆமென்.
---------------------------------------------------
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
எல்: உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
மன்றாடுவோமாக!
இறைவா, உயிருள்ளவையும் தேர்ந்தெடுக்கப்பட்டவையுமான கற்களைக் கொண்டு உமது மாட்சிக்கு நிலையான இல்லத்தைத் தயாரித்துள்ளீர்; உமது திரு அவைக்கு நீர் அளித்துள்ள அருளின் ஆற்றலைப் பெருகச் செய்தருளும்: அதனால் உம்முடைய நம்பிக்கையாளர் விண்ணக எருசலேமைக் கட்டியெழுப்பி, என்றும் வளர்ச்சியுறச் செய்வார்களாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்!
அல்லது
மன்றாடுவோமாக!
இறைவா, உமது திரு அவையை மணமகள் என அழைக்கத் திருவுளம் கொண்டீரே; உமது பெயருக்கு ஊழியம் புரியும் மக்கள், உமக்கு அஞ்சி நடந்து, உம்மை அன்பு செய்து, உம்மைப் பின்பற்றி விண்ணகத்துக்கு வந்து சேரவும் அருள்வீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்!
வாசகம்
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா
முதல் வாசகம்
நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2, 8-9, 12
அந்நாள்களில்
ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.
அவர் என்னிடம் உரைத்தது: “இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.
பல வகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
இரண்டாம் வாசகம்
நீங்கள் கடவுளுடைய கோவில்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 9b-11, 16-17
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கடவுள் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.
நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 46: 1-2,3c. 4-5. 7-8 (பல்லவி: 4)
பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்;
இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.
ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும்,
மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்,
எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. - பல்லவி
ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள்
உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்;
அது ஒருபோதும் நிலைகுலையாது;
வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. - பல்லவி
படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்;
யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.
வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்!
அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 குறி 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா! எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22
அக்காலத்தில்
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்.
அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், “உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள்.
யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார். அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?” என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.
அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
பிரசன்னமாகும் இறைவனே!
திருஅவையில் உம்முடைய பிரசன்னத்தை கண்டு, பணியாளர்கள், அதனை எடுத்துச் சொல்லும் அருட்பணியாற்ற, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
பிரசன்னமாகும் இறைவனே!
எல்லாவற்றிலும், எல்லாரிலும் உம்முடைய பிரசன்னத்தை எம் மக்கள் காணவும், அதனால் சக மனிதரை மதித்து, ஏற்று வாழவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
பிரசன்னமாகும் இறைவனே!
கோவிலுக்கு தரும் முக்கியத்துவத்தைப் போல கோவிலுக்குள்ளும், வெளியேயும் உள்ள மனிதர்களில் உம் பிரசன்னத்தை கண்டு வாழ்த்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
பிரசன்னமாகும் இறைவனே!
ஒன்றுபட்ட திருஅவையை மனதிலே கொண்டு, திருஅவை முன்னெடுக்கும் எல்லா காரியங்களிலும் ஒத்துழைக்கும் மனநிலை பெற்றவர்களாக வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
பிரசன்னமாகும் இறைவனே!
கோவிலில் இருந்து புறப்படும் அருளை நிறைவாக பெற்று மகிழவும், அதனை பிறரோடு பகிர்ந்து வாழவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
இறைவா படைக்கின்றேன்... இறங்கி ஏற்க வா
என்னையே தருகின்றேன்... ஏற்று மகிழ வா
வாழ்வில் உந்தன் அருட்கரம்
வடித்த பெரும் செயல்களை (2)
நினைந்து மகிழ்ந்து பாடினேன் (2) என்றும்
நினைவில் என்னையே தருகின்றேன்
அப்பமும் ரசமும் படைக்கையில்
அதன் வழி என்னை முழவதும் (2)
உன் மகன் பலியில் ஒன்றித்து (2) என்றும்
விண்ணவன் உமக்குத் தருகின்றேன்
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அப: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையது மான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
ஆண்டவரே, ஒப்புக்கொடுக்கப்படும் காணிக்கையை நீர் ஏற்றுக்கொள்ள உம்மை மன்றாடுவோருக்கு நீர் இரங்கியருள வேண்டுகின்றோம்: அதனால் இங்கு அருளடையாளங்களின் ஆற்றலையும் எங்கள் வேண்டல்களின் பயன்களையும் பெறுவோமாக. எங்கள்.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்!
தொடக்கவுரை
திரு அவை, கிறிஸ்துவின் மணமகள், தூய ஆவியாரது கோவில்
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
இறைவேண்டலின் வீட்டில் வாரி வழங்கும் வள்ளலாக நீர் வீற்றிருக்கின்றீர்;
உமது முடிவில்லா அருள் உதவியால் கட்டியெழுப்பப்பட்ட
தூய ஆவியாரின் கோவிலாக எங்களை நிறைவு செய்கின்றீர்;
உமக்கு உகந்த மாட்சிமிக்க வாழ்வினால் இக்கோவிலை ஒளிரச் செய்வீராக.
காணப்படும் கட்டடங்களில் முன்குறிக்கப்படுகின்ற
கிறிஸ்துவின் மணமகளாகிய திரு அவையை என்றென்றும் புனிதப்படுத்துகின்றீர்;
அதனால் அத்திரு அவை எண்ணற்ற மக்களைப் பெற்றத் தாயாக மகிழ்ந்தி,
உமது விண்ணக மாட்சியில் இடம் பெறச் செய்வீராக.
ஆகவே புனிதர், வானதூதர் அனைவரோடும்
நாங்கள் உம்மைப் புகழ்ந்தேத்தி முடிவின்றிச் சொல்வதாவது :
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர், எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
என் இதய தெய்வமே... என்னில் எழுந்து வா (2)
உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா
1. அணைத்து காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் (2)
ஆனால் இயேசுவே உன் அன்பிற்கு அழிவுண்டோ (2)
என் இனிய அன்பே எழுந்து வா
2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் இங்கு பலவுண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு (2)
ஆனால் இயேசுவே நல் நண்பன் நீயன்றோ (2)
என் இனிய நண்பா எழுந்துவா
3. பொய்மை மலிந்து மெய்மை மெலியும் நிலையைக் காண்கின்றேன்
தீமை நிறைந்த உலகில் இன்று அழிந்து மடிகின்றேன் (2)
எந்தன் தெய்வமே... உன் அன்பால் ஆனவா (2)
என் உள்ளம் நிறைந்து வாழ வா
1 பேதுரு 2:5
நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, தூய குருக்களின் கூட்டம் என ஆவிக்குரிய இல்லமாகக் கட்டியெழுப்பப்படுவீர்களாக!
அருட்பணி:
மன்றாடுவோமாக!
இறைவா, இவ்வுலகில் திகழும் உமது திரு அவை வழியாக எங்களுக்கு விண்ணக எருசலேம் முன்குறிக்கப்படத் திருவுளமானீரே: அதனால் இவ்வருளடையாளத்தில் பங்குகொள்ளும் நாங்கள் உமது அருளின் கோவிலாகக் கட்டப்படவும் உமது மாட்சி நிறைந்த இல்லிடத்துக்கு வந்து சேரவும் அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவி உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்: இறைவனுக்கு நன்றி.
நன்றி நன்றி நல்ல தேவனே
நன்மை புரியும் நல்ல தெய்வமே
ஏழு ஸ்வரங்களில் இனிய ராகத்தால்
ஏற்றி போற்றி புகழ்ந்து பாடுவேன்
1. உந்தன் கைகளில் எனது பெயரையே
உரிமையாய் பொரித்து வைத்தீரே (2)
முன்னும் பின்னுமே எங்கும் சூழ்ந்துமே
என்றும் என்னை பாதுகாத்தீரே
நன்றி நன்றி நல்ல தேவனே
2. உந்தள் சிறகினில் என்னை சுமந்துமே
இறுகப் பற்றி அரவணைத்தீரே (2)
எந்தன் திறமைகள் ஆற்றல் அனைத்துமே
உந்தன் அன்பில் உணரச் செய்தீரே
நன்றி நன்றி நல்ல தேவனே