சுமை சுமந்து சோர்ந்திருப்போரே 🎼
என்னிடம் எல்லோரும் வாருங்கள் – 2
உங்களை நான் இளைப்பாற்றுவேன்
உங்களை நான் காப்பாற்றுவேன் – 2
உங்களை நான் தேற்றிடுவேன்
உங்களை நான் ஏற்றிடுவேன்
உங்களை நான் நடத்திச் செல்வேன்
உங்களை நான் அன்பு செய்வேன் – 2
உங்களை நான் அரவணைப்பேன்
உங்களை நான் வாழச் செய்வேன்
உங்களை நான் வளரச் செய்வேன்
உங்களை நான் ஒளிரச் செய்வேன் – 2
உங்களை நான் மலரச் செய்வேன்
உங்களை நான் மிளிரச் செய்வேன்
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
எல்லாம் வல்ல இறைவா, ஆண்டு தோறும் நாங்கள் கடைப்பிடிக்கும் தவக்கால அருளடையாளச் செயல்களால் கிறிஸ்துவின் மறையுண்மைகளைப் புரிந்து கொள்வதில் முன்னேற எங்களுக்கு உதவியருளும்; அதனால் அவற்றின் பயன்களை எங்கள் நன்னடத்தையால் அடைவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு
முதல் வாசகம்
முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும்.
தொடக்க நூலிலிருந்து வாசகம். 2: 7-9; 3: 1-7
ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.
ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது. பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார், “ என்றாள்.
பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.
அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2. 3-4a. 10-11. 12,15 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி
இரண்டாம் வாசகம்
பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-19
சகோதரர் சகோதரிகளே,
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை. எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை.
மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால், அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?
ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
அல்லது குறுகிய வாசகம்
பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12, 17-19
சகோதரர் சகோதரிகளே,
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?
ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வசனம்: மத் 4: 4b
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.
நற்செய்தி வாசகம்
இயேசு நாற்பது நாள் நோன்பிருக்கிறார்; சோதிக்கப்படுகிறார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 4: 1-11
அக்காலத்தில், இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அவர் மறுமொழியாக, “‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.
பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார்.
மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், “நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.
பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.
ஆமென்.
அன்புத் தந்தையே இறைவா!
உமது திருச்சபைக்கு நீர் அளித்திருக்கின்ற இந்தத் தவக்காலத்திற்காக உம்மை நன்றியுடன் புகழ்கின்றோம். எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவு நிலையினர் அனைவரும் தங்களின் சொல்லிலும் செயலிலும் உமது புனித்தத்தைப் பிரதிபலித்து வாழ்ந்திடவும், அனைவருக்கும் மேன்மையான வழிகாட்டுதல் தந்திடவும் அருள்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்ற தந்தையே!
தொலைத் தொடர்பு ஊடகங்கள், தவறான விளம்பரங்கள், பண்பாட்டுச் சிதைவுகள் இவற்றின் மத்தியில் எங்கள் இளைஞர்கள், இளம் பெண்கள் பாவச் சோதனைகளுக்கு உடன்படாமல் உமது வார்த்தையின் வழிநடந்து வெற்றி வாழ்வைக் கண்டிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்புத் தந்தையே இறைவா!
நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பின் நாள் என்னும் இறைவெளிப்பாட்டை தம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து: இக்காலத்தை உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
விடுதலையின் தெய்வமே இறைவா!
உம்முடைய அன்பிலிருந்து எம்மைப் பிரிக்க முயற்சிக்கும் மனிதர்கள், பொருட்கள், ஆசைகள், சந்தர்ப்பங்கள் போன்ற கொடிய சோதனைகளிலிருந்து நாங்கள் விடுதலை பெற்று உமக்கும், உமது வார்த்தைக்கும் மாத்திரமே செவிசாய்த்து, உண்மையான விசுவாச வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய அருளை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஞானத்தின் ஊற்றே இறைவா!
இத்தவ நாட்களிலே எமக்கு நீர் தந்திருக்கும் உமது செய்தியையும், விருப்பத்தையும், சித்தத்தையும், வழிகாட்டுதல்களையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு உம்மோடும், எம் உறவுகளோடும் ஒப்புரவாகி, பகைமைகளை விட்டுவிட்டு மனமாற்றமடைந்து உமது விருப்பப்படி நடக்க வேண்டிய ஞானத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அடியோர் யாம் தரும் காணிக்கையை 🎼
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே – 2
பாவியென்றெம்மைப் பாராமல் – எம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் – 2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் – 2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய் தருகின்றோம்
காணிக்கை
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்து புனிதமிக்க அருளடையாளக் கொண்டாட்டத்தைத் தொடங்குகின்றோம்; இவற்றைத் தகுந்த முறையில் ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
கிறிஸ்து நாற்பது நாள்கள் இவ்வுலக உணவைத் தவிர்த்து, உண்ணா நோன்புக்கு உருக்கொடுத்து அதைப் புனிதப்படுத்தினார்; மேலும் தொடக்கத்தில் தோன்றிய பாம்பின் மாயக் கவர்ச்சிகள் அனைத்தையும் அவர் தோற்கடித்து, தீமையின் ஆட்சி மீது வெற்றிகொள்ள எங்களுக்குக் கற்பித்தார். அதனால் பாஸ்கா மறைநிகழ்வைத் தகுதியான மனதோடு கொண்டாடி இறுதியாக முடிவில்லாப் பாஸ்காவுக்குக் கடந்து செல்வோமாக.
ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும் நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து, முடிவின்றிச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
மத் 4:4
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாயினின்று புறப்படும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ்கிறார்.
அல்லது
திபா 90:4
ஆண்டவர் தம் தோள் வலிமையினால் உம்மைப் பாதுகாப்பார்; அவருடைய இறக்கைகளின்கீழ் நீர் தஞ்சம் அடைவீர்.
குயவனே குயவனே படைப்பின் காரணனே 🎼
களிமண்ணான என்னையுமே, கண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான், வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய், விளங்க செய்திடுமே – 2
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே
மண்ணாசையில் நான் மயங்கியே, மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன், கண்டேனில்லை இன்பமே – 2
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே
விலை போகாத பாத்திரம் நான், விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம கிருபையால், உகந்த தாக்கிடுமே – 2
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே
அருட்பணி: மன்றாடுவோமாக!
ஆண்டவரே, புத்துயிர் தரும் விண்ணக உணவினால் எங்கள் நம்பிக்கை ஊட்டம் பெறவும் எதிர்நோக்கு வளரவும் அன்பு உறுதி அடையவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உயிருள்ள, உண்மையான உணவாம் கிறிஸ்துவை நாங்கள் ஆர்வத்துடன் நாடக் கற்றுக்கொள்வதோடு உமது வாயினின்று புறப்படும் எல்லா வார்த்தைகளாலும் வாழ்ந்திட ஆற்றல் பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு:
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் 🎼
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை – 2
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன் – 2
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா – 2
தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
தாங்கியே நடத்தினீர் – 2
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன் – 2
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன் – 2
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா