சுமை சுமந்து சோர்ந்திருப்போரே 🎼
என்னிடம் எல்லோரும் வாருங்கள் – 2
உங்களை நான் இளைப்பாற்றுவேன்
உங்களை நான் காப்பாற்றுவேன் – 2
உங்களை நான் தேற்றிடுவேன்
உங்களை நான் ஏற்றிடுவேன்
உங்களை நான் நடத்திச் செல்வேன்
உங்களை நான் அன்பு செய்வேன் – 2
உங்களை நான் அரவணைப்பேன்
உங்களை நான் வாழச் செய்வேன்
உங்களை நான் வளரச் செய்வேன்
உங்களை நான் ஒளிரச் செய்வேன் – 2
உங்களை நான் மலரச் செய்வேன்
உங்களை நான் மிளிரச் செய்வேன்
எல்லோரும்: ஆமென்.
இறைவா, இரக்கப் பெருக்கத்துக்கும் முழுமையான நன்மைக்கும் காரணரே, பாவிகளின் உண்ணா நோன்புகள், இறைவேண்டல்கள், இரக்கச் செயல்கள் ஆகியவற்றின் வழியாக எங்களுக்குப் பாவ மன்னிப்பை வழங்குகின்றீர்; எங்களது தாழ்ச்சிமிக்க பாவ அறிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கி மனச்சான்றினால் நொறுங்குண்ட எங்கள் உள்ளங்களை உமது இரக்கத்தால் என்றும் உயர்த்துவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
தவக்காலம் மூன்றாம் வாரம் - ஞாயிறு
முதல் வாசகம்
முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம். 17: 3-7
அந்நாள்களில், இஸ்ரயேல் மக்கள் சீன் பாலைநிலத்திலிருந்து இரபிதிம் வந்து அங்கு பாளையம் இறங்கினர். அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, ‘‘நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?” என்று கேட்டனர். மோசே ஆண்டவரிடம், ‘‘இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!” என்று கதறினார்.
ஆண்டவர் மோசேயிடம், ‘‘இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக் கொண்டு மக்கள் முன் செல்; நைல் நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார். இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் ‘மாசா’ என்றும் ‘மெரிபா’ என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்
திபா 95: 1-2. 6-7a. 7b-9 (பல்லவி: 8b,7b காண்க)
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர், ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.
வாருங்கள்;ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். - பல்லவி
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி
இரண்டாம் வாசகம்
தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-2, 5-8
சகோதரர் சகோதரிகளே,
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால்தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்கு பெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.
அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வசனம்: யோவா 4: 42, 15
ஆண்டவரே, நீர் உண்மையிலே உலகின் மீட்பர்; நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.
நற்செய்தி வாசகம்
நிலைவாழ்வு அளிக்கப் பொங்கி எழும் ஊற்று கிறிஸ்துவே.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 4: 5-42
அக்காலத்தில்
இயேசு சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.
அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை.
இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார்.
அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார்.
இயேசு அவரைப் பார்த்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார்.
அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது” என்றார்.
இயேசு அவரிடம், “நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்” என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, “எனக்குக் கணவர் இல்லையே” என்றார். இயேசு அவரிடம், “ ‘எனக்குக் கணவர் இல்லை’ என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே” என்றார். அப்பெண் அவரிடம், “ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டு வந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்றார்.
இயேசு அவரிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபடவேண்டும்” என்றார். அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். இயேசு அவரிடம், “உம்மோடு பேசும் நானே அவர்” என்றார்.
அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் “என்ன வேண்டும்?” என்றோ, “அவரோடு என்ன பேசுகிறீர்?” என்றோ எவரும் கேட்கவில்லை. அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், “நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!” என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.
அதற்கிடையில் சீடர், “ரபி, உண்ணும்” என்று வேண்டினர். இயேசு அவர்களிடம், “நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது” என்றார். “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ” என்று சீடர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.
‘நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை’ என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு ‘விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்’ என்னும் கூற்று உண்மையாயிற்று” என்றார்.
‘நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்’ என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்” என்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
அல்லது குறுகிய வாசகம்
நிலைவாழ்வு அளிக்கப் பொங்கி எழும் ஊற்று கிறிஸ்துவே.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 4: 5-15, 19b-26, 39b, 40-42
அக்காலத்தில்
இயேசு சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார்.
அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்” என்றார்.
அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது. நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டு கொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே” என்றார்.
இயேசு அவரிடம், “அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபடவேண்டும்” என்றார். அப்பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்றார். இயேசு அவரிடம், “உம்மோடு பேசும் நானே அவர்” என்றார்.
அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், “இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்துகொண்டோம்” என்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.
ஆமென்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அடியோர் யாம் தரும் காணிக்கையை 🎼
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே – 2
பாவியென்றெம்மைப் பாராமல் – எம்
பாவத்தின் தீர்வையை அடையாமல் – 2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்
மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் – 2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய் தருகின்றோம்
காணிக்கை
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, இப்பலிகளால் மன நிறைவு அடைந்து எங்களுக்கு அருள்புரிவீராக; எங்கள் குற்றங்களிலிருந்து எங்களை மன்னிக்க வேண்டுகின்ற நாங்க பிறருடைய குற்றங்களை மன்னிக்க முயல்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
தமக்குத் தண்ணீர் தருமாறு சமாரியப் பெண்ணிடம் கேட்ட நேரத்திலேயே கிறிஸ்து அப்பெண்ணுக்கு நம்பிக்கை எனும் கொடையை வழங்கினார். அவ்வாறு அப்பெண்ணின் நம்பிக்கையின் மீது பெரிதும் ஆர்வம் கொண்டதால் அவரில் இறையன்பின் நெருப்பைப் பற்றியெரியச் செய்தார்.
ஆகவே நாங்களும் உமக்கு நன்றி செலுத்தி உமது வல்லமையை வானதூதர்களோடு புகழ்ந்து ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(யோவா 4:13-14)
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவர் நிலைவாழ்வு அடைய அவருக்குள் பொங்கும் நீரூற்று எழும், என்கிறார் ஆண்டவர்.
குயவனே குயவனே படைப்பின் காரணனே 🎼
களிமண்ணான என்னையுமே, கண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான், வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய், விளங்க செய்திடுமே – 2
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே
மண்ணாசையில் நான் மயங்கியே, மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன், கண்டேனில்லை இன்பமே – 2
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே
விலை போகாத பாத்திரம் நான், விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம கிருபையால், உகந்த தாக்கிடுமே – 2
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே
அருட்பணி: மன்றாடுவோமாக!
ஆண்டவரே, விண்ணகத்தில் உள்ள மறைபொருள்களின் அச்சாரத்தையும் இவ்வுலகில் ஏற்கெனவே விண்ணக உணவால் வளமையையும் பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் மறைபொருளாக எங்களில் திகழ்வது செயலளவிலும் நிறைவு பெறுவதாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு:
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம் 🎼
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை – 2
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன் – 2
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா – 2
தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
தாங்கியே நடத்தினீர் – 2
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா – 2
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன் – 2
அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன் – 2
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன் – 2
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா