கருணைக் கடலே வா கதித்த தயாபரா வா 🎼
சுரதி மறையோர்க்கு சுடரொளியே வா
1. ஆதோனாயி ஆனந்தமே ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளைச் சந்திக்க - கருணை
2. இம்மானுவேல் ஏக நாதா! எங்கள் பாவ தோசந் தீர
ஏன் இன்னும் வரத் தாமதம் - கருணை
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்லோரும்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் திருமகனை எதிர்கொள்ள விரைந்து செல்வோரை உலகம் சார்ந்த செயல்கள் எவையும் தடைசெய்யாதிருப்பனவாக; விண்ணக ஞானத்தின் படிப்பினையோ எங்களை அவருடன் தோழமை கொள்ளச் செய்வதாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்!
நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 11 : 1 - 10
ஆண்டவருக்குரிய நாளில் ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர் விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும். ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார்.
கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை.
அந்நாளில், ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிற இனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 72: 1-2. 7-8. 12-13. 17 (பல்லவி: 7a)
பல்லவி: ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பல்லவி
இரண்டாம் வாசகம்:
மக்கள் அனைவரையும் கிறிஸ்து மீட்கிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 15 : 4 - 9
சகோதரர் சகோதரிகளே,
முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கு ஏற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்.
ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்துகொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, “பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்” என இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: (திருப்பாடல் 85: 7)
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்:
மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 3 : 1 - 12
அக்காலத்தில், திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.
இவரைக் குறித்தே, “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.
பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். ‘ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை’ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.
நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன், எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதி இல்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
விழித்திருக்க அழைப்பவரே இறைவா!
உமது திருமகனின் வருகைக்காக இந்த உலகை விழிப்புடன் தயார் செய்யும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறைவாய் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஆதரித்துக் காக்கும் இறைவா!
ஆயனில்லா ஆடுகள்போல இன்று தவித்து நிற்கும் மக்களை கருணையுடன் கண்ணோக்கிப் பாரும். அவர்களின் துன்ப துயரங்களைப் போக்கி, அவர்கள் சரியான திசையை நோக்கிப் பயணிக்கவும், என்றும் அமைதியையும், உடல் நலத்தையும், பாதுகாப்பையும் பெற்று வாழவும், உமது அன்பின் சிறகுகளுக்குள் அவர்களை வைத்துக் காத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உறவின் ஊற்றே இறைவா!
இன்றைய நாட்களிலே குடும்பத்தின் புனிதத் தன்மைக்கும், உறவுக்கும், ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் எல்லாச் சக்திகளையும் முறியடித்து: குடும்பங்களிலே அன்பும், ஒற்றுமையும், தோழமையும், புரிந்துணர்வும் நிலைபெற்று: குடும்பங்கள் திருக்குடும்பத்தின் தன்மைகளைக் கொண்டு வாழ அருளாசீர் அளித்திட வேண்டுமென்றும், பிரிந்திருக்கும் குடும்பங்களை ஒன்று சேர்த்திடவேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! என்ற உன்னத வாழ்த்தை எமக்களித்த தந்தையே!
வாழ்த்தை எமக்களித்த தந்தையே! நாங்கள் இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்த்து தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்காது என்றும் விழிப்புடனிருந்து செயல்பட எமக்கு அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா!
இளைறோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மகிழ்ச்சியின் மன்னராம் இறைவா,
வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீக தயாரிப்புகளில் எங்களை புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன்🎼
என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய்
கோதுமை மணியும் திராட்சைக் கனியும்
புது உரு பெறுவது போல் (2)
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவாய் (2)
நான் வாழ பிறரும் பிறர் வாழ
நானும் தேவை என்றுணர்ந்தேன் (2)
சமத்துவ சோதர நோக்குடனே
புதுயுகம் காண்போம் அகத்தினிலே (2)
காணிக்கை
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, எங்கள் தாழ்மையான வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு மனநிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உம்மிடம் மன்றாடப் போதுமானத் தகுதியற்ற எங்களுக்கு உமது அருளினால் உமது இரக்கத்தின் பாதுகாப்பை அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
கிறிஸ்து தம்மையே தாழ்த்தி, உடலெடுத்து முதன்முறை வந்தபோது, தொடக்கத்திலிருந்தே நீர் வகுத்த திட்டத்தை நிறைவேற்றி, முடிவில்லா மீட்பின் வழியை மீண்டும் எங்களுக்குத் திறந்து வைத்தார்; எனவே அவர் மறுமுறை தம் மாண்புக்கு உரிய மாட்சியுடன் வரும்பொழுது, இறுதியில் வெளிப்படும் நீர் வாக்களித்த மீட்பை உமது கொடை எனப் பெற்றுக்கொள்வோம். அதையே நாங்கள் இப்பொழுது விழிப்பாயிருந்து துணிவுடன் எதிர்பார்க்கின்றோம்.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும் அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும் வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(பாரூக்கு 5:5; 4:36)
எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில்; உன் கடவுளிடமிருந்து உனக்கு வரும் மகிழ்ச்சியைப் பார்.
எனில் வாரும் என் இயேசுவே🎼
என்றும் என்னோடு உறவாடவே
நீரின்றி ஒன்றில்லையே - இங்கு
நீர்தானே என் எல்லையே
என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே
என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவ - தேவா எழுந்து வா ...
அருட்பணி: மன்றாடுவோமாக!
ஆண்டவரே, ஆன்ம உணவினால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: இம்மறை நிகழ்வுகளில் பங்கேற்பதால் நாங்கள் இவ்வுலகப் பொருள்களை ஞானத்துடன் மதிப்பீடு செய்யவும் விண்ணகத்துக்கு உரியவற்றைப் பற்றிக்கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத் தருவீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
நிறைவுச் சடங்கு:
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.
ஒரு நாளும் உனை மறவேன்🎼
தாயே ஒருநாளும் உனை மறவேன் (2)
1. கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் -2
உலகமெலாம் அறிந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்
2. நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் -2
என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்
3. சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் -2
சாதனைகள் படைத்தாலும் - 2 சரித்திரமாய் முளைத்தாலும்