பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு
முதல் வாசகம்
மரணம் இயேசுவைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 2: 14, 22-33
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: “யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.
இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார்மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக் குறித்துக் கூறியது:
‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’
சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்
திபா 16: 1-2,5. 7-8. 9-10. 11 (பல்லவி: 11a)
பல்லவி: ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்.
(அல்லது) அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். - பல்லவி
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி
இரண்டாம் வாசகம்
உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 1: 17-21
அன்பார்ந்தவர்களே,
நீங்கள் ‘தந்தையே’ என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள். உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர் நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: திபா 118: 24
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 24: 13-35
வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள்.
அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!"என்றார். அதற்கு அவர் அவர்களிடம், “என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை” என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, “அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!” என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.
அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக்கொண்டார்கள்.
அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், “ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்” என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.
ஆமென்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக் கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால் அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
கிறிஸ்துவில் புது வாழ்வு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, எக்காலத்திலும் உம்மைப் புகழ்ந்துரைப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்து பலியான இச்சிறப்பான காலத்தில் உம்மை இன்னும் மிகுதியாக வாழ்த்திப் போற்றுவதும் மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
கிறிஸ்து வழியாகவே ஒளியின் மக்கள் நிலைவாழ்வில் நுழைகின்றனர்; விண்ணரசின் கதவுகள் நம்பிக்கையாளருக்குத் திறந்து விடப்படுகின்றன; ஏனெனில் சாவுக்கு உரிய எங்கள் வாழ்வும் அவரது சாவால் மீட்பு அடைந்து அவரது உயிர்ப்பிலே அனைவரது வாழ்வும் உயிர்த்தெழலாயிற்று.
ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க அனைத்துலகின் மாந்தர் அனைவரும் அக்களிக்கின்றனர்; அவ்வாறே ஆற்றல்மிக்கோரும் அதிகாரம் கொண்ட தூதர்களும் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(லூக் 24:35) அவர் அப்பத்தைப் பிடும்போது சீடர்கள் ஆண்டவர் இயேசுவைக் கண்டுணர்ந்து கொண்டார்கள். அல்லேலூயா.
அருட்பணி: மன்றாடுவோமாக!
ஆண்டவரே, நிலையான மறைநிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்!
நிறைவுச் சடங்கு:
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
சிறப்பு ஆசி:
அருட்பணி: தம் ஒரே மகனின் உயிர்ப்பால் மீட்பின் பயனையும் தம் பிள்ளைகளாகும் பேற்றையும் உங்களுக்கு அளிக்கத் திருவுளம் கொண்ட இறைவன், தமது ஆசியால் நீங்கள் என்றும் அவரோடு மகிழ்ந்திருக்க அருள்வாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: அவரது மீட்பால் முடிவில்லா விடுதலை என்னும் கொடையைப் பெற்றுக்கொண்ட நீங்கள் அவரது இரக்கப் பெருக்கால் நிலைவாழ்வின் உரிமைப் பேற்றைப் பெறும் தகுதி பெறுவீர்களாக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: திருமுழுக்கில் நம்பிக்கை கொண்டு அவரோடு உயிர்த்தெழுந்த நீங்கள் இம்மையில் உங்களது நேர்மையான வாழ்வால் விண்ணக வீட்டை அடையும் தகுதி பெறுவீர்களாக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.