அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே - (2)
அன்பு பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்பம் துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2)
எளியவர் வாழ்வில் துணை நின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)
அணி அணியாய் வாருங்கள் அன்பு மாந்தரே
ஆண்டவர் இயேசுவின் சாட்சி நீங்களே (2)
மண்ணகத்தில் பொருளை சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒழிந்து போய்விடுமே (2)
விண்ணில் பொருளை தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
---------------------------------------------------
பாவத்துயர்ச் செயல்
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்: ஆமென்.
---------------------------------------------------
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
எல்: உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
மன்றாடுவோமாக!
எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, எங்களுக்கு எதிரானவற்றை எல்லாம் கனிவுடன் அகற்றியருளும்; அதனால் உள்ளத்திலும் உடலிலும் எழுகின்ற தடைகளை நீக்கி உவப்புடன் உமக்கு ஊழியம் புரிவோமாக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
பொதுக்காலம் 32ஆம் வாரம் - ஞாயிறு - வாசகம்
முதல் வாசகம்
நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்.
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-2, 9-14
அந்நாள்களில்
சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப் பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப் படுத்தப்பட்டார்கள்.
அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், “நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதை விட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்” என்றார்.
தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், “நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே” என்று கூறினார்.
அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப் படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; “நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக் கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்” என்று பெருமிதத்தோடு கூறினார். அவர் தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள்.
அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். அவர் இறக்கும் தறுவாயில், “கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வு பெற உயிர்த்தெழ மாட்டாய்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 17: 1. 5-6. 8,15 (பல்லவி: 15b)
பல்லவி: விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.
ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்;
என் வேண்டுதலை உற்றுக் கேளும்;
வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்
என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி
என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது;
என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.
இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்;
ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.
என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;
என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்;
உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். - பல்லவி
இரண்டாம் வாசகம்
நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை ஆண்டவர் உறுதிப்படுத்துவாராக!
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16- 3: 5
சகோதரர் சகோதரிகளே,
நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!
சகோதரர் சகோதரிகளே, இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ் பெறவும், தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்; இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார். கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திவெ 1: 5-6 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-38
அக்காலத்தில்
உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு சதுசேயரிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி
அல்லது குறுகிய வாசகம்
இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 34-38
அக்காலத்தில்
உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயரிடம் இயேசு கூறியது: “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே.”
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
நல் ஆயனாகிய இறைவா!உமது திரு அவையில் இறை ஆட்சிப் பணி புரியத் தங்களைஅர்ப்பணம் செய்த எமது திருத்தந்தையையும் அவரோடு பணி வாழ்வில் கரம் கொடுக்கும் அனைத்துத் தரப்பினரையும் நீர் ஆசீர்வதித்து எதிர் கொள்ளும் சவால்களுக்கு ஞானத்தோடு முகம் கொடுத்து துணிவோடு மந்தைகளை வழிநடத்த வரமருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்பான ஆண்டவரே இறைவா! இன்றைய இறை வார்த்தைக்காக உமக்கு
நன்றி கூறுகின்றோம்.மரணத்தின் பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை நாம் நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு நிலை வாழ்வையே எமது வாழ்வின் இலக்காகக் கொண்டு சாட்சியம் பகர்ந்து வாழ அருள் பொழிந்து வழி நடத்த வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அருள் பொழியும் இறைவா! எமது வாழ்க்கையில் ஏற்படுகின்ற துன்பம் வேதனை,சிலுவை,மரணம் போன்வற்றிற்கு ஓர் முடிவு உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு உயிர்ப்பும் உயிரும் வாழ்வுமாக விளங்கும் இயேசுவை நம்பிக்கையோடு பின்சென்றிட எம்மை உடனிருந்து வழி நடத்த வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நிலைவாழ்வின் ஆண்டவரே இறைவா! இறந்த ஆன்மாக்களை விசேடமாக நினைவு கூரும் இம்மாதத்தில் எம் ஒவ்வொருவரையும் ஆன்மீக வாழ்வில் வழிநடத்தி இறைபதம் அடைந்த ஆன்மீகத் தலைவர்களுக்கான உம்மிடம் மன்றாடுகின்றோம்.இவர்களின் நற்பணிகளைக் கருத்திற் கொண்டு பாவங்களை மன்னித்து நிலை வாழ்வைத் கொடுத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அப: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அப: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையது மான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2)
சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே
என்னையாளும் மன்னவனன்றோ
நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என்
நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்? - இன்று
உனக்கு நான் எனையளித்தேன்
வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உமதருட்கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன் - என்றும்
உன்னிலே வாழ்ந்திடுவேன்
ஆண்டவரே, இப்பலிப்பொருள்களை இரக்கமுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளின் மறைநிகழ்வைக் கொண்டாடும் நாங்கள் பற்றன்புடன் அதில் பங்குகொள்வோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
2. மீட்பின் மறைபொருள்
அப: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அப: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அப: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
தவறிழைத்த எங்கள் மீது கிறிஸ்து இரக்கம் கொண்டு கன்னி மரியாவிடமிருந்து பிறக்கத் திருவுளமானார்; சிலுவையில் பாடுபட்டு, முடிவில்லாச் சாவிலிருந்து எங்களை விடுவித்தார்; இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து நிலைவாழ்வை எங்களுக்கு அருளினார்.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும் அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும் வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர், எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(திபா 22:1, 2)
ஆண்டவர் என்னை ஆள்கின்றார்; எனக்கேதும் குறை இல்லை; பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்தார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் சென்றார்.
அல்லது
(லூக் 24:35)
அவர் அப்பத்தைப் பிடுகையில், சீடர்கள் ஆண்டவர் இயேசுவைக் கண்டுணர்ந்து கொண்டார்கள்.
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா - 2
உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா
1. அணைத்து காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் (2)
ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ -2
என் இனிய அன்பே எழுந்து வா
2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு (2)
ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ -2
என் இனிய நண்பா எழுந்து வா
அருட்பணி:
மன்றாடுவோமாக!
ஆண்டவரே, உமது புனித கொடையால் ஊட்டம் பெற்ற நாங்கள் கனிவுடன் உம்மை மன்றாடி நன்றி கூறுகின்றோம்; இவ்வாறு உம் ஆவியாரின் பொழிவால் நாங்கள் விண்ணக ஆற்றல் பெற்று உண்மையான அருள்வாழ்வில் நிலைத்து நிற்கச் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவி உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்: இறைவனுக்கு நன்றி.
கிறிஸ்துவின் ஆத்மமே என்னை அர்ச்சியும்
கிறிஸ்துவின் தேகமே என்னை இரட்சியும்
கிறிஸ்துவின் இரத்தமே என்னைப் பூர்ப்பியும்
திருவிலாத் தீர்த்தமே என்னைத் தூய்ப்பியும்
1. கிறிஸ்துவின் பாடுகள் என்னைத் தேற்றிட
அருள்நிறை இயேசுவே என்னைக் கேட்டிடும்
அரிய காயங்களுள் என்னை வைத்திடும்
பிரிந்திடா வண்ணமாய் என்றும் கட்டிடும்
2. பொருது சத்ருவிடம் நின்றே காத்திடும்
மரண வேளையினில் என்னைக் கூப்பிடும்
பரகதியில் நிதம் உம்மை வாழ்த்தவே
வருகவென்றன்போடு என்னை ஏவிடும்