மகிமையின் இராஜனே மகத்துவ தேவனே
உலகத்தை மீட்டோனே
உமக்கே ஆராதனை – 2
இறையே எம் அரசே இயேசு பெருமானே – 2
எங்கள் குலகுருவே
உமக்கே ஆராதனை – 2
சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி – 2
வானகம் திறந்தோனே
உமக்கே ஆராதனை – 2
ஜெயம் பேரிகை முழங்க ஜெகதலத்தோர் களிக்க – 2
சிருஷ்டிகளெல்லாம் மகிழ
உமக்கே ஆராதனை – 2
அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்லோரும்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
எல்லோரும்: உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, அனைத்துக்கும் அரசரான அன்பார்ந்த உம் திருமகனில் அனைத்தையும் புதுப்பிக்கத் திருவுளமானீர்; அடிமைநிலையிலிருந்து விடுதலை அடைந்த படைப்பு அனைத்தும் மாண்புக்கு உரிய உமக்குப் பணி புரியவும் உம்மை முடிவின்றிப் புகழ்ந்தேத்தவும் அருள்புரிவீராக.
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்!
வாசகம்
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்
முதல் வாசகம்
இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-3
அந்நாள்களில்
இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.”
இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)
பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி
ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி
இரண்டாம் வாசகம்
தந்தையாம் கடவுள் நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-20
சகோதரர் சகோதரிகளே,
தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.
அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன.
திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 11: 10
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 35-43
அக்காலத்தில்
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்” என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, “நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்” என்று எள்ளி நகையாடினர். “இவன் யூதரின் அரசன்” என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், “நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று” என்று அவரைப் பழித்துரைத்தான்.
ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.
பின்பு அவன், “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான்.
அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன். ஆமென்.
1. திருச்சபையின் ஆயரே இறைவா,
உமது நிலையான அரசை உலகெங்கும் நிறுவும் ஆர்வத்துடன், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தி பணியாற்றிட வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. அரசர்களின் அரசரே இறைவா,
உமது அரசின் பரவலுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பதவி இழக்கவும், உலகெங்கும் உமது அரசு கட்டியெழுப்பப்படவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. மாட்சியின் மன்னரே இறைவா,
எம் நாட்டு மக்கள் அனைவரும் உண்மையின் நற்செய்தியை விரும்பித் தேடவும், உம் திருமகனின் மேலான ஆட்சியை மனமுவந்து ஏற்கவும் துணை புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. மகிழ்ச்சியின் தலைவரே இறைவா,
வாழ்வின் குறிக்கோளை அறியாமல் இவ்வுலகின் செயற்கைச் சூழலில் சிக்கி, தவறான இலக்கை நோக்கி பயணம் செய்து கொண்டிருப்போர் மனந்திரும்ப உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
5. வெற்றி வேந்தரே இறைவா,
உம் திருமகன் எங்களைத் தீர்ப்பிட வரும்போது, எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரும், அவரது வலப்பக்கத்தில் நிற்க வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எது வேண்டும் உனக்கு இறைவா
எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா – 2
எது வேண்டும் எது வேண்டும் – 2
மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்
உனக்கது மணமில்லையோ
கனி யாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்
உனக்கது சுவையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
எளிய என் இதயம் தந்தேன் – 2
அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா (எது வேண்டும்)
பொருள் கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்
உனக்கது ஈடில்லையே
உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்
உனக்கது இணையில்லையே
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
சின்ன என் இதயம் தந்தேன் – 2
அது சிறப்பாய் இருக்குமோ இறைவா (எது வேண்டும்)
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, உம்மோடு மனிதரை ஒப்புரவாக்கும் இப்பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை மக்களினத்தார் அனைவருக்கும் உம் திருமகனே கொடுத்தருள்வாராக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
தொடக்கவுரை
இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர்
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
நீர் உம்முடைய ஒரே பேறான திருமகன் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை என்றென்றும் குருவாகவும் அனைத்துக்கும் அரசராகவும் அக்களிப்பின் தைலத்தால் அருள்பொழிவு செய்தீர். இவ்வாறு அமைதியை வழங்கும் மாசற்ற பலிப்பொருளாகச் சிலுவைப் பீடத்தில் தம்மையே அவர் ஒப்புக்கொடுத்து
மனிதருக்கு மீட்பு அளிக்கும் அருளடையாளங்களை நிறுவினார்.
படைப்புகள் அனைத்தையும் தமது ஆட்சிக்கு உட்படுத்தி நிலையான, அனைத்துலக ஆட்சியை அளவில்லா மாண்புடைய உமக்குக் கையளித்தார். அது உண்மையும் வாழ்வும் ஒங்கும் ஆட்சி; புனிதமும் அருளும் நிறைந்த ஆட்சி; அன்பும் அமைதியும் நிலவும் ஆட்சியும் ஆகும்.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும் அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும் வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து நாங்களும் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது: தூயவர்.
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
ராஜாதி ராஜனே தேவாதி தேவனே
விண்ணோர் வணங்கிடும் விமல ராஜனே – 2
பாவத்தைப் போக்கவே பாரினில் வந்தாய்
சாபத்தை நீக்கவே மானிடன் ஆனாய் – 2
ராஜாதி ராஜனை தேவாதி தேவனைப் போற்றி துதித்துப் பாடிடுவோம் – 2
வானக வாழ்வையே வழங்கிட வந்தாய்
உலகெல்லாம் உயிர் பெற உண்மையை ஈன்றாய் – 2
ராஜாதி ராஜனை தேவாதி தேவனைப் போற்றி துதித்துப் பாடிடுவோம் – 2
அன்பினால் எம்மையும் ஆளவே வந்தாய்
உன்னத உவகையை உள்ளத்தில் தந்தாய்
ராஜாதி ராஜனை தேவாதி தேவனைப் போற்றி துதித்துப் பாடிடுவோம் – 2
(திருப்பாடல் 28:10-11)
ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருப்பார்: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியில் ஆசி வழங்குவார்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
ஆண்டவரே, சாகா வரம் தரும் உணவை உட்கொண்டுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அனைத்துக்கும் அரசராம் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில் பெருமை கொள்ளும் நாங்கள் அவருடைய விண்ணக ஆட்சியில் அவரோடு என்றென்றும் வாழ ஆற்றல் பெறுவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
நிறைவுச் சடங்கு
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.
நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே – 2
கோடி நன்றி பாட்டுப் பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் – 2
உயிர்கள் யாவும் வாழ நல் உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வு வளர நல் உள்ளம் உறைந்ததால்
நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனதைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள்வரங்கள் பொழிந்ததால்
பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்
ஜெபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்
உந்தன் ஒளியே உலகின் வழியாய் ஆனதால்