உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர🎼
மணங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க
வாரும் இறைகுலமே (2)
1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு
நிலவாய் நிலமதில் நடந்தவனே
இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்
இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே
பாவம் நம்மிலே மறையாதோ தேவன்
பாதம் நம்மிலே பதியாதோ
சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்
2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்
விழிகளில் கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்
அன்பின் பலியினில் கலந்திடவே
ஓர்குலமாய் ஒன்று கூடிவந்தோம்
எல்லோரும்: ஆமென்.
தவக்காலம் நான்காம் வாரம் - ஞாயிறு
முதல் வாசகம்
இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7, 10-13a
அந்நாள்களில் ஆண்டவர் சாமுவேலை நோக்கி, ‘‘உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டுபோ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது, அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ‘‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார்.
இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். ‘‘இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை” என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, ‘‘உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, ‘‘இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், ‘‘ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார்.
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; - பல்லவி
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி
இரண்டாம் வாசகம்
‘இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்'.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 8-14
சகோதரர் சகோதரிகளே,
ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது. அவ்வாறு தெளிவாக்கப்படுவது எல்லாம் ஒளி மயமாகிறது. ஆதலால், ‘தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனுக்கு நன்றி..
நற்செய்திக்கு முன் வசனம்: யோவா 8: 12b
“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்,” என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
அவர் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-41
அக்காலத்தில்,
இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்யவேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி” என்றார்.
இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, “நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள். அவரும் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், “இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?” என்று பேசிக்கொண்டனர். சிலர், “அவரே” என்றனர்; வேறு சிலர், “அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்” என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், “நான்தான் அவன்” என்றார். அவர்கள், “உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவரிடம் கேட்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, ‘சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்’ என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது” என்றார். “அவர் எங்கே?” என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், “எனக்குத் தெரியாது” என்றார்.
முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டி வந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள். எனவே, “எப்படிப் பார்வை பெற்றாய்?” என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், “இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்றார். பரிசேயருள் சிலர். “ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், “பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?” எனக் கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், “உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் கேட்டனர். “அவர் ஓர் இறைவாக்கினர்” என்றார் பார்வை பெற்றவர்.
அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை. “பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?” என்று கேட்டார்கள். அவருடைய பெற்றோர் மறுமொழியாக, “இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவியிலேயே பார்வையற்றவன்தான். ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன்தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்” என்றனர்.
யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவருடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.
பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், “உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்” என்றனர். பார்வை பெற்றவர் மறுமொழியாக, “அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்: நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்” என்றார். அவர்கள் அவரிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒருவேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டார். அவர்கள் அவரைப் பழித்து, “நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது” என்றார்கள். அதற்கு அவர், “இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்று உடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவிசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?” என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.
யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.
அப்போது இயேசு, “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
ஒரே கடவுளை நம்புகின்றேன்.
விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல தந்தை அவரே.
கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார்.
கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக,
உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர்.
இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.
தந்தையோடு ஒரே பொருளானவர்.
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன.
மனிதர் நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
விண்ணகம் இருந்து இறங்கினார்.
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். (தாழ்ந்து பணிந்து வணங்கவும்)
மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில்
சிலுவையில் அறையப்பட்டுப் பாடுபட்டு,
இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல
தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.
வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட
மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார்.
அவரது ஆட்சிக்கு முடிவு இராது.
தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும்,
உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகின்றேன்.
இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக
ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார்.
இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.
ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும்
திரு அவையை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றேன்.
இறந்தோரின் உயிர்ப்பையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.
ஆமென்.
1. எம் தந்தையே இறைவா, எங்கள் திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் குருக்கள் அனைவரும் கிறிஸ்து எனும் ஒளியைப் பிரதிபலிக்கும் கருவிகளாகத் திகழவும், மக்களிடையே இறைவாக்கினராகச் செயல்படத் தேவையான அருளைப் பெறவும் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. அமைதியின் தேவனே இறைவா, இந்த மார்ச் மாதத்தில் திருத்தந்தை பதினான்காம் சிங்கராயர் முன்வைத்துள்ள செபக் கருத்திற்காக உம்மை மன்றாடுகிறோம். உலக நாடுகள் அனைத்தும் ஆயுதப் போட்டிகளைக் கைவிட்டு, போரினால் ஏற்படும் அழிவிலிருந்து மக்களைக் காக்கவும், பேச்சுவார்த்தை மூலம் உலகத்தலைவர்கள் தீர்வு காணவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. கருணையின் தேவனே இறைவா, தவக்காலத்தில் பயணிக்கும் நாம் அனைவரும், நம்மிடமுள்ள இருள் நிறைந்த செயல்களைக் களைந்து, ஒளியின் மக்களாக வாழவும், கிறிஸ்துவின் ஒளியை மற்றவர்களுக்குக் கொண்டு செல்லவும் வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. இரக்கத்தின் வடிவே இறைவா! எங்கள் குடும்பங்களில் மரித்தவர்களுக்கும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆன்மாக்களுக்கும், யாரும் நினையாத, மறந்துபோன ஆத்துமாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி🎼
உனக்காக நான் தந்தேன் இறைவா
இதை ஏற்று உனதாக மாற்றி அருட் பலியில்
எனை நீ இணைப்பாய் இறைவா
1. அணையாத தீபம் உன் திரு இதயம்
ஏற்றிட வந்தேன் என் சிறு அகலை (2)
உலகின் ஒளியாய் இருப்பவனே
உன் கோயில் நானாக மாற்றிடுவாய்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
இறைஞ்சுகின்றேன் இரங்கிடுவாய் (2)
2. ஏங்கும் விழியில் தேங்கிய நீரும்
அலைஓயா மனமும் ஏந்தி வந்தேன் (2)
எதையும் தாங்கும் இறையவனே
உன்னோடு ஒன்றாக ஏற்றிடுவாய்
ஏற்றிடுவாய் ....
காணிக்கை
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, பணிவுடன் உம்மை வேண்டி, நிலையான உதவி அளிக்கும் காணிக்கைகளை பேரின்பத்துடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நாங்கள் இவற்றை உண்மையிலேயே போற்றவும் உலகின் மீட்புக்காக உமக்கு உகந்தவாறு ஒப்புக்கொடுக்கவும் செய்வீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
கிறிஸ்து தாம் மனிதர் ஆனதன் மறைநிகழ்வு வழியாக இருளில் நடக்கும் மனிதக் குலத்தை நம்பிக்கையின் ஒளிக்குக் கொண்டுவந்தார். பழைய பாவ நிலைக்கு உட்பட்டவர்களாகப் பிறந்தவர்களைப் புதுப் பிறப்பின் கழுவுதலால் உரிமை மக்களாக ஏற்றுக்கொண்டார்.
ஆகவே விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும் உம்மை ஆராதித்து வணங்கிப் புதியதொரு பண் பாடுகின்றன; வானதூதர் அணிகள் அனைத்தோடும் நாங்கள் சேர்ந்து முடிவின்றிப் பறைசாற்றிச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர், தூய்மை அனைத்துக்கும் ஊற்று. ஆகவே உம்முடைய ஆவியைப் பொழிந்து, இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்த உம்மை வேண்டுகின்றோம். இவ்வாறு, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் + இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக.
அவர் பாடுபட உளம் கனிந்து தம்மைக் கையளித்த போது அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின், கிண்ணத்தையும் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி கூறி, தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான
உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று
உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின் றோம்.
ஆகவே ஆண்டவரே, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பினையும் உயிர்ப்பினையும் நினைவுகூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்கள் என எங்களை ஏற்றுக்கொண்டீர்; எனவே உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மேலும் கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவியார் ஒன்று சேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம்.
ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை நினைவுகூர்ந்தருளும். எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), எங்கள் ஆயர்* __________, எல்லாத் திருநிலையினர் ஆகிய அனைவரோடும் உமது திரு அவை அன்பில் நிறைவு பெறச் செய்தருளும்.
மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் துயில்கொள்ளும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் இறந்தோர் அனைவரையும் இரக்கத்துடன் நினைவுகூர்ந்து, உமது திருமுக ஒளியினுள் ஏற்றருளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். கடவுளின் கன்னித் தாயான புனித மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு, புனிதத் திருத்தூதர்கள், இவ்வுலகில் உமக்கு உகந்தவராய் இருந்தோர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலைவாழ்வில் பங்குகொள்ளும் தகுதி பெற்று, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(யோவா 9:11,38)
ஆண்டவர் என் கண்களில் பூசினார்; நான் சென்றேன், கழுவினேன், பார்த்தேன்; கடவுளை நம்பினேன்.
கிருபை உணர்ந்தேன் சிலுவை நிழலில்🎼
எனையே இழந்தேன் உலகின் வழியில்
துயர் போக்கிடவே உயிர் காத்திடவே
பெரும் ஒளியாக வந்தவரே (2)
மறந்தேன் நான் உமையே இவ்வுலகினிலே
இடறி அலைந்தேன் பல வழியே
உம்மால் இவ்வுலகை எந்நாளும்
தடை மீறி ஜெய்தீட வைத்தீர்
உம் சித்தம் என்றைக்கும் என்னில்
செயலாற்றும் அனுபவம் தந்தீர்
உளமார போற்றியே சிரம் தாழ்த்தி பாடியே
உம் அன்பை எந்நாளும் எண்ணி (கிருபை உணர்ந்தேன்...)
சுயமாய் நான் எடுத்த பல வழிகள்
உதறி வெறுத்த பல நிலைகள்
சிதறுண்ட வாழ்வினை மாற்றி
புதிதாக்கி மீட்டவர் நீரே
வழிமாறி திரிந்தவன் என்னை
கரம் ஏந்தி காத்தவர் நீரே
இவ்வன்பை போற்றியே சிரம் தாழ்த்தி பாடியே
உம் அன்பை எந்நாளும் எண்ணி (கிருபை உணர்ந்தேன்...)
அருட்பணி: மன்றாடுவோமாக!
இறைவா, இவ்வுலகுக்கு வரும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்ற நீர் எங்கள் இதயங்களை உமது அருளின் சுடரால் ஒளிர்வித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது மாண்புக்குத் தகுதியானதையும் விருப்பமானதையும் என்றும் நினைவில் கொண்டு உம்மை நேர்மையாக அன்பு செய்ய வலிமை பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்!
நிறைவுச் சடங்கு:
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன், + தந்தை, + மகன், + தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: சென்று வாழுங்கள், திருப்பலி நமது வாழ்விலும் தொடரட்டும்.
எல்லோரும்: இறைவனுக்கு நன்றி.
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை🎼
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி
எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி