பொதுக்காலம் 23-ஆம் வாரம்
05/09/2026
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
பொதுக்காலம் 23-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
ஆலயமணி ஓசை கேட்டு ஆண்டவரின் இல்லம் வாருங்கள் அடிமை தனம் நீங்கிடவே அன்பு மனம் ஓங்கிடவே 🎶
இறைவன் பலியில் இணைந்து வாருங்கள் -2
சோர்ந்த வாழ்வை சுகங்களாக்க இறைவன் வருகின்றார் இதயம் பொங்கும் நிறைவுகளை என்னில் பொழிகின்றார் பகிர்ந்து வாழும் பலியின் பொருளை இணைந்து காணுவோம் - 2
இனி உண்மை அன்பின் உவகை கொள்ளுவோம் - 2
உடைந்த வாழ்வில் ஒளிவிளக்காய் இறைவன் வருகின்றார் ஏங்கும் மன நிறைவு காண என்னில் வருகின்றார்
பகிர்ந்து வாழும் பலியின் பொருளை இணைந்து காணுவோம் - 2
இனி உண்மை அன்பின் உவகை கொள்ளுவோம் - 2
முதல் வாசகம்
தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அவர்களது இரத்தப்பழியை உன் மேல் சுமத்துவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9
ஆண்டவர் கூறியது:
மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், ‘ ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்’ என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b)
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
1
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். – பல்லவி
6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! – பல்லவி
8
அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். – பல்லவி
இரண்டாம் வாசகம்
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், “விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே” என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், “உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20
அக்காலத்தில்
இயேசு சீடர்களிடம் கூறியது: “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.
மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.
ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இதய காணிக்கை இறவாத காணிக்கை🎶
இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை (2)
இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் -2
மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே
உன் அருளுக்குச் சான்றாகுமே (2)
இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி
வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா (2) இதய காணிக்கை
எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே
நல்வாழ்வு அதன் பரிசாகுமே (2)
கருணா உனைப்போல் மாறாத அன்பினால்
அயலாரை நேசிக்கும் நல் உள்ளம் தா (2) இதய காணிக்கை
ஒருபோதும் உனைப் பிரியா🎶
நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல் கூட எரிந்தாலும்
உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நிழலாக வா இறைவா
உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்
ஏன் என்னை நீ தெரிந்தாய்
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்
நீர் தேடும் மான் போலத் தேடி வந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்
என்னுள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய் - நிதம்
என் பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்
இறைவனின் மகளோ //
வெள்ளையாடை இரு நீல வரிகள்
எழ்மையின் சிகரம் கருணையின் உருவம்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா //
யாரிவள் யாரிவள் யாரோஇறைவனின் மகளோ
1
கடல் கடந்தாய் பாரதம் வந்தாய் எம் மண்ணிலே கலந்தாய்
கரம் விரித்தாய் எழைகளை நீ அன்புடனே அணைத்தாய் //
தனிமையில் வாடும் மனிதரிலே நீ இயேசுவையே கண்டாய்
நோயில் துடிக்கும் குஷ்டத்தில் இருக்கும் மனிதரில் இறை கண்டாய்
தனிமையில் வாடும் - நோயில் துடிக்கும்மனிதரில் இறை கண்டாய்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா
யாரிவள் யாரிவள் யாரோ
இறைவனின் கொடையோ
2
உள்ளவனிடம் உன் உள்ளங்கை விரித்து ஏழைக்காய் நீ கேட்டாய்
அவனோ உமிழ்ந்தான், ஏளனம் செய்தான், உனக்காய் நீ பெற்றாய் //
சிரித்தாய், துடைத்தாய், மீண்டும் இரந்தாய், நொந்தான் மனம் வெந்தான்,
இயேசுவை கண்டான், உந்தன் உருவில், அனைத்தையும் உமக்களித்தான். மகிழ்வை சுவைத்தான் - இயேசுவை அணைத்தான் -
உன்னில் இறை கண்டான்
அன்னை தெரேசா இயேசுவின் பரிசா
அன்பின் தெரேசா எம் அன்னை தெரேசா
யாரிவள் யாரிவள் யாரோஇறைவனின் மகளோ
வெள்ளையாடை இரு நீல வரிகள்
எழ்மையின் சிகரம் கருணையின் உருவம்
பொதுக்காலம் 23-ஆம் வாரம்
பொதுக்காலம் 24-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
முதல் வாசகம்
உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 27: 30- 28: 7
வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக்கொள்கின்றார்கள்.
பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார்.
உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்; அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மனிதர் தம் போன்ற மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவ மன்னிப்புக்காக எப்படி மன்றாட முடியும்? அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்?
உன் முடிவை நினைத்துப் பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையும் நினைத்துப் பார்; கட்டளைகளில் நிலைத்திரு. கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர் மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12 (பல்லவி: 8)
பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! – பல்லவி
3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். – பல்லவி
9
அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்ளுபவரல்லர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. – பல்லவி
11
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-9
சகோதரர் சகோதரிகளே,
நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35
அக்காலத்தில்
பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா”? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய பொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.
அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பொதுக்காலம் 24-ஆம் வாரம்
பொதுக்காலம் 25-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
முதல் வாசகம்
என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 6-9
ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர்அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.
என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 145: 2-3. 8-9. 17-18 (பல்லவி: 18a)
பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
2
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3
ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. – பல்லவி
8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். – பல்லவி
17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 20c-24, 27a
சகோதரர் சகோதரிகளே,
வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர் நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை.
இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். – இதுவே மிகச் சிறந்தது. – ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். – இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது.
ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்: கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16a
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.
ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள்.
அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.
அவர்கள் அதைப் பெற்றுக்கொண்ட போது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.
இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பொதுக்காலம் 25-ஆம் வாரம்