தவக்காலம் நான்காம் ஞாயிறு
தவக்காலம் நான்காம் ஞாயிறு
Click on the 🎼 button to listen to the hymn.
வருகை பாடல்
உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர🎼
மணங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க
வாரும் இறைகுலமே (2)
1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு
நிலவாய் நிலமதில் நடந்தவனே
இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்
இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே
பாவம் நம்மிலே மறையாதோ தேவன்
பாதம் நம்மிலே பதியாதோ
சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்
2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்
விழிகளில் கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்
அன்பின் பலியினில் கலந்திடவே
ஓர்குலமாய் ஒன்று கூடிவந்தோம்
முதல் வாசகம்
இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7, 10-13a
அந்நாள்களில்
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, ‘‘உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டுபோ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார்.
ஈசாயின் புதல்வர்கள் வந்தபோது, அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ‘‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும்” என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்றார்.
இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். ‘‘இவர்களையும் ஆண்டவர் தேர்ந்துகொள்ளவில்லை” என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, ‘‘உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, ‘‘இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம், ‘‘ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆள் அனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், ‘‘தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார்.
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; – பல்லவி
3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். – பல்லவி
5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. – பல்லவி
6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். – பல்லவி
இரண்டாம் வாசகம்
‘இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 8-14
சகோதரர் சகோதரிகளே,
ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது. அவ்வாறு தெளிவாக்கப்படுவது எல்லாம் ஒளி மயமாகிறது.
ஆதலால், ‘தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 8: 12b
“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்,” என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்
அவர் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1, 6-9, 13-17, 34-38
அக்காலத்தில்
இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, “நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், “இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?” என்று பேசிக்கொண்டனர். சிலர், “அவரே” என்றனர்; வேறு சிலர், “அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்” என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், “நான்தான் அவன்” என்றார்.
முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டி வந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள். எனவே, “எப்படிப் பார்வை பெற்றாய்?” என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், “இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்றார். பரிசேயருள் சிலர், “ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், “பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?” எனக் கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், “உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் கேட்டனர். “அவர் ஓர் இறைவாக்கினர்” என்றார் பார்வை பெற்றவர். அவர்கள் அவரைப் பார்த்து, “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?” என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.
யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
எனக்காக நீ தந்த வாழ்வை ஏந்தி🎼
உனக்காக நான் தந்தேன் இறைவா
இதை ஏற்று உனதாக மாற்றி அருட் பலியில்
எனை நீ இணைப்பாய் இறைவா
1. அணையாத தீபம் உன் திரு இதயம்
ஏற்றிட வந்தேன் என் சிறு அகலை (2)
உலகின் ஒளியாய் இருப்பவனே
உன் கோயில் நானாக மாற்றிடுவாய்
ஏற்றிடுவாய் மாற்றிடுவாய்
இறைஞ்சுகின்றேன் இரங்கிடுவாய் (2)
2. ஏங்கும் விழியில் தேங்கிய நீரும்
அலைஓயா மனமும் ஏந்தி வந்தேன் (2)
எதையும் தாங்கும் இறையவனே
உன்னோடு ஒன்றாக ஏற்றிடுவாய்
ஏற்றிடுவாய் ....
கிருபை உணர்ந்தேன் சிலுவை நிழலில்🎼
எனையே இழந்தேன் உலகின் வழியில்
துயர் போக்கிடவே உயிர் காத்திடவே
பெரும் ஒளியாக வந்தவரே (2)
மறந்தேன் நான் உமையே இவ்வுலகினிலே
இடறி அலைந்தேன் பல வழியே
உம்மால் இவ்வுலகை எந்நாளும்
தடை மீறி ஜெய்தீட வைத்தீர்
உம் சித்தம் என்றைக்கும் என்னில்
செயலாற்றும் அனுபவம் தந்தீர்
உளமார போற்றியே சிரம் தாழ்த்தி பாடியே
உம் அன்பை எந்நாளும் எண்ணி (கிருபை உணர்ந்தேன்...)
சுயமாய் நான் எடுத்த பல வழிகள்
உதறி வெறுத்த பல நிலைகள்
சிதறுண்ட வாழ்வினை மாற்றி
புதிதாக்கி மீட்டவர் நீரே
வழிமாறி திரிந்தவன் என்னை
கரம் ஏந்தி காத்தவர் நீரே
இவ்வன்பை போற்றியே சிரம் தாழ்த்தி பாடியே
உம் அன்பை எந்நாளும் எண்ணி (கிருபை உணர்ந்தேன்...)
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை🎼
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கிறதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே – கல்வாரி
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்காய் வேண்டினீரே
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி
எம்மையும் உம்மைபோல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
என் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்
தந்து விட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி
வருகை பாடல்