தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
Click on the 🎼 button to listen to the hymn.
* வருகை பாடல்
இறை பலியினில் இணைந்திடுவோம் 🎼
இறைவனில் கலந்திடுவோம்
இதயத்தில் இருப்பவரே இறைகுலமாய் வருவோம்
இறை மகிமைக்காக உழைப்போம் நம்மில்
மனிதம் மலர இணைவோம் (2)
1. இறைவன் வார்த்தையில் இல்லம் அமைத்திட
இயேசு வழியில் செல்வோம்
உறவு வளம் பெற உண்மை உருபெற உலகில் சாட்சியாவோம்(2)
கல்வாரிப் பலியின் நினைவே எம் வாழ்வில் வசந்தம் வருமே -2
இறை மகிமைக்காக
2. ஏழை எளியவர் இறைவன் செய்தியை ஏற்று மகிழச்செய்வோம்
மாறும் உலகில் மாறா உன் அன்பில்
மாற்றம் கண்டு கொள்வோம் (2)
கல்வாரிப் பலியின் நினைவே எம் வாழ்வில் வசந்தம் வருமே -2
முதல் வாசகம்
இறைமக்களுக்குத் தந்தையாகிய ஆபிராம் அழைக்கப்பெறுதல்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4a
அந்நாள்களில்
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ‘‘உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 22)
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. – பல்லவி
18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். – பல்லவி
20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! – பல்லவி
இரண்டாம் வாசகம்
இறைவன் நம்மை அழைத்து, நம்மீது ஒளி வீசுகிறார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8b-10
அன்பிற்குரியவரே,
கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
மாற் 9: 7
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”
நற்செய்தி வாசகம்
இயேசுவின் முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9
அக்காலத்தில்
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, “மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு 🎼
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு (2)
1. குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
எந்த நிலை தான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் -2
2. அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் 🎼
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப்போகிறேன்
எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்ட பின் என்ன வேண்டுவேன்
என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள்புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன்
உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன்
மண்டியிட்டு எனது பாதம் கழுவிச்சொன்ன உன்
அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே
இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன்
சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே
இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகின்றார் 🎼
நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கின்றார் (2)
1. வருந்திச் சுமக்கும் பாவம் நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும் (2)
செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்
2. .குரதி சிந்தும் நெஞ்சம் நம்மைக் கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் -2
அவர் பாதம் வந்து சேரும்
வருகை பாடல்