குருத்து ஞாயிறு
28/03/2026
28/03/2026
Click on the 🎶 button to listen to the hymn.
ஆண்டவர் பெயரால் வருகிறவர்
ஆசி நிரம்பப் பெற்றவரே
இஸ்ராயேலின் பேரரசே
உன்னதங்களிலே ஓசான்னா – 2
மகிமை வணக்கம் புகழ் உமக்கே
எழிலார் சிறுவர் திரள் உமக்கு
அன்புடன் பாடீனர் ஓசான்னா
இஸ்ராயேலின் அரசர் நீர்
தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்
ஆசி பெற்ற அரசே நீர்
ஆண்டவர் பெயரால் வருகின்றீர்
வானோர் அணிகள் அத்தனையும்
உன்னதங்களிலே உமைப் புகழ
அறிவுறும் மனிதரும் படைப்புகளும்
யாவும் ஒன்றாய் புகழ்ந்திடுமே
எபிரேயர்களின் மக்கள் திரள்
குருத்துக்கள் ஏந்தி எதிர் கொண்டார்
செபமும் கீதமும் காணிக்கையும்
கொண்டு யாம் இதோ வருகின்றோம்
எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒளிவக் கிளைகள் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர்கொண்டனரே
பூவுலகும் அதில் நிறைந்த பொருள்
யாவும் குவலயமும் அதில் வாழும் குடிகளும் - நம் ஆண்டவர்க்கே உரிமையான உடைமைகளாம் - எபி
ஏனென்றால் கடல்களின்மேல் பூவுலகை
நிலைநிறுத்தி அமைத்தவரும் நதிகளின்மேல் அதற்கு நிலை தந்தவரும் அவர் தாமே - எபி
வாயில்களே நிலைகளின்மேல் உயர்த்துங்கள
பழங்காலக் கதவுகளே மேலெழுங்கள்
மகிமைமிகு மன்னர் உள்ளே நுழைவதற்கே - எபி
வருகை பாடல்
ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம்🎼
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ராயேல் ஐனங்களை ஆளவரும் எம்
யேசு இரட்சகரே எழுந்தளும்
ஓசான்னா தாவீதின் புதல்வா
ஓசான்னா – 3
மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா
முனிசூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே
எம் மன்னவரே எழுந்தருள்வீரே
கோவேறு குட்டியே ஆசனமாய் எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது nஐயக் கொடியாய்
கர்த்தராம் இயேசுவே எழுந்தருளும்
3. தாவீது அரசரின் புத்திரரே ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப் புகழ் அடைந்தவரே – எம்
தேவனே தேவனே எழுந்தருள்வீர்
குருத்தோலைப் பவனி நற்செய்தி வாசகம்
ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-11
இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, “நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், ‘இவை ஆண்டவருக்குத் தேவை’ எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்” என்றார். “மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்” என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.
சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக்கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, “இவர் யார்?” என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
திருப்பலி இந்த ஞாயிற்றுக்கிழமையில் தரப்பட்ட மூன்று வாசகங்களையும் வாசிப்பது நலம். ஆனால் ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு முக்கியமானதால், அதை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. திருக்கூட்டத்தின் நிலைக்கு ஏற்றபடி, நற்செய்திக்கு முன் வரும் வாசகங்களில், ஒரு வாசகத்தை மட்டும் வாசிக்கலாம். அல்லது, தேவையானால் இரு வாசகங்களையும் விட்டுவிடலாம். மேலும் தேவையானால், திருப்பாடுகளின் குறுகிய வாசகத்தைப் பயன்படுத்தலாம்.
மேற்கூறியவை மக்களோடு சேர்ந்து நிறைவேற்றப்படும் திருப்பலிக்கே பொருந்தும்.
முதல் வாசகம்
நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7
நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்.
நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 22: 7-8. 16-17a. 18-19. 22-23 (பல்லவி: 1a)
பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
7
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
8
‘ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர். – பல்லவி
16
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்.
17a
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். – பல்லவி
18
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். – பல்லவி
22
உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
23
ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். – பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11
கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
பிலி 2: 8-9
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
மத்தேயு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 27: 11-54
இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று கூறினார். மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?” என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.
மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின்போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், “நான் யாரை விடுதலை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?” என்று கேட்டான். ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும். பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்ந்திருந்த பொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆள் அனுப்பி, “அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிடவேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார்.
ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். ஆளுநன் அவர்களைப் பார்த்து, “இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள் “பரபாவை” என்றார்கள். பிலாத்து அவர்களிடம், “அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அனைவரும், “சிலுவையில் அறையும்” என்று பதிலளித்தனர். அதற்கு அவன், “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.
பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். அதற்கு மக்கள் அனைவரும், “இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்” என்று பதில் கூறினர். அப்போது அவன் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.
ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்றுகூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு, அவருடைய ஆடைகளை அணிவித்து, அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.
அவர்கள் வெளியே சென்றபோது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். ‘மண்டையோட்டு இடம்’ என்று பொருள்படும் ‘கொல்கொதா’வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தை குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை. அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்; பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரண தண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் “இவன் யூதரின் அரசனாகிய இயேசு” என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.
அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா” என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.
அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், “பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘நான் இறைமகன்’ என்றானே!” என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார். அங்கே நின்றுகொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர்.
உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ, “பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்” என்றார்கள். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.
( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )
அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன்” என்றார்கள்.
இதயம் நிறைந்த காணிக்கை தந்தோம்🎼
ஏற்பாய் இறைவா ஏற்றிடுவாய் (2)
மலரும் மணமும் குறையும் நிறையும் (2)
எடுத்து வந்தோம் அர்ப்பணம் தந்தோம் (2)
வறியோர் வாழ்வும் எளியோர் உழைப்பும்
அளித்தோம் அன்பாய் ஏற்பாயே (2)
பலியின் பொருளாய் பணியில் பலியாய்
பகிர்ந்தே மகிழ்வோம் காணிக்கையாய்
வார்த்தை வாழ்வாக எமை
திராட்சை இரசமாய் மாற்றிடுமே (2)
உழைப்பின் பயனும் அப்பமும் இரசமும்
உவந்தே ஏற்பாய் அர்ப்பணமே (2)
பசித்தோர் வாழ்வும் புசித்தோர் உயர்வும்
அளித்தோம் பலியாய் ஏற்பாயே (2) தியாக வாழ்வில் சுடரும் ஒளியாய்
எம்மையே தருவோம் காணிக்கையாய்
வார்த்தை வாழ்வாக எமை கோதுமை மணியாய் மாற்றிடுமே (2)
உண்மை அன்பு உறவில் மலர
அளித்தோம் ஏற்பாய் அர்ப்பணமே (2)
இரவும் பகலும் துணையானார்
இறைவன் வரவால் நான் நிறைவேன்
இதுவே ஆனந்தமே (2)
இயேசுவே ஆண்டவரென்று
இனியெங்கும் முழங்கிடுவேன் (2)
விடியலைதேடும் எளியவர்கள்
நடுவினில் நானொரு விளக்காவேன் (2)
விடுதலைக் ஏங்கிடும் விழிகளுக்கு
புதியதோர் பாதையும் நானாவேன்
(இயேசுவே)
தடைச்சுவர் அனைத்தையும் தகர்த்திடவே
தலைவனே எனக்குமுன் நடந்திடுவார் (2)
உயிர்தரும் ஆவியின் துணையுடனே
உறவதன் பாவங்கள் எழுப்பிடுவீர்
(இயேசுவே)
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்
அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப ரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்
கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலை நிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழத் தயைபுரிவீர்
இயேசு ராஜா முன்னே செல்கிறார்🎼
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஒசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)
1. அல்லேலூயா துதி மகிமை – என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா (2)
என்றென்றும் போற்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)
2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
கர்த்தர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே(2)
3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோகோட்டை எதிர் நின்றாலும்
பயமுமில்லை கலக்கமில்லை
மீட்பர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2)
வருகை பாடல்
Click on the 🎶 button to listen to the hymn.
முதல் வாசகம்
நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 13- 53: 12
இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர். நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?
இளந்தளிர்போலும் வறண்ட நில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.
அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.
அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்துகொள்வார்.
ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 31: 1,5. 11-12. 14-15. 16,24 (பல்லவி: லூக் 23: 46)
பல்லவி: ‟தந்தையே உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.”
1
ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
5
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். – பல்லவி
11
என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்; என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்; என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்; என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.
12
இறந்தோர்போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். – பல்லவி
14
ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.
15
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். – பல்லவி
16
உமது முகத்தின் ஒளி அடியேன்மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
24
ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள். – பல்லவி
இரண்டாம் வாசகம்
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16; 5: 7-9
வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
பிலி 2: 8-9
கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
குருத்து ஞாயிறன்று நடைபெற்றதுபோல், ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும்.
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள்
யோவான் எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 18: 1- 19: 42
இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர். படைப் பிரிவினரையும், தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக்கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான். தமக்கு நிகழப்போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள். இயேசு, “நான்தான்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான். ‘நான்தான்’ என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள். “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “ ‘நான்தான்’ என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார். “நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்துவிடவில்லை” என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.
சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக்குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. இயேசு பேதுருவிடம், “வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத் திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?” என்றார்.
படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, முதலில் அவரை அன்னாவிடம் கொண்டு சென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார். இந்தக் கயபாதான், “மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது” என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.
சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார். பேதுரு வெளியில் வாயிலருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார். வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், “நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன்தானே?” என்று கேட்டார். பேதுரு, “இல்லை” என்றார். அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் சென்று அவர்களோடு நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.
தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக்கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே” என்றார்.
அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், “தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?” என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். இயேசு அவரிடம், “நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்டார். அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.
சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், “நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன்தானே” என்று கேட்டனர். அவர் “இல்லை” என்று மறுதலித்தார். தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், “நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?” என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர். பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று.
அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டுசென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப்படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை. எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, “நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்கமாட்டோம்” என்றார்கள். பிலாத்து அவர்களிடம், “நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்” என்றார். யூதர்கள் அவரிடம், “சட்டப்படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்றார்கள். இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள்.
பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். அதற்குப் பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?”என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக்கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார். பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.
பிலாத்து அவரிடம், “உண்மையா? அது என்ன?” என்று கேட்டார். இப்படிக் கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, “இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே” என்றான். மேலும், “பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்” என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து, “யூதரின் அரசே வாழ்க!” என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.
பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், “அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்றான். இயேசு முள்முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், “இதோ! மனிதன்” என்றான். அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும், “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்றான். யூதர்கள் அவரைப் பார்த்து, “எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமை கொண்டாடுகிறான்” என்றனர்.
பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான். அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. அப்போது பிலாத்து, “என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?” என்றான். இயேசு மறுமொழியாக, “மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்” என்றார்.
அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழி தேடினான். ஆனால் யூதர்கள், “நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக்கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி” என்றார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டிவந்தான். ‘கல்தளம்’ என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கைமீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் ‘கபதா’ என்பது பெயர்.
அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், “இதோ, உங்கள் அரசன்!” என்றான். அவர்கள், “ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?” என்று கேட்டான். அதற்குத் தலைமைக் குருக்கள், “எங்களுக்குச் சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை” என்றார்கள். அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு ‘மண்டை ஓட்டு இடம்’ என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின்மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், “ ‘யூதரின் அரசன்’ என்று எழுத வேண்டாம்; மாறாக, ‘யூதரின் அரசன் நான்’ என்று அவனே சொல்லிக்கொண்டதாக எழுதும்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிலாத்து அவர்களைப் பார்த்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக்கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்” என்றார்கள். “என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து, ஈசோப்புத் தண்டில் பொருத்தி, அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.
(இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும்.)
அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வுநாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்துபோயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்பவேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். “எந்த எலும்பும் முறிபடாது” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் “தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார்கள்” என்றும் மறைநூல் கூறுகிறது.
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார்.
முன்பு ஒரு முறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்துசேர்ந்தார். அவர் வெள்ளைப் போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோகிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.
இதயத்தின் அன்பிற்கீடாக
குறைநான் செய்தேன் இறைவா – பாவக்
குழியில் விழுந்தேன் இறைவா – 2
கறையாம் பாவத்தை நீக்கிடவே – 2
நீ கல்வாரி மலையில் இறந்தாயோ
பாவம் என்றொரு விசத்தால் – நான்
பாதகம் செய்தேன் இறைவா – 2
தேவனே உம் திருப்பாடுகளால் – 2 எனைத்
தேற்றிடவே நீ இறந்தாயோ
கிருபை உணர்ந்தேன் சிலுவை நிழலில்🎼
எனையே இழந்தேன் உலகின் வழியில்
துயர் போக்கிடவே உயிர் காத்திடவே
பெரும் ஒளியாக வந்தவரே - 2
மறந்தேன் நான் உமையே இவ்வுலகினிலே
இடறி அலைந்தேன் பல வழியே
உம்மால் இவ்வுலகை எந்நாளும்
தடை மீறி ஜெய்தீட வைத்தீர்
உம் சித்தம் என்றைக்கும் என்னில்
செயலாற்றும் அனுபவம் தந்தீர்
உளமார போற்றியே சிரம் தாழ்த்தி பாடியே
உம் அன்பை எந்நாளும் எண்ணி (கிருபை உணர்ந்தான்...)
சுயமாய் நான் எடுத்த பல வழிகள்
உதறி வெறுத்த பல நிலைகள்
சிதறுண்ட வாழ்வினை மாற்றி
புதிதாக்கி மீட்டவர் நீரே
வழிமாறி திரிந்தவன் என்னை
கரம் ஏந்தி காத்தவர் நீரே
இவ்வன்பை போற்றியே சிரம் தாழ்த்தி பாடியே
உம் அன்பை எந்நாளும் எண்ணி (கிருபை உணர்ந்தான்...)
கண்ணீர் பெருகாதோ
இராஜா இயேசு இராஜா – 2
கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்
கலங்கியே கரைந்திடுமே – 2
கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்
உள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ
வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்
வார்த்தை மாறிடாதே – 2
வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை
வாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ
என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்
என்ன நான் செய்திடுவேன் – 2
உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே
உம் பாதம் சரணடைவேன் – உருகாதோ
அன்புடன் முத்தி செய்கின்றேன் – 2
பாவத்தால் உம்மைக் கொன்றேனே – 2
ஆயனே என்னை மன்னியும்
வலது கரத்தின் காயமே – 2
அழகு நிறைந்த ரத்தினமே – (அன்புடன்)
இடது கரத்தின் காயமே – 2
கடவுளின் திரு அன்புருவே – (அன்புடன்)
வலது பாதக் காயமே – 2
பலன் மிகத் தரும் நற்கனியே – (அன்புடன்)
இடது பாதக் காயமே – 2
திடம் மிகத்தரும் தேனமுதே – (அன்புடன்)
திருவிலாவின் காயமே – 2
அருள் சொரிந்திடும் ஆலயமே – (அன்புடன்)
பாடுகள் நீர் பட்ட போது பாய்ந்து ஓடிய இரத்தம்🎼
கோடி பாவம் தீர்த்து மோட்சம் கொள்ளுவிக்க வல்லதே
கெட்டுப் போனோம் பாவியானோம் கிருபை செய் நாதனே
மட்டிலாக் கருணை என் மேல் வைத்திரங்கும் இயேசுவே
துட்ட யூதர் தூணினோடு தூய கைகள் கட்டியே
கஷ்டமாய் அடித்த போது காய்ந்த செந்நீர் எத்துணை
சென்னிமேற் கொடிய யூதர் சேர்த்து வைத்த முள்முடி
தன்னால் வடிந்த ரத்தத்தால் சாவான பாவம் நீங்குமே
ஐந்து காயத்தால் வடிந்த அரிய ரத்தத்தினால்
மிஞ்சும் எங்கள் பாவம் தீர்க்க வேண்டுகின்றோம் இயேசுவே
எனக்காக நீ என்ன செய்தாய் – 2
திருந்துவாய் என்று நான் நினைத்தேனே
நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய் – 2
சுமைகளால் சோர்ந்தோரே வருகவென்றீர்
சிலுவை சுமையை எமக்குத் தந்தாய் – 2
முழுமுதல் கடவுளை தேடச் சொன்னேனே
முதலமுறை தரையில் தள்ளி விட்டாய் – 2
அருள்மிகு நிறைத்த என் தாயை
சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் – 2
என் சிலுவையை சுமக்க நான் உனைத்தேடினேன்
சீமோனைக் காட்டி நீ ஒளிந்து கொண்டாய் – 2
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா – 2
பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் பூவில்
கர்த்தாவின் அன்பண்டைவா — சிலுவை
நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய் — சிலுவை
தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தை தீர்க்க வாரும்
ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர்
ஜீவன் உனக்களிப்பார் — சிலுவை
ஆற்றல் என்பது இதுவோ
புரிந்துகொள்ள முடியவில்லை இயேசுவே
இந்த பாவிக்காக இறந்ததென்ன பாசமே – 2
இயேசுவே, இயேசுவே என்னை மன்னியும்
மாசில்லாத நேசமே என்னை ஏற்றிடும் – 2
சத்தியமே உனக்கா சாட்டை அடி வதையா
நித்தம் நித்தம் பொய்யுரைக்கும் எனக்காக
அடித்து நொறுக்கப்பட்டு நெஞ்சம் தொட்ட பாசமே – 2
பச்சை மரத்தின் கதியே இந்த பாடு என்றால்
பட்ட மரத்தின் கதி என்ன இயேசுவே
எண்மேல் இரக்கம்வைத்து மீட்டருளும் பாசமே – 2
ஆவி பிரிந்தபோது வானம் அழுத சத்தம்
கன்மலையும் குமுறியதையே இயேசுவே
அசைய என் மனதை கணியச்செய்யும் பாசமே – 2
வாஞ்சிக்குதே என்னுள்ளம் – 2
என் ஆவி ஆத்மா சரீரம்
முற்றும் படைத்து விட்டேன்
என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே
பாவமறியாது பாவமே செய்யாது
பாரினில் ஜீவித்தீரே
பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே
பெலமதை தாருமையா – உந்தன்
சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்
அல்ல என் சீஷன் என்றீர்
எந்தன் சிலுவையை நான் சுமக்க
பெலமதைத் தாருமையா – உந்தன்
தலைசாய்க்க தலமில்லை
தரணியில் உறவில்லை
நிலையில்லா பூவில் என்றீர்
நானும் உம்மைப் போல தியாகம் செய்ய
பெலமதைத் தாருமையா – உந்தன்
சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும்
தேவாட்டுக்குட்டி நீரே
சீயோனில் உம்முடன் நானிருக்க
உம்மைப் போல் மாற்றும் ஐயா – என்னை
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
காயங்களையும் பார்க்கின்றன
என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
கண்கள் கலங்கிடுதே – கர்த்தா
உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்செமனே பூங்காவினில் கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே
எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்
கண்ணை மூடினேன், உன்னைத் தேடினேன்,🎼
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில், உருகிப்போகிறேன்,
எந்தன் மனம் உன் நினைவைப் பாடக் கேட்கிறேன்
உன்னைக் கண்டபின், என்ன வேண்டுவேன்,
என்ன வேண்டுவேன் இயேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய்
வருவாய் அருள் புரிவாய்
என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன்
உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன்
மண்டியிட்டு எனது பாதம் கழுவிச் சொன்ன உன்
அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே
இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன்
சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே
இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன்
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கி போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன்
மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன்
குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன்
உனது அழகுக் குரலும் எனக்குள் ஒலிக்கக் கேட்கிறேன்
இறைவா இனி நான் முழுதும் உனதாய் மாறுகிறேன்
கல்நெஞ்சக் கயவர்களால் - 2
கருணையின் உருவம் கனிவான தெய்வம்
சிலுவையில் தொங்கும்
என் இயேசுவை பார் – 2
கல்வாரி சிகரமதில்
தீர்ப்பிடா என்று சொன்ன
என் இயேசுவின் நிலைமையைப் பார்!
குருதியில் நனைந்திருக்கும்
இயேசுவின் முகத்தினைப் பார்
பிளாத்துவின் முன்னே அநீதியின் தீர்ப்பிலே
அமைதியில் நிர்ப்பதைப் பார் – 2
பிறருக்கு உதவி செய்த
என் இயேசுவின் கரங்களைப் பார்
ஆணிகள் துளைத்திடவே
ஆண்டவர் துடிப்பதைப் பார்
அயலானை மன்னித்து, தந்தையின் கரங்களில்
ஆவியை துறப்பதைப் பார் – 2
Click on the 🎶 button to listen to the hymn.
வருகை பாடல்
பெருவிழா
முதல் வாசகம்
இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34a, 37-43
அந்நாள்களில்
பேதுரு பேசத் தொடங்கி, ‘‘திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.
யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)
பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2 ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! – பல்லவி
16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
17 நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். – பல்லவி
22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! – பல்லவி
இரண்டாம் வாசகம்
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-4
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
தொடர்பாடல்
பாஸ்காப் பலியின் புகழ்தனையே
பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.
மாசில் இளமறி மந்தையினை
மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே;
மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்
மாசுறு நம்மை இணைத்தாரே.
சாவும் உயிரும் தம்மிடையே
புரிந்த வியத்தகு போரினிலே
உயிரின் தலைவர் இறந்தாலும்
உண்மையில் உயிரோடாளுகின்றார்.
வழியில் என்ன கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.
உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்
கல்லறைதன்னைக் கண்டேனே;
உயிர்த்து எழுந்த ஆண்டவரின்
ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.
சான்று பகர்ந்த தூதரையும்
போர்த்திய பரிவட்டத்தினையும்
அவர்தம் தூய துகிலினையும்
நேராய்க் கண்ணால் கண்டேனே.
கிறிஸ்து என்றன் நம்பிக்கை,
கல்லறை நின்று உயிர்த்தாரே,
இதோ, உமக்கு முன்னாலே
செல்வர் கலிலேயாவிற்கே.
மரித்தோர் நின்று உண்மையிலே
கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.
வெற்றிகொள் வேந்தே, எம்மீது
நீரே இரக்கங் கொள்வீரே.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 கொரி 5: 7b-8b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9
வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, ‘‘ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.
இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.
அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
வருகை பாடல்
Click on the 🎶 button to listen to the hymn.
வருகை பாடல்
நன்றியின் பலியை செலுத்திட வாரீர் - 2
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்
உள்ளத்தைத் தருவது திருப்பலியாம்
உடைந்ததென்றால் அது பெரும்பலியாம் - 2
கொடைகள் பெறுவது தகும் வழியாம் - 2
குறையினைப் போக்கும் கோவழியாம்
வானத்தை நோக்கிடும் நறும்புகைபோல்
வாருங்கள் உள்ளத்தை எழுப்பிடுவோம் - 2
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தோம் - 2
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்
முதல் வாசகம்
நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 42-47
அக்காலத்தில்
திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ் செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலங்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தனர்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப் பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றிவந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக்கொண்டேயிருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 118: 2-4. 13-15. 22-24 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
2
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
3
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
4
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! – பல்லவி
13
அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
14
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15
நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. – பல்லவி
22
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24
ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். – பல்லவி
இரண்டாம் வாசகம்
இறந்த இயேசு கிறிஸ்துவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து, நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும் அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 20: 29
அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.
எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.
தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
ஆண்டவரின் அருள்வாக்கு.
வாழ்வைப் பலியாய் மாற்ற வந்தேன் என்னையே ஏற்றிடுவாய் 🎼
முழுமனதுடனே கையளிக்கின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய்
கோதுமை மணியும் திராட்சைக் கனியும் புது உரு பெறுவது போல் - 2
அன்பும் அமைதியும் நீதியுமே மனிதனில் மலர்ந்திட உயிர் தருவாய் - 2
நான் வாழ பிறரும் பிறர் வாழ நானும் தேவை என்றுணர்ந்தேன் - 2
சமத்துவ சோதர நோக்குடனே புதுயுகம் காண்போம் அகத்தினிலே - 2
சம்மதமே இறைவா சம்மதமே தலைவா - உன்🎼
மாலையிலே ஒரு மலராகவும் பாலையிலே சிறு மணலாகவும்
வாழ்ந்திட சம்மதமே இறைவா மாறிட சம்மதமே
தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே
உம் பணிக்காகவே வாழ்ந்திட வரம் தருவாய் - 2
கருவாக எனைப் படைத்து உயர்
கண்மணியாய் எனை வளர்த்து - 2
கரமதிலே உருப் பதித்து கருத்துடனே என்னைக் காக்கின்றாய்
மலையாய் நான் கணித்த பெரும் காரியமும்
உயர் காவியமும் மறைந்தே போனது - 2
திருவாக உனை நினைத்து உயர்
உறவாகவே நெஞ்சில் பதித்து - 2
உன் பெயரைச் சாற்றிடவே
நலம் தரவே என்னை அணைக்கின்றாய்
இரக்கத்தின் ஆண்டவரே எம்மீது இரக்கம் வையும் - 2🎼
அளவில்லா இரக்கம் கொண்டவரே
அனுதினம் எம்மை ஆள்பவரே
ஆறுதல் என்னில் தருபவரே
அமைதியை என்னில் அளிப்பவரே
ஆபத்தில் உதவும் தூயவரே
அழைத்திடும் போது வருபவரே
அழுகையில் ஆறுதல் தருபவரே
அன்பாய் தேற்றி அணைப்பவரே
துன்புறுவோர் துயர் துடைப்பவரே
துணை வந்து எம்மை ஆள்பவரே
நிம்மதி வாழ்வில் தருபவரே
நீங்காதென்னில் நிலைப்பவரே
கண்ணீர் யாவும் துடைப்பவரே
கருணைக் கண் நோக்கிப் பார்ப்பவரே
நிலவாய் இதயத்தில் இருப்பவரே
நீங்காதென்னில் வாழ்பவரே
பாவங்கள் என்னில் தீர்ப்பவரே
பாசத்தை என்மேல் பொழிபவரே
நீதியை என்னில் தருபவரே
நிம்மதி நிலவிடச் செய்தவரே
தாயாய் என்னைக் காப்பவரே
தந்தையாய் என்னை அணைப்பவரே
வருகை பாடல்