பொதுக்காலம் மூன்றாம் வாரம் - ஆண்டு 1
இறைவார்த்தை ஞாயிறு
இறைவார்த்தை ஞாயிறு
Click on the 🎼 button to listen to the hymn.
வருகை பாடல்
இணைவோம் இயேசு பெயரில்
இறைவனின் அன்பில் இறைமக்களாவோம்
கிறிஸ்துவில் இன்று புது வாழ்வு காண்போம் (2)
ஆ... ஆ... ஆ... ஆ...
1. உலகம் எல்லாம் ஓர்குலமாய்
இணைந்திட இறைவன் நினைத்தாரே - அது
நனவாகிட நம்மில் நிறைவேற்றிட (2)
அன்பாலே தேர்ந்தெடுத்தார்
2. கோடான கோடி மாந்தரிலே
கோமகன் நம்மை தேர்ந்தாரே
அவர் அன்பானது நம் உயிரானது (2)
அன்பாகச் சேர்ந்திடுவோம்
முதல் வாசகம்
பிற இனத்தார் வாழும் கலிலேயாவில் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 1-4
முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார்.
காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.
மிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? – பல்லவி
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். – பல்லவி
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. – பல்லவி
இரண்டாம் வாசகம்
நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-13, 17
சகோதரர் சகோதரிகளே,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.
என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’ என்றோ ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ ‘நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ, ‘நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ சொல்லிக்கொள்கிறீர்களாம்.
கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்தி வாசகம்
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார்; எசாயா இறைவாக்கு இவ்வாறு நிறைவேறியது.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-23
அக்காலத்தில்
யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:
‘‘செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.”
அதுமுதல் இயேசு, ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார்.
இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ‘‘என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
என்னிடத்தில் ஒன்றும் இல்லை (2)
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க
ஏதொன்றும் சொந்தம் இல்லை
பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை (2)
1. கண்களை நான் தந்திருப்பேன்
கண்களுக்கோ பார்வையில்லை (2)
இறைவா உன் பாதத்தில்
உள்ளத்தை நான் வைக்க
உள்ளத்தில் ஞானம் இல்லை
காய்ந்தே போனேன் (2)
கண்ணீரும் கண்ணில் இல்லை
2. நெஞ்சக்குள்ளே வந்துவிடு
நிம்மதியை தந்துவிடு (2)
நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்
நெற்றிக்கு முத்தம் கொடு
நீயே என்னை காணிக்கை பெற்றுக் கொடு
காய்ந்தே போனேன் (2)
கண்ணீரும் கண்ணில் இல்லை
எனது நிழலாய் தொடரும் உறவாய் 🎼
என்னை கண்டு கொண்டாய்
வாழ்வு முழுதும் விலகிடாமல்
என்னிலே இணைந்தாய்
உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா (2)
நாளும் பொழுதும் என்னைத் தேடி (2)
நீயும் உடனிருந்தாய் (2)
1. இதயம் எழுப்பும் ஓசை கூட
உனது உள்ளம் அறிந்திடும்
இமைகள் மூடும் ஒலியை கூட
உனது உணர்வும் புரிந்திடும் - 2
உந்தன் வருகை எந்தன் வாழ்வில்
வளமை என்றும் தந்திடும் - 2
பாதை தெரிந்தே விலகினாலும் - 2
கரங்கள் தானே காத்திடும் - உன
கரங்கள் தானே காத்திடும்
எனது சொந்தம் நீயே ஆனால்,
எனது சுமைகள் மாறிடும்.
எனது பலனே நீயே ஆனால்,
எனது பயமும் மாறிடும் - (எனது நிழலாய்)
2. பூவை போல மென்மையாக
என்னைத் தாங்க நின்றாய்
வாசம் நல்கும் சுவாசமாக
என்னில் நீ கலந்தாய் - 2
அன்பே உனது விருந்தில் நாளும்
புதிய ஆற்றல் காண்கிறேன் - 2
அருளை தந்து வாழ்வில் இணைந்தால் (2)
புதுமையாகி போகின்றேன் - 2
எனது வரமே நீயே ஆனால்,
எனது கவலை மாறிடும்,
எனது ஜீவன் நீயே ஆனால்,
எனது வாழ்வும் மாறிடும் - (எனது நிழலாய்)
என் ஆன்மா இறைவனையே
ஏத்திப் போற்றி மகிழ்கின்றது
என் மீட்பராம் கடவுளை நினைக்கின்றது
1. தாழ்நிலை இருந்த தம் அடியவளை
தயையுடன் கடைக்கண் நோக்கினார் (2)
இந்நாள் முதலாம் தலைமுறைகள் (2)
எனைப் பேறுடையாள் என்றிடுமே
2. ஏனெனில் வல்லமை மிகுந்தவரே
எனக்கரும் செயல்பல புரிந்துள்ளார் (2)
அவர்தம் பெயரும் புனிதமாகும் (2)
அவரில் அஞ்சுவோர் கிரக்கமாகும்
வருகை பாடல்