மனமும் புத்தியும் கிழித்த நேர்க்கோட்டில் நின்று எப்போதும் நிஜம் பேசுபவர் எழுத்தாளர், ஒளி ஓவியர், இயக்குநர் தங்கர் பச்சான். இது, முந்திரிக்காட்டு மண்வாசம் அடிக்கும் அவருடைய எழுத்துப் பாசனம்…
இதை எல்லாம் எதுக்கு எழுதணும்? எழுதலேன்னா என்னாகும்? ஏன் எழுதலேன்னு யாராவது கேட்கப் போறாங்களா? இருந்தாலும் எழுதப் போறேன். எழுதி வெளியில தூக்கிப் போட்டாத்தான் நிம்மதியா இருக்க முடியும்னு மனசு சொல்லுது. கண்டும் காணாமப் போவது, நல்லா நின்னு நிதானமாப் பார்ப்பது, பார்க்கவே வேணாம்னு முடிவு செய்து எதைப் பத்தியும் கண்டுக்காமப் போய்ட்டே இருப்பதுன்னு நானும் இருக்கப் பார்க்கிறேன், முடியல. இருக்கிற வேலையைப் பார்க்குறதுக்கே நேரம் பத்தல. திரைப்படக் கல்லூரி கடைசித் தேர்வு எழுதிய சமயம், கடைசி வரியை எழுதி முடிச்சுட்டு, அந்த முருகனையும் குலதெய்வம் பச்சைவாழி அம்மனையும் கும்பிட்ட கும்பிடு எனக்குத்தான் தெரியும்.
‘எப்பா… ஆளை விடுங்கடா சாமி. இனிமே எவனும் என்னைப் படிடா, பரீட்சை எழுதுடானு சொல்ல முடியாதுல்ல. அது போதும்டா. வேலை கிடைக்காட்டாலும் பரவாயில்லை. பச்சத் தண்ணியக் குடிச்சுட்டு வாழ்ந்துடலாம்’னு அன்றைக்கு ஓடி வந்தவன்தான் நான்.
இப்போ வகையா, ’தி இந்து’ தமிழ் நாளிதழ்கிட்டே மாட்டிக்கிட்டேன். தினமும் காலையில எழுந்து மகிழ்ச்சியா செய்தித்தாள் படிச்சதுபோய், இப்போ இந்த பேப்பரைப் பார்த்தாலே பயம் வர்ற மாதிரி ஆசிரியர்க் குழு பண்ணிடுச்சு. ஏற்கெனவே பத்து பனிரண்டு சினிமா கதை, இருபது சிறுகதைகள், அதுபோக இரண்டு நாவல் இவை எல்லாத்தையும் இந்த சின்ன மண்டைக்குள்ளே வெச்சுக்கிட்டு அலைஞ்சுக்கிட்டு இருக்கேன்.
அதை எல்லாம் எப்போ வெளியில கொண்டாந்து போடப் போறோமோனு பெருங்கவலையோடு இருக்கிற நேரத்தில், எந்த வேலை எப்படி கெடந்தாலும் வாரா வாரம் ‘சொல்லத் தோணறதை' எழுதித் தான் ஆகணும். மரத்தில் தொங்குறது, சருகுக்குள்ளேக் கிடக்கிறது, பழுத்து விழுந்து கிடக்கறதுனு முந்திரித் தோப்புல வெயிலு மழைனு பார்க்காம, ஒவ்வொரு முந்திரிக் கொட்டையாக் கொண்டாந்து சேர்க்குறது மாதிரிதான் இந்த எழுதுற வேலையும். பார்த்தது, கேட்டது, அனுபவிச்சதுனு மண்டைக்குள்ளே தூங்கிட்டுக் கிடக்கிறதை எல்லாம் பீராய்ஞ்சி எடுத்துட்டு வந்து எழுதிக் கொடுக்கணும்.
திடீர்னு வந்து அடிச்சுக்கிட்டுப் போற காட்டு வெள்ளம், நல்லது கெட்டது பாத்தா அடிச்சுட்டுப் போவுது? அப்படித்தான் வேண்டியவன், வேண்டாதவன்னு பாக்காம காலம் வாழ்நாளை முடிச்சுடுது.
சொந்த வேலைகளைப் பார்த்தாலும், சொந்தக் குடும்பத்தைப் பார்த்தாலும் மத்தவங்களையும் கொஞ்சம் நெனைச்சுப் பார்க்கணும். அப்படி எல்லாம் நெனச்சுப் பார்த்ததைத்தான் எழுதப் போறேன். யார் மனசாவது வலிக்குமே, யாராவது கோபப்படுவாங்களேனு நினைச்சா உண்மையை பல நேரம் சொல்ல முடியாமலே போயிடும். ஒரு மனுஷனுக்கு நம்மை பிடிக்காமப் போகணும்னா உண்மையை பேசிட்டாப் போதும். உண்மை மாதிரி சுடுறது வேற எதுவுமே இல்லீங்க. பொய்யையும், உங்களுக்குப் பிடிக்கிறதை மட்டும்தான் எழுதணும்னா அதுக்கு நான் தேவையில்லை. நான் எழுதப் போறது என் மனசுல மட்டும் தோணியது இல்லை. எல்லோருக்குமே அடிக்கடி மனசுல வந்துட்டுப் போறதுதான். மனசில் தோணுற நல்ல விஷயத்தை எல்லாம் நமக்குள்ளேயே எழுதி வெச்சுக்க முடியாது. அதை யாரோ ஒருத்தர் எழுதலாம். அதை உங்களோடு பகிர்ந்துக்கலாம். அதைத்தான் நான் செய்யப் போறேன்.
சரி, எழுதிப் பாத்துட வேண்டியது தான்னு ஒப்புக்க ஆரம்பிச்ச ஒடனே, படத்துக்கு என்ன செய்யலாம்ன்னு ஒரு கேள்விய அவுத்து உடறாங்க! சினிமாப் படமுன்னா நானே எழுதி, படம் புடிச்சி இயக்கி தயாரிச்சி டுவேன். ஓவியம் வரையிற அளவுக்கு எனக்கு தேர்ச்சியில்லன்னு சொன்னப்புறம், நீங்க எடுத்தப் படம் இருக்குமே... அதக் குடுங்களேன்னு கேக்கறாங்க.
முப்பது வருஷத்துக்கு முன்னாடியி லிருந்து, கண்ணுல படறத... கைய்யில இருந்த சின்னச் சின்ன தொழில்நுட்பத் திறன்ல வலு இல்லாத கேமராவ வெச்சி யும் கைப்பேசியிலும் எடுத்தப் படங்கள... உக்காந்து தேடிப் பாத்தேன். விவசாயி கண்ணு ரோட்டுல கெடக்கிற சாணி வீணாப் போறத பாக்கப் புடிக்காம காலாலேயே மண்ண சேத்து ஒரு தள்ளுத் தள்ளி, அப்பிடியே ரெண்டு கையாலேயும் உருட்டிட்டு வந்து வீட்டுக் குப்பைக் குழிக்குள்ளப் போட்டு சேத்து வைக்கிற மாதிரிதான் நானும் அந்த நேரத்துக்கு முக்கியமாப் பட்டதெல்லாம் எடுத்துவெச்சி சேத்து வெச்சிருக்கேன்.
ஒவ்வொரு வாரமும் எழுதப்போறத் தலைப்புக்கு ஏத்த படங்கள எடுத்துப் பயன்படுத்திக்கலாம்னு இப்போதைக்கு மனசுக்கு சமாதானம் சொல்லிக்கிட்டேன்.
******************************************************
நான்கு வயதில் நான் பார்த்த முதல் சினிமா ‘பெற்றால்தான் பிள்ளையா’. மாடு மேய்க்கும்போதும் பள்ளிக்குப் போகும்போதும் தோளில் வானொலிப் பெட்டியோடு அலைந்தவன்.
எனக்குத் தெரியாத பாடல்களே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். 5-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என்னை, எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் அழைப்பதாக கூட்டிக்கொண்டுப் போனார்கள். அனைத்து ஆசிரியர் களுக்கும் இடையில் சின்னஞ் சிறுவனாகிய என்னைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
‘ஆகாய வீதியில்… அழகான வெண் ணிலா…’ இது எந்தப் படத்தின் பாடல்? யார் யார் பாடினார்கள் என்று கேட்டார் கள். அவர்களுக்குள்ளான பந்தயத்தில், என் பதிலை வைத்து ஒரு முடிவுக்கு வரக் காத்திருந்தார்கள்.
சற்றும் யோசிக்காமல், படம் ‘மஞ்சள் மகிமை’. பாடியவர்கள் பி.சுசீலா, கண்டசாலா எனச் சொன்னதும், தமிழாசிரியர் சுப்பிரமணியம் என்னைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரியான பதிலைச் சொன்னதற்காக 5 ரூபாயைப் பரிசாகக் கொடுத்தார்கள்.
‘பத்திரக்கோட்டை தங்கராசு’ என்று சொல்லாத வானொலியே அந்த நாளில் இல்லை. ரேடியோ மாஸ்கோ (ரஷ்யர), ரேடியோ பீகிங் (சைனா), ரேடியோ வெரித்தாஸ் (மணிலா), ரேடியோ கோலாலம்பூர் (மலேசியா), இலங்கை வானொலி, ரேடியோ பிபிசி என அனைத்து வானொலிகளுக்கும் கடிதம் எழுதி, என் பெயரைக் கேட்பதிலேயே அப்போது என் காலம் கழிந்துகொண்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கே எழுந்து உட்கார்ந்துகொண்டு ரேடியோ கோலாலம்பூர் கேட்க ஆரம்பித்துவிடு வேன். பாதிப் பாடல்தான் தெளிவாகக் கேட்கும். மீதியைக் கேட்க கண்களை மூடிக்கொண்டு அதன் கொர... கொர... சத்தத்தோடு கற்பனையில் நானும் ஒன்றிவிடுவேன்.
என் பெரிய அண்ணன் மெட்ராஸ் மூர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்திருந்த இங்கிலாந்து வால்வு ரேடியோதான் எனக்குத் தோழனாக இருந்தது. எப்படியும் குறைந்தது 15 கிலோ எடை இருக்கும். ஒரு நிலையில் வைத்தால் பாடல் தெளிவாகக் கேட்காது என்பதால், எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்து, பின் தலைகீழாகவும் கவிழ்த்து வைத்துவிடுவதும் உண்டு. இந்த வானொலிப் பெட்டியைப் பாடாய்ப்படுத்தியதாலேயே என் அண்ணன்களிடம் கணக்கில்லாத அடி, உதை வாங்கியிருக்கிறேன். அழகுப் பெட்டகமாக இருந்த வானொலிப் பெட்டி அதன் கடைசிக் காலத்தில் உருக்குலைந்து, மேல்பகுதி இல்லாமல் வெறும் எலும்புக்கூடாகக் கிடந்தும்கூட அதனால் முடிந்தவரை பாடிக்கொண்டேதான் இருந்தது.
இருப்பதிலேயே மிகப் பெரிய சவுக்கு மரத்தினை வெட்டிவந்து, அதன் உச்சியில் ஒரு கம்பியைக் கட்டி, ஒயர் ஒன்றினை இணைத்து ஏரியல் ஏற்பாடு செய்திருந்தோம். செடிக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுவதைப் போல் வானொலிப் பெட்டியில் இருந்து தரைக்குள் இழுத்து புதைக்கப்பட்ட ஒயருக்கும் தண்ணீர் ஊற்றுவது தினசரி என் முதல் கடமையாக இருந்தது.
எல்லாப் பிள்ளைகளும் நேரத்துக்கு பள்ளிக்குச் சென்றுவிட்டாலும் நான் மட்டும் எதையோ படிக்கிற மாதிரியோ, எழுதுகிற மாதிரியோ பாவனை செய்தபடி வானொலியின் காலை இறுதி நிகழ்ச்சியான ’பொங்கும் பூம்புனல்’ பாடல்களைக் கேட்டுவிட்டுத்தான் பல நாட்கள் பள்ளிக்குப் போயிருக்கிறேன். பாவிகள்! காலை 9.30-க்குத்தான் நல்ல நல்லப் பாடல்களாக ஒலிபரப்புவார்கள். அதிலும் இந்த இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா வந்து விட்டால் அன்றைக்கு எந்தப் பரீட்சை யாக இருந்தாலும் அந்த இடத்தைவிட்டு நகரவே மாட்டேன். என் தொல்லை தாங்காமல் ஒருநாள் என் அப்பா, விறகு உடைக்கும் கோடாரியோடு வந்துவிட்டார். சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டு இறுதியாக பாடிக்கொண் டிருந்த இங்கிலாந்து வானொலிப் பெட்டியைப் பார்த்து கோடாரியாலேயே ஒரு போடு போட்டார். அன்றோடு அதன் ஆயுள் முடிந்தது.
எப்படி ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகி உயிரோடு இணைந்துவிட்ட காதலியை மறக்க முடியாதோ, அப்படித்தான் நானும் என் வானொலிப் பெட்டியை மறக்க முடியாமல் அலைந்தேன். இன்று நான் போகிற இடங்களில் எல்லாம் அலுவலகமானாலும், வீடானாலும் எல்லா அறைகளிலும் வெவ்வேறு வடிவங்களில், உருவங்களில் பாடல்களைக் கேட்கும் கருவிகள் இருந்தாலும் எதிலும் நாட்டமில்லை. என் மனது இளம் பருவத்திலேயே சிக்கித் தவிக்கிறது. அழகுத் தமிழ் பேசி ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லி ஒலிபரப்பும் அறிவிப்பாளர்களின் குரல் கேட்க மனம் அலைகிறது.
பண்பலை எனச் சொல்லி இன்று என் மொழியை சீர்குலைத்து கொலை செய்யும் போக்கினைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறேன். வானொலியைத் தொடவே அச்சமாக இருக்கிறது. தமிழை ஆங்கிலம் மாதிரி உச்சரிப்பதும், ஆங்கிலத்தோடு கலந்து பேசுவதும்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?
ஒரு மொழி என்பது காலம் காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் இனத்தின் சொத்து. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் அறிவு எதுவுமே இல்லாமல் இவர்கள் பணம் பறிப்பதற்காக இந்தப் பிழைப்பு பிழைப்பதை எவ்வாறு அனுமதிப்பது? இந்தக் கூட்டத்தைப் பார்த்து தனியார் தொலைக்காட்சிகளும் இந்த மொழிக் கொலையைச் செய்கின்றன. பணம் கொடுத்து, எவ்வளவு விலையானாலும் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என்பது மாதிரி மொழியை விலைக்கு வாங்கிவிட முடியுமா?
ஒருத்தரும் இதைப் பற்றி சிந்திப்பது இல்லை; பேசுவதும் இல்லை; கண்டனக் குரல் எழுப்புவதும் இல்லை. அடித்தட்டு மக்களிடத்தில்தான் தமிழ் கொஞ்சமாவது பிழைத்திருந்தது. இப்போது இந்த மொழிக் கொலையால் மேலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் மக்களும் அது போலவே வேறுமொழி கலந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இவர்களின் பேச்சு போலவேதான் இவர்கள் ஒலிபரப்புகிற பாடல்களும் இருக்கிறது. பேசுகிறார்களா? பாடுகிறார் களா? அது எந்த மொழிப் பாடல்? எதைப் பற்றி பாடுகிறான்? யாருக்காகப் பாடு கிறான் என்று எதுவுமே புரியாமல் எல்லா தனியார் வானொலிகளும் இதையே தான் போட்டு கத்திக்கொண்டிருக் கிறார்கள். அதிலும் ஒரு வானொலி தமிழ் மக்களைப் பார்த்து மச்சான் (மச்சி) எனச் சொல்லி அழைக்கிறது. ஒரு நடிகை தமிழர்களைப் பார்த்து மச்சான் என அழைக்கிற மாதிரி இரண்டுமே வடநாட்டு கைங்கர்யம்தான்.
நானும் நீங்களும் இப்படிப்பட்ட வானொலிகளிடமிருந்து தப்பித்துவிட லாம். நம் மொழி தப்பிக்க என்ன செய்யப் போகிறோம்?
*********************************************************
03-சுதந்திரம் கொடுத்த நட்டமில்லாத் தொழில்
ஆடிப் பட்டத்தில் விதைப்பதற்காக உழவர்கள் நிலத்தைச் சீர்செய்து, தயார்படுத்தி ஆடி மாதம் எப்போது வரும் எனக் காத்திருப்பது போல் அரசியல்வாதிகள் தேர்தலுக்காகக் காத்திருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் வரப் போகும் மாதங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என்னென்ன கணக்கு போட்டு? எப்படியெல்லாம் ஆள்பிடித்து? யார் யாருக்கு எதை எதைக் கொடுத்து? எப்படியெல்லாம் வாக்காளர்களைத் தங்கள் வலையில் வீழ்த்தலாம் என்கிற கணக்கு தொடங்கிவிட்டது.
24 மணி நேரத்தில் தூங்குகிற நேரம் போக மற்ற நேரங்கள் முழுக்க இந்த மண்ணுக்கும், இனத்துக்கும், மொழிக்கும், மக்களுக்கெல்லாம் எந்தெந்த விதங்களில் நன்மைகளைச் செய்யலாம் எனச் சிந்திப்பதைவிட, எப்படி எல்லாம் தங்களின் பெருமைகளைப் பறைசாற்றிப் பீற்றிக்கொள்வது, மற்றவர்களின் செயல்பாடுகளைக் குற்றம் சொல்வது, எந்தக் கட்சியும் தங்களுடைய கட்சியை மிஞ்சாமல் பார்த்துக்கொள்வது, இதுபோக முக்கியமாக எவ்வாறு மக்களைத் தங்களின் கட்சியின் வலையில் விழவைப்பது எனச் சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அரசியல் என்பது தொண்டாக இருந்தது மாறிப் போய், முதலீடு இல்லாமல், நட்டத்தைச் சந்திக்காத, மிகப்பெரும் வியாபாரமாக மாறிப்போனதுதான் நம் மக்களாட்சியின் மிகப்பெரும் சோகம். அளவுக்கு அதிகமாகக் கோடி கோடியாகப் பணம் குவிக்க, மற்றவர்களை மிரட்ட, விரும்பியபடி எல்லாம் குற்றங்களைச் செய்ய, செய்த குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள என இவைகளுக்காகவே பெரும்பாலும் மேலும் மேலும் அரசியல் கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
எதற்கெல்லாமோ சட்டம் இயற்றுபவர்கள், எல்லா மாற்றங்களையும் பற்றி பேசுபவர்கள் இதற்கென்று ஒரு சட்டத்தை உருவாக்குவார்களா? இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி, ஆளாளுக்கு ஒரு பத்திரிகை என நடத்துகிறார்கள். எவ்வாறு நேர்மையான செய்தியையும் நியாயமான கருத்துகளையும் மக்களுக்கு அவர்களால் தர முடியும்? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போன்ற தேர்தல் அரசியலுக்குள் களம் இறங்குபவர்கள் ஊடகத்தைக் கைக்குள் வைத்திருக்கக்கூடாது. எந்த ஒரு தொலைக்காட்சியோ, பத்திரிகையோ, வானொலியோ தொடங்கக்கூடாது. 10 விழுக்காடு முதலீடு செய்த பங்குதாரராகக் கூட இருக்கக்கூடாது. இதே போல் நம்நாட்டிலும் சட்டத்தை உருவாக்குவார்களா? இவர்களிடம்தானே நாடாளுமன்றம் இருக்கிறது.
குடிக்கும் நீரிலிருந்து, நமக்கு உணவளிக்கும் மண்ணிலிருந்து, உயிர் வாழத் தேவையான உள்ளிழுக்கும் காற்றிலிருந்து எல்லாவற்றையுமே நாசமாக்கிவிட்டார்கள். இவற்றை எல்லாம் செய்யச் சொன்னவர்கள், அனுமதி கொடுத்தவர்கள், திட்டம் தீட்டியவர்கள் எல்லாம் யார்? அன்றாடங்காய்ச்சி களாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு திரியும் இந்த மக்களா செய்தார்கள்?
சரிந்துபோன தங்களின் வாக்குவங்கியைச் சரிசெய்துகொள்ளவும், மேலும் தங்களின் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவும் கொண்டுவருகிற திட்டங்களால் இந்த மக்களின் எதிர்கால வாழ்வு, எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதாகவே இருந்ததன் விளைவுதானே இந்நிலைக்குக் காரணம்!
எந்தக் கட்சி எப்போது மாநாட்டு அறிவிப்பை வெளியிடுவார்களோ என அஞ்ச வேண்டியிருக்கிறது. இந்த மாநாடுகள் சொல்லும் சேதி என்ன? இங்கே பாருங்கள்… ‘எங்களுக்கு இவ்வளவு கூட்டம் உண்டு. எங்களைச் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; எங்கள் செல்வாக்கைப் புரிந்துகொள்ளுங்கள்’ என மக்களை மிரட்டும் செயல்தானே தவிர, வேறென்ன?
தேர்தல் என்பதை மக்களுக்கும் ஒரு வருமானம் தரும் நாளாக மாற்றியதில் பலருக்கும் பங்கு உண்டு. இனி, இந்தக் கூட்டத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது. கிடைத்தவரை லாபம், வாங்கிக்கொள்வதால் அவர்களுக்கு எந்த நட்டமும் இல்லை. நம்மை வைத்துப் பணம் சம்பாதிப்பதற்குத்தானே இதைத் தருகிறார்கள் என்கிற மனநிலைக்கு மக்களும் பக்குவப்பட்டுவிட்டார்கள். மக்களையும் தங்களின் கொள்ளைக்கு துணைச் சேர்த்துக்கொண்டதைப் பார்த்துக் கொதித்தெழும் செயலுக்கு இங்கு எந்தப் பதிலும் இல்லை.
உண்மையில் மக்கள் நலன் குறித்து, அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திப்பவர்களை ஊடகங்களும் கண்டுகொள்வதே இல்லை. இதனால், மக்களும் இதனை உணர்வதில்லை. இதனாலேயே உண்மையில் மக்களுக்கானவர்கள் யாரோ, அவர்கள் இந்தத் தேர்தல் அரசியலுக்குள் வந்து பாழ்பட்டுப்போவதை விரும்பாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். பணபலம் இல்லாமல் இங்கு எதனையும் செய்ய முடியாது எனும் மனநிலைக்குத் தள்ளப்பட்டு ஒதுங்கிவிடுவது போல், அவர்களின் கருத்தினைப் பின்பற்றி மக்களுக்குப் பணியாற்ற வருபவர்களும் ஒதுங்கிவிடுகிறார்கள்.
தன்னைப் போல தங்களுடன் இருந்த சாதாரணமானவர்கள் இன்று அரசியல் கட்சிகளில் சேர்ந்து அதனை ஒரு தொழிலாகவே நடத்திப் பணம் குவிப்பதைக் கண்டு, மனசாட்சிகளை உதறித் தள்ளிவிட்டுத் தாங்களும் வெள்ளை உடை உடுத்தி வெளிப்படையாகத் தெரிந்தும் தெரியாத மாதிரிச் சட்டைப் பையில் தங்கள் தலைவரின் படத்தை வைத்துக்கொண்டு, கொடியுடன் தொழிலுக்குப் புறப்பட்டு விடுகிறார்கள்.
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கிற மும்முரமான வியாபாரம்... அரசியல் எனும் தொழில்மட்டும்தான்!
அந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்தத் தொழிலையும் தொடங்கி விடலாம். எதையும் சாதித்துவிடலாம் என்கிற நிலையைத்தான் இந்தச் சுதந்திரம் நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒரு சில வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டது போல், ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்தத் தேர்தல் அரசியலால் ஆண்டு கொண்டிருக்கின்றன. இதில் சுதந்திரம் எனச் சொல்லப்படுகிற விடுதலை என்ன சாதித்துக் கொண்டிருக்கிறது?
நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைப் பேர் மக்களுக்காக உழைப்பதற்காகவே சென்றிருப்பார்கள் என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. அப்பழுக்கற்ற, தூய்மையான எண்ணத்தோடு மக்களுக்குப் பாடுபடுவது என்ற எண்ணத்தோடு மட்டுமே உருவாக்கப்பட்ட தேர்தலில், ஒரு ரூபாய் கூடச் செலவழிக்க முடியாத ஒருவர்… இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா? இது என்னுடைய கேள்வி மட்டுமே அல்ல; வாக்குகளைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வோர் இந்திய வாக்காளனும் கேட்டுக்கொண்டிருக்கிறான்.
வெள்ளையனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோடித் தலைவர்களின் ஆன்மா, நிச்சயம் அரசியலை ஒரு தொழிலாக மாற்றிவிட்டவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கும் என நினைக்கிறேன். ஒருவேளை கேட்டால்… ‘ஆமாம்! தொழில்தான் செய்கிறோம்’ என அவர்களையாவது மதித்து உண்மையை ஏற்றுக்கொள்வார்களா?
----------------------------------------------------------------------------------------
04-மறந்துடாதீங்க!
இப்ப எல்லாருக்கும் எந்த வேலை இருக்கோ தெரியாது! கட்டாயம் ஒரே ஒரு வேலையை செஞ்சே ஆகணும். மத்த வேலையா இருந்தா செய்ய லாம், செய்யாம விட்டுட்டும் போகலாம். இதை செய்யாமப் போனா வீட்டுக்காரம்மா சாப்பாடுப் போடாது. முன்னெல்லாம் முன்னாடி 40 வயசுக்கு மேல இருக்கறவங்க தான் நடக்க ஆரம்பிச்சாங்க. இப்ப இருவத்தஞ்சு வயசுப் பசங்கல்லாம் தெருவுல எறங்கிட்டாங்க. ஏதோ மக்கள் போராட்டத்துக்குத்தான் தெருவுல எறங்கிட்டாங்கன்னு நெனைக்காதீங்க. எல்லாரும் அவுங்க அவுங்க உயிரக் காப்பாத்திக்குறதுக்குத்தான்!
இதெல்லாம் நம்மூர் சமாச்சாரமே இல்ல. வெள்ளக்காரன் குடுத்துட்டுப் போனதுல இதுவும் ஒண்ணு. அப்பல்லாம் சினிமா நடிகருங்க மட்டும்தான் உடம்பைக் கட்டுப்கோப்பா வெச்சிக்கணும்னு கர்லாக் கட்டை சுத்தறதுன்னும், குஸ்திக் கத்துக்கற துன்னும் இருந்தாங்க. கொஞ்சம் கிராமங் கள்ல இருக்குற இளவட்டப் பிள்ளைகள் இதை செஞ்சாங்க. இப்ப ஏறக்குறைய எல் லாருமே அவுங்க மாதிரிதான் ஆயிட்டாங்க.
கருக்கல்ல சூர்ய வெளிச்சம் பூமியில படறதுக்கு முன்னாடி நாலரை மணிக் கெல்லாம் ஆரம்பிக்கிற ஓட்டம் ஒன்பது, பத்து வரைக்கும் கூட போய்ட்டிருக்கு. சின்ன வயசுல போட்ட கால் சட்டையை, நரை விழுந்த வயசுலேயும் போட வெச்சிட்டான் வெள்ளக்காரன்.
இந்த நடைப்பயிற்சிய முதன்முதலா எப்போப் பாத்தேன்னு எனக்கு நெனப்பு இல்ல. நிச்சயமா சினிமாவுலதான் பாத்து ருக்கணும். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துல சுஹாசினி ஓடி வர்றதுதான் ஞாபகத்துக்கு வருது. 40 வயசுல நான் மறுபடியும் கால்சட்டையைப் போட ஆரம்பிச்சேன். என்னோட ஓடிக்கிட்டிருந்த எந்த முகமும் தெரிஞ்சதா இல்ல. ஊர்ல தொலைஞ்சுபோன ஆடு, மாடைத் தேடறப்ப ஓடுற மாதிரியும், ஏதோ தொலைஞ்சுப்போன நகையையோ, காசையோத் தேடற மாதிரியும், சில பேர் தலைக்கு மேலப் பறந்து போற ஏரோப்ளேனப் பாத்துக்கிட்டே ஓடுற மாதிரிதான் நடந்துக்கிட்டிருந்தாங்க.
நாள்பூரா செருப்பில்லாதக் காலோட கொதிக்கிற பொட்ட மண்ணுலேயும் கல்லுலேயும் முள்ளுளேயும் நடந்துட்டு, நாலு மைல் நடந்து ஓடி சினிமாப் படம் பாத்துட்டு வந்து, தூக்கத்திலேயே சாப்புட் டுட்டு அசந்து விழற ஒடம்ப, அதிகாலை நாலு மணியிலிருந்தே அம்மா எழுப்ப ஆரம்பிச்சிடுவாங்க. கூழுக் கலயத்தோடவும் முந்திரிப்பழம் பொறுக்க தட்டுக்கழி யோடவும் கருக்கல்லேயே நாலு மைல் தூரம் நடந்து போனதுதான்… அப்ப எனக்கு ஞாபகத்துக்கு வந்திச்சி.
நண்பர்களோட, அண்ணன் தம்பியோட சினிமாவுக்கு நடந்து ஓடினதும், தெருக் கூத்துப் பாக்கறதுக்காக தீப்பந்தத்தையும், டயரையும் கொளுத்திப் புடிச்சிக்கிட்டு காட்டு வழியா அப்பாவோட சாதாரணமா 10 மைல் நடந்து போனதும், ஒருமுறை ஆனத்தூர் சீனிவாசன் சொல்லிட்டாருன்னு பள்ளிக்கூடத்துக் குக்கூட மத்தியானத்து மேலப் போவாம, குறுக்குவழியா 20 மைலுக்கு மேல நடந்து, கட்டு சோத்தோட அப்பாவுடன் உளுந்தூர் பேட்டைக்குப் பக்கத்துல தெருக்கூத்துப் பாக்கப் போன தெல்லாம் மனசுக்கு மகிழ்ச் சியா இருந்துச்சு. தூங்குற நேரத்துல இந்த வயசுல ஒடம்ப குறைக்கறதுக்காக எழுந்து ஓடுன்னா… எப்படி இருக்கும்? நெறைய்ய நண்பர்கள் சேர்ந்துட்டதால, ஆரம்பத்துல இருந்த தயக்கமும், கூச்ச மும், சோம்பேறித்தனமும் கொஞ்ச நாள்ல காணாமப்போச்சு.
ஒவ்வொருத்தரும் பிரச்சினைகளுக்கு மேல பிரச்சினையோட வாழ்க்கைய ஓட்டிக் கிட்டிருக்கிறதெல்லாம் போய், தொந்தி தொப்பையப் பாத்துப் பாத்து ஒடம்பக் கொறைக்கறதை நெனைச்சுக் கவலைப் படறதே பெரும் பிரச்சினையாப் போச்சு.
மனுசன் உடலுழைப்ப நிறுத்தினான். மருந்துக் கடையும், மருத்துவமனையும் பெருகிப்போச்சு. இயந்திரங்கள்கிட்ட வேலையைக் குடுத்துட்டு உக்கார ஆரம்பிச்சாச்சு. ஆம்பிளைங்கதான் அப்பிடி உருண்டு புரண்டு ஓடி, ஒரு நாலு சொட்டு வேர்வையப் பாத்து சந்தோஷப்படறோமுன்னா, பாவம்… நம்மப் பொம்பளைங்க நெலமை படுமோசம். ‘குனிஞ்சு நிமிர்ந்து எவ்வளவு நாளாச்சு’ன்னுக் கேட்டா, ‘அதெல்லாம் ஞாபகம் இல்லே’ன்னுதான் பதில் வருது.
வீட்டுக்காரரு அதிக நாள் வாழ்ந்தாப் போதும்ன்னு நெனைக்கிறாங்க அவங்க. தன்னோட உடம்பு நல்லா இருந்தாப் போதுமா, மனைவியும் நல்லா இருக்கட்டு மேன்னு கொஞ்சம் பேரு அவுங்களையும் இழுத்துப் புடிச்சி… அவங்களுக்கும் ‘ஷூவை மாட்டிவிட்டு இழுத்துட்டு வந்துட றாங்க.
இப்போ நாடு பூரா நடக்குற ஒரே வேல இந்த நடக்குற வேலதான். தெனமும் அதே எடத்துல, அதே நிமிஷத்துல, அதே முகத்தப் பார்க்க யாரும் தவறுவதில்ல. தெரிஞ்சவங்களக் கடந்துபோனா அதே சிரிப்பு, அதே ஒண்ணு ரெண்டு சுருக்கப்பட்ட வார்த்தை. இப்பிடித் தான் ஒவ்வொரு காலையும் கழியுது. இப்படிப்பட்ட ஆளுங்களாப் பார்த்து பிடிக்கறதுக்காகவே மூலைக்கி மூல நின்னுக்கிட்டு, ‘இலவசமா சோதனப் பண்றேன்’னு கைய, காலப் புடிச்சி… கடைசியா ஒரு முகவரியக் குடுத்து, ‘வந்துடுங்க, நாளைக்கே… ஒங்க உடம்ப நாங்க சரிபண்ணிடறோம்’னு சொல்லிட்டு நிக்கிற கூட்டம் பாடாப்படுத்துது.
நகரம் மட்டும்தான்னு இப்பிடி இல்ல. கிராமங்கள்ல என்ன வாழுதாம். அவன் இவனுக்கு மேல தொந்திய வளர்த்துட்டு நிக்கிறான். இந்த மெஷினெல்லாம் அங்கேயும் போயி எவ்வளவோ நாளாச்சு!
மாசக் கணக்குல, வருஷக் கணக்கு லெல்லாம் எதிர்லப் போகும்போது, கூடப் போகும்போது வணக்கம் சொன்னவங்க, திடீர்னு ஒருநாளு காணாமப் போயிட றாங்க. ஞாபகம் இருந்தா, அந்த நேரம் மட்டும் நண்பர்கள்கிட்ட விசாரிச்சுட்டு விட்டுட றோம். அப்புறம் அவங்கள மறந்தே போயிட றோம். ஒருவேளை வாழற இடத்த மாத்தி யிருக்கலாம். ஒருவேளை இறந்துபோய் நமக்கு செய்தி தெரியாம இருக்கலாம். புதிய புதிய முகங்களோடு நடைப்பயிற்சி தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கு.
ஒருநாள் எனக்கு நடந்த அந்த சம்பவத்த மறக்கவே முடியல. ஒரு ஏழெட்டு வருஷமாவே அவர நான் பார்க்கறேன். நான் சிரிச்சாத்தான் சிரிப்பாரு. தனியா யாரோடயும் சேராம ஒரு ஓரமா நடந்துக் கிட்டே இருப்பாரு. ஏழையும் இல்ல, பணக்காரன் மாதிரியும் தெரியல. ஒருநாள் நடந்துக்கிட்டிருந்தப்ப சாலையில சுருண்டு விழுந்துட்டாரு. 9 மணிக்கு மேல ஆயிட்டதால, யாரும் உடனே அவரை கவனிக்கல. இறந்துபோனவர கொண்டு போய் சேக்கறதுக்கு அவர்கிட்ட எந்த அடையாளப் பொருளும் இல்ல. வங்கிக்குப் போனப்பதான் நானே பாத் தேன். நானும் அங்கிருந்தவங்களோட சேந்து கண்டுபிடிக்க முயற்சி செஞ்சேன். பலனில்லை. என்னை மாதிரியேதான், தெனமும் அவரப் பாக்கறவங்களும் சொன் னாங்க. போலீஸ்காரங்க வந்து அவரோட ஒடம்ப எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க.
கொஞ்ச நாள் எங்க நண்பர்கள் வட்டத்துல இதேப் பேச்சா இருந்துச்சி. அவருக்கு நடந்த துயரம் நமக்கும் நடந்துடக் கூடாதேன்னு நெனைக்கிறதால, ஒரு துண்டு தாள்ல வீட்டோட முகவரியையும், கைப்பேசியையும் நடைப் பயிற்சி போறப்ப எடுத்துக்க மறக்கறதே இல்ல.
========================================================
05-முறைப்படுத்தப்பட்ட முறைகேடுகள்
எப்போது இந்த நாட்டுக்கு விடுதலை கிடைத்ததோ, அப்போதே இந்த மண்ணில் லஞ்சமும் ஊழலும் முளைக்கத் தொடங்கிவிட்டன. விடுதலை பெற்ற இந்த 68 ஆண்டுகளில் எது வளர்ந்ததோ இல்லையோ, ஊழலும் லஞ்சமும் மட்டும் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எல்லாத் துறைகளிலும், எல்லோரின் மனங்களிலும் வளர்ந்து நிற்கிறது. சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுக்கு எல்லாருக்கும் எல்லாமுமே கிடைக்கும் என்கின்ற உத்தரவாதமற்ற நிலைதானே காரணம்.
குழந்தைகளிலிருந்து கடவுள் வரைக்கும் லஞ்சம் கொடுக்கப் பழக்கப்பட்டுவிட்டது இந்த சமூகம். பணம் இருந்தால் எவ்வளவு பெரிய கூட்டத்திலும், எல்லோரையும் கடந்து தனி ஆளாக அனைத்து மரியாதைகளோடு கடவுள் சந்நிதானத்தின் முன் நின்றுவிடலாம். பணம் இல்லாதவன் தொலைவில் நின்று, இருளில் நிற்கும் சிலையைப் பார்த்து தோராயமாகக் கும்பிட்டுவிட்டுத் திரும்ப வேண்டியதுதான்.
இளம் பருவத்திலேயே தன்னைச் சுற்றிலும் நிகழ்கின்ற இது போன்றச் செயல்களைப் பார்த்து வளரும் குழந்தைகள், அதனை ஒரு குற்றமாகவும் சீர்கேடாகவும் நினைக்காமல், அதனை ஒரு முறையாகவே பார்த்து தாங்களும் அதனைக் கடைபிடிக்க பழகிவிடுகிறார்கள்.
எனது பள்ளிப் பருவத்தில் நிகழ்ந்த அந்த நிகழ்வு ஒன்றுதான், இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை 70 ரூபாயைப் பெறுவதற்குள் நான் பட்டப் பாட்டைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் வட்டாட்சியரிடம் கையெழுத்துப் பெறுவதற்காக, எங்கள் ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்று பண்ருட்டியில் காலை 9 மணிக்கெல்லாம் நின்றுவிடுவேன். என்னைப் போலவே என் பள்ளியில் இருந்து நிறைய மாணவர்கள் வருவார்கள். வட்டாட்சியர் வேகமாக வருவார். அலுவலகத்தில் பல மணி நேரம் இருப்பார்.
பின்னர் விர்ரென்று ஜீப்பில் புறப்பட்டுப் போய்விடுவார். இப்படியே நான்கு நாட்கள் கழிந்தன. பள்ளிக்குப் போகாமல் அந்த ஒரே ஒரு கையெழுத்துக்காக காத்துக் கிடந்த நான்காவது நாளில்தான், அந்தக் கையெழுத்து எங்களுக்குக் கிடைத்தது. மாணவர்கள் ஆளுக்கு இரண்டு ரூபாய் போட்டு வட்டாட்சியருடைய உதவியாளரிடம் கொடுத்தப் பின்னர்தான் அதுவும் சாத்தியமாயிற்று.
இறுதி வரைக்கும் வட்டாட்சியரின் முகத்தை நாங்கள் பார்க்கவே இல்லை. பேருந்துக்காக வைத்திருந்த பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டதால், அந்த 13 கிலோ மீட்டர் தொலைவை செருப்பில்லாத கால்களோடு நடந்து இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்ததையும் அம்மா சுடுதண்ணீர் வைத்து கால்களுக்கு ஒத்தடம் கொடுத்ததையும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
எப்படியாவது மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து வாக்குகளைப் பெற்றுவிடுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் செலவழித்த தொகையை அறுவடை செய்வதற்காகவும் மேலும் ஆட்சியைத் தொடர்வதற்காகவும் லஞ்சம், ஊழல் என்கிற ஆயுதங்கள் கையில் எடுக்கப்படுகின்றன. தங்களின் காரியங்கள் நிறைவேறப் பணத்தைக் கொண்டுபோய்க் கொடுக்கின்ற மக்களே, இந்தக் கொடுமைக்கு துணையாயிருப்பதுதான் நம் சமூகத்தின் மிகப்பெரும் இழிவான, அவமானகரமான அவலநிலையாகும்.
நான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் இருக்கவே இருக்காது என்று சொல்லி ஒருவர் மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டாலும், மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லை. இந்தப் பரிதாபமான நிலைக்கும் காரணம் மக்கள்தான். பணம் கொடுத்தால் நம்முடைய வேலை நடக்கிறதல்லவா… அதுவே போதும் என மக்கள் நினைக்கிறார்கள்.
லஞ்சத்தை வளர்த்ததற்காக ஒருவர் இங்கே தேர்தல் மூலம் தண்டிக்கப்பட்டிருந்தால், ஊழல் மூலம் கோடிக் கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் இங்கே நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டிருந்தால், சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் நுழைய முடியாத மாதிரி சட்டத்தின் வாயிலாகத் தடுக்கப்பட்டிருந்தால்… தவறு செய்பவர்களுக்கு நிச்சயம் பயம் இருக்கும்.
எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வழக்கைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதால், இங்கே என்ன மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது? சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் பயம் போய்விட்டது. இங்கே சட்டத்துக்கும், நீதிமன்றத்துக்கும், காவல்துறைக்கும் பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதும் அலைக்கழிக்கப்படுவதும் அன்றாடங்காய்ச்சிகளாக வாழும் மக்கள் மட்டும்தான். பாதிக்குப் பாதி குற்றவியல் வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளைக் கொண்டு எவ்வாறு தூய்மையான ஆட்சியைத் தந்து விட முடியும்?
ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றவர் முகத்தை மூடிக்கொள்ள, அவரை காவல்துறையினர் இழுத்துக் கொண்டுப் போவதை ஊடகங்களில் வெளியிடுவதும், நாட்டின் சொத்தையும் மக்களின் வரிப் பணத்தையும் குறுக்கு வழியில் கொள்ளையடிப்பவர்களை கொண்டாடுவதும் நடைமுறையாக இருக்கிறது.
நீதி, காவல்துறை, ஆட்சித்துறை, கல்வித்துறை என எல்லாத் துறைகளிலும் எனக்கு நண்பர்களும், என்மேல் அன்புள்ள பற்றாளர்களும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நேர்மையாகச் செயல்படுவதனாலேயே எப்படியெல்லாம் பழி வாங்கப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். இத்தகைய மாசற்ற மனிதர்களும் இந்த லஞ்ச, லாவண்யக் கூட்டத்தோடு சேர்ந்துவிட நெடுநேரம் ஆகாது.
தகுதியுடைய எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்றால், யாரும்யாருடையதையும் பறிக்க வேண்டியதில்லை. இங்கு தகுதி இல்லாதவர்களுக்கு மட்டுமே இடம் தரப்படும்போது, தகுதி உடையவர்களும் லஞ்சம் தரத் தயாராகிறார்கள். கொடுத்ததை மீண்டும் எடுக்க அந்தச் செயலை இவர்களும் செய்து, இறுதியாக ஊழல்வாதிகளாகி செத்து மடிகிறார்கள்.
இரண்டு பேருக்கு மட்டுமே தரப்போகிற வேலைக்காக ஆயிரம் பேர்கள் வரிசையில் நிற்கின்றனர். இதுவே லஞ்சம் கொடுக்க வழி வகை செய்கிறது. எல்லோருக்கும் வேலை வேண்டும் என்பதை யாருமே முன்வைப்பதில்லை. உற்பத்தித்துறை முற்றாக முடங்கிவிட்டது. அதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. சேவைத்துறை மட்டுமே வளர்ந்து கொண்டிருக்கிறது. இங்கே தொடர்ச்சியாக மீறப்பட்ட முறைகேடுகளே முறையானவையாக மாற்றப்பட்டுவிட்டன.
இந்த அவல நிலைக்கு இதனை யாரும் கண்டுகொள்ளாத சமூக நிலையே காரணம். ஒரு இயந்திரம் இயல்பாக இயங்க, அதற்கு உராய்வு எண்ணெய் அவ்வப்போது இடப்படுவதைப் போல, சமூக இயக்கத்துக்கு லஞ்சம் என்கிற எண்ணெய்யை அவசியமாக்கிவிட்டார்கள்.
thankartamil@gmail.com
-------------------------------------------------------
உங்களுக்கு நேரமிருந்தால், வாய்ப்பிருந்தால், விருப்பமிருந்தால் ஏதாவதொரு அரசுப் பள்ளிக்கூடங்களையோ அதில் பயிலும் மாணவர்களையோ கூர்ந்து பாருங்கள். அதேபோல் ஆங்கிலப்பள்ளி அதில் படிக்கும் மாணவர்களின் செயல்பாடுகளை கவனித்துப் பாருங்கள். நம் பிள்ளைகள், எதிர்கால தலைமுறையினர் குறித்த சிந்தனை உங்களுக்கு ஏற்படாமலிருக்காது.
நாம் பேசிக்கொண்டேயிருக்கிறோம். எழுதிக்கொண்டே இருக்கிறோம். மாற்றங்களை ஏற்படுத்த ஆள்பவர்கள் மனதில் நேரமில்லையா? ஈரமில்லையா தெரியவில்லை. தான் பிறந்த மண்ணை, மக்களை, பெற்றோர்களை, உறவினர்களை விட்டு பிரிப்பது கல்வி ஒன்று மட்டும்தான். பிறந்ததிலிருந்து பின் அவர்களை ஒரு பணியில் அமர்த்திவிடும் வரை இன்று ஒவ்வொருப் பெற்றோர்களும் பிள்ளைகளின் கல்விக்காகவே மட்டும் உழைக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கு செலவழிப்பதற்காகவே நெறிமுறைகளை மீறி பொருள் சேர்க்க வேண்டியிருக்கிறது.
வணிகர்கள் கையில் கல்வியைக் கொடுத்துவிட்டு அரசு மெல்ல நழுவிக்கொண்டுவிட்டது. கல்வித்துறை எனும் பெயரில் தேர்வு ஒன்றை நடத்தி இருக்கிற ஏதோ ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் செய்வது மட்டுமே போதும் என நினைத்துவிட்டது.. இங்கிருக்கிற கல்வி எதற்கும் உதவாது என்பதைச் சொல்லிப் போராட ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் துணிவும் இல்லை, நேரமும் இல்லை. சம்பளத்திலும், பணியில் அமர்த்தும் தகுதி குறித்தும் மட்டுமே போராடினால் போதும் என ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். பணத்தைச் சேர்த்து இந்த கொள்ளைக்கூடங்களில் கொட்டவும், பிள்ளைகளுக்கு வேண்டியதை சம்பாதிக்கவும் மட்டுமே பெற்றோர்களுக்கு நேரமிருக்கிறது. தங்களின் சொந்தப் பிரச்சினைகளுக்கு போராடுவதுபோல் அரசியில் கட்சிகளும் கல்வி போன்ற நம் தலைமுறையினரின் முதன்மையான பிரச்சினைகளுக்காக ஒன்று சேர்ந்து போராடுவதில்லை. இங்கு எல்லாமே தனித்தனி அறிக்கையோடு முடிந்து போகிறது. அனைவருமே இங்குள்ள மக்கள் கொத்தடிமைகளாகவும், அகதிகளாகவும் ஆக்கப்படுவது குறித்து கவலைப்படாமல் ராஜபக் ஷேவின் செயல்பாடுகளை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டின் விடுதலைக்குப்பின் மக்களாட்சி எனும் பெயரில் மக்களின் கையில் வாக்குரிமையைக் கொடுத்துவிட்டு அவர்களை சிந்திக்க மறந்த அடிமைகளாக்கி அவர்களின் கையாலேயே ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றும் தொழிலைத்தான் இன்று அரசியல் கட்சிகள் கையிலெடுத்துக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு நிறுவனங்களாக இன்று செயல்படத் தொடங்கிவிட்டன. மக்களும் எதையும் கண்டுகொள்வதில்லை.
வயது வந்தவர்களின் மூளைகளை மதுக்கடைகள் பிடுங்கிக் கொள்கிறது. இளம் தலைமுறையினரின் மூளைகளை முடக்கி தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. அடிமையாய் இருப்பவர்களைவிட தாங்கள் அடிமைகள்தான் என்பதை உணராதவர்களின் நிலைமைதான் கொடுமையானது என்பதைச் சொன்ன ஒரு சிந்தனையாளனின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
கருவேல மரங்களை அழிக்க இன்று எத்தனைத் திட்டங்கள் போட்டாலும் அதனை அழிக்கவே முடியாது. வீட்டுக்குள் மட்டும் அவைகள் பரவவில்லை. நாடெங்கிலும் பரவி நிலத்தின் வளத்தையும், நீர்ப்பிடிப்பையும் அழித்துவிட்டன. இது நமக்கான தாவரமில்லை. இந்த மக்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்துத்தான் இந்த செடிகளை இங்கு கொண்டுவந்திருப்பார்கள் நம் ஆட்சியாளர்கள். அதேபோலத்தான் இம்மக்களுக்கு நல்லதை செய்வதாக நினைத்து ஆங்கிலக் கல்வியை மூலை முடுக்கெல்லாம் தூவினார்கள். கருவேல மரங்கள் நம் ஆதாரங்களையே அழித்ததுபோல் இந்த ஆங்கிலக்கல்வி நம் தாய்மொழி முதற்கொண்டு வாழ்வியலின் அனைத்து அடிப்படைக் கூறுகளையும் அழித்துவிட்டன.
இந்தக் கல்வித்திட்டம் நம்மை அடிமைகளாக வைத்திருந்தவர்கள் கொண்டு வந்தத்திட்டம். ஏர்க்காடு உணவகம் ஒன்றில் மேசையில் துணிக்குப்பதிலாக துணிக்குப்பதிலாக பெரியதாள் ஒன்றில் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த வரிகள் எனக்குத்தந்த அதிர்வுகள்போல் நம்மில் எத்தனைப் பேருக்கு இது இருந்திருக்கும் எனத்தெரியவில்லை.
1835ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசாங்கத்தின் பணியாளாக இந்தியாவிற்கு வந்த "லார்ட் மெக்காலே" இந்தியாவை சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டாண்டுகளுக்குப்பின் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு இப்படி எழுதுகிறான்.
‘‘இந்தியாவை இரண்டாண்டுகள் குறுக்கிலும் அதன் நெடுக்கிலும் சுற்றிப்பார்த்து இந்த மடலை எழுதுகின்றேன். எல்லா வளங்களும் நிறைந்த நாடு. மக்கள் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்குவதாக இருக்கிறார்கள். இந்தக் காலத்தில் எங்குமே ஒரே ஒரு பிச்சைக்காரனையோ, ஒரு திருடனையோ நான் பார்க்கவில்லை. அறநெறிகளை உருவாக்கி அதனை மதித்து வாழும் இவர்கள் ஒன்றைப் பார்த்து மட்டும் பயப்படுகிறார்கள். அந்நியர்கள், அந்நிய மொழி!
குறிப்பாக ஆங்கிலம் பேசினால் பயப்படுகிறார்கள், மதிக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையை சிதைத்து நம் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவர்களின் கல்வி, மருத்துவம், கணிதம், அறிவியல் என எல்லாவற்றையும் அழித்துவிட்டு நம் முறையைப் புகுத்தினால் நிரந்தர அடிமைகளாகி விடுவார்கள்" என எழுதியிருந்தான். இந்தக் கடிதத்தைக் காண்பித்துதான் சென்ற ஆண்டு" தலைமுறைகள்", "தங்கமீன்கள்" படத்துக்காக என் கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துரைத்து விருதுகளைப் பெற செயல்பட்டேன்.
மெக்காலே 185 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கடிதம் செயல்படத் தொடங்கியதில் நாம் இப்பொழுது நம் அடையாளங்களை இழந்து நிற்கிறோம். தாய்மொழியும் தெரியாத, அயல் மொழியும் தெரியாத ஒரு சமூகமாக சிதைந்து கிடக்கிறது. நம் மக்களைப் பற்றி சிந்தித்த, நம் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் உருவாக்கிய நம் அரசுப் பள்ளிக்கூடங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மாணவர்களில்லாத மாட்டுக் கொட்டகைகளாகிவிட்டன.
ஐந்து வயது வரும்போது பள்ளிக்கு அனுப்பலாம் என்றிருந்த பெற்றோர்கள் இன்று குழந்தை கருவுற்ற உடனேயே பணம் கொடுத்து பள்ளியில் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். மூன்று வயதிலிருந்தே வீட்டிலும் படிப்பு, பள்ளியிலும் படிப்பு. இந்த வயிற்றுப் பிழைப்பு கல்வியில் எம் தலைமுறையினர் அழிக்கப்படுவதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.
எல்லாப் பெற்றோர்களைப் போலவேதான் நானும் தவறினை செய்தேன். நண்பர் ஒருவரின் கேட்கக்கூடாத சொல்லைக்கேட்டு இந்தக் கறிக்கோழிகள் உருவாக்கப்படும் இடங்களைப் போலுள்ள வெளியூரிலுள்ள ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் என் மகனை சேர்த்தேன். அந்த இரண்டாண்டு காலத்தில்தான் இந்த மாணவர்கள்படும் துயரங்களும், அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வியும், அவை தரப்படும் விதங்களும் புரிந்தது. ஒவ்வொரு ஆங்கிலப்பள்ளிக் கூடங்களும், சிறைக் கூடங்கள்தான் என்பதை உணர்ந்தேன். மனநோயாளி அளவுக்கு மாற்றப்படும் பிள்ளைகள் ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு மாற்றப்படுவது இப்பள்ளிகளில்தான். அவர்கள் அதிக அளவில் தேர்ச்சியைப் பெற்று அதனைக் காண்பிப்பதற்குத்தான் அத்தனைக் கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன. தனது குடும்பத்துக்கும், தனது சமூகத்துக்கும், இவ்வுலகத்துக்கும் அவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல.
பயந்து நடுங்கிய மனதோடும், சோர்ந்து போய் குழி விழுந்த இருண்ட கண்களோடும்தான் என் மகனை வீட்டிற்கு அழைத்து வந்தேன். தன்னம்பிக்கை இழந்த, தன்னைப்பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கின்ற சிறு பிரச்சினைகளைக் கண்டுகூட அஞ்சுகின்ற, சமூகத்தைப்பற்றி சிந்திக்க மறுக்கி்ற அவனை சமநிலைக்குக் கொண்டு வருவதுப்பற்றித்தான் இப்பொழுது கவலைகொள்கின்றேன். அவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களையும், பள்ளியின் பொறுப்பாளர்களையும் பார்த்தபோது நான் அடைந்த வேதனைகளையும் என்னால் எழுத முடியவில்லை. ஒட்டுமொத்த சமூகமும் அழிக்கப்படுவதைப் பார்த்து நான் கொள்ளும் கவலை இது.
அந்தப்பள்ளி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எல்லாப்பள்ளிகளிலுமே ப்ளஸ் 1 பாடத்தை கற்பிக்காமல் நேரடியாகவே பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்களை மட்டுமே மனப்பாடம் செய்ய கட்டாயப்படுத்துப்படுகிறார்கள். இதனால் ஐ.ஐ.டி, ஐ.எம்.எம்., போன்றத்தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை மிகவும் குறைந்துப்போகிறது.பிளஸ் 1 பாடத்திலிருந்து பாதி கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்கள் விடை தெரியாமல் தோல்வியடைகிறார்கள்.மூன்று மாதங்களுக்கொருமுறை பருவத்தேர்வை நடத்தி இதனைச் சரி செய்யலாம். யாருக்கு இங்கே இதற்கெல்லாம் நேரம் இருக்கிறது?
தன் மொழியைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் இம்மக்களைப் பற்றியும் சுற்றி நடக்கின்ற எதைப் பற்றியும் கவலை கொள்ளாத தலைமுறைகளைத்தான் இந்த கல்வித்திட்டம் உருவாக்கிக்கொண்டு வருகிறது. தங்களுக்கு நல்ல அடிமைகள் வேண்டும் என்பதற்காகவே இதில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரத் தயங்குகிறார்கள். கல்வி என்பது வெறும் விவரங்களைக் கொடுப்பது என்பதாக இல்லாமல் அறிவைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். உலக அளவில் தலை சிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் இருநூறில்கூட இந்தியாவிலிருகின்ற 700 பல்கலைக்கழகங்களில் ஒன்றுமே இல்லை. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு! வல்லரசாக உருவெடுக்க கனவு காணும் நாடு!
ஆங்கிலக் கல்வி கொடுத்து எம்மக்களை முன்னேற்றுபவர்களாகச் சொல்லி மார்தட்டிக்கொள்பவர்கள் கொஞ்சம் இதற்கு பதில் சொல்லுங்களேன். விதைத் தானியத்தை தின்று வயிறு வளர்ப்பவர்களால் எதுவும் சொல்ல முடியாது. மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறம் நாட்டுப்பற்றை வார்ப்பதாகக் கல்வி இருக்க வேண்டும். அதனைப்புரிந்து கொண்ட நாடுகள்தான் இன்று உண்மையாக கல்வியைக் கற்றுத்தருகின்றன.
எல்லாமுமே ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன என நினைக்கும் முட்டாள்தனமும், மூடத்தனமும் அவர்களிடத்தில் இல்லை.
பணம் கொடுத்தால் எந்த பதவியையும் வாங்கலாம். துணைவேந்தர் பொறுப்பு என்பது எப்படிப்பட்டது! அரசியல் உயர் பொறுப்பில், செல்வாக்கின் அச்சாணியைக் கையில் வைத்திருக்கிற பணத்தாசைப் பிடித்தவர்கள்தான் இவர்களை நியமிக்கிறார்களாமே என வெளிநாட்டிலிருந்து தமிழ் கற்க வந்திருக்கிற ஒரு மாணவர் என்னிடம் கேட்கிறார். க,ங,ச 18 எழுத்தை வரிசையாகச் சொல்லத் தெரியாமல் மாட்டிக்கொண்டு தவித்த முனைவர் பட்டம் பெற்றவரைக் காட்டட்டுமா என அவர் என்னிடம் கேட்கிறார். வெளிநாட்டுக்காரர் தமிழ்மொழியின், நம் பழைய கல்வித் திட்டத்தின் மேன்மை அறிந்து வியக்கிற நிலையில் இருக்கும்போது முனைவர் க,ங,ச தெரியாமல் கோட்டு சூட்டுடன் அலைவதும், மனப்பாடக் கல்வி மூலம் 500 மதிப்பெண்களில் 496 பெற்று பீற்றிக்கொள்வதும்தான் நம் கல்வித்திட்டம் சாதித்திருப்பது.
முதல் மதிப்பெண்ணைப் பெறும் ஒரே நோக்கத்திற்காகவே ஒரு மாணவனை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த பெற்றோர்களிடமும், கல்வி நிறுவனங்களிடமும், ஆசிரியர்களிடமும் நான் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள நினைக்கிறேன். கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா?
கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மதிப்பெண் தேர்ச்சியில் முதல் 25 இடங்களில் தேறிய மாணவர்களெல்லாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். யாருடன், எங்கே, எப்படி வாழ்கிறார்கள் என்பதைச் சொல்லுங்களேன்.
இதிலிருந்து நிச்சயம் தெரிந்துவிடும் நம் கல்வித்திட்டத்தின் அருமை பெருமை.
---------------------------------------------------------------------------------------
முதன்முதலாக மின்சார விளக்கை எங்கள் பக்கத்து ஊர் ராஜா டாக்கீஸில்தான் பார்த்தேன். அங்கிருந்து எங்கள் ஊருக்கு மின்சார இணைப்பைக் கொண்டுவர ஐந்து ஆண்டுகள் பிடித்தது. வெறும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுதான். சிறிய மண்ணெண்ணெய் விளக்கில்தான் எல்லோருடைய படிப்பும். ஒரு விளக்குக்கு வீட்டில் மூன்று பேர் சுற்றி உட்கார்ந்து படித்தோம். வீட்டுக்கு மின்சார இணைப்பு வரப் போகிறது என்கிற செய்தியில் திக்கு முக்காடித்தான் போனோம். புதுச்சேரியில் இருந்து அதற்கான உபகரணங்களை வாங்கி வந்து பொருத்தினார்கள். மின்சாரம் இல்லாத அந்தப் பொத்தானைத் தொட்டுப் பார்க்கவும், இயக்கிப் பார்க்கவும் நண்பர்களிடம் இருந்து அதற்கான கட்டணமாக முந்திரிக் கொட்டைகளை நானும் என் அண்ணனும் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் வாங்கிக் கொள்வோம்.
மூன்று மாதங்கள் இருக்கலாம். திடீர் என ஒருநாள், ’நாளை காலையில் உங்கள் வீட்டுக்கு மின் இணைப்பு தரப்படும்’ எனத் தெரிவித்தார்கள். இரவு முழுக்கவும் தூக்கம் பறந்துபோனது.
ஊரில் எங்கள் வீ்ட்டுக்குத்தான் முதல் மின் இணைப்பைக் கொடுத்திருந்தார்கள். செய்தியைக் கேள்விப்பட்டு பள்ளிக்கூட மணி அடித்தவுடன் முதல் ஆளாக சிட்டாகப் பறந்து ஓடி வந்தோம்.
ஒவ்வொரு பொத்தானையும் அழுத்திப் பார்த்து விளக்கை எரிய வைத்து சோதனை செய்தோம். எனக்கு முந்தைய அண்ணனுக்குப் பொத்தானில் இருந்த துளையில் விரலை வைத்துப் பார்க்க ஆசை. இரண்டு விரலையும் கொண்டு போய் துளைக்குள் செருகினார். அந்த அலறலை என் காலம் உள்ளவரை மறக்கவே முடியாது.
மின்சாரம் வந்தவுடன் ஊரில் எல்லோருடைய வாழ்க்கைப் போக்கும் மாறிப் போனது. அதன் பிறகான காலங்களில் தெரு விளக்கில் தொடங்கி வீடுகளுக்குள்ளும் குண்டு பல்பு மறைந்து வாழைத் தண்டு பல்புகள் வந்தன. இதுபோலவே உழவுத் தொழிலிலும் பெரிய மாற்றங்கள் வந்தன. ஊரில் இருந்த வாய்க்காலில் இருந்தும் குளம், கிணறு மற்றும் ஏரியில் இருந்தும் கபிலை, ஏற்றம், டீசல் இன்ஜின் கொண்டு நீர் இறைத்த முறை மாறி, மின்சாரத்தில் நீர்ப் பாசனம் செய்யும் பம்ப் செட் முறைக்கு விவசாயிகள் மாறினார்கள். நீர் இறைக்கப் பயன்படுத்திய வடமும் சாலும் பரணையில் தூக்கிப் போடப்பட்டன.
விவசாயத்தை செழிக்க வைக்கவும், உழவர்களை வாழ வைக்கவும் எனச் சொல்லி அரசாங்கம் கிணறு வெட்டவும், பம்ப் செட் வாங்கவும் கடன் கொடுத்தது. கிணற்றை மட்டும் வெட்டி வைத்துவிட்டு, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமலும், மேற்கொண்டு கடனை வாங்கி விவசாயம் செய்ய முடியாமலும் ஊருக்கு 10 குடும்பங்கள் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டன. கொஞ்சம் கையில் பசை இருந்தவர்களும், இருந்த நிலத்தில் ஒரு பகுதியை விற்று பணம் புரட்டியவர்களும் மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்தி உழவுத் தொழில் செய்து வந்தார்கள்.
இரவில் மட்டுமே விவசாயத்துக்கு மின்சாரம் கொடுத்ததால் வயலுக்கு நீர் பாய்ச்சப் போனவர்களில் பலரை பாம்பு கடித்ததால், அவர்களைப் பிழைக்க வைக்க முடியாமல் போய்ச் சேர்ந்தார்கள். தொடக்கத்தில் 55 அடி ஆழத்தில் நீர்மட்டம் தென்பட்டது போய், இப்போது 700 அடியைத் தாண்டிவிட்டது. 40 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டும் 600 அடி கீழே போய்விட்டது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மழைக் காலம் வந்துவிட்டால் ஊரைச் சுற்றியிருக்கிற ஓடைகளில் சிறிய நீர்வீழ்ச்சியில் இருந்து மாதக்கணக்கில் தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருக்கும். ’குத்துப்பள்ளத்து’ ஓடையில் ஓட்டமாக ஓடிவந்து மூன்று கரணம் போட்ட காலமும் உண்டு. சுற்றுவட்டாரத்தில் உள்ள நாற்பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்தும், எங்கள் ஊரில் தேவநதி என அழைக்கப்படும் ஆண்டு முழுவதும் வற்றாத தாழம்பூ அடர்ந்த நீரோடையில் கரிநாளன்று குளிப்பதற்காகவே வருவார்கள். ஆனால், இன்று அதே ஊரில் ஓடை இருந்த தடயம் மட்டுமே கொஞ்சம் மிச்சமிருக்கிறது.
இன்று மின்சாரம் இல்லாத நீர் நிலைகள் முற்றிலுமாக அருகிவிட்டன. இந்நிலை எங்கள் ஊரில் மட்டுமில்லை; சுற்றியுள்ள 150 கிலோ மீட்டர் வரைக்கும் நிலத்தடி நீர் பாதாளத்துக்குப் போய்விட்டது.
ஆர்ட்டீசியன் ஊற்றுப் பகுதியாக இருந்த எங்கள் பகுதி, இன்று பாலைவனமாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. என்றைக்கு நெய்வேலிப் பகுதியில் நிலக்கரி கண்டுபிடித்தார்களோ… அன்றைக்கே இந்த மண் பாலைவனமாகத் தொடங்கிவிட்டது.
2,400 அடியில் கிடக்கின்ற நிலக்கரியை வெட்டி எடுக்க, அதுவரை உள்ள எல்லாத் தண்ணீரையும் வெளியேற்றினால்தான் முடியும். 12 அடி விட்டம் உள்ள மூன்று குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் ராட்சத இயந்திரங்களை வைத்து விடாமல் நீரை இறைத்துக் கொண்டே இருக்கிறார்கள். வெறும் 8 நிமிடங்கள் இயந்திரங்கள் நின்று போனால் சுரங்கம் மூழ்கத் தொடங்கிவிடுமாம். இது மட்டுமில்லை; வெளியேற்றிய நீர் வயலில் பாய்ந்து கரித் துகள்கள் படிந்து நிலத்தை மலடாக்கி விடுகின்றன. இந்தச் செய்தி கொஞ்ச காலத்துக்கு முன்புதான் இந்த மக்களுக்குத் தெரியவந்தது.
இதுபோக 24 மணி நேரமும் நிலக்கரியை எடுப்பதினால் வெளியேற்றப்படும் கரித் துகள்கள் அவ்வளவு மக்களுக்கும் நோய்களை வாரி வாரி வழங்குகின்றன. ஐந்தே ஐந்து நிமிடங்கள் மட்டும் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு எடுக்கும்போது பளிச்சென்றுத் தெரியும் அளவுக்கு, உங்களின் பெயரை வாகனத்தின் மேல் படர்ந்திருக்கும் கரித்தூளில் எழுதிப் பார்க்கலாம். இந்தத் துகள்கள் உணவுப் பயிர்களின் மேல் படிந்து விளைச்சலை பெரிதும் பாதித்துவிட்டன.
நெய்வேலியைப் பற்றித் தமிழர்கள் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் செய்தி பலருக்குத் தேவையற்றதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவும் கூடத் தோன்றலாம். சுரங்கத்துக்காக விரட்டப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் மனநோயாளிகளாக, அகதிகளாக அங்கேயே சுற்றிக்கொண்டு வருவதை யாரும் கேள்விப்பட்டிருக்க நியாயமில்லை. எந்தெந்த மாநிலத்துக்காரர்களோ வந்து கோலோச்சி அவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். மூன்றில் ஒரு பகுதியை விடக் குறைவாகவே தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தைக் கொடுத்துவிட்டு, பிற மாநிலங்களுக்குக் கடத்திவிடுகிறார்கள்.
இதனைக் காரணம் காட்டித்தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி சிக்கல் பெரிதாக உருவானபோது, தமிழ்த் திரையுலகத்தினர் கூட்டியிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெய்வேலியில் போராட்டத்தை முடுக்கி, மின்சாரத்தை முடக்க வேண்டும் என கடுங்கோபத்துடன் என் கருத்தினை வெளியிட்டுப் பேசினேன். பெரும் பரபரப்பினையும், எழுச்சியினையும் உருவாக்கிய அந்தக் கூட்டத்தால் போராட்டம் வெடித்தது. நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் யார், யாரெல்லாமோ பேசி தங்களின் அரசியல் ஆதாயத்தைத் தேடிக் கொண்டார்கள். என்னைப் பேச அனுமதிக்காததால் ஆறு கிலோ மீட்டர் நடந்தே என் உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எல்லோரும் புகழ்ந்து கொண்டிருந்த நெய்வேலி எனக்கு எமனாகத் தெரிந்தது. அதனால்தான் ’எமன்’ எனும் நாவலை 1992-ம் ஆண்டு எழுதத் தொடங்கினேன். 1874-ம் ஆண்டு மேட்டுக்குப்பத்தில் வடலூர் ராமலிங்க அடிகள் மறைந்த 10 நிமிடத்துக்குப் பின், பக்கத்து வீட்டில் பிறக்கிற ஒரு குழந்தையிடம் இருந்து நாவல் தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு மேல்மருவத்தூரில் முடிகிற இந்த நாவல், கடந்த காலங்களில் ஏற்பட்ட அனைத்துத் துறை சார்ந்த மாற்றங்களினால் சீரழிந்த தமிழர்களின் வாழ்வியல் போக்குகளைத் தோலுரிக்கும் படைப்பாகும். எனக்கு இருந்த தொழில் சிக்கல், பொருளாதார சிக்கல் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு, 1950-ம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளை 800 பக்கங்களுக்கு மேலாக புனைந்திருந்தேன்.
இரண்டு ஆண்டுக்கு முன்ப்ய், நான் தற்போது குடியிருக்கும் சென்னை வீடு புதுப்பிக்கப்பட்டபோது என்னுடைய கவனக்குறைவால் அந்த நாவல் காணாமல் போனது. அதனைத் தேடி கிடைக்காத வேளைதான் என் வாழ்வில் தாங்கிக்கொள்ள முடியாத துயரமான நாட்கள். பொருள் வைத்திருந்த பெட்டிகள் இடம் மாற்றப்பட்டதில் ‘எமன்’ நாவலை இழந்ததோடு, என் மன நிம்மதியையும் இழந்துவிட்டேன். தேடி அலைந்து முடிந்து ஒரு மாதம் கடந்திருக்கலாம். வீட்டின் மாடியில் நின்று இருந்தபோதுதான் அதனைக் கவனித்தேன். இரண்டு குப்பைப் பொறுக்கும் சிறுவர்கள் வெற்றிடமாகக் கிடந்த பக்கத்து மனைப் பரப்பில், சிதறிக்கிடந்த தாள்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். காலம் கடந்துதான் அந்தத் தாள்கள் கண்ணில்பட்டன. 150 பக்கங்களுக்குத் தேறலாம். ஒன்றுக்கொன்றுத் தொடர்பில்லாத பக்கங்கள். என்னால் எதனையும் ஒரு வரியைக் கூடப் படித்துப் பார்க்க முடியவில்லை. கண்டுபிடித்த பக்கங்கள் மேலும் மேலும் என் மனச் சுமையைத்தான் கூடுதலாக்கின. நெய்வேலி அனல்மின் நிலையம்தான் எமனாக வந்து எங்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் அழித்தது என்றால், இந்த ‘எமன்’ நாவலும் என்னைக் கொன்றுவிடும் என முடிவு செய்து, எடைக்குப் போடப்படும் செய்தித் தாள்களுக்கு இடையில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டேன். இனி மறுபடியும், எப்போது எனக்கு எழுதுகிற மனநிலையும் நேரமும் கிடைக்கப் போகிறது என்பதும், எப்படி நான் அந்த நாவலை முழுமையாக எழுதி முடிப்பேன் என்பதும் எனக்குத் தெரியவில்லை.
ஊர்ப் பக்கம் போகவே பிடிக்கவில்லை. மின்சாரம் வந்ததும் கிணற்றை மறந்துபோனார்கள். ஊருக்கு ஒரு கிணறு கூட இல்லை. மின்சாரம் வந்தால்தான் குடிக்கவே நீர் கிடைக்கும் என்கிற நிலையில் 700 அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து பிழைக்க முடியுமா? காலம் காலமாக ஏதோ கொஞ்சம் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி வந்த பலா மரங்களும், முந்திரி மரங்களும் ’தானே’ புயலால் பாலைவனமாகிப் போனது. ஒரு பக்கம் நெய்வேலிகாரன் 24 மணி நேரமும் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றுகிறான். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சென்னைக்குத் தண்ணீர் தேவைப்படும்போதெல்லாம், அரசு அமைத்த ராட்சத ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, யானை மாதிரியான பெரியப் பெரிய குழாய்கள் மூலம் இந்த மண்ணுக்குள்ளிருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டே இருக்கின்றது. ’தானே’ புயல் நிவாரண நிதியின் மூலம் வளர்க்கப்பட்ட பலா, முந்திரிக் கன்று நாற்றுகள் தோண்டிக் கொண்டிருக்கும் 700 அடி ஆழக் கிணறுகளில் இருந்து தண்ணீரைப் பெற்று மீண்டும் மரமாகக் காத்திருக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------
திரைப்படக்கலை உருவானப்பின் உலக வரலாற்றிலேயே சினிமாவுக்குள்ளேயே வாழ்க்கையை குழிதோண்டி புதைத்துக் கொண்டவன் தமிழன் மட்டுமே. நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் சினிமாவின் போதை மயக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கத் தயங்குபவர்கள் மகிழ்ச்சியோடு நாட்டைக் கொடுப்பார்கள். ஐந்து முதலமைச்சர்களை நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் ஆறாவதாக ஒரு ஆளைத் தேடி விடுவார்களோ என்பதில் குழப்பத்திற்கும், அச்சத்திற்கும் இடமிருப்பதாகவேத் தோன்றுகிறது.
சென்ற ஆண்டு தேசிய திரைப்பட விருதுக்குழுவில் இருந்தபோது மற்ற மாநிலத்து உறுப்பினர்களால் ஒரு நாள் அளவுக்கதிமாக இதற்காகவே நையாண்டி செய்யப்பட்டேன். உங்கள் அறிவியல் அறிவு, இலக்கிய அறிவு, அரசியல் அறிவு, கலை அறிவு அத்தனையையும் சொல்ல உங்களுக்குத் தகுதியில்லை என்றார்கள். பழம் பெருமைகளைப் பேசி காலந்தள்ளுவதை விட்டுவிட்டு நிகழ்கால வாழ்க்கைக்கு வாருங்கள் எனச் சொன்னார்கள். அன்றைக்கு நான் வேட்டியில்தான் படம் பார்க்க அரங்குக்கு சென்றிருந்தேன்.
சொல்லி வைத்த மாதிரி எல்லோரிடமிருந்தும் ஒரே முகபாவம். அந்த சிரிப்பில் ஏளனம் ஒட்டிக்கொண்டிருந்தது. விவரம் புரியாமல் நான் விழித்தபோது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த படைப்பாளி எனக்கு அதற்கான காரணத்தைச் சொல்லி, மென்மையாக இதனை எடுத்து கொள்ளுங்கள் எனச்சொன்னபோது வெட்கித் தலை குனிந்துபோனேன். அதன்பின் திரையில் என் மனது ஒன்றுவதற்கு நெடுநேரம் எடுத்துக்கொண்டது.
அன்றைய இரவும் அதே நண்பர்களிடம் வெளிப்படையாகவே இதுபற்றி உரையாடினேன். வேட்டியைப் பார்த்தாலே எங்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஊழலை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கற்றுக்கொடுத்தது அவர்கள்தான். ஆனால் அதைப்பற்றி எந்த குற்றவுணர்வும் இல்லாமல் பெருமையோடு அலைவதுதான் வேதனையாக இருக்கிறது எனச் சொன்னார்கள். நாங்கள் வேட்டியை மடித்துக்கட்டாமல் கட்டுகிறோம். நீங்கள் வளைத்து முறுக்கி விதம் விதமாகக்கட்டி அதே ஊழலைச் செய்யவில்லையா என நானும் பதிலுக்குக் கேட்டேன். அதன் பிறகும் பல நாட்கள் வேட்டியுடன்தான் படங்களைப் பார்த்தேன்.
நான் அவர்களுடன் இருந்த ஆறு வாரங்களில் நம்மைப்பற்றிய மதிப்பீடு அவர்களின் மனதில் என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். ‘மொழி வெறியர்கள்’ என ஒற்றை வரியில் எல்லாரும் சொல்கிறார்கள். அவ்வாறு உண்மையிலேயே நாம் இருந்தால் என்னைவிட மகிழ்ச்சி அடைய யார் இருக்கிறார்கள்? அப்படித்தானடா ஒரு காலத்தில் இருந்தோம்! இப்போது நாம் இருக்கிற நிலையை நெருங்கி வந்து பார்த்தால் பொறாமைப்பட்டு வயிறு எரிந்தவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கிப் போவார்கள். இந்தியை எதிர்த்த ஒரே காரணத்துக்காக மட்டுமே நம்மை எதிரியாக பார்க்கிறார்கள்.
தமிழர்களில் 99 விழுக்காடு மக்களுக்கு தமிழில் பெயர்கள் கூட இல்லை என்பதும், தமிழில் தங்கள் குழந்தைகள் பேசுவதையோ, தமிழைப் படிப்பதையோ அவர்கள் விரும்புவதில்லை என்பதும், தமிழில் பேசிவிட்டால் குழந்தைகள் பள்ளிகளில் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதும், ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் தமிழில் பேசுவதை இழிவாக நினைக்கிறான் என்பதும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்குமான அழைப்பிதழில் கூட தமிழை ஒதுக்கிவிட்டான் என்பதும், கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யச்சொல்லி வற்புறுத்தாமல் சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் மந்திரத்தையே விரும்புகிறான் என்பதும் தன் வாழ்வில் தமிழுக்காக எந்த இடத்தையும் தராமல் மகிழ்ச்சியோடு தமிழன் என நினைத்து வாழ்கிறான் எனவும், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடுவதற்காக மனுபோட்டு கெஞ்சிக் கொண்டிருக்கிறான், அதுமட்டுமா ஒரே ஒரு நிமிடம் ஆங்கிலத்தையோ, சமஸ்கிருதத்தையோ கலக்காமல் தமிழில் பேசச்சொன்னால் எல்லா தமிழனும் தோற்றுப் போகிறான் என்பதும் அவர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.
ஆனால் எங்களுக்காக ஒரு மாநிலம் வேண்டும் எனச்சொல்லி 72 நாட்கள் உண்ணாநிலையிலிருந்து போராடி சங்கரலீங்கனார் உயிர் நீத்தார். நாங்களும் எங்கள் மாநிலம் தமிழ்நாடு எனவும், எங்கள் அரசு தமிழ்நாடு அரசு எனவும் அழைத்துக்கொண்டு வருகிறோம்.
நாங்கள் தமிழர்கள்தான் என்பதை காட்டிக்கொள்ள ஒரு தமிழர் அவமானப்படுத்தப்பட்டதற்காக கொதித்து எழுந்து உடனடியாக சட்டமன்றத்தில் வேட்டிகட்ட உரிமை வாங்கித்தந்து சட்டம் இயற்றினோம். இந்தப் பெருமை எந்த மாநிலத்துக்காவது இருக்கிறதா?
உடனடியாக ஊடங்கள் முழுக்க அதற்கு பாராட்டு தெரிவித்து கொண்டாடினார்கள். இதைவைத்து வியாபாரம் செய்யும் ஆடை நிறுவனமும் மலையாள நடிகர் வேட்டி கட்டி வணக்கம் செலுத்தும் படத்தைப்போட்டு பத்திரிக்கைகளில் முதல் பக்கத்திலேயே தமிழர்களின் மானத்தை மீட்டுத்தந்தததற்காகப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக ‘தமிழக அரசுக்கு’ சல்யூட் என்றார்கள்.
உலகம் முழுக்க முக்கால்வாசி நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். தமிழன் தன் தாய்மொழியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட அவல நிலை உலகத்தில் எங்குமே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கணத்தை வகுத்த செம்மொழி இன்று தமிழனின் நாக்கில் ஒரு நிமிடம் பேச முடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. எல்லாருமே சூப்பர் தமிழராகிவிட்டோம்.
தன் தாய்மொழி, தன் இசை, தன்கலை, தன் இலக்கியம், தன் மருத்துவம், தன் அறிவியல் என எல்லாவற்றையும் வெளிநாட்டவர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் தொடக்கத்திலேயே கற்றுக்கொடுக்கிறார்கள். பின் உலகத்திலுள்ள அவர்கள் விரும்பிய மொழியை எல்லாம் கற்கிறார்கள். இதனால் அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவனது இனத்தையும் மொழியையும் நாட்டையும் கண்களாக கருதுகிறார்கள்.
அறிவுக்காக உருவாக்கப்பட்ட கல்வி இன்னும் வயிற்றுப்பிழைப்புக்காக என மாறிப்போயிருக்கிறது. நான் அரசமரத்தடியில் தரையில் அமர்ந்து படித்த சிறிய கிராமத்துப் பள்ளிகளில் கூட இன்று தமிழ் வழியில் படிக்க ஆள் இல்லை. என் கிராமத்தில் அரசுப்பள்ளித்தவிர மூன்று ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதுபோக பக்கத்து சிறு நகரங்களிலிருந்தும் பேருந்துகள் வந்து அதிகாலை ஆறரை மணிக்கே குழந்தைகளை அள்ளிக்கொண்டு போய்விடுகின்றன. எல்லாருமே இன்று டாக்டர், எஜ்ஜினியர் ஆக வேண்டும் என பெற்றோர்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலையில்லை. அவர்களுக்கு வேலைத்தர அனைவருமே மறுக்கிறார்கள். இதனால் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. இதுபற்றிய எந்தக் கவலையும் நம்மை ஆண்டவர்களுக்கும்,ஆள்பவர்களுக்கும் இல்லை. தமிழில் படிப்பவர்களுக்கு வேலைத்திட்டங்களை உருவாக்கித் தரவும் முயலவில்லை.
பெயரளவிற்கே தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தமிழை இணைப்பு மொழியாக ஆங்கிலத்தோடும், சமஸ்கிருதத்தோடும் பயன்படுத்தி தமிழ்மொழியை சிதைத்து கொலை செய்துகொண்டிருக்கின்றன. சட்டமன்றத்திலிருந்து கீரை விற்கும் பாட்டி வரைக்கும் சூப்பர் எனச்சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழ்த்திரைப்படத்துறையில் பலபேருக்கு வெளியில் காட்டிக்கொள்ள முடியாத கோபமிருக்கிறது. எதற்காக நாம் தமிழில் படத்தின் பெயரை சூட்டவேண்டும் என நினைக்கிறார்கள். பிறமொழிகளில் பெயர் சூட்டக்கடாது தமிழிலேயேதான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட விதியின்படி வெளியாகியிருக்கிற படங்களில் எழுபது விழுக்காடுப் படங்கள் சமஸ்கிருதத்தைத் தலைப்பாகக் கொண்டவைகள்தான். தமிழை நன்கறிந்தவர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும் மட்டுமே இதுத் தெரியும். மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இந்த சூழ்ச்சி புரிவதில்லை. அரசாங்கமும் இதனைக்கண்டு கொள்லாமல் வரிச்சலுகை வழங்கிவிடுகிறது. சமஸ்கிருதத்தில் தலைப்பு வைக்கும் போது ஆங்கிலத்திலேயே சூட்டி விடலாமே! பிறகு ஏன் இதற்கு ஒரு விதி, வரிச்சலுகை அதற்கு சான்றிதழ் வழங்க ஒரு அமைச்சரகம்?
நம் இளம் படைப்பாளிகளும், தயாரிப்பாளர்களும் பத்திரிகைகளில் வெளியிகின்ற சில விளம்பரங்களில் படத்தின் தலைப்பு மட்டுமே தமிழில் இருக்கின்றன. மற்ற விவரங்கள் குறிப்பாக தொழில் நுட்பக்கலைஞர்கள் பற்றிய விவரங்கள் ஆங்கிலத்தில் இருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். போராட்டம், எதிர்ப்பு என்றால் அது ஈழத்தமிழர் அரசியல்தால் என்றாகிவிட்டப் பிறகு இதனையெல்லாம் கேட்க யார் இருக்கிறார்கள்?
தமிழர்கள், தமிழில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதிலோ, தமிழைப் பேசுவதிலோ, வேலைவாய்ப்பை பெருவதிலோ, வாழ்வியலில் தமிழர்களின் அடையாளத்தை மீட்டெப்பதிலோ தமிழில் பெயர் சூட்டுவதிலோ காட்டுவதில்லை. வேட்டிக்கு நேர்ந்த அவமானத்தை தமிழனுக்கு நேர்ந்த அவமானமாக கருதிய அரசு தமிழ்படிக்காதப் பிள்ளைகளை தமிழில் படிக்க வைக்கவும், அவர்களுக்கு வேலை தரவும் ஏன் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்க மறுக்கிறது?
தமிழ்நாடு எனும் பெயரில் தமிழர்களாக தமிழ் இனமாக வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு தமிழில் கல்வி கொடுங்கள், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே உயர்நிலை பதவி கொடுங்கள், எங்களுக்கு 80 விழுக்காடு வேலை கொடுத்ததுபோக மீதியை மற்றவர்களுக்குக் கொடுங்கள். அப்பொழுதுதான் தமிழர் வேட்டிக்கட்டுவது பொருத்தமாகவும், பெருமையாகவும் இருக்கும். அதுவரை வேட்டி கட்டும் மலையாளியைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். ஏனென்றால் வேட்டியிருந்தும் மொழியிழந்த கண்களிழந்த குருடர்கள்தான் இந்தத் தமிழர்கள்.
-------------------------------------------------------------------------------------------
கோயில்களில் எனக்குப் பிடித்தது அங்கு இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் தான். அதுதான் கலையின் உச்சம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்களின் மிகச் சிறந்த கலை ஆளுமை நம் பழைய கோயில்களில் மட்டுமே இன்னும் கிடைக்கின்றன. நம் வாழ்வின் அறங்களைக் கற்றுக்கொடுத்த இடமாக நம் கோயில்கள் இருந்திருக்கின்றன.
பிரான்ஸில் இருந்து வந்திருந்த திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஒருவரை யும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தேன். கிழக்கு வாசல் கோபுரத்தைப் பார்த்தவுடனையே அவர்களின் பயணத் திட்டங்கள் மாறிப் போனது. இரண்டு மணிநேரம்தான் அங்கு இருக்கத் திட்டமிட்டிருந்தோம். புதுச்சேரியில் இருந்த பணிகளையெல்லாம் உடனே தள்ளிப் போட்டுவிட்டு கேமராவை எடுத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். பின்னர் மனமே இல்லாமல்தான் நடராஜர் கோயிலில் இருந்து திரும்பிப் போனார்கள்.
அவர்களுடன் நானிருந்த ஒருவார காலமும் நம் வாழ்க்கை நிலையும் முறைகளும் சீரழிந்தது பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு என்னிடமிருந்து பதில்களே இல்லை. நந்தனார் பற்றிய கதையைச் சொன்னபோது, அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவ்வளவு மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஏன் இவ்வளவு மோசமாகவும் வாழ்ந்தார்கள் என்கிற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள். எந்த சாதியைப் பற்றியோ, எந்த ஒரு மதத்தைப் பற்றியோ, எந்த ஒரு கடவுளைப் பற்றியோ குறிப்பிட்டு திருவள்ளுவர் எழுதாதபோது, எவ்வாறு இவை உள்ளே நுழைந்தன… என்கிற கேள்விகள் எனக்கு அதன்பின் எழுந்தன.
அன்று ஏழைகள்தான் ஒவ்வொரு கல்லாக, மண்ணாக, பாறைகளாகச் சுமந்து வெறும் சோற்றுக்காக மட்டுமே அத்தனை சிற்பங்களையும் வடிவமைத்து, கோபுரங்களையும், கோயில்களையும், குளங்களையும் கட்டி முடித்தார்கள். ஆனால், வானைத் தொட்டுக் கொண்டு நிற்கும் இந்தக் கோபுரங்களின் மீது ஒருமுறை ஏறச் சொன்னால் மயக்கம் போட்டு விழுந்துவிடுபவர்கள் எல்லாம், இன்று இந்தக் கோயிலுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
இவர்கள் ஒரே ஒரு கல்லையோ, ஒரு கைப்பிடி மண்ணையோ சுமந்திருப்பார்களா? எல்லாவற்றையும் அரும்பாடுபட்டு உருவாக்கி சிலையையும் செய்து முடித்து கருவறையில் வைத்தப் பின், அதற்குத் தண்ணீர்த் தெளித்து, அதற்கு ‘உயிர் உண்டாகிவிட்டது’ எனச் சொல்லி… அத்தனைப் பேரையும் வெளியில் நிற்கச் செய்துவிட்டார்கள். மற்றவர்களுக்கு சிலை வரைக்குமாவது சென்று தொலைவில் நின்று பார்க்க அனுமதி கிடைத்தது. ஆனால், கல்லையும் மண்ணையும் சுமந்த பரம்பரை யில் வந்த நந்தனாரைக் கூட வெளியில் நிறுத்திவிட்டார்களே!
இந்த மக்கள் தாழ்ந்த சாதிக்காரனாக, பிற்பட்ட சாதிக்காரனாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்களா? தங்களை நல்ல நிலைக்குக் கடவுள் உயர்த்துவார் என நினைத்துத்தானே கல்லையும் மண்ணையும் சுமந்திருப்பார்கள்? அவர்களை எல்லாம் குடியிருக்க இடமில்லாமல் சாக்கடையிலும் கொசுக்கடியிலும் இருக்கச் செய்தவர்தான், கடவுளா?
இருக்கின்ற கோயில்களெல்லாம் போதா தென்று இன்னும் மூலைக்கு மூலை கோயிலைக் கட்டிக் கொண்டே போகிறோமே... எப்போது இதனைப் புரிந்துகொள்ளப் போகிறோம்? எங்களைக் கோயிலைக் கட்டவும், குளத்தை வெட்டவும் சொல்லிவிட்டு… சிலருக்கு மட்டும் கல்வியைக் கொடுத்தாயே! எங்கள் கண்களில் இப்போதுதானே எழுத்தைக் காட்டினாய். எங்கள் பிள்ளைகள் இந்த ஒரே தலைமுறையில் எல்லாவற்றையும் கற் றுக் கொண்டபோது…
இந்தக் கல்வியை அவர்களுக்கும் கொடுத்தபோதே எங்களுக்கும் கொடுத்திருந்தால், நாங்கள் எங்கோ அல்லவா போயிருப்போம்? வெறும் கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்த என் அப்பாவுக்கும், அதுகூடத் தெரியாத அம்மாவுக்கும் பிறந்த நான் சிந்திக்கத் தொடங்கியிருக்கும்போது, இனி எங்கள் பிள்ளைகள் எப்படியெல்லாம் உன்னைக் கேள்வி கேட்பார்கள்… என்பது, கடவுளாகிய உனக்கு கட்டாயம் புரிந்திருக்கும்.
பிச்சைக்காரர்கள் இல்லாதக் கோயில்களை யும், உன்னைப் பார்க்கப் பணம் கேட்கும் பூசாரி கள் இல்லாத கோயில்களையும் எப்போது நாங்கள் பார்க்கப் போகிறோம்? ஆயிரம் ரூபாய் கொடுப்பவனை உன் பக்கத்திலேயும், ஒன்றும் கொடுக்காதவனை உன் கண்களுக்கே தெரி யாத தொலைவிலேயும் நிற்க வைக்கிறாயே… உனக்கு உண்மையிலேயே கண்கள் இருக்கிறதா? உன்னுடைய வேலைதான் என்ன? பாமர மக்களின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து, ஏமாற்றி, ஏழைகளின் வயிற்றெரிச்சலில் கொள்ளையடித்தப் பணத்தை எல்லாம் உன்னிடத்தில் கொண்டு வந்து கொட்டுகிறார்களே! அதானால்தான் அவர்களை எல்லாம் மேலும் மேலும் ஒரு வீட்டுக்குப் பத்து வீடாக, ஒரு காருக்குப் பத்து காராக, ஊரில் இருக்கிற எல்லா சொத்துக் களையும் அவர்களுடைய சொத்தாக மாற்றிக் கொண்டிருக்கிறாயா?
சரி, எப்படியாவது உன்னைப் பார்த்தால் போதும் என எல்லா வேலைகளையும் விட்டுவிட்டுக் கோயிலுக்குள் நுழைந்தால்… அங்கே நடக்கிற கூத்தெல்லாம் உனக்குத் தெரியுமா? ஏகப்பட்ட சண்டை போட்டு, வழக்கெல் லாம் போட்டு, ‘தமிழ்க் கடவுளுக்கு… தமிழ் நாட்டில் தமிழில் வழிபாடு செய்யுங்கள்’ என ஆணை பிறப்பித்தால், அதாவது நடக்கிறதா? ‘தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்’ என ஒரு மூலையில் எழுதி வைத்திருப்பதோடு சரி!
நான் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் தமிழில் வழிபாடு செய்யுங்கள் அதுதான் எனக்குப் புரியும். எங்கள் சாமிக்கும் புரியும் எனச் சொல்கிறேன். பெயருக்கு இரண்டு வரி தமிழில் சொல்லிவிட்டு மீதியை சமஸ்கிருதத்தில் சொல்லி முடித்துவிட்டு, என்னை எப்போது வெளியில் அனுப்பலாம் என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். சில பூசாரிகள் எங்களுக்கு தமிழில் மந்திரம் தெரியாது என்கிறார்கள். உண்மை யிலேயே தெரியவில்லையா? கற்றுக் கொள்ளப் பிடிக்கவில்லையா? அல்லது வேண்டாம் என நினைக்கிறீர்களா எனக் கேட்டால், இத்தனை பேர் பேசாமல் கும்பிட்டுவிட்டுப் போகும்போது உங் களுக்கு மட்டும் என்ன எனக் கேட்பவர்களும் உண்டு.
என்னுடன் அங்கு இருக்கிற ஒரே ஒருவர்கூட எனக்கு ஆதரவாகவோ, தங்களுக்கும் சமஸ்கிருதம் புரியவில்லை, தமிழில் மந்திரத் தைச் சொல்லுங்கள் என்றோ கேட்டதில்லை.
என்னைப் போன்ற பலருக்கும் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. எல்லாவற்றையும் போல் இதைப் பற்றியும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. எல்லாவற்றையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் என் மனைவியும், மற்றவர்களும் எதையும் கேட்காமல் கோயிலுக்குள் சென்று கொண்டிருக்கும் காட்சியைப் பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சட்டத்தைக் கரைத்துக் குடித்து மக்கள் நலனுக்காகவே செயல்படும் மனிதர்களில் எவராவது ஒருவர், ‘கடவுளுக்கு முன் எல்லோ ரும் சமம்’ எனும் சட்டத்தைக் கொண்டுவர மாட்டாரா?