காட்சி ஒன்று -- இளைஞர்களிடையே உரையாற்றுகையில் சாக்ரடீஸ்:
உன்னையே நீ அறிவாய்!
கிரேக்கத்தின் கீர்த்தி, புவனம் அறியாததல்ல. !
அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயல்வது புண்ணுக்கு புனுகு தடவும் வேலையைப் போன்றது.
அதனால் தான் தோழர்களே !
சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று
சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன்.
அறிவு! அறிவு!
அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதைத் தேடிப் பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன்.
உன்னையே நீ அறிவாய்!
இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத் தான் என் உயிரினும் இனியவர்களே உங்களை எல்லாம் அழைக்கிறேன்.
ஏற்றமிகு ஏதென்ஸ் நகரத்து எழில்மிக்க வாலிபர்களே!
நாற்றமெடுத்த சமுதாயத்தில்
நறுமணம் கமழ்விக்க
இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன்
ஓடிவாருங்கள்! ஓடிவாருங்கள்!
வீரம் விலைபோகாது
,விவேகம் துணைக்கு வராவிட்டால்!
நீட்டிய வாளும்
தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது வீரர்களே!
இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
அறிவாயுதம்! அறிவாயுதம்!
அகிலத்தின் அணையாத ஜோதி!
மெலிடஸ்: [சிரிக்கிறான்] அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம்! குமுறும் எரிமலை, கொந்தளிக்கும் கடல் அவைகளைவிட பயங்கரமானவன் சாக்ரடீஸ். அவன் தரும் அறிவாயுதம் கிரேக்கத்திலே தயாராகுமானால் நாமெல்லாம் தலைத் தூக்கவே முடியாது அனீட்டஸ். என்ன சொல்கிறீர்?
அனீட்டஸ்: மெலிடஸ்! நாம் கீறிய கோட்டைத் தாண்டாத கிரேக்க மக்களுக்கு அந்தக் கிழவன் அறிவுக்கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும். மெலிடஸ்: ஆம்! அதுதான் சரி! சாக்ரடீஸ் நீ கைது செய்யப்படுகிறாய்!
*******************************************************
காட்சி இரண்டு -- ராயல் ஸ்டோஆ, விசாரணைக் கூடம்
அனீட்டஸ்: சாக்ரடீஸ் நாட்டிலே நடமாடக் கூடாத ஒரு ஆத்மா. ஜனநாயக அரசாங்கத்தைக் குறைகூறும் அந்த ஜந்து, உடல் முழுதும் விஷம் கொண்டது.
கேட்டார்க்கு இனிக்கும் சொற்களால்
கேளாரும் கேட்க முடியும் வார்த்தைகளால்
கேடு மலியும் கருத்துக்களை அள்ளி வழங்கி
அரசாங்கத்துக்கு விரோதமாக,
ஆண்டவனுக்கு விரோதமாக,
சட்டத்துக்கு விரோதமாக
இளைஞர்களைத் தூண்டிவிடும் இழிகுணக் கிழவன்.
சாக்ரடீஸ்: [சிரிக்கிறார்]
அரசர் ஆர்கன்: என்ன சிரிப்பு! என்ன காரணம்?
சாக்ரடீஸ்: ஒன்றுமில்லை தலைவா! ஒன்றுமில்லை! ஆத்திரத்திலே அனீட்டஸ் தன்னை மறந்து என்னைப் பார்த்துக் கிழவன் என்று கேலி செய்கிறான்.
கேலி செய்கிறான்.
அதை நினைத்தேன் சிரித்தேன்.
கடல் நுரைபோல் நரைத்துவிட்ட தலை
எனக்கும் அனீட்டசுக்கும்!
இல்லையா சபையோர்களே! என்ன அனீட்டஸ் உண்மைதானே!
மெலிடஸ்: சாக்ரடீஸ்! வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரின் தலையைப் பற்றியல்ல, அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
சாக்ரடீஸ்: மிகவும் நன்றி மெலிடஸ்! மிகவும் நன்றி! ஆனால் ஒன்று !
எண்சான் உடம்புக்கு தலையே பிரதானம்போல்
இந்த வழக்கிற்கும் தலை தான் பிரதானம்.
என் தலையிலே இருந்து சுடர்விட்டுக் கிளம்பும் அறிவு !
அதை அழிக்க கவிஞனாகிய
உன் தலையிலே இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனைகள்,
அரசியல்வாதி அனீட்டசின் தலையிலே இருந்து பீறிட்டெழும் அதிகார ஆணவம்,
இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனைப் போராட்டம்,
அதன் விளைவுதான் மெலிடஸ் இந்த வழக்கு.
மெலிடஸ்: பார்த்தீர்களா சட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான். இப்படித்தான் இளைஞர்களையெல்லாம் கெடுத்தான்.
சாக்ரடீஸ்: ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களைக் கெடுக்க முடியும்! நான் என்ன வாலிபருக்கு வலை வீசும் விலைமாதா? பருவ விருந்தளிக்கும் பாவையா?
மெலிடஸ்: மாதரிடம் இல்லாத மயக்கு மொழி, வாலிபருக்கு வலை வீசும் வலிமை ஏதும் பெற்றிடாத வசீகரச் சொல்லலங்காரம், வார்த்தை ஜாலம், அடுக்குத் தொடர் இப்படிப் பல மாயங்கள் கற்றவர் நீர்.
சாக்ரடீஸ்: மந்திரவாதி என்றுகூடச் சொல்லுவாய். அன்புள்ள இளைஞனே! ஏதென்ஸ் நகரத்திலேயே நான் ஒருவன் தான் இளைஞர்களைக் கெடுக்கிறேன் அப்படித்தானே?
மெலிடஸ்: ஆமாம்!
சாக்ரடீஸ்: நீ கெடுக்கவில்லை?!
மெலிடஸ்: இல்லை!
சாக்ரடீஸ்: அனீட்டஸ்!
மெலிடஸ்: இல்லை!
சாக்ரடீஸ்: லைக்கான்!
மெலிடஸ்: இல்லை!
சாக்ரடீஸ்: இந்த நீதிபதி!
மெலிடஸ்: இல்லை!
சாக்ரடீஸ்: யாருமே இளைஞர்களைக் கெடுக்கவில்லை எல்லோருமே இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள் என்னைத் தவிர, அப்படித்தானே!
மெலிடஸ்: ஆமாம்!ஆமாம்!
சாக்ரடீஸ்: அத்தனை பேரும். ஏன்! ஏதென்ஸ் நகரமே இளைஞர்களைத் திருத்தும்போது, நான் ஒருவன் எப்படியப்பா அவர்களுடைய பாதையைத் திருப்ப முடியும்?
அனீட்டஸ்: ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
சாக்ரடீஸ்: ஏன்! இப்படியும் சொல்லலாமே, இருண்ட வீட்டிற்கு ஒரு விளக்கு. என்ன மெலிடஸ் திகைக்கிறாய்!
சபையோர்களே!
வாலிபர்கள் என்னைச் சுற்றி வானம்பாடிகள் போல வட்டமிடக் காரணம் ...
என்னுடைய வார்த்தை அலங்காரமல்ல,
வளம் குறையாக் கருத்துக்கள்,!
தரம் குறையாக் கொள்கைகள்,!
இந்தத் தரணிக்குத் தேவையான
தங்கம் நிகர் எண்ணங்கள்.
அழகு மொழியால்! ..அலங்கார அடுக்குகளால்! ..
அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்று சொல்கிறார்களே அவர்களை நான் கேட்கிறேன்.
அந்தமொழி எனக்குமட்டும் சொந்தமல்லவே?
அவர்கள் அதைப் பேசக்கூடாது என்று நான் தடை போட்டது கிடையாதே!
பேசிப்பார்க்கட்டுமே அவர்களும். !
ஆம்!
பேசித் தோற்றவர்கள். !!
பேசித் தோற்றவர்கள்.
அரசர் ஆர்கன்: சாக்ரடீஸ்! பேச்சை நிறுத்தும். விளக்கம் தேவை இல்லை. இந்த நீதி மன்றத்தின் அதிகப்படியான உறுப்பினர்களின் வாக்களிப்பின் படி நீர் விஷம் சாப்பிட்டு மரண தண்டனைக்கு ஆளாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்.
*******************************************************
காட்சி மூன்று -- சிறைச்சாலை
சாக்ரடீஸ்: பார்த்தாயா பயனற்ற தத்துவ விசாரணையில் காலத்தைக்களிக்கிறேன், வீண் வாதம் செய்து தொல்லைபடுகிறேன் என்றெல்லாம் கோபித்துக் கொண்டாயே!
இப்போது பார்!
உனது கணவன் அகிலம் புகழும் வீரனாக, தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான்
. அன்புள்ள Xanthippe!
நீ மிகவும் பாக்யசாலி.
பணபலம், படை பலம், அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப்போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி.
குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்.
அவர்கள் பெரியவர்களாக மாறியதும், நேர்மை தவறி நடப்பார்களேயானால் நான் உங்களைத் திருத்த முயன்றது போலவே நீங்களும் அவர்களைத் திருத்த முயலுங்கள். நேரமாகிறது. காவலர்கள் கோபிப்பர். நீ போய்வா.
க்ரிட்டோ இவர்களை அனுப்பி வை. க்ரிட்டோ உனக்குத் தெரியுமல்லவா இன்றோடு முப்பது நாள் சிறைவாசம் முடிந்து நீதி மன்றத்தின் உத்தரவுப்படி விஷம் சாப்பிட்டு சாக வேண்டிய நாள் இதுதான்.
க்ரிட்டோ: அருமை நண்பா!
சாக்ரடீஸ்: அழாதே! அதோ! வந்துவிட்டது அமுதம். !சிறைக்காவலா!
இதை என்ன செய்ய வேண்டும், ?
முறைகளைச் சொல்லு.
காவலன்: பெரியவரே! விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருக்க வேண்டும். கால்கள் மரத்துப் போகும்வரையில் அப்படியே நடக்க வேண்டும். பிறகு உட்காரலாம். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டுக்கொண்டே வரும். பிறகு படுத்துவிட்டால், ...
சாக்ரடீஸ் : ஆனந்தமான நித்திரை.!
கனவு மங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை.
சிறைக் காவலா! கொடு இப்படி.
க்ரிட்டோ: நண்பா சிறிது நேரம் பொறுத்துக் கூட சாப்பிடலாம். சிறைச்சாலையிலே அதற்கு அனுமதி உண்டு.
சாக்ரடீஸ்: க்ரிட்டோ! க்ரிட்டோ!
உனக்கு மிக மிக அற்ப ஆசை!
மிக மிக அற்ப ஆசை!
இந்த விஷத்தை இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்துக்கொள்,
அதற்குள் என் இருதயம் வெடித்து நான் இறந்துவிட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதி மன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றுவது.?
புதிய சாக்ரடீஸா பிறந்து வரப்போகிறான்?
. கூடாது! கூடாது! இப்போதே சாப்பிட்டுவிடுகிறேன். க்ரிட்டோ! இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல. இந்த உடலைத்தான்.
க்ரிட்டோ : ஏதென்ஸின் எழிச்சி மிக்க சிங்கமே! எங்கள் தந்தையே! கிரேக்கப் பெரியாரே! உம்மையும் எம்மையும் இந்த விஷம் பிரிக்கப்போகிறதா? அய்யகோ! நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றதே. நண்பா! எனக்கு கடைசியாக ஏதாவது சொல்.
சாக்ரடீஸ்: புதிதாக என்ன சொல்லப்போகிறேன்.? உன்னையே நீ எண்ணிப்பார்.
எதையும் எதற்காக ஏன் எப்படி என்று கேள்.
அப்படிக் கேட்டதால் தான்
சிலை வடிக்கும் இந்தச்சிற்பி
சிந்தனைச் சிற்பியாக மாறினேன்.
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்.
எவர் சொன்ன சொல்லானாலும்
அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்ப்பாய்.
அதைத்தான் உனக்கும் இந்த நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்.
விஷம் அழைக்கிறது என்னை.
இந்தக் கிழவன் கிரேக்க நாட்டு இளைஞர்களைக் கெடுத்ததாக யாராவது உண்மையாக உளமார நினைத்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும்.
அவர்கள் என்னை மன்னிக்கட்டும்.
வருகிறேன்!
வணக்கம்!
ஏ தேசமே! சிந்திக்கத் தவறாதே!
உன்னையே நீ அறிவாய்!
உன்னையே நீ அறிவாய்!
வருகிறேன்!