PART-5-(DKP-3)

******************************************************************************************************************************************************************

டைகர் வரதாச்சாரியார் எனக்கு “கான சரஸ்வதி”னு பட்டம் கொடுத்தார். அரியக்குடி ஸ்ரீராமானுஜ ஐயங்கார் என்னைப் பாராட்டி “பாட்டம்மா ..” “ ஸங்கீதத்துக்காகப் பாடு பட்ட அம்மா”னு வர்ணிச்சார்.

தமிழ் இசையில் எனக்கு ஆர்வம் வருவதற்குத் “தமிழ் தியாகய்யா” பாபநாசம் சிவன் அவர்களும் ஒரு முக்கிய காரணம். எத்தனை தமிழ் கீர்த்தனைகள். அப்பப்பா...வற்றாத இசைக் கடல்னா அவர். நேரிடையாக அவரிடமே கற்றுக் கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது.

மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், வீருசாமி பிள்ளை மற்றும் டி.என்.ஸ்வாமிநாதப் பிள்ளை ஆகியோரது சஷ்டியப்த பூர்த்தி விழாக்களின்போது பாடும் பாக்கியம் கிடைச்சுது. அதே போல் நாதஸ்வர சக்ரவர்த்தி T.N.ராஜரத்தினம் பிள்ளையின் மருமான் கக்காயியின் கல்யாணத்துக்கு நானும் ஜெயராமனும் பாடினோம். Dr.S.ராமநாதனின் ( தியாகராஜர் இயற்றிய) பிரஹ்லாத பக்தி விஜயம் வெளியீட்டு விழா மைலாப்பூர் சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. அரியக்குடி ஸ்ரீராமானுஜ ஐயங்கார் முன்னிலையில் ஆலத்தூர், எம்.எஸ். நான் எல்லோரும் பாடினோம், மறக்க முடியாத நிகழ்ச்சி.

1947-ல ஆகஸ்டு 14 ராத்திரி 12 மணிக்கு இங்க மெட்ராஸே ஜகஜ் ஜோதியாயிருந்தது. எங்க பார்த்தாலும் மாவிலைத் தோரணங்கள். எல்லோரும் அவா அவா ஆத்துல கல்யாணம் மாதிரி கொண்டாடிண்டிருந்தா. ஆல் இண்டியா ரேடியோவுல என்னைப் பாடக் கூப்பிட்டா. “விடுதலை, விடுதலை..” “ஆடுவோமே பள்ளு பாடுவோமே..” “வெற்றி எட்டுத் திக்கும் எட்ட” “ வந்தே மாதரம்” பாடல்களைப் பாடினேன். பாடி முடிச்சப்பறம், அப்போ டைரக்டராயிருந்த கோபாலன் சன்மானமா செக் கொடுத்தார். கண்டிப்பாக வாங்கிக்கவேணும்னு கட்டாயப்படுத்தினார். என் தேசத்துக்கு, என்னோட பிறந்த மண்ணுக்கு, என் தாய் திருநாட்டுக்கு ஸ்வதந்திரம் கிடைச்சிருக்கு. நான் கைநீட்டி காசு வாங்க மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டேன். என்னோட பாரதத் தாய்க்கு அடிமை விலங்கெல்லாம் நீங்கி விடுதலை கிடைச்சதுக்குக் காசு வாங்கிண்டு பாடுவதா... அபச்சாரம் இல்லையா?

எனக்குப் பாரதியார் பாடல்கள் மேல் அதீதமான ஆசை வரக் காரணமாயிருந்தவர் என் கணவரின் மாமா டாக்டர் ஸ்ரீநிவாசந்தான். தேசபிதா மகாத்மா காந்திஜி காஞ்சிபுரம் வந்தப்போ என்னை ஊக்குவித்துத் தைரியமாகப் பாரதியார் பாடல்களைப் பாடச் சொன்னார். காந்திஜி முன்பாக, “வீர சுதந்திரம் வேண்டி நின்றார்..” பாடினேன். பாரதி பாடல்கள் பாட ஆரம்பிச்சது இதுலேர்ந்துதான். இன்னி வரைக்கும் ஏராளமான பாரதி பாடல்கள் பாட அஸ்திவாரமாய் அமைஞ்சது இந்நிகழ்ச்சி தான். தேசபிதா மகாத்மா காந்தி காலமானபோது 1948 ஜனவரியில ரேடியோவில் “வைஷ்ணவ ஜனதோ” “ சாந்தி நிலவ வேண்டும்” “காந்தி மகான் பிறந்தார்”..போன்ற பாடல்களைக் கண்ணீர் மல்கப் பாடினேன்.

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் தாயார் ஸ்ரீமதி வீணை சண்முக வடிவு அவர்களுக்கு என் மீது அதீதமான பிரியமும், வாஞ்சையுமுண்டு. அதேபோல் ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, காலஞ்சென்ற எம்.எல்.வி போன்ற இன்னும் பல இசைக் கலைஞர்களுக்கு என்மீது மிக்க பந்துப்பிரியமுண்டு.

நமது கர்நாடக இசையானது பிராச்சீனமானது. அது வெறும் கலை மட்டுமல்ல, ஒரு சாஸ்திரமும் கூட. மனசுக்கும், காதுக்கும் சுகம் அளிக்க வல்லது. சாதகம் மூலம் அந்த இறைவனையே அடையலாம். ”

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

PART-6(VSV ON DKP)