D.K.PattammaaL vintage 78 rpm records-1938-1952
PATTAMMAL WITH BROTHER ( HER FATHER WITH THAMBURA)
*********************************************************************************************************************************************************
( தொடர்ச்சி )
எங்க ஸ்கூல் ஹெட்மிஸ்டிரஸ் ஸ்ரீமதி அம்முகுட்டி அம்மாள் இசை நாடகம் ஒண்ணு தயாரிச்சு என்னை நடிக்கவும் பாடவும் வெச்சா. நான் அதுலே சாவித்திரி வேஷம் போட்டேன்.”நாடகத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக தங்கப் பதக்கம் பரிசுபெற்ற காஞ்சிபுரம் கவர்ன்மெண்ட் உபாத்தியாயினி பயிற்சி பாடசாலையைச் சேர்ந்த டி.கே.பட்டம்மாள் “ என கொட்டை எழுத்துக்களுடனும், போட்டோவுடனும் அடுத்தநாள் பேப்பரில் நியூஸ் வெளியாயிடுத்து! அந்தக் காலத்துல இது ஒரு மாபெரும் புரட்சியாக்கும்!
இந்தச் செய்தியைப் படிச்சுட்டு, Columbia Gramaphone கம்பெனிகாரர்கள் ரிகார்டு கொடுக்கணும்னு என் அப்பாவை அணுகினார்கள். அந்தக் காலத்துல, ஸ்திரீகள் போட்டோ எடுத்துக்கறதே மகாபாவம். மற்றும் துர்லபமும் கூட. அதுலேயும் ரிகார்டு வேற கொடுப்பதா? என் அப்பா வேண்டாவிருப்பாகச் சம்மதித்தார். “முக்தியளிக்கும் திருமூல ஸ்தலத்தைக் கண்டு” பாடல்தான் நான் முதன்முதலா கொடுத்த ரிகார்டு! திருப்புகழ் மாதிரி ஒரு இசை வடிவம் எந்த நாட்டு இசையிலும் கிடையாது. 108 அங்க தாளங்களையும் உள்ளடக்கி இந்த சந்தத் திருப்புகழை நமக்கு அளித்துள்ளார் அருணகிரிநாதர். சிம்ம நந்தன தாளம் கூட இதுல இருக்கிறதாகச் சொல்லுவா. காஞ்சிபுரத்தில திருப்புகழ் பாடல்களைப் பாடி வந்த வேலூர் ஸ்ரீ அப்பாதுரை ஆசாரி என்பவர்தான் எனக்கு திருப்புகழ், திருப்பாவை-திருவெம்பாவை, இராமலிங்க ஸ்வாமிகளின் அருட்பா ஆகியவைகளைக் கற்றுக் கொடுத்தார். ஆரம்ப காலத்தில் நான், ஜகன்மோகினி ராகத்தில் அமைந்த “ நெஞ்சே நினை அன்பே துதி நெறி நீ குருபரனை ..” என்கிற பல்லவியைப் பாடுவேன். இது எனது மானசீக குரு காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையவர்கள் பாடிப் பிரபலமானதாகும். மிகவும் கடினமான பல பல்லவிகளை திருப்பதி ஸ்ரீமான் வித்யால நரசிம்மலு நாயுடு கற்றுக் கொடுத்தார். 1929-ல் மதராஸ் கார்பரேஷன் ரேடியோவில் பாடினேன். 1930-ல் ப்ரொபசர் சாம்பமூர்த்தி நடத்திண்டுருந்த Summer School of Music -ல நான் சேர்ந்தப்போ நல்ல நல்ல கிருதிகளைச் சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு வாரக் கடைசியிலும், ரஸிகர்கள் முன்னிலையில் நாங்கள் மாணவ, மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து பாடுவோம். வீணை மற்றும் வயலினும் சொல்லிக் கொடுப்பா.உங்களுக்கு ஒண்ணு தெரியுமோ... நான் வீணையும், வயலினும் கத்துண்டு வாசிச்சும் இருக்கேன்! இந்த சமயத்துலதான் நன்னா பாடும் மாணாக்கர்களுக்கு கச்சேரி செய்ய வாய்ப்பும் கொடுப்பார்கள். எங்களுக்கு மயிலாப்பூர் ரஸிக ரஞ்சனி சபாவிலேயும், ஜார்ஜ் டவுன் கான மந்திரத்திலுமாக இரண்டு chance கிடைச்சுது. முதன் முதலாக 1933-ல் ( எக்மோர் லேடிஸ் கிளப் ) சென்னை எழும்பூர் மஹிளா ஸமாஜத்தில் தான் என்னுடைய முதல் Public Performance அரங்கேறியது. இதே வருஷம்தான் சென்னைக்கு குடிபெயர்ந்தோம். ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சிஷ்யர் ஸ்ரீமான் வி.சி.வைத்யநாதன் அவர்களிடம் பல ‘அட தாள’ வர்ணங்களும், க்ஷேத்ரஞர் மற்றும் தமிழ் பதங்களும் கத்துண்டேன். காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை சிஷ்யர் என்.எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரிடம் “நாயனாப்பிள்ளை பாணி”யில் பாடல்கள் பாடமாச்சு .
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதிகள்னாலே எனக்கு உயிர். அவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் “ஸங்கீத கலாநிதி” நீதியரசர் T.L.வெங்கடராமய்யர் அவர்கள். அவரிடம் என்னை அம்பி தீக்ஷிதர்தான் அறிமுகப் படுத்தினார். அவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சொல்லிக் கொடுப்பார். நான் கீழே பாயில் உட்கார்ந்து கத்துப்பேன். பின்னர், அதைப் பிராக்டீஸ் பண்ணுவேன். அதையே திருப்பித் திருப்பிப் பாடிப் பார்த்துப்பேன். எத்தனை கிருதிகள் சொல்லிக் கொடுத்திருப்பார்! மகாமேதை அவர். அவர் மாதிரியெல்லாம் மனுஷாபிமாமானத்தோடும், பிரியத்தோடும் மனுஷர்களைப் பார்ப்பது அபூர்வம்...!
ஸ்ரீமான் T.L.வெங்கடராமய்யர் பற்றி இன்னொரு விசேஷமான விஷயம். ‘உனக்கு சங்கீத கலாநிதி பட்டம் கொடுக்கறதைப் பார்த்துட்டுதான் நான் உயிரையே விடுவேன்” என்று சொன்னார். அதன்படியே 1971 ஜனவரி 1 அன்று சதஸ் நடந்தபோது எனக்கு ஸங்கீத கலாநிதி பட்டம் வழங்கப் பட்டது. மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த அவரால் விழாவுக்கு வரமுடியலை. பின்னர், அவர் வீட்டுக்குச் என்று விருதைக் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கிண்டேன். சொல்லி வைத்தாற்போல் அன்றே அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஏதோ, நான் விருது வாங்குவதற்காகக் காத்து கொண்டிருந்தது போல் இருந்தார். என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி இது. அது மட்டுமில்லே. என்னால் தாங்கிக்க முடியாத பிருவுகள்ல இது ஒண்ணு. மற்றது என்னோடேயே உயிரோடு உயிராக கலந்திருந்த தம்பி D.K.ஜெயராமன் காலமானது.....”
( தொடரும் )
[ நன்றி “ ஸரிகமபதநி, டிசம்பர் 2000 ]
----------