00-வாடாத இசை தந்த வசந்தகோகிலம்!

https://s-pasupathy.blogspot.in/2017/02/1_34.html

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

வாடாத இசை தந்த வசந்தகோகிலம்!

------------------------------

வாமனன்

-----------------------------------------------------

தேனினும் இனிய குரலாலும் வண்டின் ரீங்காரம் போன்ற பாட்டாலும், காமாட்சி என்ற இளம்பாடகிக்கு, வசந்தகோகிலம் என்ற காரணப் பெயர் அமைந்தது

இசைத்தட்டுகளில் அவர் பதிவு செய்திருக்கும் தனிப்பாடல்கள், ரத்தினங்கள் போல் ஜொலித்து, தரத்தில் விஞ்சி நிற்கின்றன.

ஆனந்த நடனம் ஆடினாள்' என்ற காம்போதி ராகப் பாடல் ஒன்று போதாதா? 'வானும் புவியும் வணங்கி வலம்வர, ஞானவெளியினில் வீணை ஓம் ஓம் என' என்று வரும், சுத்தானந்த பாரதியாரின் அற்புதமான வரிகளில், வசந்தகோகிலத்தின் கானம், வானையும் மண்ணையும், இசை வெள்ளத்தில் இன்றளவும் நனைத்துக் கொண்டிருக்கிறது.

காத்திரம் குறையாமல், உச்ச ஸ்தாயியிலும் சஞ்சரிக்கும் குரல்; உச்சரிப்பில் நெருடல்கள் இல்லாத தெளிவு, இனிமை; உதட்டில் இருந்து பாடாமல் உள்ளத்தில் இருந்து பாடும் தன்மை; கஷ்டமான சங்கதிகளை உதிர்த்துச் செல்லும் அனாயசம்; பிருகா அசைவும், நீண்ட கார்வைகளும் மாறிமாறி வரும் பாணி; மனோதர்மம் என்ற சுயமான இசைக் கற்பனையின் வீச்சு. இப்படி சங்கீத வசந்தங்களின் சங்கதிகள், வசந்தகோகிலத்தின் இசையில், ஆடிவெள்ளம் போல், அலைபுரண்டு வருகின்றன.

கேரளத்தின், இரிஞ்ஞாலக்குடாவில், சந்திரசேகர அய்யர் என்பவரின் கடைசிப் பெண்ணாக, 1921ல் பிறந்தார், வசந்தகோகிலம். குடும்பம், நாகப்பட்டினத்திற்கு குடிபெயர்ந்தபின், ஜாலர் கோபால அய்யரின் இசைப் பள்ளியில், பல ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார்.

சென்னை வித்வத் சபையின், 1938ம் ஆண்டு இசைவிழா தொடர்பாக நடந்த இசைப் போட்டியில், முதல் பரிசை வென்றார். பரிசு பெற்றவரை தேடிப் பிடித்து, எச்.எம்.வி., நிறுவனம், 'எனக்குன் இருபதம்' என்ற பாடலைப் பதிவு செய்து இசைத்தட்டாக வெளியிட்டது.

இந்த காலகட்டத்தில், கோவையை சேர்ந்த, வசதியான குடும்பத்தில் பிறந்த, பி.ஏ.பி.எல்., படித்த சி.கே.சாச்சி, 'சந்திரகுப்த சாணக்கியா' என்ற படத்தின் நாயகியாக, வசந்தகோகிலத்தை நடிக்க வைத்தார் (1940).

சினிமாவை விட, சங்கீத உலகில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அற்புதமான சாரீர வசதிகளுடன் அபார ஞானமும் கொண்ட வசந்தகோகிலம், ஏராளமான இசைத்தட்டுகளில் பாடியிருக்கிறார். 1945ம் வருஷம், கும்பகோணத்தில் நடைபெற்ற இரண்டாம் கலை முன்னேற்ற மகாநாட்டில், 'மதுர கீத வாணி' என்ற பட்டத்தை, டைகர் வரதாச்சாரியார், வசந்தகோகிலத்திற்கு வழங்கினார்' என்பது, நாற்பதுகளின் பிற்பகுதியில் வந்த செய்தி.

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைத்தட்டும், வசந்தகோகிலத்தின் இசைத்தட்டும் போட்டா போட்டியோடு வந்த காலகட்டத்தில், வசந்தகோகிலத்தின் இசை, எம்.எஸ்., ஸுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது என்று, கணித்த இசை அறிஞர்களும் இருந்தனர். இசை உலகில், உயர்ந்த இடத்தை எட்டிப்பிடிக்கும் தறுவாயில், தனது 30வது வயதில், காசநோய்க்கு இரையானார், வசந்தகோகிலம். அவர் பதிவு செய்த பாடல்களில், இலக்கியமும் இசையும் ஒரு நாதநாயகியின் உயிர்மூச்சில் கலந்தொலிக்கின்றன.