Welcome to Srikalabairavan Astrology
பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து மாலை குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து தாமரை மலர் கோலமிட வேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும்.
ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையார் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும். பால் பாயசம் வைப்பது விசேஷம். தங்களால் முடிந்த நெய்வேத்திய பொருட்களையும் வைத்து வழிபடலாம்.
நிலவை வணங்கி மனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்கியதுடன் பித்ருக்களையும் ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். ஸ்ரீ சத்தியநாராயண அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து போற்றி பாடல்களையும் படிக்க வேண்டும்.
பூஜையின் முக்கிய அம்சமாக அன்னதானம் செய்ய வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் நெய்வேத்திய பிரசாதத்தை அருகில் வசிப்பவரிடம் கொடுக்கலாம். பூஜை முடிந்த பின்னர் நெய்வேத்திய பிரசாதத்தை உண்ணலாம்.