Welcome to Srikalabairavan Astrology
பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் பரிசித் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான். தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க உறுதி செய்து வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் முனிவர் பரிசித்தின் மகன் யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார்.
சாபநிவர்த்தி கிடைத்த நாளே நாக சதுர்த்தி தினம். நாகசதுர்த்தி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து காலைக்கடன்களையும், விரதமிருந்து ஸ்நான பானங்களையும் முடித்து, சுத்தமான, உலர்ந்த ஆடையை உடுத்திக்கொண்டு, நாகபூஜை செய்ய வேண்டும்.
நாகபூஜை என்பது புற்றுக்கு பால் வார்ப்பதாகும். அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகர் சிலை இருக்கும். பூமியில் பாதாளலோகத்தில் நாகலோகம் இருப்பதால், புற்றின் வழியாக நாகங்களுக்குப்போய் பால்சேர்ந்து, பால்வார்த்த நம்மை, பாதகம் ஏதும் செய்யாமல், காத்து அருளும். புற்றிருந்தால் முதலில் புற்றுக்கு கொஞ்சம் பாலை வார்க்க வேண்டும். அதன்பின் புற்றுக்கு மஞ்சள் குங்குமம், சந்தனம் இடவேண்டும். நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்து பின்னர் பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள் பூமாலைகளை அணிவித்து வஸ்திரம் அணிவிக்க வேண்டும். தேங்காய் உடைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜிக்க வேண்டும்.
கற்பூரஆரத்தி எடுத்து மங்களகரமாகப் பூஜை செய்ய வேண்டும். பிரசாதத்தை எடுத்து, நாக சிலைகளுக்கு சமர்பித்து அரசமரத்தை சுற்றி நமஸ்காரங்களுடன் முடிக்க வேண்டும். நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் ஒவ்வொரு மாதமும் இந்த விரதத்தை பின்பற்ற வேண்டும். முதல் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் ஆடி மாதத்தில் நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும்.
இந்த நாக சதுர்த்தி விரதத்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.