மூன்றாவது உயர்வாய்மை நிரோதம் - துக்க நிவாரணம்

வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola Rahula

புத்த பகவான் அருளிய போதனை

What The Buddha Taught

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்

Navaliyur Somasundaram Nadarasa

* * *

IV ஆம் அத்தியாயம்

மூன்றாவது உயர்வாய்மை

நிரோதம் - துக்க நிவாரணம்

The Third Noble Truth : Nirodha : 'The Cessation of Dukka'

துக்கத்திலிருந்து விடுதலை பெறலாம் என்பதே மூன்றாவது உயர்வாய்மை. இது துக்க நிரோத அரிய சச்ச, அதாவது துக்க நிரோதம் என்னும் ஆரியசத்தியம் (உயர்வாய்மை) எனப்படும். இதுவே வடமொழியில் நிர்வாணம் (நிப்பாண) எனப்படும்.

துக்கத்தை முற்றாக நீக்குவதானால் வேட்கை (தன்ஹா) என்ற மூலகாரணத்தை வேரோடு நீக்கி விட வேண்டும். அதனால் நிர்வாணமென்பது வேட்கை அழிதல் (தண்ஹக்கய) எனவும் கூறப்படும்.

'நிர்வாணமென்றால் என்ன?' என்று நீங்கள் கேட்கலாம். இது இயல்பான இலேசான கேள்வி. இதைப் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவை விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக மேலும் மேலும் சிக்கலாக்கி விட்டன. ஆனால் சொற்களால் இக் கேள்விக்குப் பதில் கூறமுடியாது. பூரணமாகவும் திருப்திகரமாகவும் இவ்வாறு பதில் தர முடியாது. நிர்வாணமென்பது தான் முடிவான உண்மை. பரமார்த்த சத்தியம். அதன் உண்மையான தன்மையைச் சொற்களால் விளக்க முடியாது. மனிதனுடைய பாஷை அதற்குப் போதுமானதன்று. மனத்தினாலும் இந்திரியங்களாலும் மனிதர் அனுபவிக்கும் அனுபவங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கே மனித இனம் மொழியை உண்டாக்கி அதைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் பரமார்த்த சத்தியம் லோகோத்தரமான உண்மை. அதை மனிதருடைய ஏனைய புலன், அனுபவங்களைப் போலக் கொள்ளக்கூடாது. அது புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவம். இதனைச் சொல்லுவதற்குச் சொற்களில்லை. 'நான் நிலத்தில் சற்றே உலாவிவிட்டுத் தான் இந்தக் குளத்துக்கு வந்துள்ளேன்' என்று ஆமை தன்னுடைய நண்பனான மீனுக்குச் சொன்னது. 'அதாவது நிலத்திலே நீங்கள் நீந்தியிருக்க வேண்டும்' என்றது மீன். தரையிலே நீந்த முடியாதென்றும் அது திண்மையான தென்றும், தரையிலே நடக்கத் தான் முடியும் என்றும் ஆமை மிகவும் சிரமப்பட்டு மீனுக்கு விளக்கப் பார்த்தது. மீனுக்குப் புரியவில்லை. 'நிலமாவது தரையாவது, அது குளம் போல் நீராகவேயிருக்கும். அலைகளிருக்கும், அதிலே சுழியோடலாம், நீந்தலாம், அவ்வளவுதான்.' என்றது மீன். நமக்குத் தெரிந்த பொருள்களையும், கருத்துக்களையும் குறிக்கும் அடையாளங்களே சொற்கள். இந்தக் குறியீடுகள் சாதாரணப் பொருள்களின் உண்மைத் தன்மையைக் கூடப் புரிய வைக்கமாட்டா. அவற்றுக்கு அத்தகைய ஆற்றல் இல்லை. சத்தியத்தைப் பாஷை புரியவைக்கமாட்டாது. அது அந்த வகையில் தவறாக விளக்கங் கொடுத்து ஏமாற்றும் எனக் கூறுவர். 'சேற்றிலே அமிழ்ந்தும் யானையைப் போல அறிவற்றவர்கள் சிக்கிக் கொள்வர்.' என்று 'லங்காவதார சூத்திரம்' என்ற நூல் குறிப்பிடுகிறது. இருந்தும் பாஷையில்லாமல் நாம் ஒன்றுஞ் செய்ய முடியாது. நேர்ப்படியான திட்டமான சொற்களால் நிர்வாணத்தை விளக்கிச் சொல்வதானால் அச் சொற்கள் சார்ந்த கருத்துக்களை உடனே கிரகிப்போம். அது சரியான பொருளாயிராது. நேர்மாறான பொருளைக் கொடுக்கக்கூடியதாயிருக்கும். அதனால் எதிர்ப்படியான சொற்களைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள் [1]. இது ஒருவேளை ஆபத்தற்றதாயிருக்கலாம்.

எனவே நிர்வாணத்தைக் குறிக்க 'தண்ஹக்கய' வேட்கை ஒழிதல், 'அசம்கத' உபாதியில்லாதது கூறில்லாதது 'விராக' வைராக்கியம், 'நிரோத' ஒடுக்கம், 'நிர்வாண' அணைதல் என்ற எதிர்மறை வாக்கியங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

மூலப்பாளி கிரந்தங்களில் நிர்வாணம் பற்றிக் காணப்படும் சில வரைவிலக்கணங்களையும் விவரணங்களையும் இனிக் குறிப்பிடுவோம்.

'(நிர்வாணமென்பது) அந்த வேட்கையை முற்றாக ஒழித்தல். அதைக் கைவிடல், துறத்தல், அதிலிருந்து விடுதலை பெறுதல், அதிலிருந்து விலகிவிடல்.' [2]

'சங்கார (சங்கற்ப) ங்களை ஒடுக்குதல், கிலேசங்களைக் கைவிடுதல், வேட்கையை ஒழித்தல், பற்றற்றநிலை, நிவிருத்தி, நிப்பாண, ஓ பிக்குகளே, பரமார்த்தம் எது (அசங்கத, உபாதியற்றது) ஓ பிக்குகளே, எதுக்களற்ற (அசம்கத) பரம்பொருள் எது?'

'ஓ பிக்குகளே, அதுதான் வேட்கை ஒழித்தல் (ராகக்கயோ - ராகத்தை அழித்தல்) துவேஷத்தை ஒழித்தல் (தோஷக்கயோ - துவேஷத்தை ஒழித்தல்) மோகத்தை ஒழித்தல் (மொகக்கயோ) பிக்குகளே, இதுவே பரமார்த்தம்.'

'ஓ ராத, வேட்கை ஒழிதலே (தண்ஹக்கயோ) நிப்பாணம். ஓ பிக்குகளே, உபாதிக்குட்பட்டவையும் உபாதிக்குட்படாதவையுமான எல்லாப் பொருளையும் விட விராகமே (பற்றற்றநிலையே) உயர்ந்தது. அதாவது மானந்துறத்தல், விடாய் (வேட்கை) ஒழித்தல், பற்றை வேரோடு களைதல், சம்சாரத் தொடரை வெட்டுதல், வேட்கை (தண்ஹா) ஒழித்தல், பற்றின்மை, ஒழுக்கம் நிர்வாணம் எனப்படும்.'

புத்த பகவான் நிர்வாணம் என்றால் 'அசங்கத' என்று வரைவிலக்கணம் கூறினார். அவருடைய பிரதம சீடரான சாரிபுத்திரரை 'நிர்வாணமென்றால் என்ன' என்று ஒரு பரிலிராஜகர் கேட்ட கேள்விக்குக் கொடுத்த விடையோடு இது ஒத்திருக்கிறது. அதாவது 'காமம், வெகுளி, மயக்கம் என்பவற்றை ஒழித்தல்', 'உபாதான பஞ்சஸ்கந்தங்களில் உள்ள வேட்கையை யும் ஆசையையும் ஒழித்தல் தான் துக்கத்தின் முடிவு, சம்சாரத்தையும் பவத்தையும் ஒழித்தல் (பவநிரோதம்) நிர்வாணம்.'

நிர்வாணம் பற்றி பகவான் மேலும் கூறுகிறார்: 'ஓ பிக்குகளே, பிறப்பற்றதும், வளர்ச்சியற்றதும், உபாதியில்லாததுமானதொன்றுள்ளது. இவ்வாறு பிறப்பற்றதும் வளர்ச்சியில்லாததும் உபாதியற்றது மானதொன்றில்லாவிட்டால் பிறப்புள்ளதும் வளர்ச்சியுள்ளதும் உபாதிக்குட்பட்டதுமானதற்குச் சரண் எங்கே? பிறப்பற்றதும் வளர்ச்சியற்றதும் உபாதியற்றதுமான தொன்று இருப்பதால் தான் பிறப்புள்ளதும், வளர்ச்சியுள்ளதும், உபாதியுள்ளதுமானதற்குச் சரண் உண்டு.'

இங்கே மண், நீர், அனல், வாயு என்ற நான்கு பூதங்களுக்கு இடமில்லை. நீட்சி, அகலம், நுண்மை, திண்மை, நன்மை, தீமை, நாம ரூபம் என்பன முற்றாக இல்லாது போகின்றன. இவ்வுலகமோ மறு உலகமோ, போக்கோ, வரவோ ஸ்திதியோ, பிறப்போ இறப்போ, புலனறி பொருள்களோ இங்கு இல்லை.

இவ்வாறு எதிர்மறை வாக்கியங்களால் நிர்வாணம் வருணிக்கப்படுவதால், உயிர் அழிதல் என்ற தவறான அபிப்பிராயத்தைப் பலர் கொள்ளுகின்றனர். பௌத்தத்தில் ஆன்மா என்ற ஒரு பொருள் இல்லாதபடியால் ஆன்மா எவ்வாறு அழியும். ஆன்மா என்ற போலி எண்ணம் அழிகிறதென்று கூறுவதானால் ஒருவாறு பொருந்தும். நிர்வாணம் எதிர்மறையான தென்றோ நேர்படியானதென்றோ கூறுவதற்கில்லை. எதிர்மறை, உடன்பாடு என்பன சார்புப் பொருள்கள். அதனால் அவை துவித உலகைச் சார்ந்தவை. சார்பு உண்மைக்கும் துவைதத்துக்கும் அப்பாற்பட்ட பரமார்த்தமான நிர்வாணத்துக்கு இந்த இரட்டைப் பதங்கள் பொருத்த முடையனவல்ல.

எதிர்மறைச் சொல் எதிர்மறை நிலையைச் சுட்ட வேண்டிய அவசியமில்லை. சுகநிலையைக் குறிக்கும் வடமொழியின் பாளி வடிவம் ஆரோக்கியம். இது எதிர்மறைச் சொல். அதாவது ரோகம் (நோய்) இன்மையைக்குறிக்கிறது. ஆரோக்கியம் என்பது எதிர்மறை நிலையைக் காட்டவில்லை. அமிர்த என்ற வடமொழி 'அழியாதநிலையை'க் குறிக்கும். பாளியில் இது 'அமத' எனவழங்கும். நிர்வாணத்துக்கு இது ஒரு பரியாயப் பெயர். இதுவும் எதிர்மறைப் பதமானாலும் எதிர்மறை நிலையைக் குறிக்காது நேர்படியான நித்தியத்துவத்தைக் குறிக்கும். எதிர்மறையில் அமைந்த மதிப்பீடுகளின் இன்மை அபாவமன்று. நிர்வாணம் என்ற பதத்துக்குப் பிரசித்தமாக வழங்கப்படும் பரியாயப் பெயர் வீடு. (பாளியில் முத்தி, வடமொழியில் முக்தி) வீடு எதிமறையான விஷயமென எவரும் கூறமாட்டார். ஆனால் வீட்டுக்கும் எதிர்மறைத்தன்மையுண்டு. வீடு என்றால் தடையாயிருக்கும் தீமையிலிருந்து விலகுதல். இது எதிர்மறையானதே. ஆனால் வீடு எதிர்மறையன்று. அவ்வாறே நிர்வாணம் என்னும் முத்தி அல்லது விமுத்தி, பூரணவிடுதலை; எல்லாத்தீமைகளிலிருந்தும், எல்லா ஆசைகளிலிருந்தும், துவேஷம், அறியாமை என்பவற்றிலிருந்தும், எல்லா விதமான துவைதத்திலிருந்தும், சார்புகளிலிருந்தும், காலம் இடம் என்பவற்றிலிருந்தும் விடுதலை பெறுதல். நிர்வாணமென்பது சார்பற்றது, பரமார்த்தம் என்ற கருத்தை மஜ்ஜிம நிகாயத்திலுள்ள 140 ஆவது இலக்க தாது விபங்க சூத்திரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். விவேகமும் ஆர்வமும் நிறைந்த புக்குசாதி என்பவரைப் பகவான் ஒரு நாள் இரவின் அமைதியில் குயவன் ஒருவனுடைய சாலையில் கண்டு இம்மிக முக்கியமான உபதேசத்தை வழங்கினார். இச்சூத்திரத்தின் முக்கியமான பகுதிகள் பின்வருமாறு:

மனிதன் ஐந்து பூதங்களான மண், நீர், அனல், வாயு, ஆகாயம், விஞ்ஞானம் என்பவற்றின் சேர்க்கை. இவற்றில் எவையேனும் என்னுடையவையல்ல. இவை நான் என்றும் கூறமுடியாது. என் உயிர் என்றும் கூற முடியாது என்பதை ஆராய்ந்து அறிகிறான். விஞ்ஞானம் எவ்வாறு தோன்றி மறைகிறதென்பதையும், இன்பமும் துன்பமும் இரண்டுமல்லாதனவுமான வேதனைகள் தோன்றி மறைகின்றன என்பதையும் அறிகிறான். இந்த அறிவினால் அவனுடைய மனம் பற்றற்றதாகிறது. அப்போது அவனுள்ளத்தில் உபேக்கா என்ற பற்றற்ற நடுநிலை, சார்பற்ற நிலை உண்டாகிறது. இந்த நிலையை அவன் எந்த ஒரு யோக நிலைக்கும் பயன்படுத்தக்கூடியவனாகிறான். அவ்வாறு இந்தச் சார்பற்ற தூய நிலை நீடித்து நிற்கும் என்பதை உணர்கிறான். ஆனால் அவன் நினைக்கிறான்:

'எல்லையற்ற ஆகாயத்தில் நான் இந்தத் தூய களங்கமற்ற உபேக்கையை மையப்படுத்தி அதற்கமைய மனத்தைச் செப்பஞ் செய்வேனானால் அது மனச் சங்கற்பமாகும். (சம்கதம்) [3] நான் இந்தத் தூய்மையான சுத்தப் படுத்தப் பட்ட உபேகையை எல்லையற்ற விஞ்ஞானத்தளத்தில் மையப்படுத்தி சூனியத்தளத்தில் மையப்படுத்தி குறிப்பு உண்டு இல்லையெனப் புலனாகாத் தளத்தில் மையப்படுத்தி அதற்கமைந்த மனோ நிலையைச் சங்கற்பித்துக் கொள்வேனானால் அது மானசிக சங்கற்பமாகும்.' அப்போது அவன் சம்சாரத்தையும், பவத்தையும், விபவத்தையும் (தன்னை அழித்தல் [4]) சங்கற்பஞ் செய்யமாட்டான். இவ்வாறு காமதன்ஹா, பவதன்ஹா, விபவதன்ஹா அற்றவனாயிருப்பதால் உலகில் அவனுக்கு எதிலும் பற்றில்லை. பற்றில்லாதபடியால் எதிலும் அவலம் இல்லா தவனுமாகிறான். அப்போது உள்ளம் ஒடுங்குகிறது. உள்ளே ஆசைகள் முற்றாக அணைந்து (பச்சத்தம் யேவ பரிநிப்பாயதி) விடுகிறான். 'பிறப்பு ஒழிந்தது, தூய வாழ்வு வாழப்பட்டது, செய்யவேண்டியது செய்யப் பட்டது, இனிச் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை [5].

இனி அவனிடம் இன்ப துன்ப வேதனையோ, மத்தியஸ்த வேதனையோ, உண்டானால் அது அநித்தியம், தன்னை அது பந்தப் படுத்தமாட்டாதென உணருகிறான். பற்றோடு அது அனுபவிக்கப் படவில்லை என்று உணருகிறான். என்ன வேதனை உண்டானாலும் அதில் பற்றின்றி (விசம்யுத்தோ) அனுபவிக்கிறான். இந்த நுகர்ச்சிகளெல்லாம் உடல் அழிந்ததும், எண்ணையும் திரியும் அற்ற விளக்கின் சுடர்போல, ஒடுங்கிவிடும் என உணர்கிறான்.

"ஆனபடியால், ஓ பிக்குவே, இவ்வாறு இந்தகைய பேறு பெற்றவனிடம் சார்பற்ற ஞானம் உதயமாகிறது. ஏனெனில் எல்லாத் துக்கமும் ஒழிந்தது என்ற ஞானமே உயர்ந்த சார்பற்ற பரம ஞானம். சத்தியத்தில் நிலைபெற்ற இந்த விடுதலை அசைவற்றது. ஓ பிக்கு, போலி நிலை (மேசதம்மம்) பொய். உண்மையான அமோசதம்மம நிர்வாணமே சத்தியம் (சச்ச). இந்தப் பரமார்த்தத்தைப் பெற்றவன் உண்மையான பேறுபெற்றவனே. இந்தப் பரமார்த்தமே (பரமம் அரிய சச்சம்) நிர்வாணம். இதுவே மெய்ப்பொருள்.

வேறிடத்தில் பகவான் நிர்வாணம் என்ற சொல்லுக்குப் பதிலாக சத்தியம் என்ற சொல்லைச் சந்தேக விபரீதமின்றிப் பயன்படுத்துகிறார். 'நான் உனக்குச் சத்தியத்தையும் அதை அடையும் வழியையும் போதிக்கிறேன்.' இங்கே சத்தியமென்பது நிர்வாணம் என உறுதியாகக் கூறலாம்.

சார்பற்ற சத்தியம் என்பது என்ன? புத்த தர்மத்தின்படி பரமார்த்த மென்பது உலகில் சார்பற்ற பொருள் ஒன்றுமில்லை, எல்லாம் சார்புடையவை. உபாதிக்குட்பட்டவை, அநித்தியமானவை; மாறுபாடற்ற நித்தியமான சார்பற்ற ஆன்மா என்றொரு பொருள் உள்ளேயுமில்லை, வெளியேயுமில்லை. இதுவே பரமார்த்தம் என்பதே, சத்தியத்தில் எதிர்மறை என்பதொன்றில்லை. சாதாரணமாக 'எதிர்மறை உண்மை' யென்று சொல்வது பொருந்தாது. இந்த உண்மையை உணர்தல் என்பது விஷயங்களை இருந்தது இருந்தபடி (யதாபூதம்) அறிதல். மோகமோ அஞ்ஞானமோ இன்றி அறிதல். இதுவே வேட்கை ஒழிதல் (தண்ஹக்கய) துக்க நிரோதம் என்று சொல்லப் படும் நிர்வாணம். நிர்வாணம் என்பது சம்சாரம் [6], என்பர் மஹாயான மதத்தவர். இது ஒருவருடைய காட்சியைப் பொருத்தது. அதாவது ஒருவருடைய அகநோக்கு புறநோக்கு என்பவற்றைப் பொறுத்தது. மூலதேரவாத பாளிகிரந்தங்களில் உள்ள கருத்துக்களிலிருந்தே இந்த மகாயானக்கருத்து வளர்ச்சியடைந்திருக்கலாம். இதையே சுருக்கமான இந்த ஆராய்ச்சியில் நாம் மேலே குறிப்பிட்டோம்.

ஆசை ஒழிந்ததும் அதன் பயனாக இயற்கையாகவே உண்டாவது நிர்வாணமென்று கருதுவது தவறு. நிர்வாணம் ஒரு காரியமன்று. அது எந்தக் காரணத்திலிருந்தும் உண்டாவதில்லை. அப்படியானால் அது ஆக்கப்பொருளாய் உபாதிக்குட்பட்டதாகும். நிர்வாணம் காரணமுமன்று. காரியமுமன்று. அது காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற்பட்டது. சத்தியம் ஒரு காரியமன்று. பயனன்று. அது தியானத்தினாலோ சமாதியினாலோ உண்டானதன்று. அனுபூதி நிலையில், அத்தியாத்மிக நிலையில் சைதிசிகமாக உண்டாவதன்று. உண்மை உண்டு. நிர்வாணம் உண்டு. நீங்கள் செய்ய வேண்டியது அதைக் கண்டு உணர்தலே. நிர்வாணத்தை அடைய வழி உண்டு. ஆனால் நிர்வாணமென்பது இவ்வழியின் பயனாக உண்டாகும் காரியமன்று [7]. ஒரு பாதை வழியாக ஒரு மலையை அடையலாம். ஆனால் பாதையின் பலன் அந்த மலையன்று. பாதையென்ற காரணத்தின் காரியமன்று. நீங்கள் கண்ணால் ஒளியைக் காணலாம். ஆனால் கண்ணின் காரியமன்று அந்த ஒளி.

நிர்வாணத்தின் பின்னர் என்ன உண்டு, என மக்கள் கேட்பதுண்டு. நிர்வாணமே முடிந்த உண்மையானபடியால் இந்தக் கேள்விக்கு இடமில்லை. இதுவே கடைசி முடிவானால் அதற்கு மேலே ஒன்றுமில்லை. நிர்வாணத்துக்கு அப்பால் எதாவது இருக்குமானால் அதுவே முடிவான உண்மையேயன்றி நிர்வாணம் முடிவான உண்மையன்று. ராத என்ற பிக்கு இந்தக் கேள்வியை வேறொருவகையில் பகவானிடம் கேட்டார். 'நிர்வாணத்தின் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது தொக்கு நிற்கிறது. எனவே பகவான்: 'ஓ ராத, இது அர்த்தமற்ற கேள்வி. நிர்வாணத்தை நோக்கமாக, சார்பற்ற பரம்பொருளாகக் கொண்டே துறவு வாழ்க்கையில் மூழ்குகிறார்கள். அதுவே இலட்சியம் முடிவான நோக்கம்.'

மரணத்தின் பின்னர் புத்தபகவான் நிர்வாணத்தில் பிரவேசித்ததார். பரிநிர்வாணத்தில் பிரவேசித்தார் என்ற சாதாரணமான கூற்றுக்கள் தவறானவை. அதனால் அவை பொதுமக்கள் மனத்தில் நிர்வாணத்தைப் பற்றிப் பலவிதமான கற்பனைகளுக்கு இடமளித்தன [8]. புத்தர் பரிநிர்வாணத்தில் அல்லது நிர்வாணத்தில் புகுந்தார் என்று பேசப்படும்போது நிர்வாணம் ஒரு நிலையென்றோ ஒரு ராச்சியமென்றோ, உயிர் வாழும் ஒரு நிலையென்றோ எண்ணுகிறார்கள். 'நிர்வாணத்தில் பிரவேசித்தார்' என்ற வழக்கு மூல பாடங்களில் இல்லை. இறந்த பின் நிர்வாணத்தில் புகுதல் என்பது ஒன்றில்லை. நிர்வாண அனுபூதி பெற்று இறந்துபோன புத்தரைப் பற்றியோ, அருகதர் பற்றியோ குறிப்பதற்கு 'பரிநிப்புதோ' என்ற சொல் வழங்கப்படுகிறது.

இது நிர்வாணத்தில் பிரவேசித்தார், என்ற பொருள்படுவதில்லை. 'பரி நிப்பிதோ' என்றால் முற்றாகப் போனவர், முற்றாக வீசப்பட்டவர், முற்றாக ஒழிந்தவர்' எனப் பொருள்; எனெனில் புத்தரோ, அருகதரோ மீண்டும் பிறவி எடுப்பதில்லை.

பரிநிர்வாணமடைந்த புத்தர் அல்லது அருகதருக்கு மரணத்தின் பின் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்குப் பதில் இல்லை. இத்தகைய கேள்விகள் பதில் கூறப்படாத கேள்விகள் எனப்படும். இது பாளியில் (அவ்யாகத) எனப்படும்.

இதைப் பற்றி புத்தர் பேசியபோது அருகதன் இறந்த பின் அவன் எய்தும் நிலையை பற்றிக் கூறுவதற்கு நமது மொழியில் வார்த்தைகள் இல்லையெனக் கூறினார். வச்சன் என்ற பரிவ்ராஜகன் கேட்ட கேள்விக்கு பகவான் 'பிறத்தல்;, 'பிறவாமை' என்ற பதங்களை அருகதர் விஷயத்தில் கூற முடியாது. ஏனெனில், உருவம், வேதனை, குறிப்பு, சங்கற்பம், விஞ்ஞானம் என்ற நிலைகள் அவர்கள் விஷயத்தில் முற்றாய் வேரோடு அழிந்துவிடுகின்றன. மரணத்தின் பின் அவை அவர்கள் விஷயத்தில் மறுபடி உண்டாவதில்லை. இந்தப் பஞ்சக்கந்தங்களே பிறப்பு, பிறவாமை என்பவற்றோடு தொடர்புடையவை.

எரியும் விறகுக் கட்டை ஒழிந்த பின் அணைந்து போகும் நெருப்புப் போலவும், எண்ணெயும் திரியும் முடிந்த பின் அணைந்து போகும் விளக்குச் சுடர் போலவும் இருப்பது அருகதரின் மறைவு என உவமிக்கப்படுகிறது. இங்கே உவமிக்கப்பட்டது நிர்வாணத்துக்கன்று. நெருப்பும், விளக்குச் சுடரும் நிர்வாணத்துக்கு உவமிக்கப்படவில்லை. பஞ்சகந்தங்களினாலான பொருளுக்கே உவமிக்கப்பட்டுள்ளன. இதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இப்பஞ்சக்கந்தங்களான பொருளே நிர்வாண அனுபூதியைப் பெற்றன. இந்த உவமை நிர்வாணத்தையே குறிக்குமெனச் சிறந்த அறிஞர் உட்படப் பலர் தவறாக எண்ணிப் பிழைபட விளக்கங் கொடுத்திருப்பதால் இவ்விஷயத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறோம். அணைந்துபோன தீக்கோ, விளக்குச் சுடருக்கோ நிர்வாணம் உவமிக்கப்படவில்லை.

ஆன்மா என ஒன்று இல்லாவிட்டால் நிர்வாண அனுபவத்தைப் பெறுபவர் யார் என்ற கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. நிர்வாணம் ஒரு புறமிருக்க, ஆன்மா இல்லாவிட்டால் இப்போது நினைப்பது யார் என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறோம். நினைவே நினைக்கிறது என்பதை மேலே எடுத்துக் காட்டினோம். நினைவுக்குப் பின்னால் நினைப்பவர் என ஒருவர் இல்லை என்பதை விளக்கினோம். அவ்வாறே ஞானமே (பஞ்ஞா) அனு பூதியே அனுபவிக்கிறது. அனுபூதிக்குப் பின்னால் ஆன்மா என்று ஒன்றில்லை. துக்கத்தின் உற்பத்தி பற்றி ஆராய்ந்த பொழுது, அது உயிராயிருந்தாலென்ன பொருளாயிருந்தாலென்ன, சிந்தனை அமைப்பாயிருந்தாலென்ன, அது தோற்றத் தன்மையுடையதாயிருந்தால் அதன் அகத்திலே அதன் ஒடுக்க அழிவும் உண்டென்பதைக் காட்டினோம். துக்கம் என்னும் சம்சார வட்டத்தில் தோற்றமிருக்கும் போது அதில் அழியுந்தன்மையும்முண்டு. துக்கம் வேட்கையினால் (தண்ஹா) தோன்றுகிறது. பிரக்ஞை என்ற ஞானத்தினால் அது அழிகிறது. வேட்கையும், ஞானமும் பஞ்சக்கந்தங்களில் அடங்கியுள்ளன என்பதை முன்னர் கண்டோம்.

இவ்வாறு தோற்றத்துக்கும் அழிவுக்குமேதுவான வித்து பஞ்சக்கந்தங்களிலுண்டு. 'இந்த ஆறு அடி நீளமான உணர்வுள்ள உடலகத்திலேயே உலகமும் அதன் தோற்றமும், அழிவும், அழிவுக்கான மார்க்கமும் உண்டு எனக் கூறுகிறேன். 'எனப் புத்தர் கூறிய பிரசித்தி பெற்ற கூற்றின் அர்த்தம் இதுதான். எனவே இந்தப் பஞ்சக்கந்தத்திலே தான் நான்கு உயர்வாய்மைகளுமுண்டு. அதாவது எம்முள்ளேதானுண்டு. (இங்கே துக்கம் என்ற சொல்லுக்குப் பதிலாக உலகம் (லோகம்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது துக்கத்தைத் தோற்றுவிக்கவும் ஒடுக்கவும் வெளியேயிருந்து எவ்வித சக்தியும் வரவில்லை என்று பொருள் தரும்.

நாலாவது உயர் வாய்மைப்படி ஞானத்தை வளர்த்தால் அது வாழ்வின் இரகசியத்தைக் காணும் யதா பூதஞானம், உள்ளதை உள்ளபடி உணரும் பான்மையை உண்டாக்கும். இந்த இரகசியத்தைக் கண்டால் சத்திய தரிசனமுண்டாகும். சம்சார மோகத்தை உண்டாக்கும் சக்திகளெல்லாம் ஓயும். புதிய கன்மங்கள் உண்டாகமாட்டா. மோகமும் வேட்கையும் ஒழிகின்றன. சம்சார வேட்கை அற்றுப் போகிறது. தன்னை வருத்திய மனநோயின் காரணத்தை, அதன் இரகசியத்தை, ஒருவன் கண்டதும் நோய் நீங்குவதுபோல இந்த மோகம் நீங்குகிறது.

ஏறக்குறைய எல்லா மதங்களிலும் பரம சுகமானது மரணத்தின் பின்னரே பெறப்படுகிறது. ஆனால் நிர்வாணம் இம்மையிலேயே அனுபவிக்கக் கூடியது. அதை அடைவதற்கு மரணம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

உண்மையை உணர்ந்தவன், நிர்வாண சுகத்தைப் பெற்றவனே. உலகில் மற்றையோரெல்லாரையும் விட மகிழ்ச்சியுள்ள மனிதன். அவனிடத்து எவ்வித மனச்சிக்கல்களும் பிறழ்வுணர்ச்சிகளும் கிடையா. மற்றவர்களை வாட்டி வதைக்கும் கவலைகளும் அவலங்களும் அவனிடமில்லை. அவனுடைய மனம் பூரண ஆரோக்கிய நிலையுடையது. பழையவற்றை நினைந்து அங்கலாய்ப்பதில்லை. அவன் நிகழ்கால வாழ்வையே பூரணமாக நடத்துகிறான். அதனால் பொருள்களை நன்கு நயந்து மகிழ்ச்சியோடு பற்றின்றி வாழ்கிறான். எக்களிப்பும் ஆனந்தமும் உடையவனாய் இந்திரியங்களெல்லாம் மகிழக் கவலையின்றிச் சாந்தமாய் வீறான ஒளியுடன் தூய வாழ்வை ஆனந்தமாகக் கழிக்கிறான். தன்னலமான ஆசைகள், துவேஷம், அறியாமை, இறுமாப்பு, தற்பெருமை முதலிய ஆசவங்களற்றவனாய்த் தூய்மையும் மென்மையும் உடையவனாய்ப் பரந்த அன்பும், கருணையும், பரிவும், அனுதாபமும், நல்லெண்ணமும் சகிப்புத் தன்மையும் உடையவனாய் வாழ்கிறான். மற்றவர்க்கு அவன் செய்யும் சேவை மிகத் தூய்மையுடையது. அவனிடம் தன்னலம் கிடையாது. அவன் சம்பாதிப்பதில்லை. ஈட்ட வேண்டுமென்று ஆசைப்படுவதில்லை. ஆன்மிகச் செல்வத்தைக் கூட அவன் விரும்புவதில்லை. இன்ன நிலையை அடையவேண்டுமென்ற ஆசை அவனிடமில்லை. ஆன்மா உண்டென்ற மோகம் அவனிடமில்லை.

நிர்வாணமென்பது துவைதங்களைக் கடந்தது. சார்புத் தன்மையற்றது. எனவே அது நன்மை, தீமை; சரி, பிழை; உள்ளது, இல்லது என்று நாம் கொள்ளும் கருத்துகளுக்கு அப்பாற்பட்டது. நிர்வாணத்தைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு நாம் பயன்படுத்தும் 'சுகம்; என்ற சொல்கூட இச்சந்தர்பத்தில் முற்றும் வேறான பொருளுடையதாகிறது. சாரீபுத்திரர் ஒரு முறை, 'நண்பரே' நிர்வாணமென்பது 'சுகம்', நிர்வாணம் என்பது 'சுகம்' என்றார். அப்போது உதாவி 'ஆனால் நண்ப சாரீ புத்திர, உணர்ச்சி இல்லாவிட்டால் சுகமேது?' என்றார். அதற்கு சாரீ புத்திரர் கூறிய விடை ஆழ்ந்த தத்துவக்

கருத்துடையது. சாதாரண அறிவாளிகளால் புரிந்து கொள்ள முடியாதது. 'உணர்ச்சி இல்லாதிருப்பதே சுகந்தான்.' என்பதே அவருடைய விடை.

நிர்வாணம் அதர்க்கியமானது. அதாவது தர்க்க சாத்திரத்துக்கு அப்பாற்பட்டது. தர்க்க முறைப்படி விவேகத்தைத் திருப்திப்படுத்தி வினோதார்த்தமாக விசாரணை நடத்தினாலும் பரமார்த்தமான நிர்வாணத்தை அவ்வகையில் புரிந்து கொள்ள முடியாது. பாலர் வகுப்பிலுள்ள சிறு குழந்தை 'சார்பியல் கோட்பாட்டைப்' பற்றிச் சண்டை போடக்கூடாது. ஆனால் அதன் பாடங்களை முறைப்படி படித்து முன்னேறுமானால் ஒரு காலத்தில் அக்கோட்பாட்டைப் புரிந்து கொள்ளும். நிர்வாணத்தை ஒவ்வொருவரும் தத்தம் அனுபவத்தினால் அறிந்து கொள்ள வேண்டும் (பச்சத்தம் வேதி தப்போ விஞ்ஞூஹி) ஆர்வத்துடனும் பொறுமையுடனும் மார்க்கத்தில் செல்வோமானால் நேர்மையோடு நம்மைப் பயிற்றித் தூய்மைப்படுத்துவோமானால், ஆன்மீக அபிவிருத்தியை அடைவோமானால் அதை நம்முள் ஒரு நாள் அனுபவிக்க முடியும். மயக்கத்தைத் தரும் சொற்களையும் பெரிய வாதங்களையுஞ் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை.

இனி நிர்வாணத்துக்கு இட்டுச் செல்லும் மார்க்கத்தைப் பற்றி ஆராய்வோம்.

* * *

[1] சில சமயம் மங்களம், நன்மை என்பவற்றைக் குறிக்கும் 'சிவம்' என்ற சொல்லும், பாதுகாப்பைக் குறிக்கும் 'கேம' என்ற சொல்லும், தூய்மையைக் குறிக்கும் 'சுத்தி' என்ற சொல்லும், தீவு என்ற அர்த்தமுள்ள 'தீப' என்ற சொல்லும், 'சரண்' என்ற பொருள் உள்ள 'சரண' என்ற சொல்லும், காப்பு என்ற அர்த்தமுள்ள 'தாண' என்ற சொல்லும், அக்கரை என்ற அர்த்தமுள்ள 'பார' என்பதும், அமைதியைக் குறிக்கும் 'சாந்தி' என்ற சொல்லும் நிர்வாணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சம்யுத்த நிகாயத்தைச் சேர்ந்த 'அசங்கத சம்யுத்தத்தில்' நிர்வாணத்துக்குச் சமமான 32 சொற்களுண்டு. இவை பெரும்பாலும் உருவகச் சொற்கள்.

[2] துக்க நிவிருத்தி நிரோதம். எனவே சாரநாத்தில் பகவான் நிகழ்த்திய முதல் தருமோப தேசத்தில் குறிப்பிடப்படுகிறதேயன்றி, 'நிப்பாண' என்ற சொல் காணப்படவில்லை. நிரோதமென்பது நிர்வாணத்தையே குறிக்கிறது.

[3] மிகப் புனிதமான உயர் யோக நிட்டைகள் யாவும் மனச் சங்கற்பங்களாகவும் மனதாலானவைகளாகவும் உபாதிக்குட்பட்டனவாகவும் கூறுகளுடையனவாகவும் இருப்பதைக் கூர்ந்து நோக்குக. இவை மெய்ப்பொருள் அல்ல. வாய்மையும் (சச்ச) அல்ல.

[4] வேட்கை, வேதனை (விருப்பத் துணிவாற்றல்) ஆகியவற்றினின்று விடுதலை யடைந்துள்ளபடியால் அவன் இனிப் புதிய கன்மங்களை உற்பத்தி செய்யமாட்டான் என்பது இதன் கருத்து.

[5] இதன் பொருள் அவன் இப்போது அருகதநிலையை அடைந்துவிட்டான் என்பதே.

[6] சம்சாரமே நிர்வாணம். நிர்வாணமே சம்சாரம். இவற்றிடையே ஏதும் வித்தியாசமுமில்லை என்பர் நாகர்சுனர்.

[7] உலகம் கடந்த ஒன்பது நிலைகளுள் (நவலோகுத்தர தர்மங்களுள்) நிருவாணம் மார்க்கத்துக்கும் பலனுக்கும் அப்பாற்பட்டதென்பதை இங்கு நினைவிற் கொள்ளல் வேண்டும்.

[8] புத்தரின் நிருவாணத்துகுப் பின் எனச் சிலர் எழுதுவதுண்டு. இதற்கு அர்த்தமில்லை. புத்தரின் பரிநிருவாணத்துகுப் பின் என்றே எழுத வேண்டும். பௌத்த இலக்க்கியங்களில் நிருவாணத்துக்குப் பின் என்ற வழக்குக் கிடையாது, பரிநிருவாணத்துக்குப் பின் என்றே வழக்கு.